வீடு அமைதியாக, அன்பாக இருந்தால் எப்போதும் ஒரு மனிதன் இளமையாக இருப்பான்... அவன் செய்யும் வேலையில் தெளிவு இருக்கும்!



மம்முட்டி தனக்கு உணர்த்தியதை‘பேரன்பு’டன் பகிர்ந்து கொள்கிறார் ராம்

‘பேரன்பு’ டீசர் வெளியாகி பரபரப்பு கூட்டியிருக்கிறது. இயக்குநர் ராம்  நிறைந்த ஆசுவாசத்தில் பேசுகிறார். எண்ணி நான்கு படங்கள்தான். சற்றே கோபமும், மனம் நிறைய கனிவும் கொண்ட அவரோடு பேசுவது சம்பிரதாயமல்ல; நிஜ அனுபவம். ‘‘எனக்கென்ன ஒரு சந்தோஷம்னா... தீவிரத் தன்மையோடும், உண்மையோடும் எளிய மக்களுக்கு நான் போய்ச் சேர்ந்திருக்கேன். பார்வையாளனும் நானும் சேர்ந்து, வாழ்க்கையிலும் கலையிலும் உயர்வதற்கான ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடிக்கணும். அப்படி ஒரு வழியாக ‘பேரன்பை’ பார்க்கிறேன்.

முதல் படத்திலிருந்து எளிமையாக எப்படி படம் பண்ணுவது என்பதை நோக்கியே நகர்ந்திருக்கேன். வாழ்க்கையை எளிமையாக வாழ்வதும், ஒரு படத்தை எளிமையாக எடுப்பதும் கஷ்டம். உணரக்கூடிய, புரியக்கூடிய, எல்லோருக்கும் புத்துயிர்ப்பை தரக்கூடியதுதான் ‘பேரன்பு’ படம்...’’ சீரான தொனியில் பேசுகிறார் ராம்.

‘பேரன்பு’க்குள் மம்முட்டி வந்தது...

மம்முட்டி மனசுக்கு நெருங்கிய நடிகர். அவரோட முக்கியமான படங்களை அனுபவமாக உணர்ந்திருக்கிறேன். நடிகை பத்மபிரியாவிடம் இந்தக் கதையைச் சொல்லி ‘இதில் மம்முட்டி நடித்தால் நல்லாயிருக்கும்...’ என்றேன். மம்முட்டியிடம் கதை சொன்ன பிறகு ‘எப்ப பண்ணுவீங்க. யார் புரடியூசர்...’ என்றார். இரண்டுக்கும் சேர்த்து நான் ‘தெரியாது...’ என்றேன். பிறகு தேனப்பன் தயாரிக்க முன்வந்தார். ஷூட்டிங்கின் முதல் நாள் மம்முட்டியிடம் சின்ன உரசல். அப்புறம் புரிதல். அப்புறம் நேசிக்கவே ஆரம்பித்துவிட்டார்.

தினம் காலையில் வரும்போது ‘என்ன சார், டார்ச்சர் பண்றீங்க...’ன்னு வருவார். மாலையில் போகும்போது ‘சூப்பர்...’னு சொல்லிட்டுப் போவார். அடம்பிடிக் கிற குழந்தைதான் அவர். லாலிபாப்பை கையில் வைச்சுக்கிட்டே இருக்கணும். நல்ல நடிப்பை அவர்கிட்டே கத்துக்கிட்டேன். இப்படியும் பல வர்ணங்கள் நடிப்பதிலிருக்குன்னு காண முடிந்தது. அவரை நடிப்பில் சேலன்ஜ் செய்ய முடிந்தது. இது எனக்கு வேணாம்னு சொல்ல முடிந்தது. ஒரு லெஜண்ட் கூட வேலை பார்க்கிறது எவ்வளவு சுலபம்னு புரிஞ்சது.

‘இதில் டயலாக்கே வேணாம், ஒரு நடையாக வந்து Express பண்ணுங்க’னு சொன்னால் பண்ணிடுவார். நடிப்பை ஒரு முழுத் தகுதியாகக் கொண்டவரிடம் வேலை பார்த்தால் பதட்டம், stress இருக்காது. ‘பேரன்பு’ தானாக நிகழ்ந்த படம். மம்முட்டி, அஞ்சலி, சாதனான்னு எனக்கு பயமே இல்லை. ஆனால், அவங்க வேற ஒண்ணா நடிக்க ஆரம்பிச்சாங்க. அஞ்சலி கேரியரில் இது பெஸ்ட். அஞ்சலி கேரக்டரே கஷ்டம். படத்தில் அது யாருன்னு சொல்ல முடியாது. நிஜமா, பொய்யான்னு அறிய முடியாது. எந்தக் கேள்வியும் கேட்காத புரடியூசர். கூட இப்படியான மனிதர்கள் இருந்தாங்க. இதுவும் ‘பேரன்பு’தான்!

52 நாட்கள் மம்முட்டி கூட எப்படி கழிஞ்சது?

