காதல் போயின் மோதல்



இதோ நிஜ விந்தியா என் முன்னால் அமர்ந்திருக்கிறாள்.இதுவரை எத்தனையோ விந்தியாக்களைச் சந்திக்க நேர்ந்து விட்டது. ஆனால், இவள்தான் என்னுடைய விந்தியா. இன்னமும் அதே அதீத அழகு. கட்டியணைத்து அந்த ஸ்பாஞ்ஜ் கன்னங்களில் முத்தமிடத் துடித்தது மனம். பள்ளியில் துவங்கிய விந்தியா மீதான காதல் கல்லூரியைக் கடக்கிறபோது முடிந்து விட்டது. “ரவி, இது இன்ஃபாச்சுவேஷன். நிஜமான காதல் வாழ்க்கையில் நீ ஸ்திரமா உக்காந்திருக்கும்போது வரும். ஸ்கூல்ல படிக்கும்போது வர பாரதிராஜா காதலெல்லாம்  ஜஸ்ட் சினிமாட்டிக். ஆத்தங்கரையைத் தாண்டறதுக்குள்ளே ஆறிப் போயிடும்...” காதல் உடைவதற்கு எவ்வளவு எளிமையான ஒரு காரணம்.

என் கண் முன்னே இன்னொரு ஆளுடன் சுற்றி - தாங்கிக் கொள்ள முடியவில்லை. நார்த் இந்தியாவில் ஒரு வேலையை வாங்கிக்கொண்டு ஓடிவிட்டேன். பழைய முகவரிக்கு வந்த அவள் கல்யாணப் பத்திரிகையைக் கூட ஹவுஸ் ஓனர் மற்ற கடிதங்களோடு பண்டிலாய்க் கட்டி அனுப்பி வைத்திருந்தார். கிழித்துப் போட்டுவிட்டேன். என்றாவது ஒரு நாள் மறுபடியும் சந்திப்போம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இன்றைய நாளில் அமெரிக்க தலைநகரில் நிறைவேறியிருக்கிறது.

அந்த டெக்னாலஜி கான்ஃபரன்சில் நான்தான் சிறப்புப் பேச்சாளர். பங்கு பெறுவோர் பட்டியலில் அவள் பெயரும் இருந்தது. டெலிஃபோன் டைரக்டரி துவங்கி, எப்போது எந்தப் பெயர்ப்பட்டியல் கைக்கு வந்தாலும் மனம் அனிச்சையாய் விந்தியா என்ற பெயரைத் தேடும். விந்தியா அதிகம் வைக்கப்படும் பெயர் இல்லை. அதே சமயம் அதிகம் வைக்கப்படாத பெயரும் இல்லை. இந்தியாவில் இருந்தவரை அவ்வப்போது ஏதோ ஒரு விந்தியாவைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டபடிதான் இருந்தது. எப்படி ஒரு விந்தியாவைத் தவிர்க்க வட இந்தியாவுக்கு ஓடி வந்தேனோ அப்படியே பல விந்தியாக்களைத் தவிர்க்க ஜெனிஃபர்களும், ஜூலிக்களும் நிறைந்த அமெரிக்காவுக்குப் பறந்து வந்து விட்டேன்.

சீஃப் ஆர்க்கிடெக்ட்டாக நான் வேலை பார்க்கும் மைல்சாஃப்ட் என்ற ஸ்டார்ட் அப் கம்பெனி இன்றைக்கு ஹாட்டாகியிருக்கும் ஏபிஐ மேனேஜ்மென்ட் துறையை பல வருடங்களுக்கு முன்பே கையில் எடுத்து முன்னணிக்கு வந்துவிட்டது. எந்த கான்ஃபரன்சானாலும் என்னுடைய மைல்சாஃப்ட் பிரசன்ட்டேஷனுக்கு கூட்டம் அதிகம். ப்ரொக்ராமிங் தலைவலிகள் இல்லாத இந்த மென்பொருள் தளத்தை குறிப்பாய் பெண்கள் பலர் தேர்ந்தெடுக்கிறார்கள். விந்தியாவும் அப்படித்தான் வந்திருக்கிறாள்.

