காட்ஃபாதா் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 68

“கவலையே படாதீர்கள். பாப்லோ எங்கிருந்தாலும் அவனை உயிருடனோ, பிணமாகவோ நிச்சயம் கொலம்பிய ராணுவம் பிடித்தே தீரும்!” அந்த இளம் ராணுவ வீரன், தான் பதில் சொல்லிக் கொண்டிருப்பதே பாப்லோவிடம்தான் என்பதை அறியாமல் சொன்னான்! வெடித்துச் சிரித்த பாப்லோ, அவனுக்கு ஒரு ராயல் சல்யூட் வைத்தார். அந்த ராணுவ வீரனைப் போலவே ஆயிரக்கணக்கானோர் இரவும் பகலுமாக பாப்லோவைப் பிடிப்பது என்கிற ஒற்றை நோக்கத்துக்காக பசி, தூக்கம் மறந்து அலைந்து கொண்டிருந்தார்கள்.

மெதிலின் உள்ளிட்ட எல்லா பெரிய நகரங்களிலும் ஒவ்வொரு வீடும் சோதனையிடப்பட்டுக் கொண்டிருந்தது. அமெரிக்காவின் சென்ட்ரா ஸ்பைக், சர்ச் பிளாக் மற்றும் டெல்டா ஃபோர்ஸ் போன்ற அமைப்புகள், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனைத்துத் தொலைபேசி அழைப்புகளையும் ஒட்டுக் கேட்டு ஏதாவது துப்பு கிடைக்குமா என்று அலைந்து கொண்டிருந்தன. குறிப்பாக பாப்லோவின் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய சகாக்களின் தொலைபேசிப் பேச்சுகள் 24 மணி நேரமும் பதிவாகிக் கொண்டே இருந்தன. இதற்கிடையே அமெரிக்காவுக்கு ‘சரக்கு’ அனுப்புவதில் பாப்லோவுக்கும் பெரும் சுணக்கம் ஏற்பட்டிருந்தது. அவருடைய அமெரிக்க டீலர்கள் பலரும் சிஐஏவின் கிடுக்கிப்பிடியில் சிக்கி விழி பிதுங்கிக் கொண்டிருந்தனர்.

போதைத்தொழில் என்றாலே அது பாப்லோ எஸ்கோபார்தான் என்கிற முத்திரையை அமெரிக்கா அழுத்தமாகக் குத்தியிருந்தது. அவரை முடித்துவிட்டால் உலகில் போதைத்தொழிலே இருக்காது என்று பிரச்சாரம் செய்து வந்தது. அனைவரும் வேறு வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்லலாம் என்கிற விரக்தியான முடிவினை பாப்லோ எடுத்தார். முதற்கட்டமாக குடும்ப உறுப்பினர்களை ஹெலிகாப்டர் ஒன்றில் அனுப்பி வைக்கும் முயற்சியை மேற்கொண்டார். அனைவரும் ஏறி பயணத்துக்குத் தயாரான நிலையில் திடீரென்று ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று யாருக்குமே புரியவில்லை. பைலட்டின் சமயோசிதமான செயல்பாடுகளால் பாப்லோ குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பினர். பின்னர் வேறு வேறு ஏற்பாடுகள் மூலமாக அர்ஜெண்டினா, சிலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு அவர்கள் பிரித்து அனுப்பப்பட்டனர். நிலைமையை இப்படியே நீடிக்க விடுவதில் பாப்லோவுக்கு உடன்பாடு இல்லை. கொலம்பிய அதிபரும் வன்முறையைக் கைவிட்டு சரணடைந்தால் உயிருக்கு உத்தரவாதம் என்றே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

மீண்டும் சரணடைவது, சிறையில் இருந்தபடியே பேச்சுவார்த்தையைத் தொடர்வது என்கிற கடினமான முடிவுக்கு பாப்லோ வரவேண்டியிருந்தது. முதற்கட்டமாக தன்னுடைய சகோதரர் ராபர்ட்டோ எஸ்கோபாரை சரணடைய வைத்தார் பாப்லோ. இந்த முடிவு அரசுக்கு தெரிவிக்கப்பட்டபோது, “நல்லது. உங்களுக்குரிய மரியாதையோடு நடத்துவோம்...” என்றனர். ஆனால், அரசின் வாக்குறுதியை நம்பி 1992 அக்டோபரில் சரணடைந்த ராபர்ட்டோ, சிறையில் நாய் மாதிரி நடத்தப்பட்டார்.

