பசுந்தாள் உரம் என்றால் என்ன..?



ஹோம் அக்ரி - 16

தழைச் சத்து என்று சொல்லக்கூடிய நைட்ரஜன் சத்து இப்போது பெரும்பாலும் யூரியா உரம் மூலமாகப் பெறப்படுகிறது. யூரியாவில் நைட்ரஜன் 46% இருக்கிறது. இது மலிவாகவும் கிடைக்கிறது. யூரியாவில் நைட்ரஜன் தவிர வேறு எந்த சத்துக்களும் இல்லை. இதுதவிர நாம் நைட்ரஜன் சத்தை DAP எனப்படும் டை அம்மோனியம் பாஸ்பேட் (11 - 18% N), அம்மோனியம் சல்பேட் (21% N), அம்மோனியம் நைட்ரேட் (35% N), கால்சியம் அம்மோனியம் நைட்ரேட் (25% N) போன்ற செயற்கை ரசாயன உரங்கள் மூலமாகவும் பெறலாம்.

எல்லா அடிப்படை பேரூட்டங்கள் உடைய உரங்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு கிடைக்கின்றன. யூரியா 50 கிலோ மூட்டை ரூ.300க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. இதன்படி ஒரு கிலோ நைட்ரஜன் ரூ.13 என்று கணக்காகிறது. DAP 50 கிலோ மூட்டை ரூ.1200க்கு கிடைக்கிறது. இதில் 18% நைட்ரஜனும், 46% பாஸ்பரஸும் உள்ளன. இதன்படியும் நைட்ரஜன் ரூ.15க்குள்ளேயே இருப்பதாகக் கொள்ளலாம். 1970க்கு முன்னால் இந்திய விவசாயிகள் யாரும் ரசாயன உரங்களை பெருமளவில் உபயோகிக்கவோ, அதைச் சார்ந்தோ இல்லை. பசுமைப் புரட்சிக்கு முன் இயற்கை வழியிலான ஊட்டங்களையே பயன்படுத்தினார்கள்.

இன்றைய நிலையில் இந்த ரசாயன உரங்களுக்கான மாற்று வழிகள் என்ன இருக்கின்றன என்று பார்ப்போம். சாணம் முதலிய தோட்டக்கழிவுகள் (Farm yard manure) (0.5%- 1% N), பசுந்தாள் உரங்கள் (2.5% to 3.5% N), பசுமையான இலை தழைகள் (0.5% to 3.5% N), மண்புழு உரம் (2% to 2.5% N),நகராட்சி காம்போஸ்ட் (1% to 3% N), வணிக ரீதியான இயற்கை உரங்கள் (2% to 8% N), புண்ணாக்கு வகைகள் (கடலை / ஆமணக்கு / வேம்பு / மற்றவை 3% to 8% N) இந்த இயற்கை உரங்களில் மேற்படி தழைச்சத்தின் அளவை கணக்கிடும்போது குறைந்த அளவே இருப்பதை நாம் உணரமுடியும்.

ஒரு டிராக்டர் லோடு குப்பை தோராயமாக ரூபாய் ரூ.2500க்கு கிடைக்கும். இதில் 2 டன் வரை இருக்கும். இது ஒரு கிலோ உரம் 80 காசு என்று கணக்காகிறது. இந்த ஒரு கிலோவில் நமக்கு 1 கிராமுக்கும் குறைவான நைட்ரஜனே கிடைக்கும். ஆக, ஒரு கிலோ நைட்ரஜனுக்கு ரூ.800 வரை செலவாகும். அதாவது யூரியாவில் ரூ.13க்கு கிடைக்கும் 1 கிலோ நைட்ரஜனை  இயற்கையான உரங்களை பயன்படுத்துவதன் வழியே ரூ.500 முதல் 800 வரை செல்வழித்து பெறவேண்டி இருக்கிறது.

