ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்...



தினமும் ஒரு பலாத்காரம், பெண்கள் அல்லது பெண் குழந்தை மரணம். இப்படி ஏதேனும் ஒரு செய்தி தினமும் அச்சாகிக் கொண்டேயிருக்கின்றது. இதைத் தடுக்க பாலியல் பற்றிய புரிதல் வேண்டும், பெண்கள் மேல் மதிப்பு வேண்டும் உள்ளிட்ட பல ஆலோசனைகளை பலரும் கூறி வரும் நேரத்தில் - கவுதம் தம் பங்குக்கு களத்தில் இறங்கியிருக்கிறார். “பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னைலதான். படிச்சது மெக்கானிக்கல் இன்ஜினியரிங். சின்ன வயசுல இருந்தே ஓவியத்து மேல ஈடுபாடு. அதுவும் வால் ஆர்ட்ஸ்னா கொள்ளை இஷ்டம். நிறைய சுவர் ஓவியங்கள் வரைஞ்சேன். எல்லாமே சமூகப் பிரச்னைகளை உள்ளடக்கியதுதான்.

இப்ப என் வேலை, ஆர்வம், பொழுதுபோக்கு எல்லாமே ஆர்ட்தான். நிறைய கமர்ஷியல் பிளேஸ், ஆபீஸ், வீடுனு போய் சுவர் ஓவியங்கள் வரையறேன்...’’ என்று சொல்லும் கவுதமுக்கு குருநாதர் என்று யாரும் கிடையாது.‘‘சமூகப் பிரச்னைகள்தான் என்னை இயங்க வைக்குது. ஜல்லிக்கட்டு பிரச்னையப்ப உண்மையான காளை மாடு அளவுக்கு ஒரு மாடு வரைஞ்சு அதனோட தலையைத் துண்டிக்கிற மாதிரி வரைஞ்சேன். இதன் வழியா ‘சில அந்நியத் தலைகளின் தலையீட்டால் சட்டத்தின் கைகள் இன்று என் இனத்தின் தலையையே வெட்டத் துணிந்ததால், இதுவும் ஒரு இனப்படுகொலையே’னு விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.

அப்புறம் நீர் சிக்கனத்தை வலியுறுத்தி வாட்டர் கேன்ஸை அடுக்கி ‘Stop the Drop’னு ஒரு கான்செப்ட் செய்தேன். பிறகு GST பிரச்னை. இதுக்கு சானிட்டரி பேட்களை வெச்சு ‘Bleeding is not a Luxury Activity’னு புரிய வைச்சேன்...’’ என்ற கவுதம் இப்போது பெண்கள் மீதான பாலியல் துன்பங்களுக்கு எதிராக ‘The Illiterate Hormone’ கான்செப்ட் உருவாக்கி இருக்கிறார்.  “பெண்கள்னா அவ்வளவு சாதாரணமா போயிட்டாங்களா? ஓர் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா? இந்தக் கேள்விகள்தான் இப்படி செய்யத் தூண்டிச்சு. பெண்கள் மீதான பலாத்காரம், பெண் குழந்தைகளுக்கு நடக்கும் அநியாயங்கள்னு செய்தித்தாள்கள்ல வந்த செய்திகளை சேகரிச்சு ஓர் உருவ பொம்மையை செஞ்சேன்.

அதை தலைகீழாகக் கட்டி தொங்க விட்டேன். தொட்ட கைக்கு முதல்ல தண்டனை. அப்புறம் உயிரை எடுக்காம ஆண் உறுப்பை மட்டும் இறுக்கினேன். இப்படி செஞ்சா உச்சி முதல் பாதம் வரைக்கும் நரம்பு மண்டலம் இறுகும். அதாவது ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செஞ்சா என்ன வேதனையை அவங்க அனுபவிப்பாங்களோ அதை விட அதிக வேதனை இந்த தண்டனைல கிடைக்கும்.

இதை ஒரு குழந்தை பார்க்கிற மாதிரி போட்டோ எடுக்கக் காரணம், ஆண் பெண் நட்பையெல்லாம் வெளிப்படையா பேசணும்னு வலியுறுத்தத்தான். பாலியல் பலாத்காரம் செஞ்சா என்ன தண்டனை கிடைக்கும்னு சின்ன வயசுலயே புரிய வைக்கணும். இதுதான் கான்செப்ட். முகநூல் மாதிரி சமூக வலைத் தளங்கள்ல இது ட்ரெண்டாகணும், எல்லாரும் என்னைப் பத்தி பேசணும்ங்கிற எண்ணம்லாம் இல்ல. குறைஞ்சபட்சம் இதைப் பார்த்து ஒருத்தன் திருந்தினா போதும்...’’ என்கிறார் கவுதம்.

- ஷாலினி நியூட்டன்