இளநீர் குடுவையில் செடிகள் வளர்க்கலாம்!



‘‘நம்ம பூமில கிட்டத்தட்ட 3 லட்சம் கோடிக்கும் அதிகமா மரங்கள் இருக்காம். ஆய்வுகள் சொல்லுது. உண்மைல இதுக்காக நாம வருத்தப்படணும். ஏன்னா மனுஷன் நாகரிக வளர்ச்சி அடையறதுக்கு முன்னாடி 6 லட்சம் கோடிக்கும் அதிகமா மரங்கள் இருந்ததா அதே ஆய்வுகள் சொல்லுது! வருஷத்துக்கு 1500 கோடி மரங்கள் வெட்டப்படுது. 500 கோடி செடிகள் மட்டுமே துளிர்விடுது. இப்படியே போனா மரங்களை விட மனுஷனுக்குத்தான் ஆபத்து அதிகம்...’’எச்சரிக்கை கலந்த விழிப்புணர்வுடன் பேச ஆரம்பித்தார் இயற்கை ஆர்வலர் கலைமணி. மரங்கள் பற்றிய துல்லிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் இவர், மரம் வளர்ப்பதையும், பிறருக்கு மரக் கன்றை இலவசமாகக் கொடுப்பதையும் வாழ்க்கை முறையாகக் கொண்டுள்ளார்.

‘‘சொந்த ஊர் நாகை மாவட்டம், குத்தாலம் பக்கத்துல குழையூர் கிராமம். பணி நிமித்தமா திருவாரூர்ல சில வருஷங்களா குடும்பத்தோட தங்கியிருக்கேன். காலேஜ் அப்ப என்.எஸ்.எஸ்.ல இருந்தேன். அங்கதான் மரம் நடும் நிகழ்வுகள்ல பங்கேற்க வாய்ப்பு கிடைச்சது. அடிக்கடி மரம் நட ஊர் ஊரா போவேன். மரங்களோட அருமை பெருமைகளைப் பத்தி ஆசிரியர்கள் சொல்லச் சொல்ல மரங்களைக் காதலிக்க ஆரம்பிச்சேன். படிக்கிறப்பவே ஊர்ல ‘மழலையர் மக்கள் நல மன்றம்’ தொடங்கிட்டேன். நண்பர்களோட இணைஞ்சு ஸ்கூல்லயும், எங்க கிராமத்துலயும் 4 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டோம்.

இதுக்காக எங்க மன்றத்துக்கு ‘சிறந்த இளைஞர் மன்றம்’ விருது கிடைச்சது. உற்சாகமானேன். அப்புறம் ‘நேரு யுவ கேந்திரா இளைஞர்கள் அமைப்பு’ சார்பா பல கிராமங்களுக்குப் போய் இலவசமா மரக்கன்றுகளைக் கொடுக்க ஆரம்பிச்சேன். மரம் வளர்ப்பு சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள்கிட்ட ஏற்படுத்தத் தொடங்கினேன். அப்படி ஆரம்பிச்ச பயணம் இப்ப வரை தொடருது. 20 வருஷங்களா மரம்தான் என் வாழ்க்கை...’’ வீட்டிலுள்ள நர்சரியில் செடிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டே, தான் கடந்து வந்த பசுமையான பாதையை அசைபோட்டார் கலைமணி.

இவரது நர்சரியில் தயாராகும் மரக்கன்றுகளை காவிரிப் படுகை மாவட்டங்களில் உள்ள மக்கள், கோயில்கள், கல்லூரிகள், பள்ளிகளுக்கு இலவசமாகக் கொடுத்து வருகிறார். இதற்காகவே எந்த வேலைக்கும் செல்லாமல் இருக்கிறார்! ஆரம்பத்தில் மணல், விதை, உறைகள் மற்றும் பராமரிப்பதற்கு ஆகும் செலவுகளைத் தானே பார்த்துக்கொண்டார். இப்போது இவரது தன்னலமற்ற சேவையைப் பார்த்து பலரும் பொருளாதார ரீதியாக உதவ முன்வந்துள்ளனர். ‘‘எங்க மரம் நடவேண்டிய அவசியம் இருக்கோ அங்கெல்லாம் மரக்கன்றுகளை நடறேன். எந்த ஊருக்குப் போனாலும் அங்க கிடைக்கிற விதைகளைச் சேகரிச்சு கொண்டு வருவேன்.

