அலார அலர்ட்ஸ்



செய்தி: குடித்துவிட்டு வந்தால் அலாரம் அடிக்கும் மிஷின் ஜப்பானில் கண்டுபிடிப்பு! வேறு எதற்கெல்லாம் இப்படி ஒலி எழுப்பி அலர்ட் கொடுக்கலாம்..? யோசித்ததில் கிடைத்த கலாய்ப்புகள்.

டாக்டர் அலாரம்

‘இந்த டாக்டரிடம் ஆபரேஷன் செய்து கொண்டால் பிழைச்சுடுவீங்க...’ என்று டுபாக்கூர் டாக்டர் சொல்லிக் கொடுத்ததை, வலையில் சிக்கிய பேஷன்டிடம் அழகான நர்ஸ அப்படியே மறு ஒலிபரப்பு செய்யும் போது, ‘டாக்டர் ஆப்’பிலிருந்து சங்கு ஊதும் ஒலி எழுப்பப்பட்டால்... பேஷன்ட் அலர்ட் ஆகி எஸ்கேப் ஆவார்கள்!    

கைமாற்று அலாரம்

கைமாற்றாக பணம் வாங்கி திருப்பிக் கேட்கும்போதெல்லாம் போனை ஸ்விட்ச் ஆஃப் மோடிலேயே வைத்திருக்கும் கதாநாயகன், கல்யாணப் பந்தியில் நம்மைப் பார்த்ததும் ஏதோ அவசர வேலை இருப்பது போல் பாதியிலேயே எழுந்து ஓடுவார். இம்மாதிரி அட்ராசிட்டிகளைக் கட்டுப்படுத்த கடன் வாங்கியவரின் செல்போனில் ‘கடன் வசூல் ஆப் அலாரம்’ டி ஆக்டிவேட் செய்ய முடியாத அளவுக்கு செட் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் கடன் கொடுத்தவரின் அரை கிலோமீட்டர் சுற்று வட்டாரத்துக்குள் அவர் வரும்போதெல்லாம் அலாரம் ஒலித்து அலர்ட் செய்யும்! இந்த அலாரம் வங்கிகளுக்கும் பயன்படும்!

லஞ்ச அலாரம்

ஊழியர்கள் மேஜைக்குக் கீழ் கையை நீட்டி பொதுமக்களிடமிருந்து லஞ்சம் பெறுவதைக் கண்டுபிடிக்க, அவர்களுடைய கை கீழ் நோக்கி நகர்ந்து பணக் கவரை வாங்கும்போது அலாரம் ஒலிக்கும்படி செய்யலாம்! எந்த மேஜைக்கு அடியில் இந்த கைமாற்று நடக்கிறது என்பதை அறிய ஒவ்வொரு மேஜைக்கும் தனித்தனி அலார காலர் ட்யூன் செட் செய்யலாம்! ஆனால், லஞ்சம் வாங்கும் முறையில் இப்போது பல நவீன மாற்றங்கள் வந்துவிட்டன. லஞ்ச் பாக்ஸுக்குள் பணத்தைப் போட்டு மூடிக் கொடுக்கச் சொல்வது, புத்தகம் மற்றும் நியூஸ் பேப்பருக்குள் மறைத்து வாங்குவது, டாய்லெட்டுக்குள் லஞ்ச உபயதாரரைச் சந்திப்பது போன்ற நவீன லஞ்ச அரங்கேற்றம்(!) ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பும் அலார ரோபோவைக் கண்டுபிடிப்பது அவசியம்!

காதல் அலாரம்

‘இதற்கு முன்னால் யாரையாவது காதலிச்சிருக்கியா..?’ என்று புதுக் காதலி புலனாய்வுக் கேள்வியைத் தொடுக்கும்போது எந்தக் காதலனும் உண்மையைச் சொல்லாமல் மறைப்பான். எனவே காதலன், ‘நீதான் என் முதல் காதலி...’ என பொய் சொல்லும்போதெல்லாம் ‘காதல் ஆப்’ அலாரம் ஒலிக்கும்படி செய்யவேண்டும். என்ன... இதனால் பல ஆண்களுக்கு ஆயுள் முழுக்க காதலியே கிடைக்காமல் போகும்!

வீட்டுப் பாட அலாரம்

‘வீட்டுப் பாடத்தை நீ செய்தாயா... இல்லை உன் அப்பாவா..?’ என்று ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு ‘நான்தான் டீச்சர்...’ என மென்று விழுங்கி குழந்தை சொல்லும். ஆனாலும் டீச்சருக்குள் சந்தேகம் இருந்தபடியே இருக்கும். அது நாள்முழுக்க குடையவும் செய்யும். இந்த மன அழுத்தத்திலிருந்து டீச்சர்கள் தப்பிக்க ‘ஆசிரியர் ஆப்’ உதவும். குழந்தைகள் உண்மையை மறைக்கும்போதெல்லாம் அலாரம் ஒலிக்கும். என்ன... ஒவ்வொரு மாணவரை விசாரிக்கும்போதும் அலாரம் ஒலிக்கும். இதனால் பீரியட் முடிந்து விட்டதோ என அக்கம்பக்க வகுப்பு மாணவர்கள் நினைப்பார்கள். இதைத் தவிர்க்க ‘ஆசிரியர் ஆப்’ அலார ஒலியை வகுப்புக்கு வகுப்பு வித்தியாசமாக செட் செய்ய வேண்டியது பள்ளியின் கடமை!

- எஸ்.ராமன்