பிட்காயின் என்ற நவீன தங்கம்!



சென்ற வருடத்தைத்  தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக கூகிள் ட்ரெண்டில் இரண்டாவது அதிக தேடலுக்கு உள்ளான வார்த்தை ‘பிட்காயின்’. இந்தியாவிலும் பிட்காயின் பற்றிய தேடல் 2016க்குப் பிறகு அனைத்து தரப்பு மக்களாலும் அதிகமாக கவரப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இதன் அபரிமித விலையேற்றம், அதிக அளவிலான விலை ஏற்ற இறக்கம் (High Volatility), பரவலாகக் கிடைக்கக்கூடிய 3G, 4G தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மலிவு விலையில் வழங்குகின்ற தரவு (Data) என்றும் வல்லுநர்கள் கருதுகிறார்கள். பிட்காயின் பற்றி அன்றாடம் பல புரளிகளும், வதந்திகளும் சர்வ சாதாரணமாக மக்களிடையே பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

பலர் பிட்காயின் பற்றி சரியான புரிதல் இல்லாமல் மற்றவர்களைக் குழப்பி தங்களையும் குழப்பிக் கொள்கிறார்கள். பிட்காயின் என்பது இன்றைய உச்சகட்ட தொழில் நுட்பம் நமக்கு கொடுத்த வரப்பிரசாதமா அல்லது நம்மை சிக்கவைக்க விரிக்கப்பட்ட வலையா என்பது இன்றைக்கு மக்களிடையே எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி. பிட்காயினின் மதிப்பு நிலையற்று மாறி மாறி காளை வேகத்தில் பாய்ந்து, கரடி போல சுணங்கிப்போவதை அன்றாடம் சந்தையில் பார்க்க முடிகிறது. இதன் நிலையற்ற ஏற்ற இறக்கத்தை, வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் அரசுகள் புரிந்து கொண்டு, இதனைச் சீரமைக்க பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றன.

பிட்காயின் என்ற மறை பணத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன், நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய நிஜ பணத்தினுடைய வரலாற்றைப்பற்றி அறிந்திருக்க வேண்டும். பண்டைய காலங்களில் பண்டமாற்று முறை (Barter System) என்ற வழக்கம் இருந்தது. அதன் மூலம் ஒருவர் தங்களிடம் உள்ள பொருட்களைக் கொடுத்து மற்றவரிடம் உள்ள பொருட்களை, பணமோ அல்லது நாணயமோ கொடுக்காமல் வாங்கியும் விற்றும் பரிவர்த்தனை செய்து வந்தனர்.  அதன்பிறகு வியாபாரப் பரிவர்த்தனை உலோக நாணயம் மூலம் நடந்தது. அதன்படி மக்கள் தங்களிடம் உள்ள உலோக நாணயங்களைக் கொடுத்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்தனர். 

பின்னர் காகிதப் பணம் ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்தால் வெளியிடப்பட்டு புழக்கத்திற்கு வந்தது. இந்தியாவில் 18ம் நூற்றாண்டில் காகிதப் பணம் தனியார் வங்கிகள் மூலம் வெளியிடப்பட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. இதன் அடிப்படையில் பணம் என்பது மறைபொருளாக இல்லாமல், பார்க்கக்கூடிய அல்லது தொட்டு உணரக்கூடிய பொருளாக இருந்து வருகிறது. டிஜிட்டல் தொழில் நுட்பம் வளர்ந்த பிறகு நாம் பணத்தை கணினி மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரிவர்த்தனை செய்து கொள்ள முடிந்தது. பணம் என்ற ஒன்றை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்ட ஓர் அரசு வெளியிடுகிறது.

அதற்கு ஒரு மதிப்பு இருப்பதாக அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். உங்கள் வங்கியில் ஒரு லட்ச ரூபாய் உள்ளது. வங்கியில் உங்கள் பெயருக்கு எதிரில் வெறும் எண்தான் பற்று வைக்கப்பட்டு இருக்கிறது. நாம் அந்த எண்ணுக்கு ஒரு மதிப்பு அளிக்கிறோம். அந்த மதிப்பினால் பணத்தாள்களுக்கு நிகராக பொருட்களை வாங்க முடிகிறது அல்லது பணத்திற்கு இணையாக மற்றொரு பொருளைக் காண்பிக்க முடிகிறது. பிட்காயின் என்பது ஒரு மெய்நிகர் பணம் (Virtual Currency). இதை மறை நாணயம், கிரிப்டோ பணம், டிஜிட்டல் பணம்  மற்றும் எதிர்கால நாணயம் என்று பலவாறு வர்ணிக்கின்றனர். பிட்காயினை ஒருசிலர் நவீன தங்கம் என்றும் அழைத்து சிலாகிக்கிறார்கள்.

