முழுநேர எழுத்தாளரா ஆகணும்னு நினைச்சேன்... சீரியல் டைரக்டராகிட்டேன்!



‘‘சமீபத்துலதான் ‘பிரியமானவள்’ ஆயிரமாவது எபிசோடை கேக் வெட்டி கொண்டாடினோம். என் பலமே டீம்தான். திரைக்கதை எழுதும் வே.கி.அமிர்தராஜ், வசனம் எழுதும் கவிதாபாரதி, ஒளிப்பதிவாளர் சீனு, செகண்ட் யூனிட் இயக்குநர் கடற்கரை, எடிட்டர் பழனி, எங்க நடிகர்கள், உதவியாளர்கள் என்னைச் சுத்தி இருக்கற அத்தனை பேருமே பக்கபலமா இருக்காங்க. அதனாலதான் எங்களால சமூகப் பொறுப்போடு நிறைய விஷயங்களை அலச முடியுது...’’ அழுத்தமாகக் குறிப்பிடுகிறார் இ.விக்கிரமாதித்தன். குடும்ப உறவுகளின் உன்னதத்தை உணர்த்திய ‘ஆனந்தபவன்’, ‘அழகி’,  ‘கெட்டிமேளம்’, ‘மலர்கள்’, ‘மேகலா’, ‘செல்லமே’, ‘உதிரிப்பூக்கள்’, இப்போது  வந்துகொண்டிருக்கும் ‘பிரியமானவள்’ ஆகிய வெற்றித் தொடர்களின் இயக்குநர் இவர்.

‘‘நாங்க விவசாயக் குடும்பம். பூர்வீகம் வேலூர் மாவட்டம் பக்கத்துல காவனூர் கிராமம். இப்பவும் கூட்டுக் குடும்பமாதான் வாழறோம். அப்பா ஏகாம்பரம், திராவிட சிந்தனையாளர். அவரால வீட்ல நாங்க யாரும் சாமி கும்பிடுவது கிடையாது. வீட்லயும் சாமி படங்கள் இல்ல. அவர் கோயில் பக்கமே போனதில்ல. அப்பா மாதிரிதான் நானும். அம்மா பதியம்மாள், வீட்டைப் பார்த்துக்கறாங்க. எனக்கு அண்ணன், தம்பிங்க ஏழு பேர். இதுதவிர ரெண்டு அக்கா, ரெண்டு தங்கச்சிங்க. பெரிய ஃபேமிலி. எப்பவும் கலகலனு இருக்கும்.

பத்தாவது வரை ஒழுங்கா படிச்சேன். எப்பவும் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுப்பேன். ஒரு கட்டத்துல படிப்புல ஆர்வம் குறைஞ்சிடுச்சு. சிறுகதைகள், கவிதைகள் பக்கம் கவனம் திரும்பிச்சு. ஜெயகாந்தன் எழுத்துக்களை தேடித்தேடி படிச்சேன். சிறுகதைகள், கவிதைகள் எழுத ஆரம்பிச்சேன். ஒருகட்டத்துல முழுநேர எழுத்தாளரா ஆகணும்னு முடிவு பண்ணினேன்! அப்ப வேலூர் காலேஜுல பி.எஸ்சி கணிதம் படிச்சுட்டிருந்தேன். அது என் ரசனைக்கான படிப்பு இல்லனு புரிஞ்சுது...’’ என்கிற விக்கிரமாதித்தன், திரைப்படக் கல்லூரியில் சேர்ந்த விதம் சுவாரஸ்யமானது.

‘‘செகண்ட் இயர் படிக்கிறப்ப ஃபிலிம் இன்ஸ்டிடியூட் விளம்பரத்தை பேப்பர்ல பார்த்தேன். உடனே சென்னைல இருந்த என் அண்ணன் பீமாராவ்கிட்ட அப்ளிகேஷன் வாங்கி அனுப்பச் சொன்னேன். டைரக்‌ஷன் கோர்ஸ் சேர டிகிரி அவசியம். அதனால அதைத் தவிர மத்த கோர்ஸுகளுக்கான அப்ளிகேஷன் எல்லாத்தையும் அண்ணன் வாங்கி அனுப்பிட்டார். அத்தனை கோர்ஸுக்கும் அப்ளை பண்ணினேன்! ஃபிலிம் பிராசஸிங் கோர்ஸ்ல அட்மிஷன் கிடைச்சது. மேத்ஸ் படிக்கறதுல இருந்து தப்பிக்கணும்னு நினைச்சதால பிராசஸிங்னா என்ன... எதுக்காக அதைப் படிக்கணும்னு தெரியாமயே அந்த கோர்ஸ்ல சேர்ந்தேன்.

என் நல்ல நேரம், அப்ப திரைப்படக் கல்லூரில நாம படிக்கிற கோர்ஸ் பெயர்கள்தான் வேற வேறயா இருக்குமே தவிர டைரக்‌ஷன்ல இருந்து எடிட்டிங் வரை எல்லாத்தையும் கத்துக்க முடியும். ஒருவழியா டி.எஃப்.டி.  முடிச்சதும், இயக்குநர்கள் ராபர்ட் - ராஜசேகர்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். அவங்க அப்ப, ‘அடுத்த கட்டம்’, ‘ஒரு பறவையின் சரணாலயம்’ படங்களை இயக்கிட்டிருந்தாங்க. என்ன காரணத்தினாலோ ரெண்டு படங்களும் டிராப் ஆகிடுச்சு.