உலகம் எவ்வளவு சிறியது. அமெரிக்கா வந்தபின்னும் நான் தவிர்த்த என் விந்தியா என் கண் முன் தோன்றுகிறாள். கான்ஃபரன்ஸ் முடிந்த பிறகு ஸ்டார்பக்ஸ் காபிக் கடையில் கொஞ்ச நேரமும், பிறகு காரில் ஏறி எனது வீட்டுக்கும் வந்து விட்டோம். சும்மா ஒரு பேச்சுக்குத்தான் “வீட்டுக்கு   வா!’ என்றேன். கூப்பிட்டவுடன் வந்து விட்டாள். பல வருஷங்கள் கழித்துப் பார்க்கிறோம். இருந்த போதிலும் நமது பரஸ்பர நம்பிக்கைகள் மாறுவதில்லை. அப்போது எப்படி இருந்தேனோ அப்படியேதான் வெள்ளந்தியாக இப்போதும் இருப்பேன் என்று நம்புகிறாள்.

காலம் மனிதர்களை மாற்றி விடும் என்பதை மறந்து விடுகிறோம். சுண்டி விட்ட நாணயம் போல சுழன்று சுழன்று நல்லவனாகவோ கெட்டவனாகவோ எப்படி வேண்டுமானாலும் கீழே விழவைக்கும் என்பதை சவுகரியமாக மறந்துவிடுகிறோம். “கல்யாணமே பண்ணிக்கலையா?” என்றாள் ஆச்சரியமாக. “இல்லை. உன்னைப்பத்தி சொல்லு. எப்படி இருக்கார் உன் கணவர்? இங்க அமெரிக்காவில்தானா? நல்லா வெச்சிருக்காரா? குழந்தைகள் எத்தனை?” “ப்ச்” என்றாள். “நல்ல வேளை குழந்தைகள் இல்லை. என்னோட கல்யாணம் முடிஞ்சுபோன கதை ரவி. இன்ஃபாச்சுவேஷனே பெட்டர்னு இப்போ தோணுது.

பாரதிராஜா ஜீனியஸ்தான்...” “என்னாச்சு?” “எப்போ வேணா டிவோர்ஸ் ஆயிரும். நிறைய பெண் தொடர்பு. நான் அவனுக்கு ஆயிரத்தில் ஒருத்தி. ஏமாந்துட்டேன். ஏமாந்துட்டேன்னு தெரியவே பல வருஷங்கள் ஆயிருச்சு. நான் ஏமாற்றத்தில் அடிபட்டபோதெல்லாம் ஒரு அஞ்சு நிமிஷம் உன்கூட பேசினா ஆறுதலா இருக்கும்னு ஏங்கியிருக்கேன். ஆனா நீ எங்கே இருக்கேன்னே தெரியல...” அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்திருந்தாள். “ஐ மிஸ் யூ ஸோ மச் ரவி. இன்னொரு சான்ஸ் கிடைச்சா விட மாட்டேன். கெட்டியா பிடிச்சிப்பேன்!”

அவள் என் கையை எடுத்து அவள் கையில் வைத்துக் கொள்ள முற்பட்டாள். அதற்கு முன்பாக இயல்பாக எழுவது போல நான் எழுந்து ஃப்ரிட்ஜை நோக்கிப் போனேன். ஜூஸ் பாட்டிலை எடுத்து இரண்டு கோப்பைகளில் ஊற்றி அவளிடம் ஒன்றைக் கொடுத்தேன். “வெறும் ஜூஸ்தானா ரவி? வோட்கா, வைன் இப்படி எதுவும் இல்லையா?” மயக்கமாகப் புன்னகைத்தாள். இவள் என்னுடைய விந்தியா தானா? “நான் குடிக்கிறதில்லை...” “யூ ஆர் ஸ்டில் மை சேம் ஸ்வீட் பாய். உன்னைப்பத்தி சொல்லு ரவி. எங்கே போனே? என்ன பண்ணினே? எப்போ அமெரிக்கா வந்தே?” “நிஜத்தைச் சொல்லணும்னா உன்னோட பிரிவை என்னால தாங்கிக்கவே முடியலை.

