ரத்த மகுடம்



பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 12

‘‘என்ன சொல்கிறீர்கள் தந்தையே! நாகலோகம் அல்லது நாக நாடு என்பது புராணக் கற்பனை அல்லவா..? ரத்தமும் சதையுமான மனிதர்கள் உயிருடன் வாழும் பிரதேசமா..?’’ஆச்சர்யம் விலகாமல் சிவகாமி கேட்டாள். ‘‘ஆம் குழந்தாய்! அந்த உலகத்தைச் சேர்ந்தவன்தான் நான்! பல்லவ குடியின் கிளை மரபினர் மட்டுமல்ல... சோழ அரச பரம்பரையின் வம்சாவளியினரும் அந்த நிலப்பரப்பைத்தான் ஆட்சி செய்கின்றனர். திகைக்க வேண்டாம். கோச்செங்கட் சோழ மன்னனின் சரித்திரம் உணர்த்தும் உண்மை இது...’’

கம்பீரமாக அறிவித்த ஹிரண்ய வர்மர், தன்னிடம் வினவிய சிவகாமியையும், கேள்வி கேட்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கரிகாலனையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, தன்னை இருவரும் கவனிக்கிறார்கள் என்பதை உணர்ந்து தொடர்ந்து பேச ஆரம்பித்தார். ‘‘தமிழக சரித்திரத்தில் மறக்க முடியாத மன்னர்களில் கோச்செங்கட் சோழனும் ஒருவர். அவரது வாழ்க்கையை புலவர் தண்டி வழியாக அறிந்திருப்பீர்கள். என்றாலும் இப்போது அதை நானும் சொல்கிறேன். ஏனெனில் நாம் உரையாடி வரும் விஷயத்துக்கும் அவரது சரித்திரத்துக்கும் தொடர்பிருக்கிறது.

முதலில் நீங்கள் அறிந்த வரலாற்றிலிருந்தே தொடங்கலாம். கோச்செங்கட் சோழன் குறித்து நீங்கள் கேள்விப்பட்டது என்ன..? ‘சேரன் செங்குட்டுவனால் சோழர் ஒன்பது பேரும் முறியடிக்கப்பட்ட நிலையில், சோழ நாட்டை அபாயமும் வாரிசுப் போட்டியும் சூழ்ந்த சூழலில் பிறந்தவன் கோச்செங்கட் சோழன். இவர் சுபதேவன் என்ற சோழ அரசருக்கும் கமலவதி என்ற அரசிக்கும் பிறந்தவர். நீண்டு அரசாள்வதற்கு உரிய நேரத்தில்தான் தன் மகன் பிறக்க வேண்டும் என்பதில் தாய் கமலவதி உறுதியுடன் இருந்தார்.

ஜாதகத்தில் நம்பிக்கை உடையவரான கமலவதி, குறிக்கப்பட்ட நல்ல நேரத்துக்கு முன்பாகவே பிள்ளைப் பேறு நிகழும் சூழல் வந்தபோது ஒரு நாழிகை நேரத்துக்கு குழந்தை வெளிவர முடியாதபடி தன்னைத் தலைகீழாக நிறுத்தி வைக்கச் சொன்னார். ராணியின் பேச்சை மீற முடியாத பணிப்பெண்களும் அவரது கால்களைக் கட்டி அவரைத் தலைகீழாக நிறுத்தினார்கள். அதன் விளைவாக காலம் தாழ்த்தி உலகையே ஆளும் நல்ல நேரத்தில் பிறந்த குழந்தையின் கண்கள் தாமதத்தால் சிவந்திருந்தன.

தனது குழந்தையின் சிவந்த கண்களை முதலும் கடைசியுமாகப் பார்த்த தாய் கமலவதி, ‘என் கோச்செங்கணானே...’ என்று அழைத்தார். அதுவே பிறந்த குழந்தையின் பெயராகக் கடைசி வரை நிலைத்தது...’இந்தக் கதையைத்தான் புலவர் தண்டி உங்களிடம் சொல்லியிருப்பார். சரித்திரத்திலும் இதுவே வருங்காலத்தில் பதிவாகப் போகிறது. இவற்றின் நம்பகத்தன்மை குறித்து இங்கு நான் கேள்வி எழுப்பப் போவதில்லை. அது நமக்கு அவசியமும் இல்லை.