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் பிட்காயின் என்பது மின்னணு குறியீட்டைக் கொண்ட ஒரு மென்பொருள் (Software). நம்மால் தொட்டு உணர முடியாத ஒரு டிஜிட்டல் பணம் அல்லது நிழல் பணம். பிட்காயின் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை 2008ஆம் ஆண்டு சந்தோஷி நகமோடோ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. ஆனால், இந்தக் கட்டுரைக்கு இதுவரை யாரும் உரிமை கொண்டாடவில்லை. இதைக் கண்டு பிடித்தது ஒருவரா அல்லது ஒரு நிறுவனமா என்றும் அறியப்படவில்லை. பிட்காயின் என்ற மென் பொருள் நிரல் (Software Program) இணையதளத்தில் சந்தோஷி நகமோடோ என்ற பெயரில் 2009ம் ஆண்டு திறந்த நிலை மென்பொருளாக (Open source software) வெளியிடப்பட்டது.

இந்த மென்பொருளை மைக்ரோசாப்ட், சாம்சங், டோஷிபா, நகமிச்சி போன்ற நிறுவனங்கள் கூட்டாக உருவாக்கியதாக ஒரு வதந்தியும் வலைத்தளங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனுடைய தொழில்நுட்பத்தை திறந்த நிலை மென்பொருளாக அளித்துச் சென்றுவிட்டதால் யாராலும் தடுக்க முடியாத ஒரு சுயம்பாக வளர்ந்து வருகிறது. தனிப்பட்ட நபரோ அல்லது நாடோ இந்த மென்பொருளுக்கு உரிமை கொண்டாட முடியாது. அவ்வளவு ஏன், இதை உருவாக்கியவரால் கூட இதை ஒன்றும் செய்ய முடியாது. எப்படி பல கணினிகள் மற்றும் சர்வர்களால் ஆன வலைப் பின்னலால் உருவான இணையத்தை (Internet) எவரும் உரிமை கொண்டாட முடியாதோ, அதுபோல பிட்காயின் மென்பொருள் நிரலுக்கும் உரிமை கொண்டாட முடியாது.

இதன் வடிவமைப்பு பல அடுக்குகளால் ஆன மறைகுறியீட்டியல் நெறிப்பாட்டு மொழி (Cryptographic Algorithm Language) மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பின் மூலம் பிட்காயின் பரிவர்த்தனையை உறுதிப்படுத்த இந்த நெறிப்பாட்டு மொழி பயன்படுத்தப்படுகிறது. இந்த நெறிப்பாட்டு மொழி ஆங்கிலத்தில் Elliptic Curve Digital Signature Algorithm or ECDSA என்று விளக்கப்படுகிறது. இது ஒரு பரவலாக்கப்பட்ட (Decentralised) மின்னணு பணம். இதன் மூலம் உலகில் எங்கிருந்தும் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். எந்த ஒரு நாடோ அல்லது வங்கியோ இதைக் கட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ முடியாது.

இதுவரை அமெரிக்கா, கனடா, ஜப்பான், சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இந்த நாணயத்தை அங்கீகரித்துள்ளன. இந்த நாணயத்தின் மூலம் பெரும்பாலோர் பொருட்கள் வாங்குவதை விட முதலீடாக வைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். இதன் வீரியத்தைக் கண்டு அமேசான், பிளிப்கார்ட், எக்ஸ்பீடியா மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் பிட்காயினை ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்ய அனுமதி அளித்திருக்கின்றன. தங்கள் விருப்பத்துக்கு ஆளாளுக்கு பிட்காயின்களை இஷ்டம் போல வெளியிட முடியுமா? முடியாது. அதிகபட்சமாக 21 மில்லியன் என்ற எண்ணிக்கையைத் தாண்டி பிட்காயின்களை உருவாக்க முடியாது. 2140ம் ஆண்டில்தான் அதிகபட்ச அளவைத் தொட முடியும் என்கிறார்கள். 