உன்னைப் பார்க்கக் கூடாது, உன்னைப் பத்தின எந்தச் செய்தியும் கேக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணி வட இந்தியா போய்ட்டேன். ஏன்னா, பார்த்தா எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வரும்...” அவள் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். “என்ன சொன்னே? ஆத்திரம் வரும்னா?”“ஆமா. திடீர்னு காதலை வேண்டாம்னு சொன்ன உன் மூஞ்சில ஆசிட் அடிக்கலாம்ங்கிற அளவுக்கு கோபம். அடிச்சிருவேங்கிற பயத்தில்தான் இடம் மாறிப் போனேன்...”  “சில்லி...’’ என்று திட்டினாள். “இப்ப அதை நினைச்சா சில்லியா தெரியலை?” “இல்லை!”அது வரை சகஜமாக இருந்த விந்தியா என் பதிலைக் கேட்டு முதன் முறையாக லேசாகக் கலக்கம் அடைந்த மாதிரி தெரிந்தாள்.

“இன்னும் என் ஆத்திரம் அப்படியேதான் இருக்கு. கொஞ்சம் கூட குறையலை...” அமெரிக்காவில் ஒரு தன்னந்தனி வீட்டில், கூக்குரலிட்டால் ஏன் என்று கேட்கக்கூட யாருமில்லாத ஆளரவமற்ற ஓர் இடத்தில் இருக்கும் தன் அபத்திர நிலைமைக்காக மெல்ல நெளிந்தாள். “ஜோக்தானே பண்றே ரவி?” “சத்தியமா இல்லை. விலகி விலகிப் போனாலும் இந்த விந்தியா என்னை விட்டு விலக மாட்டேங்கிறா. எங்கே போனாலும் ஏதோ ஒரு விந்தியா க்ராஸ் பண்ணிட்டே இருக்கா.

நார்த் இந்தியாவில் நாலு ஸ்டேட் மாறிப் போயிட்டேன். ஒவ்வொரு ஸ்டேட்டிலும் ஒவ்வொரு விந்தியா உன்னை ஞாபகப்படுத்திடறா. நீ தூக்கி எறிஞ்ச காதலை… அது தந்த ஏமாற்றத்தை… அது ஏற்படுத்தும் ஆத்திரத்தை… உள்ளே புதைச்சிப் புதைச்சி வெக்க முடியலை. ஸ்ட்ரெஸ் எல்லை மீறிப் போகும்போது தீர்த்துக் கட்டிடறேன்...”“என்னது?”“ஒவ்வொரு ஸ்டேட்டில் ஒவ்வொரு விந்தியா. தீர்த்துக் கட்டின பிறகுதான் நார்மலாகிறேன். அதைத் தவிர்க்கவே விலகி விலகி ஓடுறேன். இருந்தாலும் எங்கே போனாலும் அடுத்து எந்த விந்தியா குறுக்கிடப் போறாள்னு பயமாவே இருக்கு.

பெயர்ப்பட்டியல்களைப் பார்க்கறப்போவெல்லாம் உடல் நடுங்குது. ஆனா, நான் எதிர்பார்க்கலை. நீயே வருவேன்னு எதிர்பார்க்கலை. உன்னைப் பார்த்த நிமிஷத்திலிருந்து உன்னை என்ன செய்வதுன்னு எனக்குள்ளே பெரிய போராட்டம் விந்தியா. கட்டி அணைக்கவும் தோணுது… வெட்டிப் புதைக்கவும் தோணுது…”அவள் வியர்வை துளிர்த்த நெற்றியோடு எழ முற்பட்டாள். “ரவி, ரிலாக்ஸ் ஃபர்ஸ்ட். நீ கண்டிப்பா ஒரு மனநல மருத்துவரைப் பார்க்கணும். நாந்தான் திரும்ப கிடைச்சுட்டேனே...” “பழைய விந்தியாவா இல்லையே. பழசாகிப் போன விந்தியாவா வந்திருக்கே...” சொல்லிக்கொண்டே அவள் கழுத்தில் தொங்கும் ஐடி கார்டு ஹோல்டரால் அவள் கழுத்தைச் சுற்றி இறுக்க ஆரம்பித்தேன். உலகில் உள்ள அத்தனை விந்தியாக்களும் ஒழிகிற வரை என் ஆழ்மனதில் ஆர்ப்பரிக்கும் அந்தக் கடல் அடங்காது போலிருந்தது.

