ஆண்களுக்கான எளிமையான கருத்தடை மருந்துகள்!



இந்தியா முழுக்க 1970 / 80களில் குடும்பக்கட்டுப்பாடு வேகமெடுத்தது. இதில் ஆண்களை விட பெண்களே அதிகம் பங்கெடுத்தனர். இதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பக்கவிளைவுகள் ஏராளம். அவை அவர்களது ஆயுள்வரை துரத்தின என்பதுதான் சோகம். இந்தச் சூழலில் ஆண்களும் இப்போது எவ்வித மனத்தடையும் இன்றி உற்சாகத்துடன் கருத்தடை விஷயத்தில் பங்கேற்கத் தொடங்கியுள்ளனர். இதை மையமாக வைத்தே ஆண்களுக்கான கருத்தடை சாதனங்களாக மாத்திரை, உடலில் தடவும் ஜெல்... என பல்வேறு மருந்துகள் விற்பனைக்கு வர ஆரம்பித்துள்ளன. இந்நிலை தொடரும் பட்சத்தில் 2024ம் ஆண்டு இச்சந்தையின் மதிப்பு உலகளவில் ஒரு பில்லியனாக எகிறும் என்கிறது Global Market Insights அமைப்பின் ஆய்வு.

ஆதியில் ஆண்களுக்கான ஆணுறை விலங்குகளின் குடல்தசைகளால் உருவாக்கப்பட்டன. இதனால் இதைப் பயன்படுத்த பெரும்பாலானவர்கள் தயங்கினர். இந்நிலை முதல் உலகப்போரின்போது மாறியது. அப்போதுதான் முதன்முறையாக ஜெர்மனி வீரர்கள் ஆணுறையை சகஜமாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். 1918ம் ஆண்டில் பால்வினை நோய்களைத் தடுக்க அமெரிக்க அரசாங்கம் ஆணுறையை சட்டபூர்வமாக்கியது. கருத்தடுப்பு மாத்திரை 1960ம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டதும், 18 வயதுப் பெண்கள் அதனைப் பெறும் வாய்ப்பு கிடைத்ததும் வரலாற்றையே மாற்றியது.

என்றாலும் 62% பெண்களுக்கு முழுமையான கருத்தரிப்புத் தடையை இம்மருந்துகள் வழங்கவில்லை என்பதே உண்மை. மாறாக, உடல் எடை கூடுவது, மனநிலை மாற்றம், உடல் உறுப்புகளில் ரத்தம் கட்டுவது ஆகிய பிரச்னைகள் பெண்களின் ஆரோக்கியத்தை நொறுக்கின. இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது கருத்தடை பாரத்தை ஏற்க ஆண்கள் முன்வந்துள்ளது பெண்களுக்கு எந்தளவு மகிழ்ச்சியையும் நிம்மதி யையும் தரும் என்பது சொல்லாமலேயே விளங்கும். தோலில் தடவும் ஜெல், தினசரி மாத்திரை தொடர்பான ஆய்வுகள் டெஸ்டோஸ்டெ‌ரோன் அளவைக் குறைத்து கருத்தரித்தலை நம்பிக்கையூட்டும்படி தவிர்க்கின்றன. வாஷிங்டனைச் சேர்ந்த சமையல்கலைஞர் டேனியல் டட்லி, 5 ஆண்டுகளாக ஜெல், மாத்திரை, ஊசி என மூன்று கருத்தரிப்பு தடை சோதனைகளிலும் ஈடுபட்டுள்ளார்.  

‘‘ஆண்களுக்கு குறைவான செலவில் கருத்தரிப்பை செய்ய முடியும்போது ஏன் பெண்களை கருத்தடைக்காக வற்புறுத்தவேண்டும்? இது அநீதி இல்லையா?’’ என்பதே டேனியலின் கருத்து. உலகளவில் 50 சதவிகித ஆண்கள் புதிய கருத்தடுப்பு முறைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ‘‘ஆண்களுக்கான கருத்தடுப்பு ஆராய்ச்சியில் சமூகரீதியான புதிய மாற்றம் இது. இச்சோதனையில் தன்னார்வலர்களாக பங்கேற்க பல ஆண்கள் முன்வந்துள்ளனர்!’’ என்கிறார் ஆராய்ச்சி யாளர் மருத்துவர் ஸ்டெபானி பேஜ்.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் (NIH) மற்றும் பாப்புலேஷன் கவுன்சில் ஆகிய அமைப்புகள் உலகிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களோடு இணைந்து ஜெல் சோதனைகளை பிரமாண்டமாக நடத்தத் தொடங்கியுள்ளது. ஆறு நாடுகளிலுள்ள 400க்கும் மேற்பட்ட தம்பதிகளை இதற்கெனவே தேர்ந்தெடுத்து ஜெல்லை உடலில் தடவி பரிசோதிக்கவுள்ளனர். ஜெல்லிலுள்ள செயற்கை வேதிப்பொருளான நெஸ்டோரோன், ஊசி மருந்தைவிட ரத்தத்தில் கலந்து டெஸ்டோஸ் டெரோனைக் கட்டுப்படுத்தி நம்பிக்கையான முடிவுகளைத் தந்துள்ளது.