அப்புறம் ஷக்தி சிதம்பரத்தின் ‘சாம்ராட்’ல கடைசி அசிஸ்டென்ட் டாகச் சேர்ந்தேன். நான்கு வருஷங்கள் இந்தப் படத்தோட ஷூட் போச்சு! படம் ரிலீஸ் ஆகும்போது முதல் உதவியாளரா டைட்டில்ல என் பெயர் வந்தது!’’ புன்னகைக்கும் விக்கிரமாதித்தன் இதன் பிறகே டிவி சீரியல் பக்கம் வந்திருக்கிறார். ‘‘இண்டஸ்ட்ரி ஆரோக்கியமா இல்லாத நேரம் அது. படப்பிடிப்பு ரொம்ப அரிதா நடக்கும். அதனால ஒழுங்கான வேலை இல்லாம சில வருஷங்கள் இருந்தேன். கேமரா அசிஸ்டென்ட்டா ஒர்க் பண்ண கூப்பிட்டா போயிடுவேன்.

இந்த சூழல்லதான் ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ல ‘அக்‌ஷயா’, ‘பஞ்சவர்ணக்கிளி’, ‘சத்யா’ தொடர்கள்ல வேலை செய்யும் வாய்ப்பு அமைஞ்சது. என் ஒர்க் அவங்களுக்கு பிடிச்சுப் போகவே ‘ஆனந்தபவன்’ல என்னை இயக்குநராக்கினாங்க. அவங்களுக்கு நான் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன். ‘ஆனந்தபவன்’ நல்லா போச்சு. ஆனாலும் அதுக்குப் பிறகு மூணு வருஷங்கள் வேற சீரியல் இயக்கற வாய்ப்பு வரலை. வீட்ல சும்மா இருக்கக்கூடாதுனு ‘மெட்டி ஒலி’ல செகண்ட் யூனிட் டைரக்டரா ஒர்க் பண்ணினேன். இந்த டைம்ல ஜெயசுதா மேம், நித்தின்கபூர் சார் அறிமுகம் கிடைச்சது. அவங்க தயாரிச்ச, ‘கெட்டிமேளம்’ சீரியலை இயக்கினேன். என் மனசுக்குப் பிடிச்ச சீரியல்னு பட்டியலிட்டா அதுல ‘கெட்டிமேள’த்துக்கு முதலிடம் கொடுப்பேன்.

இதுக்கு அப்புறம் ‘மலர்கள்’, ‘மேகலா’, ‘செல்லமே’ ‘உதிரிப்பூக்கள்’னு பிசியானேன். இடைல சினிமால கவனம் செலுத்தலாமானு தோணிச்சு. சரியா அப்ப ‘விகடன்’ல இருந்து கூப்பிட்டு ‘அழகி’ பண்ணச் சொன்னாங்க. முதல் வாய்ப்பளித்த கம்பெனியாச்சே! மறுக்க மனசில்லாம சந்தோஷமா பண்ணினேன். அதுவும் ஹிட். இப்ப ‘பிரியமானவள்’ போகுது...’’ மகிழும் விக்கிரமாதித்தனின் திருமணம் ‘மேகலா’ சீரியலின்போது நடந்திருக்கிறது. ‘‘அந்த சீரியலுக்காக கலைஞர் கையால மாநில அரசின் சிறந்த இயக்குநருக்கான விருது வாங்கினேன். இந்த சீரியல் போயிட்டிருந்தப்ப எனக்கு கல்யாணமாச்சு. ஆக்சுவலா கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்லாமதான் நானிருந்தேன்.

சென்னைல எங்கண்ணன் பீமாராவ், அண்ணி மஞ்சுளா கூட அவங்க மகனா தங்கியிருந்தேன். அவங்க காட்டின அன்பாலதான் சென்னைல என்னால தாக்குப்பிடிக்க முடிஞ்சுது. அப்புறம் தனியா வீடு எடுத்து தங்கினேன். இடைல உடம்பு சரியில்லாமப் போச்சு. மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போகக் கூட ஆளில்லாம இருந்தேன். வீட்ல அத்தனை பேரும் பதறிட்டாங்க. ‘உனக்குனு ஒரு துணை வேணும்’னு மிரட்டி கல்யாணம் செய்து வைச்சாங்க! அரேஞ்ஜ்டு மேரேஜ்தான். மனைவி பெயர் மங்களசுந்தரி. மகிழ்ச்சியா வாழறோம். எங்களுக்கு ரெண்டு பசங்க. பெரியவன் கோவேந்தன், மூணாவது படிக்கறார். சின்னவன் மகிழ்வேந்தன், ஒண்ணாவது படிக்கறார்!’’ நிறைவுடன் புன்னகைக்கிறார் விக்கிரமாதித்தன்.

- மை.பாரதிராஜா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்