எது எப்படியாக இருந்தாலும் கோச்செங்கட் சோழன் என்ற மன்னர் வாழ்ந்தது உண்மை. சோழ நாட்டை அவர் ஆண்டது சத்தியம். சைவ சமயத்தைக் காக்க 70 சிவன் கோயில்களுக்கு மேல் அவர் கட்டியது நிஜம். அதனாலேயே காலம் கடந்தும் அவர் பெயர் நிலைக்கப் போகிறது என்பது நிச்சயம். எனவே, அப்படியொரு மன்னர் வாழ்ந்தாரா என்ற வினாவைத் தொடுக்கப் போவதில்லை. மாறாக, நீங்கள் கேள்விப்பட்ட, உங்களிடம் சொல்லப்பட்ட கோச்செங்கட் சோழன் குறித்த கதையில் மறை பொருளாக ஓர் உண்மை புதைந்திருக்கிறதே... அதைத்தான் சுட்டிக் காட்டி வெளிச்சமிட்டுக் காட்டப் போகிறேன்...’’சொன்ன ஹிரண்ய வர்மர் சற்று நேரம் அமைதியாக இருந்தார்.

அவர் முகத்தில் பல்வேறு உணர்வுகளும் உணர்ச்சிகளும் தாண்டவமாடின. மனம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த கரிகாலனும் சிவகாமியும் அமைதியாக நின்றார்கள். எதேச்சையாக சிவகாமியின் பக்கம் திரும்பிய கரிகாலன் அவள் ஓரக் கண்ணால் கூட தன்னைப் பார்க்கவில்லை... ஏறிடவும் முற்படவில்லை என்பதைக் கண்டான். வலித்தது. சுரங்கப் படிக்கட்டில் தன்னிடம் ஒண்டிய அவள் தோள்களுக்கு, தான் ஆறுதல் சொல்லாததே இந்த விலகலுக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.

சந்தேகங்கள் பலப்பல எழுந்தாலும் உடனே அவளை அணைந்து ஆறுதல் வழங்க வேண்டுமென்று தோன்றியது. சின்னப் பெண். முகம் தெரியாதவர்கள் எல்லாம் தன் வாழ்க்கையைக் குறித்துப் பேசும்போதும், தன் நடத்தை மீது கேள்விகளை எழுப்பும்போதும் மனம் கொந்தளிக்கவே செய்யும். நம்பிக்கைக்குரியவரின் தோளில் சாய்ந்து, பொங்கும் உணர்வுகள் அடங்கும் வரை அமைதியாக இருக்கவே தோன்றும். இதை எதிர்பார்த்துத்தான் தன்னருகில் வந்திருக்கிறாள். ஆனால், அப்போது, தான் இருந்த மனநிலையில் தன்னையும் அறியாமல் அவளைப் புறக்கணித்துவிட்டோம். அந்தக் காயத்திலிருந்து இப்போது குருதி வழிந்துகொண்டிருக்கிறது. அது வடுவாக மாறுவதற்கு முன் ஏதாவது செய்தாக வேண்டும்.

முடிவுடன் தள்ளி நின்ற கரிகாலன் மெல்ல அவளை நெருங்கி நின்றான். தோள்கள் பட்டும் படாமலும் உரசின. சலனமற்ற பார்வையுடன் நிமிர்ந்து அவனை ஏறிட்டாள். நான்கு கண்களும் உரசின. மோதின. அனலைக் கக்கின. துவண்டன. சரிந்தன. சிவகாமியின் நயனங்கள் வெடிக்கும் தருவாயில் ஹிரண்ய வர்மர் அந்த அமைதியைக் கிழித்து சூழலைத் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தார். ‘‘கோச்செங்கட் சோழன் சிவபிரானின் அருளைப் பெற்றவர் என்று போற்றப்படுகிறார். தான் பிறந்த சிதம்பரத்தை மிகச் சிறந்த சிவப்பதியாக மேம்படுத்தினார். தில்லையில் வாழ்ந்த அந்தணர்களைக் கொண்டு முடிசூட்டிக் கொண்டார். இதன்பிறகு சோழர்களுக்கு முடி சூட்டும் தகுதி தில்லை அந்தணர்களுக்கு உரிமையானது. அப்பரும் சம்பந்தரும் கோச்செங்கட் சோழனின் கோயில் வளர் நெறியைப் போற்றி உள்ளனர்.