கடந்த 2016 அக்டோபர் மாத கணக்குப்படி 16.9 மில்லியன் பிட்காயின் புழக்கத்தில் உள்ளதாக பிளாக் செயின் வலைத்தளம் தெரிவிக்கிறது. எப்படி உலகத்தில் உள்ள 7.6 பில்லியன் மக்களுக்கு 21 மில்லியன் பிட்காயின் சாத்தியமாகும் என்பது பலருக்கும் சந்தேகமாக உள்ளது. எப்படி நிஜ பணத்தை இரண்டு தசமங்களாக (Digits) பிரிக்க முடியுமோ, அது போல பிட்காயினை எட்டு தசமங்களாகப் பிரிக்க முடியும். இதை சடோஷி என்கிறார்கள். இப்படி பிரிப்பதன் மூலம் அனைவருக்கும் பகிர முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள். எப்படி பிட்காயின் பரிவர்த்தனை நடக்கிறது?  பல நாடுகளில் இதற்காக பங்குச் சந்தைகள் உள்ளன.

அதேபோல பிட்காயினை நீங்கள் ஒரு முகவர் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ வாங்க முடியும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அனுப்புநர் மற்றும் பெறுநர் இருப்பார்கள். ஒருவர் இன்னொருவருக்கு தங்களிடம் உள்ள பிட்காயினை விற்பார் அதை மற்றவர் வாங்குவார். இது அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடக்கும். ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்குள் நடக்கும் அத்தனை பரிவர்த்தனைகளும் ஒரு பேரேட்டில் (Ledger) பதிவு செய்யப்படும். அடுத்த பத்த நிமிடங்கள் அடுத்த பேரேட்டில் பதிவு செய்யப்படும். ஒருவருக்கு பிட்காயின் அனுப்ப வேண்டும் என்றால் அவருடைய முகவரி மற்றும் க்யூஆர்கோட் உதவியோடு அனுப்ப முடியும்.

அதேபோல உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றாலும் உங்களுடைய முகவரி மற்றும் க்யூஆர்கோடை வாங்குபவருக்கு நீங்கள் கொடுக்க வேண்டும். இப்படி நடக்கின்ற பரிவர்த்தனைகள் அனைத்தும் மைனர்களிடம் (Data Minors) இருந்து ஒப்புதல் பெற்ற பிறகு பிளாக் செயின் என்ற தொழில் நுட்பம் மூலம் பேரேட்டில் குறிக்கப்படும். இந்த பிளாக் செயின் தொழில் நுட்பம் பிட்காயின் போன்ற மின்னணு நாணயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்று கூறப்படுகிறது. இந்த பிளாக் செயின் தொழில் நுட்பத்தை இன்றைக்கு பல வங்கிகள் மற்றும் காப்பீட்டுத் துறை நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் செய்யும் பரிவர்த்தனையில் புகுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மைனிங் நிறுவனங்கள் என்றால் என்ன? பிட்காயின் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் வழங்கும் நிறுவனங்களுக்கு மைனிங் நிறுவனங்கள் என்று பெயர். ஒவ்வொரு  முறையும் பரிவர்த்தனை நடைபெறும்போது ஒருவித வழிமுறை ஓட்டம் (Algorithm Run) வலைத்தள அமைப்பில் பிளாக் செயின் தொழில் நுட்பத்தின் மூலம் நடைபெறும். அப்போது உலகெங்கும் உள்ள மைனிங் நிறுவனங்கள் நிறுவிய கணினி கண்கொத்திப் பாம்பாக அந்த பரிவர்த்தனையைக் கண்காணிக்கும். அந்த சமயத்தில் எந்த மைனர் சீக்கிரமாக வழிமுறை ஓட்டத்தில் (Algorithm Run) கொடுத்த புதிரை தீர்க்கிறாரோ, அப்பொழுது நடந்த பரிவர்த்தனை வெற்றிகரமாக முடியும்.

