நிவேதாவுக்கு உதவப்போய் மாட்டிக்கொண்ட விஷ்ணு!



ஜகஜால கில்லாடி சீக்ரெட்ஸ்

‘சென்னைக்கு மிக அருகில்...’ விளம்பரத்தைப் போல, வளசரவாக்கத்திற்கு ‘மிக அருகில்’ அமைந்திருக்கிறது இயக்குநர் எஸ்.எழிலின் புது அலுவலகம். ஃப்ரெஷ்ஷாக வரவேற்கிறது பெயின்ட் வாசம். ‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரனு’க்குப் பிறகு மீண்டும் விஷ்ணுவுடன் ‘ஜகஜால கில்லாடி’யாக ரெடியாகியிருக்கிறார். ‘‘இந்த ஆபீசுக்கு வந்து ஒரு மாசம்தான் ஆகுது. இதுக்கு முன்னாடி இருந்த அலுவலகங்கள்ல வித்தியாசமான பிரச்னை எழும். முதல் இரண்டு வருஷங்கள் ஓனர்கள் தொந்தரவு இருக்காது. அப்புறம் மெதுவா ‘எப்ப காலி பண்ணுவீங்க’னு கேட்பாங்க. அப்பவே, நமக்குனு சொந்தமா ஒரு ஆபீஸ் தேவைனு யோசிச்சிருக்கேன். இப்பதான் அது கைகூடியிருக்கு. ‘மனம் கொத்திப் பறவை’ டைம்ல வாங்கிப் போட்ட இடம். இப்பதான் ஆபீஸ் கட்ட முடிஞ்சது...’’ புன்னகைக்கிறார் இயக்குநர் எழில்.

‘ஜகஜாலக் கில்லாடி’ யார்?
நானில்ல! ஹீரோதான்! ‘வெள்ளக்கார துரை’ பண்ணும் போது துஷ்யந்த் நட்பு கிடைச்சது. விக்ரம்பிரபு மாதிரியே அவரும் துளி பந்தாவும் இல்லாமல் பழகறவர். ‘என் தயாரிப்பிலும் நீங்க ஒரு படம் இயக்கணும்’னு விரும்பினார். இப்ப நல்ல கதை அமைஞ்சது. அது தயாரிப்பாளர் துஷ்யந்த்துக்கும் பிடிச்சது. இந்த கதைக்கு விஷ்ணுவே ரொம்ப பொருத்தமா இருப்பார்னு ரெண்டு பேருமே நினைச்சோம். அவரும் கதையை கேட்டுட்டு, நடிச்சிட்டிருந்த ஒரு படத்தை பாதில ஸ்டாப் பண்ணிட்டு வந்துட்டார். இந்தப் படத்துல அவர் லுக், ஹேர் ஸ்டைல் எல்லாம் வித்தியாசமா இருக்கும். விஷ்ணுவின் ஜோடி நிவேதா பெத்துராஜ். ராதாரவி, ஆர்.சுந்தர்ராஜன், மனோபாலா, ரவிமரியா, சிங்கம்புலி, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன்னு படத்துல காமெடிக்கு கேரன்டியான ஆட்கள் இருக்காங்க.

கதையை சொல்லமுடியுமா.. ?
தாராளமா! என் ரைட்டர் முருகன் சொன்ன கதை இது. ஹீரோயின் ஒரு பெரிய சிக்கல்ல மாட்டி, போலீஸ் ஸ்டேஷன் வரை வந்து நிப்பாங்க. எதிர்பாராம அங்க ஹீரோவும் வந்து சேருவார். அவர் அந்த பொண்ணுக்கு உதவி செய்யப் போய், எல்லாருமே அந்த பிரச்னைக்குள்ள மாட்டிக்கறாங்க. இதுலேந்து எப்படி வெளியே வர்றாங்க? இதுதான் ஒன்லைன். காமெடியோட கொஞ்சம் த்ரில்லரும் மிக்ஸ் பண்ணியிருக்கேன். கிராமத்துல ஆப்பிள் தோட்டம் அமைக்கணும்... வெளிநாட்டு பசுக்களை வச்சு பண்ணை அமைக்கணும்னு பெரிய பாலிஸிகள வச்சு, சொதப்பறவர் விஷ்ணு. கனடாவில் இருந்து ஹாலிடேவுக்காக கிராமத்துக்கு வரும் பொண்ணு நிவேதா.