காண்டம், வாசக்டமி கடந்த மூன்றாவது முறையைக் கண்டறி வதற்கான ஆராய்ச்சியை அமெரிக்காவும் சீனாவும் 1970ம் ஆண்டு முதலாகத் தொடங்கிவிட்டன. சீனா காட்டன் விதைகளிலிருந்து எடுத்த வேதிப்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கிய காஸிபோல் மாத்திரையை 8 ஆயிரம் பேர்களிடம் சோதித்தபோது விந்தணுக்களின் அளவு குறைந்தது. ஆனால், பக்கவிளைவுகள் அதிகரித்தன. எனவே இந்த ஆராய்ச்சி கைவிடப்பட்டது.

சரி. கருத்தடை முறைகளைக் கையாளும் ஆண்களுக்கு பக்கவிளைவுகள் உண்டா? ‘‘மனஅழுத்தம், மனநிலை மாற்றத்தைப் பற்றி பெரிதுபடுத்துகிறார்கள். அவற்றின் அளவு சகித்துக்கொள்ளும் அளவுதான். அவ்வளவு ஏன்... பெண்களுக்கும் பொதுவானதுதான் இது...’’ என்கிறார் சிலியைச் சேர்ந்த ஆராய்ச்சி மருத்துவர் கேப்ரியலா நோ. கோடிக்கணக்கில் உருவாகும் விந்தணுக்களைக் கட்டுப்படுத்து வதும், மாதம்தோறும் உருவாகும் ஒரு கருமுட்டையைக் கட்டுப்படுத்துவதும் ஒரே மாதிரியல்ல என்பதை ஆராய்ச்சியாளர்களும் உணர்ந்தேயிருக்கிறார்கள்.  

இந்தியாவில் RISUG என்னும் விந்தணுவைக் கட்டுப்படுத்தும் புதிய ஊசிமருந்தை கண்டுபிடித்துள்ளனர். ஊசிமருந்திலுள்ள பாலிமர் ஜெல், குழாயிலுள்ள விந்தணுக்களைச் செயலிழக்கச் செய்து கருத்தடுப்பைச் செய்கிறது. இதனை அமெரிக்காவைச் சேர்ந்த பர்சிமஸ் பவுண்டேஷன், வாஸ்ஜெல் என்ற பெயரில் உருவாக்கி சோதனைகளை நடத்தி வருகிறது. இதன் கருத்தடுப்பு சதவிகிதம் 98%. ஆராய்ச்சிகளின் வெற்றி சதவிகிதத்தில் மாற்றம் இருந்தாலும் கருத்தடை முயற்சியில் ஆண்களின் பங்கும், பொறுப்பும் சமூகத்தில் பாலின இடைவெளி யைக் குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை.          
           

- ச.அன்பரசு

ஆண்களுக்கும் கருத்தடை!

ஜெல்: செயற்கை வேதிப்பொருளைக் கொண்ட ஜெல்லை தினசரி தோலில் தடவினால் போதும். ரத்த ஓட்டத்தில் கலக்கும் வேதிப்பொருள் விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்.

மாத்திரை: பழைய முறை என்றாலும் நம்பிக்கையானது. ஆய்வுக்கு உட்பட்ட 83 ஆண்களுக்கு விந்தணு கட்டுப்படுத்தப்பட்டதோடு தீவிர பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.

பாலிமர் ஜெல் ஊசி: 98 சதவிகிதம் கருத்தடையை உறுதிசெய்யும் ஊசி மருந்து முறை. சோதனை முடிந்து அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது.