2018 என் வருஷம்..! - கண்ணடிக்கிறார் சாயிஷா



‘கடைக்குட்டி சிங்கம்’ சூப்பர் ஹிட் ஆன மகிழ்ச்சியும், ‘ஜூங்கா’வின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் பதைபதைப்பும் ஒருசேர பூத்திருக்கிறது சாயிஷாவின் முகத்தில். ‘‘எப்ப ‘வனமகன்’ல அறிமுகமானேனோ அப்பவே தமிழ் கத்துக்கிட்டேன். ஓரளவு பேசுவேன். என் தமிழ் ஓகேதானே..?’’ கலீரென்று சிரிக்கும் சாயிஷா, தன் பெயருக்கான அர்த்தம் ‘Heart’s most beautiful desire’ என ஆங்கிலத்தில் சொல்கிறார்!  

ஆகஸ்ட் 12 உங்க பிறந்தநாள் இல்லையா..?

யெஸ். அட்வான்ஸ் வாழ்த்துக்கு நன்றி. ஒவ்வொரு பிறந்த நாள் அப்பவும் அம்மா எனக்குனு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுப்பாங்க. இந்த வருஷம் அது என்னவா இருக்கும்னு யோசிட்டு இருக்கேன்! சின்ன வயசுல இருந்தே ஆக்டிங், டான்ஸ்ல ஆர்வம் அதிகம். முதல்ல இந்திப் படமான ‘ஷிவாய்’லதான் கமிட் ஆனேன். அஜய்தேவ்கன் தயாரிச்சு இயக்கி நடிச்ச அந்தப் படத்தோடஷூட்டிங் தொடங்கவே ஒரு வருஷம்கிட்ட ஆச்சு. அப்பதான் தெலுங்குல நாகார்ஜுனா - அமலாவின் மகன் அகில் ஹீரோவா அறிமுகமாகிற ‘அகில் த பவர் ஆஃப் ஜுவா’ படத்துல நடிக்கக் கேட்டாங்க.

ஓகே சொல்லி அதுல நடிச்சு முடிக்கவும் ‘ஷிவாய்’ ஷூட்டிங் தொடங்கவும் சரியா இருந்தது. இதை முடிச்சதும் ‘வனமகன்’ ஆஃபர் வந்தது. இயக்குநர் ஏ.எல்.விஜய் அண்ணன், மும்பை வந்து கதை சொன்னாங்க. இம்ப்ரஸ் ஆகி கமிட் ஆனேன். இப்ப, கே.வி.ஆனந்த் இயக்கத்துல சூர்யா சார் நடிக்கும் படத்துல கமிட் ஆகியிருக்கேன்.  

எப்படி இருந்தது ‘ஜூங்கா’ அனுபவம்?

சூப்பரா. ‘கூட்டிப்போ...’ பாடலை பாரீஸ், ஜார்ஜியாவுல ஷூட் பண்ணினாங்க. நாங்க போயிருந்த நேரம், வின்டர் சீஸன். செம குளிர். மெல்லிசான ஒரு கவுன்தான் காஸ்ட்யூம். அதைப் போட்டுட்டு என்னால அந்த சில்னெஸை தாங்கிக்க முடியல. ஒரு கட்டத்துல திடீர்னு பிளட் ப்ரெஷ்ஷர் குறைஞ்சு மயங்கி விழுந்துட்டேன். யூனிட்டே பதறிட்டாங்க. அப்புறம், அந்தப் பாடல் நல்லா வந்ததைப் பார்த்த பிறகுதான் எனக்கு நிம்மதியாச்சு. மறக்க முடியாத இன்ஸிடென்ட் அது.

உங்க கூட நடிச்ச, நடிக்கற ஹீரோக்கள்கிட்ட பிடிச்ச விஷயங்கள் என்ன?

முதல் பட ஹீரோ ஜெயம் ரவி சாருக்கு ரொம்ப பெரிய மனசு. அவர் படங்கள்ல ஹீரோயின்களுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தாலும் ஃபீல் பண்ணமாட்டார். தன் ரோல் மேல அவருக்கு உறுதியும் நம்பிக்கையும் உண்டு. கார்த்தி சார் பிரில்லியன்ட் ஆக்டர். ஸ்கிரீன்ல நம்ம முகம் ஏன் மலர்ச்சியா இருக்கணும்னு புரியவச்சார். அவரோட ஸ்கிரிப்ட் நாலேட்ஜ் பார்த்து பிரமிச்சிருக்கேன். நிச்சயம் ஒருநாள் இயக்குநராவார்! ஆர்யா சார் இயல்பானவர். ‘கஜினிகாந்த்’ல அவரோட நகைச்சுவை உணர்வைப் பார்த்து அசந்துட்டேன். யூனிட்டை எப்பவும் கலகலப்பா வைச்சிருப்பார். அதேசமயம், சீரியஸ் சீன் எடுக்கிறப்ப சட்டுனு அதுக்கு ஏத்த மாதிரி தன்னை மாத்திப்பார். கே.வி.ஆனந்த் சார் படத்தை முடிச்சுட்டு சூர்யா சார் பத்தி சொல்றேன். அதுக்கு முன்னாடி இந்தப் படம் பத்தி நான் மூச்சுவிட மாட்டேன்!

- மை.பாரதிராஜா
படங்கள்: சுரேஷ்சுகு


காலர் ட்யூன்
‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் வரும் ‘சண்டக்காரி வாடி வாடி... உன்னை அடக்கி ஆளுறேன்...’ பாடல்தான் இப்போது சாயிஷாவின் காலர் டியூன்.

பர்சனல் சீக்ரெட்ஸ்
‘‘ஐ லவ் டான்ஸ். அப்புறம், ஸ்விம்மிங் இன்னும் பிடிக்கும். வீட்ல தினமும் ஒருமணிநேரம் நீச்சலடிப்பேன். பயணங்கள்ல புக்ஸ் படிக்கப் பிடிக்கும். சாக்லெட் கேக்ஸை ருசிச்சு சாப்பிடுவேன். இப்ப, சென்னையும் ரொம்ப பிடிச்சிருக்கு. கூடவே ரைஸ் அண்ட் ஸ்பைஸி ஃபிஷ் கறி இருந்தா லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!’’ சப்புக் கொட்டுகிறார் சாயிஷா.