கண்ணடிக்கும் அரசியல்!



நியூஸ் வியூஸ்

சில மாதங்களுக்கு முன்புதான் சினிமா டிரைலர் ஒன்றில் அழகாக கண்ணடித்த கேரள நடிகை பிரகாஷ் வாரியர், உலகப் புகழ் பெற்றார். இணையத்தளங்களில் அவரது ‘கண்ணடி அழகு’ வைரல் ஆனது. இப்போது நாடெங்கும் இளசுகள் அவரை மாதிரியே கண்ணடிக்க சிறப்புப் பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். பிரியா வாரியருக்கு போட்டியாக இப்போது வைரல் ஆகிக்கொண்டிருப்பது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கண்ணடிப்பு. பாராளுமன்றத்தில் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார் ராகுல் காந்தி.

திடீரென பேச்சை நிறுத்திவிட்டு பிரதமரை நோக்கி நடந்தார். எதிர்பாராவிதமாக பிரதமரை அணைத்து, தன் அன்பை வெளிப்படுத்தி அவையை மட்டுமின்றி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கரகோஷத்துக்கு இடையே தன்னுடைய இருக்கைக்கு திரும்பியவர், தன்னுடைய நெருங்கிய நண்பரான ஜ்யோராதித்யா சிந்தியாவை நோக்கி ஸ்டைலாகக் கண்ணடித்தார்.

இந்த அணைப்பும், கண்ணடிப்பும் உடனடியாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பான விவாதமாகப் பற்றிக் கொண்டது. இந்திய பாராளுமன்ற வரலாற்றிலேயே இதுவரை இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததில்லை என்று ஆச்சரியமாகப் பேசப்பட்டது. பாராளுமன்ற சபாநாயகரான சுமித்ரா மகாஜன் கொதித்து விட்டார். பாராளுமன்றத்தின் கண்ணியத்தை இச்செயல் கேலிக்குரியதாக ஆக்கிவிட்டதாக ஆளும் பாஜக தரப்பும் சரமாரி யாக ராகுலை நோக்கி குற்றம் சாட்டினர்.எனினும் பொதுமக்கள் மத்தியில் இந்த அணைப்பும், கண்ணடிப்பும் அமோகமான ஆதரவைப் பெற்றிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

ராகுல், டி20 போட்டியின் கடைசிப்பந்தில் சிக்ஸர் அடித்திருப்பதாக சமூகவலைத்தளங்களில் இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள். உச்சக்கட்டமாக ‘கண்ணடி அழகி’ பிரியா வாரியரே, ராகுலின் கண்ணடிப்பை ‘பிரமாதம்’ என்று பாராட்டிவிட்ட பிறகு மறுபேச்சு ஏது? இந்தியாவில் கண்ணடிப்பது என்பது கொஞ்சம் விஷமத்தனமான, விடலைத்தனமான செயல்பாடு. ஆயினும், பாராளு மன்றத்திலேயே கண்ணடிக்கப்பட்டு விட்டதால் இனிமேல் அதற்கும் ஓர் அந்தஸ்து கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்திய அரசியலுக்கு வேண்டு மானால் கண்ணடிப்பது புதுமையாக இருக்கலாம். உலக அரங்கில் ஏற்கனவே சில பிரபலமான கண்ணடிப்பு சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.

2007ல் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத், அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவருக்கு அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ், வெள்ளை மாளிகையில் பிரும்மாண்டமான வரவேற்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்வில், “மேதகு மகாராணி அவர்கள், அமெரிக்காவின் இருநூறாவது ஆண்டுவிழாவை சிறப்பாகக் கொண்டாட 1776ஆம் ஆண்டு பெரும் உதவி புரிந்தார்” என்று அதிபர் புகழ்ந்துகொண்டே போக, கூடியிருந்த கூட்டம் சட்டென்று சிரித்தது.

மகாராணியும் மக்களோடு இணைந்து சிரிக்க, 1976 என்று சொல்லுவதற்குப் பதிலாக 1776 என்று சொல்லிவிட்ட தன்னுடைய தவறை உணர்ந்து, உடனே மகாராணியைப் பார்த்து ஸ்டைலாக கண்ணடித்துச் சிரித்தார் ஜார்ஜ் புஷ். இங்கிலாந்து மகாராணியை நோக்கி அமெரிக்க அதிபர் கண்ணடித்தது அப்போது சர்ச்சைக்குரிய விஷயமாக பேசப்பட்டது. பின்னர் தன்னுடைய கண்ணடிப்பு குறித்து விளக்கம் அளித்தார் புஷ். “மகாராணியே அந்த கண்ணடிப்பை ரசித்தார். ஒரு தாய், தன்னுடைய குழந்தையை நோக்குவதைப் போன்ற கனிவான புன்னகையை என்னை நோக்கி வீசினார். அவரே தவறாக எடுத்துக் கொள்ளாதபோது, மற்றவர்களுக்கு என்ன?” என்று வேதனையோடு கேட்டார்.