கோச்செங்கணானின் வாழ்க்கை சோழ அரசின் பதவிக்கான போட்டியில் வென்று அரசராகத் தேர்வான ஒருவரது கதை என்றால், அவரது சமகாலத்தில் வாழ்ந்த சேரரால் தோற்கடிக்கப்பட்ட மற்ற ஒன்பது சோழ இனத்தவர்களுடைய கதை, வாழ்க்கை என்னஆனது..? இந்தப் போட்டியில் தொண்டை மண்டலத்தை ஆண்ட இளந்திரையனின் வழி வந்தவர்கள் என்ன ஆனார்கள்..? சோழ வம்சத்தின் அரசராக முடிசூட்ட இயலாதவர்கள், தங்களுக்குரிய அங்கீகாரங்கள் கிடைக்காத நிலையில் புதிய அரச இனங்களைத் தோற்றுவிக்க முயன்றார்களா..? இந்த வினாக்களைத்தான் உங்களுக்கு சரித்திரங்களைக் கற்றுத் தந்தவர்களிடம் தொடுத்திருக்க வேண்டும்.

இந்தக் கேள்விகளையே கோச்செங்கணானின் வரலாற்றுக்குப் பின்னால் இருக்கும் மறை பொருளான சரித்திரம் என்கிறேன்!’’நிறுத்திய ஹிரண்ய வர்மர், இதுவரை, தான் கூறியதை இருவரும் உள்வாங்கட்டும் என சில கணங்கள் அமைதியாக இருந்தார். பின்னர் தொடர்ந்தார்.‘‘இதுவரை நான் சொல்லியவை அனைத்தும் சங்க காலத்தில் நிகழ்ந்தவை. அதன்பிறகு பல்லவர்கள் தமிழகத்தை ஆள ஆரம்பித்தார்கள். இந்தப் பல்லவர்கள் யார் என்ற கேள்வி தமிழக வரலாற்றில் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். இன்னார் வம்சமா அல்லது அன்னார் வழித்தோன்றலா எனக் கேட்டவண்ணம் இருப்பார்கள்.

இறுதி உண்மை, ‘சாதவாகனப் பேரரசின் தென்கிழக்குப் பகுதியில் பல்லவர், ஆனந்தர், விஷ்ணுகுண்டர், இக்குவாகர், சாலங்காயனார் முதலிய சிற்றரசர்கள் இருந்தனர். சாதவாகனப் பேரரசு சிதைவுற்ற பிறகு பல்லவர்கள் தெற்கே பெயர்ந்து வேங்கடத்தின் தென்பகுதியையும், தமிழகத்தின் வடபகுதியையும் தங்கள் ஆளுகையின்கீழ் கொண்டு வந்து அதிகாரம் செலுத்தினர்...’ என்பதாக இருக்கும்! அந்தளவுக்கு வேங்கடத்துக்கு அப்பாலும் தமிழக சரித்திரத்துக்குத் தொடர்பிருக்கிறது. ஏனெனில் வட வேங்கடத்துக்கு அந்தப் பக்கம் இருக்கும் பகுதியும் தமிழர்கள் ஆண்ட பிரதேசங்கள்தான். உதாரணத்துக்கு இப்போதைய சோழர்களையே எடுத்துக் கொள்வோம். பல்லவர்கள் தமிழகத்தை ஆள்கிறார்கள்.

இந்நிலையில் பழைய சோழ மரபினரில் சிலர் ஆந்திரப் பகுதியில் குடியேறி குறைந்த நிலப்பரப்பை ஆண்டு வருகிறார்கள். ஒருவேளை சோழர்கள் தலைதூக்கி பல்லவர்கள் ஒடுக்கப்பட்டாலும் இதேதான் நிகழும். பல்லவ அரச மரபைச் சேர்ந்த சிலர் வேங்கடத்துக்கு அப்பால் இடம்பெயர்ந்து தங்கள் காலத்தைக் கழிப்பார்கள்! ஒரு விஷயம் தெரியுமா..? குகைக் கோயில்களை அமைப்பதில் பல்லவர்களுக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் சாதவாகனர்கள்தான். கிருஷ்ணா ஆற்றின் கரையில் விநுகொண்டாளைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சாதவாகனர்கள் உண்டவல்லி, பெசவாடா, மொகல்ராசபுரம், சித்தநகரம் ஆகிய இடங்களில் குகைக் கோயில்களை அமைத்தனர்.