லைஃப்டைம் அனுபவம். மம்முட்டி மலையாள சினிமாவின் அடையாளம். அவருக்குக் கொடுக்கிற மரியாதை ஒட்டுமொத்த மலையாளப் பட உலகுக்கு கொடுக்கிற மரியாதை. மம்முட்டி தனித்து உருவாகியிருக்க முடியாது. எம்.டி.வாசுதேவன் நாயர், அடூர் கோபாலகிருஷ்ணன், லோகிததாஸ், பத்மராஜன் மற்றும் பல படைப்பாளிகளின் கைவண்ணத்தில் நடிச்சு நடிச்சு உருவான மனிதர். அவர் மலையாள மக்களின் வீட்டு உறுப்பினர். அவரும், மோகன்லாலும் ஒவ்வொரு வீட்டுக்கும் பெரியப்பா, சித்தப்பா மாதிரி. அப்படிப் பார்த்தால் அவர் பக்கத்தில் கூட நாங்க நிற்க முடியாது. நான் அமுதவனா அவரைப் பார்த்தேன். சில விஷயங்களில் விடாப்பிடியாக இருப்பேன். சூரிய உதயத்தை உங்களோட எடுக்கணும்பேன். ஷாட் முடியாமல் அனுப்ப மாட்டேன். அவர் வந்துட்டார் என்பதற்காக அவரை வச்சு உடனே ஷாட் எடுக்க மாட்டேன்.

‘உங்ககிட்டே என்ன நான் கேட்கிறேன், ஒரு குட்மார்னிங், ஒரு குட்ஈவினிங்தானே...’ என்பார். அவர் வயசுக்கு அவ்வளவு பொறுமையும், வாழ்க்கை மேலே ஆசையும், தொழில் மேல வெறியும்... ஆச்சரியமாக இருக்கு. அவர் மனசையும் உடலையும் பேணி, எந்த சிக்கலும் இல்லாமல் வாழ்கிற மனிதர். அவர் வெற்றியின் ரகசியம் அவரோட குடும்பம். வீட்டு மனிதர். எங்கேயிருந்தாலும் வீட்டுக்குப் போகத் துடிப்பார். வீடுதான் அவருக்கு நிம்மதியான இடம். வீடு அமைதியாக, அன்பா இருந்தால் என்னிக்கும் ஒரு மனிதன் செய்கிற வேலையில் தெளிவும், இளமையாகவும் இருக்க முடியும்னு அவரைப் பார்த்தா தோணுது.

சாதனா அருமையாக நடிச்சிருக்காங்க...

சாதனா தேசிய விருது கூட வாங்கியாச்சு. ஆனால், அந்தப்பொண்ணு சிறப்பாக நடிக்கணும்னு மம்முட்டி விட்டுக்கொடுப்பார். அது எனக்குப் புரியும். அஞ்சலி எங்க வீட்டு உறுப்பினர். எமோஷனல் அட்டாச்மென்ட் இருக்கு. 10 வருடங்களாக எந்த பெரிய ஹீரோவிடமும் நடிக்காமலேயே நிலைச்சு நிற்கிறாங்க. நடிக்கணும்னு சொன்னால், அதுவே ஃப்ளைட் டிக்கெட் போட்டுட்டு வந்து, நடிச்சுக் கொடுத்திட்டுப் போற பொண்ணு. ‘கற்றது தமிழி’ல நான் அறிமுகப்படுத்திய அஞ்சலி, நடிப்புல இந்தளவு உயர்ந்திருப்பதைப் பார்க்கிறப்ப சந்தோஷமா இருக்கு.  

முதல் தடவையாக நா.முத்துக்குமார் இல்லாமல் உங்க படம்...

நான் பாடலே வேண்டாம்னு நினைச்சேன். ஆனால், இங்கே அது கூடாதுன்னு சொன்னாங்க. வைரமுத்து, என் மனைவி சுமதி ராம், கருணாகரன்... மூணு பேரும் அவங்களோட சிறப்பான வரிகளைக் கொடுத்தாங்க. மறுக்கலை. யுவன் மியூசிக் அருமை. ஆனால், என்னால் முத்துக்குமார் இல்லாமல் முடியலை. இதோ நீங்க உட்கார்ந்திருக்கிற நாற்காலியில் சாஞ்சு உட்கார்ந்திட்டு, என்னையே உத்துப்பார்த்திட்டு வரிகளை எழுதிக் கொடுத்திட்டுப் போயிடுவான்.

அவனுக்கு என் வீடு தெரியும், என்னைத் தெரியும், இந்தக் கதையோட பூர்வீகம், இதில் என் பகுதி எங்கேயிருக்குன்னு முப்பரிமாணமும் தெரியும். அதனால் பாடலுக்கு உட்காரும்போது அவன் இல்லாமல் சிக்கித் தவிச்சேன். தேனி ஈஸ்வர் என் கனவுகளைத் திரையில் அப்படியே கொண்டு வந்தார். பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்து பேசினவங்க ஒவ்வொரு வரின் வார்த்தையிலும் அவர் பெயர் இருந்தது. ‘தரமணி’யிலிருந்து, நானும் அவரும் ஓர் அலைவரிசைக்கு வந்திட்டோம். படம் பிடிக்கிறது சரி... ஆனால் பனி, குளிர், தனிமை, வெப்பம், வேதனையெல்லாம் கொட்டித்தர முடியுமா? அதையும் செய்திருக்கிறார் தேனி ஈஸ்வர்.

- நா.கதிர்வேலன்