சி.பி.ஐ. ஆபீசர் நயன்தாராவும்... டேன்ஜர் கில்லர் அனுராக் காஷ்யப்பும்!



‘டிமான்டி காலனி’ எடிட்டர் புவன்ஸ்ரீனிவாசனின் எடிட் சூட்டில் நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் பரபரக்கின்றன. மானிட்டரில் வில்லன் அனுராக் காஷ்யப், ‘‘ஐ லவ் கில்லிங்... முடிஞ்சா என்னை அரெஸ்ட் பண்ணு அஞ்சலி...’’ என கண்களில் கொலைவெறி தெறிக்க விடுகிறார். அடுத்து வந்த ஷாட்டில் கையில் துப்பாக்கியோடு சீறும் நயன்தாரா, ‘‘அவன் கூடிய சீக்கிரம் என்கிட்ட மாட்டுவான்.. he thinks he is smart but he is not...’’ என கர்ஜிக்கிறார்.

புவனிடம் ட்ரிம்மிங்கில் கரெக்‌ஷன் சொல்லிவிட்டு நம்மை நோக்கித் திரும்பி புன்னகைக்கிறார் படத்தின் இயக்குநரான ஆர்.அஜய் ஞானமுத்து. ‘‘முதல் படமா ‘டிமான்டி காலனி’க்கு முன்னாடியே இந்தப் படத்தைத்தான் இயக்கி யிருக்கணும். அப்பவே இந்த ஸ்கிரிப்ட் ரெடியா இருந்தது. ஆனா, ஹீரோவுக்கான கதையா அதை செய்திருந்தேன். டயலாக் எழுதின பட்டுக்கோட்டை பிரபாகர் சார்கிட்ட விவாதிக்கிறப்ப இது டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாச்சு. இதோட முழுக் கதையையும் தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயகுமார் சார்கிட்ட சொன்னப்ப அவர்தான் ‘இது நயன்தாராவுக்கு பொருத்தமான கதை...’னு சொன்னார். ‘டோரா’ ஷூட்ல இருந்த மேடமை சந்திச்சு கதை சொன்னேன். எதிர்பார்த்த மாதிரியே ‘கண்டிப்பா பண்றேன்’னு சொன்னாங்க. மேம் மட்டும் இந்தக் கதைக்குள்ள வரலைனா இதை டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாதான் செய்திருப்போம்...’’ அழகாக படம் உருவானதன் பின்னணியை விளக்கினார் அஜய் ஞானமுத்து.

இது சைக்கோ த்ரில்லரா..?

மேலோட்டமா பார்த்தா சஸ்பென்ஸ் த்ரில்லர். ஆனா, இந்தக் கதைல அழகான எமோஷனல், க்யூட்டான லவ், நெகிழ்ச்சியான ஃபேமிலினு பொழுதுபோக்குக்கான எல்லா அம்சமும் இருக்கு. ஒரே நேரத்துல மூணு கதைகள் வெவ்வேறு இடங்கள்ல டிராவல் ஆகும். நயன்தாரா மேம் இதுல சிபிஐ ஆபீசர் அஞ்சலியா நடிச்சிருக்காங்க.

அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணாவுக்கு அழுத்தமான ரோல்கள். திருப்புமுனை கேரக்டர்ல விஜய்சேதுபதி சார் நடிச்சிருக்கார். கொஞ்ச நேரமே வந்தாலும் அவர் மனசுல நிற்பார். ஸ்ட்ராங்கான டெக்னீஷியன் டீம் அமைஞ்சிருக்கறதால நினைச்ச மாதிரி என்னால எடுக்க முடிஞ்சது. ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகர் சார் கவனிச்சிருக்கார். எனக்கு அவர் ரொம்ப சீனியர். ஆனா, ஸ்பாட்டுல அவ்வளவு ஃப்ரெண்ட்லியா இருந்தார். நிறைய இடங்கள்ல லைவ் ஷூட் பண்ணியிருக்கோம்.

‘தனி ஒருவன்’ல ஹிப்ஹாப் தமிழாவின் பின்னணி இசை பேசப்பட்ட மாதிரி இதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுக்காகவே, ஜெர்மனி, ஆஸ்திரியானு பல இடங்களுக்கு போய் பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகளை செய்திருக்கோம். நூறு சதவிகிதம் எடிட்டிங்குக்கு ஸ்கோப் உள்ள படம். முதல் படத்துல என்னுடன் கைகோர்த்த புவன் ஸ்ரீனிவாசன், இந்த முறையும் எனக்கு தோள் கொடுக்கிறார்.

