COFFEE TABLE



தன் நண்பருக்கு ஆதரவாக இருக்கும் நாய்!

நாய் நன்றியுள்ள பிராணி, மனிதர்களின் நண்பன் மட்டுமல்ல; அதற்கும் மேலே என்பதற்கு உதாரணம் இந்தச் சம்பவம். சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்த விபத்தின் போது முதுகுத்தண்டில் பலத்த அடிபட்டு டேனிலோவால் நடக்கமுடியாமல் போய்விட்டது. ஆயுளுக்கும் சக்கர நாற்காலியில்தான் வாழ்க்கையை ஓட்டியாக வேண்டும். தனக்குத் துணையாக ஒரு நாயை வளர்த்துவருகிறார். அந்த நாய்தான் டேனிலா விரும்பும் இடங்களுக்கு எல்லாம் அவரை அழைத்துச் செல்கிறது! ஆம்; சக்கர நாற்காலியைப் பின்னிருந்து தள்ளுவது அவரின் செல்லம்தான். இந்த பாசக் காட்சியை நேரடியாகக் காணவேண்டுமென்றால் பிலிப்பைன்ஸுக்கு ஒரு டிக்கெட் போடுங்கள்.

தீபிகா 25!

இன்ஸ்டாவில் 25 லட்சம் ஃபாலோயர்களைத் தாண்டி அசத்துகிறார் தீபிகா படுகோனே! சமீபத்தில் பிளாஸ்டிக்கின் தீமை குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வருத்தத்துடன் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தவிர, ‘‘கடலுக்குள் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை வீசுவதால், 2050ல் மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகள்தான் கடலில் அதிகமாக இருக்கும்...’’ என்று கருத்துகளையும் அள்ளிவீசியிருக்கிறார் தீபி. அந்த வீடியோவை 13 லட்சம் பேர் பார்த்து வைரலாக்கிவிட்டனர்.

குட்டி யானையை மீட்ட வனத்துறையினர்

ஃபேஸ்புக்கின் ‘The Dodo’ என்ற பக்கத்தில் ‘This Elephant Mam Wouldn’t Stop until Rescuers Figured out What She Wanted’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள வீடியோவைப் பார்த்தவர்கள் உறைந்துபோயுள்ளனர். அதில், காட்டுக்குள் தன் அம்மாவுடன் சேர்ந்து இரை தேடிக்கொண்டிருந்த குட்டி யானை ஒன்று, திடீரென்று கால்கள் இடறி கிணற்றுக்குள் விழுந்துவிடுகிறது. சேயைப் பிரிந்த தாய் யானை கண்ணீரோடு கதறியிருக்கிறது. அந்த அழுகுரல் கேட்டு அங்கே வந்த வனத்துறையினர், குட்டியானையைப் பத்திரமாக மீட்டு தாயிடம் ஒப்படைத்திருக்கின்றனர். இந்த நெகிழ்ச்சிப் பதிவை 11 லட்சம் பேர் பார்த்து உருகியுள்ளனர்.

இந்தியர்களின் வீடியோ மோகம்

‘‘இந்தியர்கள் ஆன்லைனில் வீடியோக்களைப் பார்ப்பதற்காக செலவழிக்கும் நேரம் பல மடங்கு அதிகரித்துவிட்டது...’’ என்கிறது சமீபத்திய ஆய்வு. ‘‘2012ம் வருடம் ஆன்லைனில் வீடியோக்களைப் பார்க்க தினமும் 2 நிமிடங்கள் மட்டுமே செலவழித்து வந்த இந்தியர்கள், இந்த வருடம் 52 நிமிடங்களைச் செலவழிக்கின்றனர். அடுத்த வருடம் இது 67 நிமிடங்கள் ஆகலாம்...’’ என்று ஆருடம் சொல்கிறது அந்த ஆய்வு. ‘‘40% பேர் ஸ்மார்ட்போனையும், 60% பேர் கம்ப்யூட்டர், டேப்லெட் போன்ற மற்ற கருவிகளையும் ஆன்லைனில் வீடியோக்களைப் பார்க்க பயன்படுத்துகின்றனர்...’’ என்கிற நிபுணர்கள், ‘‘உலகிலேயே சீனர்கள்தான் அதிக நேரம் ஆன்லைனில் வீடியோக்களைப் பார்க்கின்றனர்...’’ என்கின்றனர்.              

எக்ஸ் 5

கடந்த வாரம் ‘நோக்கியா’ தனது புதிய மாடலான ‘X5’ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கருப்பு, வெள்ளை, நீலம் என்று மூன்று வண்ணங்களில் இது கிடைக்கிறது. 5.86 இன்ச் டிஸ்பிளே, 3 ஜிபி ரேம், 3063mAh பேட்டரி திறன், 13 எம்பி பின்புற கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, 32 ஜிபி இன்பில்ட் மெமரி என்று பல அம்சங்களுடன் ஸ்லிம்மாக இதை வடிவமைத்துள்ளனர். செப்டம்பரில் இங்கேயும் இந்த போன் விற்பனைக்கு வந்துவிடும். விலை ரூ.9,999.