சரணடைவதற்கு அரசுடன் அவர்கள் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டன. சாதாரண பிக்பாக்கெட் திருடனுக்கு வழங்கப்படக்கூடிய சலுகைகள் கூட பாப்லோவின் சகோதரருக்கு வழங்கப்படவில்லை. சிறைக்காவலர்களில் சிலர் பாப்லோவின் ஆதரவாளர்கள். அவர்கள் மூலமாக பாப்லோவிடம் பேசி, தன்னுடைய பரிதாபகரமான நிலைமையைச் சொல்லி அழுதார் ராபர்ட்டோ. கொதித்துப் போன பாப்லோ, நாடு முழுக்க இருந்த தன் ஆதரவாளர்களை மேலும் வன்முறைக் குத் தூண்டினார். படிப்படியான சரணடைதல் நடவடிக்கை மூலமாக அமைதி திரும்புமென்று கருதியவர்கள், நிலைமை மேலும் மோசமாவதைக் கண்டு அரசாங்கத்தையும், பாப்லோவையும் சபிக்க ஆரம்பித்தனர்.

கொலம்பிய ஊடகங்கள் பாப்லோவை மாயாவி போல சித்தரிக்கத் தொடங்கினர். ‘கால்பந்துப் போட்டியை பாப்லோ ரசித்துக் கொண்டிருந்தார்’ என்று புகைப்படத்தோடு திடீரென தலைப்புச் செய்தி வரும். இராணுவத்தின், போலீஸின் கண்ணில் படாத பாப்லோ, பத்திரிகையாளர்களின் கேமராவுக்கு மட்டும் எப்படி சிக்குகிறார் என்று அரசு குழம்பிப் போகும். வேறு வேறு இடங்களில் வேறு வேறு வேடங்களில் பாப்லோவைப் பார்த்ததாக பலரும் சொல்லத் தொடங்கினார்கள்.

தன்னைத் தேடிக் கொண்டிருந்தவர்களை குழப்ப பாப்லோவே இப்படிப்பட்ட செய்திகளைக் கசிய விட்டுக் கொண்டிருந்தார். வேட்டையர்கள் சற்றும் எதிர்பாராத இடங்களில் அவர் சுதந்திரமாக உலவிக் கொண்டுதான் இருந்தார். இதெல்லாம் நடந்து பல ஆண்டுகள் கழித்து ஒரு வயதான டாக்ஸி டிரைவர், பத்திரிகைப் பேட்டி ஒன்றில் சொன்ன விஷயம் சுவாரஸ்யமானது. “என் காரில் நடுத்தர வயது மனிதர் ஒருவர் ஏறினார். சாதாரணமாகப் பேச்சைத் தொடங்கிய அவர் நாட்டு நடப்புகளையும், மக்களின் எண்ணங்களையும் பற்றி விசாரிக்கத் தொடங்கினார்.

அரசாங்கம், மக்களின் நலனைப் பேணுவதைவிட பாப்லோவைப் பிடிப்பதில்தான் மும்முரமாக இருக்கிறார்கள். விலைவாசி விண்ணுக்கு ஏறிவிட்டது. சாதாரண மனிதர்கள் பிழைக்கவே வழியில்லை. இந்தக் காரை வாங்கிய கடனைக் கூட நான் செத்தபிறகும் என்னுடைய மகன்களால் அடைக்க முடியாது. ஒவ்வொரு கொலம்பியனுமே கடன் தொல்லை தாங்காமல் தூக்கில் தொங்கக்கூடிய நிலைமை விரைவில் வருமென்று புலம்பினேன்.

