இனி ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள முடியாது!



சர்ச்சையைக் கிளப்பும் தமிழகப் பதிவுத் துறை

பதிவுத் திருமணம் செய்யும் ஆண் - பெண்ணின் அடையாளச்சான்றுடன், சாட்சிகளின் அடையாளச்சான்று மட்டுமே இதுவரைக்கும் விண்ணப்பங்களில் கேட்கப்பட்டது. இனி பெற்றோரின் அடையாளச் சான்று, அவர்களின் வசிப்பிடச் சான்று, பெற்றோரில் யாராவது இறந்திருந்தால் அதற்கான இறப்புச் சான்றையும் திருமணத்துக்கான சான்றாக அளிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த பதிவுத் திருமணத்தை இந்து திருமணச் சட்டப்படி பதிவு செய்யமுடியாது...’’ என்று பீதியைக் கிளப்பியிருக்கிறது தமிழகப் பதிவுத் துறையின் சமீபத்திய சுற்றறிக்கை ஒன்று. காதலர்களின் கடைசி புகலிடம் பதிவுத் திருமண அலுவலகம்.

இப்போது அதுவும் அவர்களைக் கைவிடப்போகிறதா?  இது குறித்து சட்ட நிபுணர்களிடம் கேட்டோம்.‘‘இந்தப் புதிய சுற்றறிக்கை நடைமுறைக்கு வந்தால் பதிவுத் திருமணம் செய்யப் போகிறவர்களுக்குப் பெரிய பாதிப்பு உண்டாகும். பிள்ளைகள் ஓடிப்போகாமல் திருமணம் செய்துகொள்ளக்கூடிய பாதுகாப்பை அல்லவா பெற்றோரும், சமூகமும், இந்த அரசும் வழங்கியிருக்க வேண்டும்? அப்படிச் செய்யாமல் புதுசு புதுசாக பீதியைக் கிளப்பி அவர்களை பயமுறுத்துவது அபத்தமாக இருக்கிறது.

பெற்றோரின் அடையாளச் சான்றிதழைக் கேட்பதோடு மட்டுமல்லாமல், பல திருமணங்களில் பெற்றோரை நேரடியாக அழைத்துக்கொண்டு வரும்படியும் கேட்கிறார்கள் என்றும் கேள்விப்படுகிறோம். உண்மையில் இது வருத்தமளிக்கிறது. ஓடிப்போயாவது தங்கள் திருமண உரிமையை நம் இளைய சமுதாயம் கடைப்பிடித்து வந்தது. இதற்குத்தான் இப்போது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். இது இளைஞர்களை அடக்கி, ஒடுக்கி முடக்க நினைக்கும் அதிகாரத்தின் வெளிப்பாடு.

இதற்கு நம் இளைஞர்களும் இளம்பெண்களும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என நம்புகிறேன்...’’ என்று மனித உரிமைகளுக்கான வழக்குகளில் வாதிடும் சுதா ராமலிங்கம் பொறிந்து தள்ள, வழக்குரைஞர் பிரசாத் மேலும் காரமாக இந்த விஷயத்தை அணுகினார்.‘‘தமிழகத்தில் திருமணம் என்பது பல்வேறு கோணங்களில் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. உதாரணமாக, சாதி கடந்த காதலை நாடகக் காதல் என்கிறார்கள். இதேபோல காதல் திருமணங்கள் வெகு சீக்கிரமே விவாகரத்தில் முடிவதாகவும் சொல்கிறார்கள். அண்மைக் காலத்தில் ஆணவக் கொலைகளுக்கும் பஞ்சமில்லை.

அரசு சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவந்து திருமணப் பிரச்னைகளுக்கு தீர்வைக் கண்டுபிடிக்க முனைந்திருப்பது சரியானது அல்ல. நம் ஊரில் பதிவுத் திருமணம் என்பது கலப்புத் திருமணங்கள், காதல் திருமணங்கள், தாலி இல்லாமல் நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்களுக்கு பக்கபலமாக இருந்து வந்தது. இப்போது அதற்கும் முட்டுக்கட்டை விழுந்திருக்கிறது.இப்படி ஒரு சட்ட மாற்றம் கொண்டுவந்திருப்பதை ஒருவித இந்துமயமாக்கலின் விளைவாகவே பார்க்கிறேன். விரைவில் இதுபோன்ற சட்ட விதி மாற்றங்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பும்...’’ என்கிறார் பிரசாத்.               

- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்