என்ன சொல்றாங்க நயன்தாரா?

கதை அவங்களுக்கு ரொம்ப பிடிச்சுடுச்சு. நாற்பது நாட்கள் நடிச்சுக் கொடுத்திருக்காங்க. ஸ்பாட்ல ரொம்ப பக்கபலமா இருந்தாங்க. அவங்க கொடுத்த இன்புட்ஸ் கதையை வேற லெவலுக்கு உயர்த்தியிருக்கு. முதல் நாள் பெங்களூர்ல உள்ள ஒரு ஏரியால ஷூட் பண்ண திட்டமிட்டிருந்தோம். அங்க போனதும்தான் அது தமிழர்கள் வசிக்கிற பகுதினு தெரிஞ்சது! மேமை பார்த்ததும் கூட்டம் கூடிடுச்சு. அவ்வளவு மக்கள். அவங்களுக்கு மத்தில எப்படி ஷூட்டை தொடர முடியும்? கேன்சல் பண்ணிடலாம்னு நினைச்சோம். அப்ப மேம்தான் ‘ஒண்ணு தெரியுமா... ‘ஆரம்பம்’ ஷூட் கூட இங்கதான் நடந்தது. நிச்சயமா இவங்க படப்பிடிப்பை டிஸ்டர்ப் செய்ய மாட்டாங்க. தைரியமா நாம ஷூட் நடத்தலாம்’னு நம்பிக்கை தந்தாங்க. கடைசி நாள் ஷூட் வரை எங்களை ஊக்கப்படுத்திகிட்டே இருந்தாங்க. முழுப் படத்தையும் மேம் பார்த்துட்டாங்க. ‘ரொம்ப நல்லா வந்திருக்கு அஜய்’னு சந்தோஷமா சொன்னாங்க!

எப்படி இருக்கார் அனுராக் காஷ்யப்?

சூப்பரா! இந்தப் படத்துல அவருக்கு பவர்ஃபுல் ரோல். மொதல்ல அந்த கேரக்டருக்கு நாங்க கவுதம் மேனன் சாரைத்தான் நினைச்சோம். அவர் தனுஷ், விக்ரம் சார் ப்ராஜெக்ட்டுல பிசியா இருந்தார். இந்த நேரத்துல என் குருநாதர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் இந்தில ‘அகிரா’ இயக்கினார். அதுல அனுராக் காஷ்யப் பட்டையைக் கிளப்பியிருந்தார். உடனே மும்பைக்குப் போய் அவர்கிட்ட கதையைச் சொன்னேன். முழுக்க கூட சொல்லலை. பதினைந்தாவது நிமிஷமே, ‘பிரமாதமா இருக்கு... நடிக்கறேன்’னு சொல்லிட்டார்! ஃபைட் சீன்ல ரிஸ்க் எடுத்திருக்கார். முதல் நாள் அவரோட வாய்ஸ் மாடுலேஷன் எப்படி இருக்கணும்... அவர் மேனரிசம் என்னனு சொன்னேன். கடைசி வரை அதை விடாம கடைப்பிடிச்சார்!

அதர்வா, ராஷி கண்ணா கெமிஸ்ட்ரி எப்படி?

பிரமாதமா ஒர்க் அவுட் ஆகியிருக்கு! நயன்தாரா மேம் தம்பியா இதுல அதர்வா நடிச்சிருக்கார். பெங்களூர் மேம்பாலத்துல ஒரு சேஸிங் சீன். ஆம்புலன்ஸை அதர்வா வேகமா ஓட்டிட்டுப் போகணும். பின்னாடியே அதே ஸ்பீடுல அனுராக் காஷ்யப் கார்ல வருவார். ஆம்புலன்ஸை இடிச்சுத் தள்ளு வார். இது சீன். கொஞ்சம் ஸ்லிப் ஆனாலும் ஆம்புலன்ஸ் மேம்பாலத்துல இருந்து கீழ விழுந்து டும். அவ்வளவு ரிஸ்க்கியான போர்ஷன். துணிஞ்சு அதர்வாவே ஓட்டினார்! அவருக்கான லவ் போர்ஷன்ஸ் நிச்சயமா அள்ளும். அதர்வா - ராஷி கண்ணா ஜோடிப் பொருத்தம் அவ்வளவு அம்சமா அமைஞ்சிருக்கு!    

- மை.பாரதிராஜா