புதிரை தீர்த்த மைனருக்கு அன்பளிப்பாக ஒரு சில பிட்காயின்கள் போனஸாகக் கிடைக்கும். மைனர் புதிரைத் தீர்த்தபிறகு நடந்த பரிவர்த்தனை வாலட் என்ற பணப்பையில் சேர்க்கப்படும். இப்படி சேர்க்கப்பட்ட வாலட் அனைத்தும் வாங்கியவருடைய வாலட்டில் சேரும். விற்றவரின் வாலட்டில் இருந்து குறையும். ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அதிகபட்சமாக 12.5 பிட்காயின் மைனிங் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கட்டுரை எழுதும் போது உலகில் உள்ள அனைத்து கிரிப்டோ பணத்தினுடைய சந்தை மதிப்பு 470 பில்லியன் அமெரிக்க டாலர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்திய மதிப்பில் ஒரு பிட்காயினின் விலை 7 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய். இதுவரை 1536 வகையான கிரிப்டோ பணம் புழக்கத்தில் உள்ளது. என்றாலும் முதல் பத்து நாணயங்களுக்கு மட்டுமே மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. குறிப்பாக பிட்காயின், எதெரியும், ரிப்பில், லைட்-காயின் போன்றவை மக்களிடையே பிரபலமாக உள்ளன. இதில் பிட்காயின் சந்தை மதிப்பு 195 பில்லியன் அமெரிக்க டாலர். கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க பங்கு வர்த்தக ஒழுங்கு முறை ஆணையம் (Regulatory Board), F&O என்று சொல்லக்கூடிய ஃப்யூச்சர்ஸ் டெரிவேட்டிவ் வர்த்தகத்தில் பிட்காயினை சேர்ப்பதற்கு பச்சைக்கொடி காட்டியதே, அம்மாத உச்சத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில்கேட்ஸ், ‘‘பிட்காயின் ஒரு சிறந்த பணம்; அது நிஜ பணத்தை விட பல வழிகளில் சிறந்தது...’’ என்கிறார். அயர்லாந்து பிளாக்செயின் சங்கத்தின் தலைவர் ருபேன் காட்பிரே இன்னும் சில ஆண்டுகளில் பிட்காயின் மதிப்பு 2 லட்சம் டாலர்களைத் தொடும் என்று கணித்திருக்கிறார்.  அதே சமயம், உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரரான வாரன் பஃப்பெட் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் படுபாதாள நிலைக்கு தள்ளப்படும் என்று எச்சரிக்கிறார். மேலும் கிரிப்டோ நாணயத்தில் முதலீடு செய்து ஒரு தவறான பாதைக்கு தாம் செல்ல விரும்பவில்லை என்கிறார்.

இதற்கு முன்னர் வாரன் பஃப்பெட் அமெரிக்காவில் அடமான நெருக்கடி நிலை (Sub-Prime Mortgage Crisis, 2007 - 2010) ஏற்படும் என்பதை முன்கூட்டியே எச்சரித்தார். அந்த சமயத்தில் அமெரிக்காவில் வீடுகளின் விலை எக்கச்சக்கமாக உயர்வது கண்டு, “இது செயற்கையானது; விரைவில் வெடிக்கும்...’’ என்றது குறிப்பிடத்தக்கது. பல முன்னணி பங்குச் சந்தை ஜாம்பவான்கள் “1990களில் எப்படி Dot.com கம்பெனிகள் உடைந்து சிதறியதோ, அது போல பிட்காயினும் சரியும்...” என்கின்றனர். நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் ராபர்ட் ஷில்லர், CNBCக்கு அளித்த பேட்டியில், “பிட்காயின் இன்னும் 100 ஆண்டுகள் இருக்கக் கூடும்.

ஆனால், முழுவதும் சரிந்து அழிவைச் சந்திக்கும்...” என்று குறிப்பிட்டுள்ளார். சீனாவும் இந்தோனேஷியாவும் பிட்காயின் வர்த்தகத்துக்கு தடை விதித்துள்ளன.  இந்திய ரிசர்வ் வங்கி இது வரை பிட்காயினைப் பற்றி ஒரு தெளிவான முடிவையோ அல்லது விதிமுறைகளையோ வழங்கவில்லை. இந்தியாவில் இது தடை செய்யப்படுமா அல்லது மத்திய அரசு அமைதியாக காலம் தள்ளுமா என்று தெரியவில்லை. கட்டுப்பாடற்று சுதந்திரமாகத் திரியும் இந்த நவீன தங்கத்தில் முதலீடு செய்வது ஒருவித அச்சத்தைத் தருவது உண்மைதான். இதன் ஆரோக்கியமில்லாத சந்தைப் போக்கு முதலீடு செய்பவருக்கு ஏற்றத்தை கொடுக்குமா அல்லது பாதாளத்தில் தள்ளி விடுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

- ஆஸ்திரேலியாவிலிருந்து,கோவிந்தராஜன் அப்பு, B.Com, MBA, ACA, CPA