மாணவர்களுக்கு கழிவறை கட்டிக் கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்!



யெஸ். சந்தேகமே வேண்டாம். புகைப்படத்தில் காட்சி தரும் இந்தக் கழிவறை அரசுப் பள்ளி ஆசிரியரின் எண்ணத்தில் உதித்ததுதான்! விழுப்புரம் மாவட்டம் சேரனூர் கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளியின் ஆசிரியர் முருகேசன்தான் இந்தக் கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர். வெறும் 20 லிட்டர் தண்ணீர் கேன்களில் குழாய்களைப் பொருத்தி இவர் உருவாக்கியுள்ள சிறுநீர் கழிக்கும் பேசின் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

“எனக்கு சொந்த ஊர் விழுப்புரம், நெகனூர் கிராமம்...’’ என்று மலர்ச்சியுடன் ஆரம்பிக்கும் முருகேசன், ஒரு கணிதப் பட்டதாரி. ‘‘2006ல எனக்கு போஸ்டிங் கிடைச்சது. பன்னிரெண்டு வருஷங்களா டீச்சிங் வேலைல இருக்கேன். இது நடுநிலைப் பள்ளி. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கழிவறையை அரசு கட்டிக் கொடுத்திருக்கு. ஆனாலும் பசங்களுக்கு அது போதலை. அதனால ரோட்டை க்ராஸ் செஞ்சு திறந்தவெளில போக ஆரம்பிச்சாங்க. இதை எப்படி மாத்தலாம்னு யோசிச்சப்ப கிடைச்ச ஐடியாதான் இந்த 20 லிட்டர் கேன்கள்.

நானே இறங்கி வேலை செஞ்சேன். பிரச்னைகள் எதுவும் வரலை. ஆதரவுதான் பெருகிச்சு. நான்தான் வேலைக்கு நடுவுல ஒரு பொதுக்குழாயை உடைச்சுட்டேன். ஆனா, தங்கள் குழந்தைகளுக்காகத்தான் இதை நான் செய்யறேன்னு மக்கள் எனக்கு ஆதரவா நின்னாங்க...’’ சிரிக்கும் முருகேசன், தன் எண்ணத்துக்கு ஏற்ப கழிவறை அமைத்ததில் இருந்து பிள்ளைகள் யாரும் சாலையைக் கடப்பதில்லை என்கிறார். ‘‘பெரிய செலவு எல்லாம் ஆகலை. ஒரு கேனை ரூ.10க்கு வாங்கினேன்.  என் நோக்கம் நிறைவேறியிருக்கு.

அடுத்து ஸ்மார்ட் கிளாஸ் கான்செப்ட். அதாவது வகுப்பறைகள்ல டிவி! அதுல கல்வி சார்ந்த வீடியோக்கள், படங்களை ஒளிபரப்பி காட்சி ஊடகம் வழியா பாடம் கற்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தப் போறோம். இதை வகுப்பு நேரத்துல செய்யாம மதிய உணவு இடைவேளைல அரங்கேற்றலாம்னு இருக்கோம். ஏன்னா, சாப்பிட்ட பிறகு யாரா இருந்தாலும் ஒரு மந்தநிலை இருக்கும். அந்த சிக்கலை இந்த  ஸ்மார்ட் கிளாஸ் ஐடியா போக்கும்னு நம்பறோம்...’’ என உற்சாகத்துடன் தன் கனவை விளக்குகிறார் இந்த கணித ஆசிரியர்!             

- ஷாலினி நியூட்டன்
படங்கள்: எ.கதிரவன்