இச்சூழலில், விவசாயி எதை தேர்ந்தெடுப்பார்? இயற்கை உரங்களைப் பயன்படுத்தும்போது மற்ற பலன்கள் கிடைக்கும் என்ற உண்மையை இதில் நாம் கணக்கில் கொள்ளவில்லை. செயற்கை ரசாயன உரங்களை பயன்படுத்தும் போது செலவு குறைவதைக் காண்பிக்கவே இந்த விளக்கம் தரப்பட்டிருக்கிறது. இந்த N-P-K உரங்கள் அனைத்துமே உப்பு வகையைச் சார்ந்தவை. மண்ணில் உப்பை இடுவது என்பது நுண்ணுயிரிகளை அழிக்கக்கூடியது.

ஆக , நாம் உரமிடும் முறையும், அளவும் மண்ணை பெருமளவில் பாதிக்கக்கூடியவை. இந்த உப்பு களை தேவைக்கு அதிகமாக உபயோகிக்கும்போது மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது. யூரியா மற்றும் DAP உரங்களை இலை வழியாகவும் தரலாம். இந்த வகையில் மண் உப்பாவது தவிர்க்கப்படும். இதுதவிர முழுவதும் நீரில் கரையக்கூடிய பேரூட்டங்களும் இப்போது கிடைக்கின்றன. இந்த உரங்களை நீர் வழியாகவும், இலை வழியாகவும் தரலாம். இந்த தழைச்சத்தை மண்ணில் சேர்ப்பதற்கு உரங்களை இடுவது தவிர மற்ற சில வழிகளும் இருக்கின்றன.

நாம் சுவாசிக்கும் காற்றில் 78% நைட்ரஜன் இருக்கிறது. தாவரங்கள் இந்தக் காற்றிலிருக்கும் நைட்ரஜனை நுண்ணுயிர்கள் மூலமாகப் பெறுகின்றன. இதற்கான வாய்ப்புகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்கும் போது, வெளியிருந்து தழைச்சத்தை கொடுக்கவேண்டிய அவசியம் குறைகிறது. காற்றிலிருக்கும் நைட்ரஜன் தவிர மழை நீரிலிருந்தும், மண்ணில் இயற்கையாக இருக்கும் நைட்ரேட் போன்ற பொருட்களிலிருந்தும் செடிகள் நைட்ரஜனை கிரகித்துக் கொள்கின்றன.

அவரை வகையைச் சார்ந்த பல தாவரங்கள் தங்களின் வேர்முண்டுகளில் சில நுண்ணுயிர்களின் உதவியோடு காற்றிலிருக்கும் நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றன. இந்த விதமான பயிர்களை முதலில் விதைத்து வளர்த்து பின் அவற்றை மடக்கி உழுவதன் மூலமாக தழைச்சத்தின் அளவை மண்ணில் அதிகரிக்கலாம். இதையே பசுந்தாள் உரம் என்கிறோம். சணப்பு, தக்கைப் பூண்டு, கொழுஞ்சி, பயறு வகைகள் போன்றவை விதைக்கப்பட்டு பூக்கும் முன் மடக்கி உழப்படுகின்றன.

இதுதவிர எருக்கு, புங்க இலை, வேம்பு, நுணா, வாகை போன்ற பல்வேறு விதமான பசுந்தழைகளையும் மண்ணோடு சேர்த்து உழுவதன் மூலமாக மண்ணில் தழைச்சத்தை மேம்படுத்தலாம். குறிப்பாக, நெல் பயிரிடும் முன் இந்த பசும் இலைகள் நிலத்தில் இடப்பட்டு அழுக வைக்கப்படுகின்றன. பின்னர் அம்மோனியா வாடை வரும் போது மண்ணோடு கலக்கும்படி உழுது விடப்படுகிறது. நுண்ணுயிர்களை தரையில் இடுவதும் காற்றிலுள்ள நைட்ரஜனை மண்ணில் நிலைப்படுத்த உதவுகின்றன. வேளாண் துறை அலுவலகங்களில் ‘அசோஸ்பைரில்லம்’ என்ற நுண்ணுயிரி, துகள்கள் வடிவில் பாக்கெட்டுகளில் விற்கப்படுகின்றன. இதை ஏக்கருக்கு 3 - 6 பாக்கெட்டுகள் என்ற அளவில் பயன்படுத்தலாம்.