மகேந்திரவர்ம பல்லவரின் வல்லம், மாமண்டூர் குகைக்கோயில்கள் அப்படியே உண்டவல்லியில் விஷ்ணுகுண்டர் அமைத்த குகைக் கோயில்களை அடியொற்றியவை. இப்போது ஒவ்வொரு பல்லவ மன்னர்களாக கோயில் கட்டடக் கலையை மேம்படுத்தி வருகிறார்கள். இதையெல்லாம் இங்கு குறிப்பிடக் காரணம், பல்லவர்களுக்கும் சோழர்களுக்கும் இருக்கும் பந்தத்தை அழுத்தமாகப் பதியவைக்கத்தான். அப்போதுதான் நாகலோகம், நாக நாடு குறித்து உங்களுக்குப் புரியும்! கரிகாலா! சிவகாமி! தொண்டை மண்டலத்தை ஆண்ட இளந்திரையனின் தாய் பீலிவளை நாகர் அரசரான வளைவணனின் மகள் என்பதை அறிவீர்கள். போலவே பல்லவ அரசர் வீரகூர்ச்சவர்மர் நாகர் மகளை மணந்து அரசு பெற்றார்*. இப்படி தமிழகத்துக்கும் நாக நாட்டுக்கும் இருக்கும் தொடர்பைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

இந்த நாக நாடு எங்கிருக்கிறது தெரியுமா..? கடல் கடந்து!** எங்கள் நாட்டுக் கல்வெட்டில் பீமவர்மர், இரணியவர்மர் ஆகிய மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். பாரத தேசத்தில் ஓடும் புண்ணிய நதியான கங்கையைப் போலவே அங்கும் ஒரு நதி பாய்கிறது. அதற்கு ‘மாகங்கை’ என்று பெயர். காலப்போக்கில் அப்பெயர் மருவி ‘மீகாங்’ என மாறியது. கடலில் கலக்கும் இந்த மீகாங் நதியின் வழியாக எங்கள் நாட்டுக்குள் எளிதில் நுழையலாம். பல கால்வாய்கள் கடல் வழியில் இருந்து நாட்டின் மையப் பகுதிக்குச் செல்கின்றன. எனவேதான் இந்த நதிக்கரை ஓரத்தில் பூனன்களின் ஆட்சி நிலைபெற்றது.

ஆற்றல்மிக்க சந்தையாகவும் உருவெடுத்தது. பல நாட்டுப் பொருட்கள் பூனன் ஆட்சியில் தங்குதடையின்றி கிடைத்தன. இந்த பூனன்களின் ஆட்சிக்கும் தமிழகத்துக்கும், பல்லவர், சோழர்களுக்கும் தொடர்பிருக்கிறது! அந்த சம்பந்தத்தின் ஒரு கண்ணியாக கவுண்டின்யர் என்ற அந்தணர் விளங்குகிறார். இதையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் இளந்திரையனின் பிறப்புக்கும், கோச்செங்கணான் சோழரின் தாயாதிகளுக்கும் பூனன்களின் வம்சத்துக்கும் இருக்கும் தொடர்பு விளங்கும். இந்த ஆயுதங்களை எப்படி நான் இங்கு சேகரித்தேன்... எந்த வகையில் என் அண்ணனும் இப்போதைய பல்லவ மன்னருமான பரமேஸ்வர வர்மர் சாளுக்கியர்களை எதிர்க்க உதவப் போகிறேன் என்பதும் உங்களுக்குப் புரியும்!’’நிறுத்திய ஹிரண்ய வர்மர், அழியாப் புகழ்பெற்ற சரித்திரத்தை விளக்கத் தொடங்கினார்.

(தொடரும்)

-கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்


* வேலூர் பாளையப் பட்டயம்.

** தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் கம்போடியாதான் தமிழ் இலக்கியங்களிலும், தமிழர்களின் வரலாற்றிலும் இடம்பெற்றிருக்கும் நாக நாடு என தி.நா.சுப்பிரமணியன், டி.வி.மகாலிங்கம் ஆகிய வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். தங்கள் ஆய்விலும் இதை நிரூபித்திருக்கிறார்கள். இந்த கருதுகோளை ஏற்றே இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.