தலையில் நூறு புழு!



புது தில்லியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமிக்கு கடுமையான தலைவலி. அதோடு நினைவிழப்பு, மூச்சுத்திணறல் ஏற்பட தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். டெஸ்ட் செய்து பார்த்தால், மூளையில் நூறு  நாடாப்புழு முட்டைகள் இருப்பதைக் கண்டு டாக்டர்களுக்கே மயக்கம் வராத குறை. த்ருஷிகா என்ற அந்தச் சிறுமி கிருமிகளால் தாக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ‘‘நாடாப்புழுக்கள் தாக்கிய உணவை சிறுமி உண்டதால் ஏற்பட்ட தலைவலி இது.

ஸ்கேனில் மூளையில் தெரிந்த வெள்ளைப்புள்ளிகள் நாடாப்புழுக்கள் இட்ட முட்டைகள். அதன் விளைவாகவே சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு தீவிரமாகியுள்ளது!’’ என்கிறார் மருத்துவர் பிரவீன் குப்தா. நரம்பு மண்டலத்தை நாடாப்புழு தாக்கியதால் தலைவலி அதிகரித்து ஒருகட்டத்தில் சிறுமி சுயநினைவையே இழந்துள்ளார். புழுக்களும் முட்டைகளும் சிகிச்சை மூலம் பெருமளவு வெளியேற்றப்பட்ட நிலையில் த்ருஷிகா இப்போது உடல்நலம் பெற்று வருகிறார்.

- ரோனி