இவங்களுக்குள்ள லவ். கலர்ஃபுல்லா வந்திருக்கு. முருகனோடு சேர்ந்து ஜோதியும் வசனம் எழுதியிருக்கார். என் ஃபேவரிட் டி.இமான் - யுகபாரதி கூட்டணி இதிலும் உண்டு. பாடல்கள் நல்லா வந்திருக்கு. ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்துக்குப் பிறகு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு பண்றார். 32 நாட்கள்ல பெரும்பகுதி படப்பிடிப்பை முடிக்க அவர் வேகமும் ஒரு காரணம். என் முதல் ஐந்து படங்களுக்குப் பிறகு இப்ப திரும்பவும் ஆர்ட் டைரக்டர் பிரபாகர் கூட சேர்ந்திருக்கேன். பொள்ளாச்சி, ஆனைமலை, கொடைக்கானல்ல படப்பிடிப்பு நடந்திருக்கு. இன்னும் ஐந்து நாட்கள் ஷூட் மீதமிருக்கு.

விஷ்ணு, நிவேதா ஜோடி எப்படி?
விஷ்ணுவுக்கும் எனக்கும் நல்ல புரிதல் உண்டு. ஆறு டேக் முடிஞ்சு ஏழாவது ‘டேக் ஓகே’ ஆனாலும், ‘எதுக்கும் நான் ஒன் மோர் ட்ரை பண்ணட்டுமா’னு சீரியஸா கேட்பார். அப்படி ஒரு டெடிகேஷன். இப்ப டான்ஸ்ல ரொம்ப இம்ப்ரூவ் ஆகியிருக்கார். தினேஷ் மாஸ்டர்கிட்டயே பாராட்டு வாங்கியிருக்கார்னா பாருங்க. ஹீரோயின் நிவேதா, மதுரை பொண்ணு. துபாயில் வளர்ந்திருந்தாலும் தமிழ் நல்லா பேசறாங்க. பர்ஃபாமென்ஸிலும் அசத்தறாங்க. 

காமெடி பட இயக்குநர்னு பெயர் வாங்கிட்டீங்க போல..?
அடுத்தடுத்து காமெடிஜானர்ல படம் பண்ணினதால அப்படி பெயர் கிடைச்சிருக்குனு நெனைக்கறேன். இதுல சின்னதா ஒரு வருத்தம் இருந்தாலும் கொஞ்சம் சந்தோஷமும் இருக்கு. சீரியஸான டாபிக்ல ஏகப்பட்ட ஆர்ட்டிஸ்ட்கள் வச்சு, முழுக்க முழுக்க ஃபேமிலி சப்ஜெக்ட் கதைகள் நானும் நிறையவே வச்சிருக்கேன். எல்லா ஜானர்லயும் கதைகள் கைவசம் இருக்கு. அதுக்கான நேரம் வர்றப்ப கண்டிப்பா சீரியஸா எடுப்பேன்.

‘துள்ளாத மனமும் துள்ளும்’ பண்றப்ப நான் ஒருத்தனே உட்கார்ந்து எழுதுவேன். யார் பேச்சையும் கேட்க மாட்டேன். இப்ப படம் தொடங்கினதுமே என்னைத் தேடி நிறைய பேர் வர்றாங்க. அவங்க எல்லாருக்குமே ஏதாவது வேலை கொடுக்கணும்னு விரும்பறேன். ரைட்டர்கள்கிட்ட நிறைய கலந்து பேசி பூக்களைக் கோர்த்து மாலையா கட்டறா மாதிரி சீன்களை கோர்க்கறேன். இந்த பாதையும் சந்தோஷமாகத்தான் இருக்கு.


