யார் இந்த கொலிண்டா கிராபர் கிடரோவிச்?



தலைப்பிலுள்ள பெயரை உச்சரிக்க கடினமாக இருக்கலாம். அதேநேரம் இங்கு வெளியாகியிருக்கும் புகைப்படம் அடிக்கடி பார்த்ததுபோல் தோற்றம் அளிக்கலாம். இரண்டு உணர்வுகளுமே சரிதான். இரண்டுக்கும் சொந்தக்காரர்தான் இந்த கொலிண்டா கிராபர் கிடரோவிச்! சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பைகால்பந்துப் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறி, பிரான்ஸிடம் கோப்பையைப் பறிகொடுத்த குரோஷியா நாட்டின் அதிபர்தான் இந்த கொலிண்டா கிராபர் கிடரோவிச்! சுருக்கமாக கொலிண்டா.

அழகு, அறிவைத் தாண்டி இவரது விளையாட்டு ஆர்வம், தங்கள் நாட்டு அணி வீரர்கள் துவண்டு போகும்போது இவர் அளித்த உற்சாகம், கட்டிப்பிடி வைத்தியம், குரோஷியா ஜெயிக்கும்போது சிறு குழந்தையைப் போல துள்ளிக் குதித்து நடனமாடிய விதம், குரோஷியாவைத் தோற்கடித்த அணியைக் கூட பாராட்டும் பெருந்தன்மை... ஆகியவை எல்லாம் இவர் மீதான மரியாதையை உலக மக்கள் மத்தியில் மிகைப்படுத்தியிருக்கிறது. ஆனால், இவை மட்டுமே கொலிண்டா அல்ல என்பதுதான் ஹைலைட்.

ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் இலக்கியத்தில் பட்டதாரியான கொலிண்டா, ஜெர்மன், ப்ரெஞ்ச், ரஷ்யன் மற்றும் இத்தாலிய மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். துப்பாக்கி சுடுவதில் வல்லவர். ராணுவத்தில் கமாண்டோவாகப் பணியாற்றியிருக்கிறார். கடந்த வருடம் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை, உலகின் சக்தி வாய்ந்த நூறு பெண்மணிகளில் கொலிண்டாவுக்கு 39வது இடத்தைக் கொடுத்து கவுரவித்திருக்கிறது. 46 வயதிலேயே அதிபரான கொலிண்டாதான் குரோஷியாவின் முதல் பெண் மற்றும் இளம் அதிபர்.

29 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ‘நேட்டோ’ என்கிற இராணுவ அமைப்பின் முதல் பெண் உதவிப் பொதுச் செயலாளராக சில காலம் இருந்திருக்கிறார். அப்போது ஆப்கானிஸ்தானுக்குச் சென்று இவர் செய்த பணிகள் பலரின் கவனத்தைப் பெற்றிருக்கிறது. ஒரு நாட்டின் அதிபர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் கொலிண்டா கிராபர் கிடரோவிச்!                       

- த.சக்திவேல்