டாக்ஸியில் இருந்து இறங்கும்போது, அந்த நடுத்தர மனிதர் என் முகவரியைக் கேட்டு வாங்கிச் சென்றார். மறுநாள் காலை, நான் சற்றும் எதிர்பாராத வகையில் பெரும் பணம் அடங்கிய பை ஒன்று என் வீட்டு வாசலில் கிடந்தது. ‘எல்லாக் கடன்களையும் அடைத்துவிட்டு, நிம்மதியாக வாழுங்கள். ஒரே ஒரு கொலம்பியன் கூட வாழ வக்கில்லை என்று தூக்கில் தொங்கக் கூடாது - அன்புடன் பாப்லோ!’ என்கிற கடிதம் அந்தப் பைக்குள் இருந்தது. என் காரில் பயணித்த பயணி பாப்லோதான் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்...” என்று அந்த டாக்ஸி டிரைவர் பேட்டி கொடுத்தபோது, பாப்லோ மறைந்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன.

அவ்வளவு இக்கட்டான சூழலிலும் கூட கொலம்பியர்கள் மீது பாப்லோ வைத்திருந்த நேசத்தை எண்ணி மக்கள் கண்ணீர் வடித்தார்கள். அந்தக் காலக்கட்டங்களில் பாப்லோ, தன் நண்பர்களின் ஆடம்பரமான வீடுகளிலோ, பண்ணைகளிலோ தங்குவதைத் தவிர்த்துக் கொண்டிருந்தார். தன்னிடம் பணிபுரிந்த கடைநிலை ஊழியர்களின் குடியிருப்புகளில்தான் பாதுகாப்பாக உணர்ந்தார். ஓரிரு நாட்களுக்கு ஒருமுறை தன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். பாப்லோவைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் அவர் சேரிகளிலோ, சிறிய குடிசை வீடுகளிலோ இருப்பார் என்று கற்பனையிலும் கூடக் கருதியதில்லை.

அதுபோல ஒரு நண்பரின் வீட்டில் பாப்லோ தங்கியிருந்தபோது, டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அவரது மடியில் நண்பரின் ஏழு வயது மகள் அமர்ந்திருந்தாள். டிவி செய்திகளில் பாப்லோவின் புகைப்படம் காட்டப்பட்டு, இவரைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 5 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என்கிறார்கள். அந்தக் குழந்தை பாப்லோவிடம், “அங்கிள், உங்களை மாதிரியே யாரோ ஒருத்தரை டிவியில் காட்டுறாங்க. அவரை போலீஸ் தேடிக்கிட்டிருக்காம்!” என்றாள். குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சியபடியே கேட்டார்.

“அந்தாளை போலீஸ் பிடிச்சிடுமா?” “போலீஸ் ஆச்சே, கண்டிப்பா பிடிச்சிடும்!”பாப்லோவின் முகம் சட்டென்று இருளடைந்தது. இராணுவம் அவரை மிகவும் நெருக்கமாக நெருங்கி கோட்டை விட்ட சம்பவங்களும் பலமுறை நடந்தன. ஒருமுறை அதுபோல ‘ஜஸ்ட் மிஸ்’ஸாகி தப்பி, காட்டில் பாப்லோவும், அவரது பாதுகாவலர் ஒருவரும் ஓடிக் கொண்டிருந்தனர். பாப்லோ சீரியஸாக ஒரு பாக்கெட் ரேடியாவை தன்னுடைய காதுகளில் பொத்திக்கொண்டே ஓடிக் கொண்டிருந்தார். அமெரிக்காவின் டெல்டா ஃபோர்ஸ் படையினர் அந்தக் காட்டைச் சுற்றி வளைத்து சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருந்தனர்.

இவர்கள் ஒரு புதர் மறைவில் இருக்க, சில மீட்டர் தொலைவில் படையினர் வந்துகொண்டிருந்தனர். பாப்லோ பாதுகாவலரிடம் மெதுவாக, அதே நேரம் சந்தோஷம் தொனிக்கும் குரலில் சொன்னார். “மெதிலின் ஒரு கோல் போட்டுடிச்சி!”உயிரைக்கையில் பிடித்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் நேரத்திலும் இந்த மனிதர், கால்பந்து வர்ணனையைக் கேட்டுக் கொண்டிருக்கிறாரே என்று அந்த பாதுகாவலர் ஆச்சரியமடைந்தார். பாப்லோவின் முகத்தில் அந்த இக்கட்டான சூழலிலும் தென்பட்ட குதூகலத்தைக் கண்டு பாதுகாவலரின் கண்களில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தது.

(மிரட்டுவோம்)

ஓவியம் : அரஸ்