அதென்ன ரவிமரியா உங்க படங்கள்ல மட்டும் செமையா ஸ்கோர் பண்றார்..?

இயக்குநர் சங்க விழாவில்தான் ரவிமரியாவைப் பார்த்தேன். ஹியூமர் சென்ஸும், வில்லனுக்கான லுக்கும் அவர்கிட்ட இருக்கு. இந்த ரெண்டும் செட் ஆகற ஆட்கள் குறைவு. ‘மனம் கொத்திப்பறவை’யில் இருந்து என் கூட ட்ராவல் பண்றார்.

கோலிவுட்ல காமெடியா ஸ்கிரிப்ட் யோசிக்கற அத்தனை பேருக்கும் எழில் படத்துல ஒர்க் பண்ணணும்னு ஆர்வமிருக்கே...
கேட்கவே சந்தோஷமா இருக்கு. உண்மைல காமெடியா யோசிக்கறதுங்கறதுதான் ரொம்ப சீரியஸான வேலை. உதாரணத்துக்கு ‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்’ மொத்த பட ஷூட்டிங்கும் முடிஞ்சபிறகுதான் ரோபோ சங்கர் மறதி காமெடி ஐடியா கிடைச்சது. எழிச்சூர் அரவிந்தன் நாடகத்துல உள்ள ஒரு சீன் அது. நாங்க பேசிப் பேசி டெவலப் பண்ணினோம். அதை ஷூட் பண்றப்பவே பெரிய ஹிட் அடிக்கும்னு தோணுச்சு. சில நேரங்களில் இப்படி எதிர்பாராம அமையும். என்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர நினைக்கறவங்ககிட்ட ரெண்டு விஷயங்கள் எதிர்பார்ப்பேன்.

ஒண்ணு, அவங்க கேரக்டர் நல்லா இருக்கணும். அப்புறம் கொஞ்சமாவது ஸ்கிரிப்ட் நாலேஜ் இருக்கணும். மத்த வேலைகளை பயிற்சில கொண்டு வந்துடலாம். ஸ்பாட்டுல பேய்த்தனமா வேலை பார்ப்பேன். ராத்திரியும் பகலுமா வேலை செய்ய பிடிக்கும். பட்ஜெட்டுக்கு தகுந்தா மாதிரி வேலை நாட்கள் கூட, குறைவா இருக்குமே தவிர, வேலை ஒண்ணுதான். ஷெட்யூல் போடும்போதே, படப்பிடிப்பு நாட்களை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைச்சிடுவேன். சின்னப்படம்னா அதிகபட்சம் 35 - 40 நாட்கள், பெரிய ஹீரோ படங்கள்னா 65 - 70 நாட்கள்னு ஒரு கணக்கு இருக்கும்ல...

அதுக்கும் குறைவா ஷூட்டிங்கை முடிக்க பார்ப்பேன். ஸ்பாட்டுல ஈவு இரக்கம் இல்லாம திட்டுவேன், கத்துவேன். சென்னையோ வெளியூரோ முதல் ஷாட் காலை ஏழு மணிக்கு எடுக்கணும். அதே மாதிரி ஷூட்டிங்குக்கு நாம செலவழிக்கற தொகை ஃப்ரேம்ல தெரியணும். மத்தபடி காமெடி படம் எடுத்தாதான் மினிமம் கேரன்டி என்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. தயாரிப்பாளருக்கு லாபமும், ஜனங்களுக்கு என்டர்டெயின்மென்ட்டும் தேவை. அதை மனசுல வச்சுத்தான் ஒவ்வொரு படமும் பண்ணிட்டிருக்கேன்!

- மை.பாரதிராஜா