மண்ணுக்கு உள்ளே இவை சேரவேண்டும் என்பதால் உழுவதற்கு முன் கலப்பது நல்லது. ஈரமில்லாத நிலத்தில் இந்த நுண்ணுயிரிகள் வாழமுடியாது. எனவே, பயிரிடுவதற்கு முன் செய்யும் கடைசி உழவில் இதைக் கலந்துவிடுவது நல்லது. ‘அசோஸ்பைரில்லம்’ மற்றும் மற்ற பேரூட்டங்களுக்கான நுண்ணுயிரிகள் திரவ வடிவிலும் கிடைக்கின்றன. அமுதக்கரைசல், பஞ்சகவ்யா போன்ற இயற்கை ஊட்டங்களில் இந்த நுண்ணுயிரிகள் பெருமளவில் உள்ளன.

 (வளரும்)

-மன்னர் மன்னன்


எங்கள் வீட்டில் ஒரு வேப்ப மரம் உள்ளது. வேப்பமரப் பொருட்களை பலவிதமாகப் பயன் படுத்தலாம் என்று தெரிந்திருந்தாலும் நாங்கள் எந்த விதத்திலும் பயன்படுத்துவதில்லை. வேம்பு சார்ந்த பலன்கள் குறித்து தங்கள் அறிவுரை என்ன?
- திருஞானம், தேவதானப்பட்டி.

சித்திரையில் பூக்கும் வேம்பு, ஆடிக்கு முன் காய்த்து, பின் பழுத்து விழ ஆரம்பிக்கும். கீழே விழும் பழுத்த பழங்களைச் சேகரித்து, காயவைத்து, வேப்பங்கொட்டையைப் பிரித்து எடுக்கலாம். வேப்பங்கொட்டை மிகச்சிறந்த பூச்சிக்கொல்லி. கொட்டையைப் பிரிப்பது கடினமானதாகத் தோன்றினால் அப்படியே தோலோடு எடுத்து ஒன்றிரண்டாக கொட்டை உடையும்படி தட்டி வைத்துக்கொள்ளவும். பிறகு தொட்டி மண் தயார் செய்யும்போதோ அல்லது பின்னரோ மண்ணில் நன்றாகக் கலந்து விடலாம். வேப்பங்கொட்டை பலவிதமான பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதோடு பல நோய்களிலிருந்தும் செடிகளைக் காக்கிறது.

‘Dragon fruit’ என்று விற்கப்படும் பழம் கள்ளிச் செடியிலிருந்து பெறப்படுவதா?
- எட்வர்ட், நாகர்கோவில்.

ஆமாம். இந்தப் பழம் ஒரு விதமான கள்ளிச் செடியிலிருந்து விளைவது. ஆனால், நமது சப்பாத்திக்கள்ளி / சதுரக்கள்ளியிலிருந்து விளைவதில்லை. இப்போது இந்தியாவிலும் இது விளைவிக்கப்படுகிறது. நட்டபின் 8 மாதத்தில் பலன் தரக்கூடியது.

தில்லியில் நடைபெறும் சர்வதேச மாங்கனி கண்காட்சியில் மரக்கன்றுகள் விற்பனை உண்டா?
- எஸ்.சுதா, திருப்பூண்டி.  

இல்லை.

நான் வீட்டில் கொத்தமல்லி தழை வளர்க்க விரும்புகிறேன். ஒருமுறை முயற்சி செய்தபோது சரியாக முளைக்கவில்லை. நல்ல ‘potting mixture’தான் உபயோகித்தேன். முளைக்காததற்கு என்ன காரணமாக இருக்கும்?
- நித்யா கணேஷ், சிங்கப்பூர்.

கடையில் கிடைக்கும் கொத்தமல்லி (தனியா) விதை சில சமயங்களில் ‘irradiate’ செய்யப்பட்டு இருப்பதால் மலடாகியிருக்கும். அதனால் முளைக்காமல் இருந்திருக்கலாம். விதையாகக் கிடைக்கும் தனியாவையே உபயோகப்படுத்தவும். மேலும் கொத்தமல்லி விதையை ஒன்றிரண்டாக உடைத்தே விதைக்கவேண்டும்.