அவள் மூச்சுத் திணறித் துடிக்க ஆரம்பித்தபோது - சட்டென கதவு உடைபடும் சப்தம் கேட்டது. கறுப்பு யூனிஃபார்மில் அமெரிக்க போலீசார் சிலர் துப்பாக்கிகளோடு பாய்ந்தனர். என் மேல் பலத்த அடி விழுந்தது. அப்படியே நான் சரிய - இருமிக்கொண்டே விலகினாள் விந்தியா. “தாங்க்யூ ஆஃபீஸர்ஸ். எங்கே தாமதித்து விடுவீர்களோ என்று பயந்து விட்டேன். ஆதாரம் கிடைக்குமான்னு தேடித்தான் வந்தேன். கிரைம் சீன் எனாக்டிங்கே பண்ணிக் காட்டிட்டான்...” விந்தியா கணவன் பிள்ளை குட்டி சகிதமான தனது குடும்ப போட்டோவை அவனுக்குக் காட்டினாள். “ரவி, பை ப்ரொஃபெஷன் நான் போலீஸ்காரிடா. லீட் கிடைச்சுத்தான் உன்னைத் தேடி வந்தேன். இன்ஃபாச்சுவேஷனைவிட அப்ஸெஷன் அபாயகரமானது. பெண்கள் உணர்வை மதிங்கடா…” ‘நாச்சியார்’ பட டீசரில் ஜோதிகா சொன்ன கெட்ட வார்த்தையோடு முடித்தாள்.      

- சத்யராஜ்குமார்

அமைதிக்கான சந்திப்பு!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் புடின் சந்திப்பு பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரில் நடைபெற்றது. இச்சந்திப்பையொட்டி ஆம்னெஸ்டி, க்ரீன்பீஸ் பத்திரிகைகள் உள்ளிட்ட அமைப்புகள் நகரெங்கும் வைத்துள்ள பில்போர்டுகள் உலகை வசீகரித்துள்ளன. ட்ரம்பின் பத்திரிகையாளர் எதிர்ப்பு குணத்தை கிண்டல் செய்யும் ஹெல்சிங்கியின் சனோமட் என்ற பத்திரிகையின் பில்போர்டுகள் ஸ்பெஷல்.

விளம்பர மோகம்!

பெங்களூரு மார்க்க விரைவு ரயில் அது. ஜன்னல் கம்பியில் தோளில் பேக் சகிதமாக தொங்கியபடி பயணிக்கும் இளைஞர் திடீரென பிடிமானம் தவறி அலறியபடி கீழே விழும் வீடியோ இணையத்தில் திகுதிகு ஹிட். படம் பிடிப்பதை விட்டு இளைஞரைக் காப்பாற்றியிருக்கலாமே என பரஸ்பர விவாதங்கள் கிளம்பியுள்ளன. கடந்தாண்டு மும்பையிலும், சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்திலும் இப்படி விபரீத வீரச்செயலில் இறங்கிய இளைஞர்கள் இறந்துபோனது குறிப்பிடத்தக்கது.

உள்ளாடை முகமூடி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஒரு ஆபீசில் திருடர் ஒருவர் நுட்பமாக நுழைந்தார். நிதானமே பிரதானமாக திருடியவர் கேமராவின் பக்கம் யூ டர்ன் போட்டு திரும்பியபோது அவர் உள்ளாடையை முகமூடியாக்கியிருப்பது தெரியவந்தது. மாஸ்க் வாங்கக்கூட காசு இல்லாத கஞ்சப்பிரபு திருடரைப் பிடிக்க லியாண்டர் பகுதி போலீஸ் மக்களின் உதவியை நாடியுள்ளது.