ராணியும் பெருந்தன்மையாக, அதிபரோடு அடுத்து கலந்துகொண்ட வேறொரு விருந்து நிகழ்வில், “1776ல் நான் இங்கே வந்திருந்தபோது…” என்று குறும்பாகச் சிரித்தவாறே அதிபரை நோக்கிக் கலாய்க்க.. அந்த ‘கண்ணடிப்பு விவகாரம்’ அப்படியே முடிவுக்கு வந்தது. இன்னொரு முறை கண்ணடி சர்ச்சையில் சிக்கியவர் ஆஸ்திரேலிய பிரதமராக இருந்த டோனி அபோட். 2014ல் ஆஸ்திரேலியாவின் பட்ஜெட் தொடர்பான நேரலை விவாதம் ஒன்று ரேடியோவில் நடந்துகொண்டிருந்தது. மக்கள் ‘லைவ்’வாகவே பட்ஜெட் குறித்த தங்களது அதிருப்திகளை பிரதமரிடம் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

அப்போது நேரலையில் பேசிய வயதான ஒரு பெண் (அவர், முன்னாள் பாலியல் தொழிலாளி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்), கூடுதல் வரிவிதிப்பை மிகக்கடுமையாகச் சாடினார். “உங்கள் அம்மாவையோ, பாட்டியையோ என் நிலையில் நினைத்துப் பாருங்கள். இவ்வளவு வரிகளை விதித்தால், அதைக் கட்டுவதற்கு நானெல்லாம் மீண்டும் பாலியல் தொழில்தான் செய்யப் போக வேண்டும்” என்று உருக்கமாக வேதனைப்பட்டார்.

அந்தப் பெண்ணின் பொருமலைக் குறித்து பேசிக்கொண்டிருந்த பிரதமர், சட்டென்று வாய்தவறி “அந்தம்மாவால் அந்த வேலையைத்தான் செய்ய முடிஞ்சிருக்கு போல” என்று கொச்சையாக கமெண்ட் அடித்து, கண்ணடித்தார். ரேடியோ நிறுவனத்தில் இருந்த புகைப்படக்காரர், இந்த கண்ணடிப்பை கண நேரத்தில் க்ளிக் செய்துவிட, அந்த புகைப்படமும், பிரதமரின் கொச்சையான கமெண்டும் ஊடகங்களில் வெளிவந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. அடுத்த தேர்தலில் அபோட் தோற்பதற்கு, இந்த கண்ணடிப்புமே கூட ஒரு காரணமாகி விட்டது.

இதுபோலவே 2008ல் அமெரிக்காவில் தேர்தல் நடந்தபோது துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட சாரா பாலின், தொடர் கண்ணடிப்பின் காரணமாக மக்கள் ஆதரவை இழந்த நிகழ்வும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும், பேரணிகளிலும் முத்தாய்ப்பாக அவர் கண்ணடிப்பது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, தனக்கு எதிராக போட்டியிட்ட ஜோ பிடெனுடனான டிவி விவாதம் ஒன்றில் ஸ்டைலாக அவர் கண்ணடித்த சமாச்சாரம், பெரும் புயலைக் கிளப்பியது. “எதிர்காலத்தில் அமெரிக்க அதிபராக ஆவதற்கு வாய்ப்பிருக்கும் ஒருவர், தன்னுடன் போட்டியிடுபவரைப் பார்த்து கண்ணடிப்பது பொறுப்பற்ற செயல்” என்று அமெரிக்க வாக்காளர்கள் கொந்தளித்துப் போனார்கள். அந்தத் தேர்தலில் சாரா பாலின் தோல்வியடைந்தார்.

அதற்காக கண்ணடிப்பவர்கள் எல்லாம் தோற்பவர்கள் என்று அர்த்தமல்ல. அமெரிக்காவின் நிரந்தர வெற்றி நாயகனான பராக் ஒபாமேவே கூட அவ்வப்போது ஜாலியாகக் கண்ணடிப்பவர்தான். நம்ம ராகுல் காந்தியின் கண்ணடிப்புக்கு இந்திய மக்கள் ஆதரவு தரப்போகிறார்களா எதிர்க்கப் போகிறார்களா என்பது அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில்தான் தெரியும்.                 

- யுவகிருஷ்ணா