புங்கன், வேம்பு, மகிழம், இலுப்பை, நீர்மருது, நாவல், அரசு, ஆலம், விளா, வில்வம், ஆத்தி, பூவரசு... இப்படி நாட்டு மரக்கன்றுகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தர்றேன். வெளிநாட்டு மர விதைகளைப் பயன்படுத்தக்கூடாதுனு உறுதியா இருக்கேன். மனைவியும், குழந்தைகளும் என் பயணத்துக்கு உறுதுணையா இருக்காங்க...’’ என்ற கலைமணி, இப்போது வாட்ஸ் அப் வழியே வைரலாகிக் கொண்டிருக்கும் இளநீர்க் குடுவையைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.  ‘‘‘பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம்’னு நாமே சொல்லிட்டு, பாலிதீன் பைல செடியை வைச்சு தரலாமா?

இதுக்கு மாற்று என்னனு யோசிட்டிருந்தப்ப ஓர் இளநீர் கடையை கடந்தேன். இளநீர் குடிச்சுட்டு அந்தக் குடுவையை தூக்கி வீசறதைப் பார்த்தேன். அப்பதான் இளநீர்க் குடுவைல செடி வளர்க்கலாமேனு தோணுச்சு. உடனே பரிசோதிச்சுப் பார்த்தேன். நல்ல பலன் கிடைச்சது. இந்தத் தகவலை வாட்ஸ் அப் மூலமா நண்பர்களுக்குப் பகிர்ந்தேன். அது வைரலாகிருச்சு...’’ என்றவர் இளநீர்க் குடுவையில் செடி வளர்ப்பு பற்றிய நுட்பத்தை விவரித்தார்.‘‘தண்ணீர் வடியும்படியா பக்கவாட்டுல ரெண்டு, மூணு ஓட்டைகளை இளநீர்க் குடுவைல  இடணும்.

செம்மண், மணல், இயற்கை உரம்... இந்த மூணையும் சம அளவுல கலக்கி குடுவைல நிரப்பணும். அப்புறம் நாத்து விடப்பட்ட கன்றுகளை குடுவைக்குள்ள மாத்தணும். வேர் பிடிச்சதும், இளநீர்க் குடுவையோட நிலத்துல செடியை நடணும். இப்படி செய்யறதால சுற்றுச்சூழல் கெடாது. இயற்கையைக் காப்பாத்தணும்னா அதுக்கு ஒரே வழி குழந்தைகளுக்கு இயற்கையின் அருமையைப் புரிய வைக்கறதுதான். அதனாலேயே என் பணில அதிகமா மாணவர்களை இணைச்சிருக்கேன். அவங்களும் ஆர்வமா செயல்படறாங்க...’’ நம்பிக்கையுடன் முடித்தார் கலைமணி.

- த.சக்திவேல்

பிளாஸ்டிக் கழிவுகள்
கடந்த 67 வருடங்களில் உலகம் முழுவதும் உற்பத்தியான பிளாஸ்டிக் பொருட்களின் அளவு 900 கோடி டன்! பயன்படுத்திய பிறகு தேவையில்லை என்று தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கழிவுகளாக, குப்பைகளாக உருமாறுகின்றன. இந்தக் கழிவுகளில் 9% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. 12% கழிவுகள் எரிக்கப்படுகின்றன. மீதியுள்ள 79% நிலத்திலும், நீரிலும் அப்படியே தேங்கிக்கிடக்கின்றன.

‘‘பொதுவாக பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்கு குறைந்தபட்சம் 400 ஆண்டுகள் ஆகும்...’’ என்கிறார்கள் அறிவியல் நிபுணர்கள். ஒவ்வொரு வருடமும் 50 லட்சம் முதல் 1.3 கோடி மெட்ரிக் டன் அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன. ‘‘இதனால் கடலில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இயற்கைச் சீற்றங்களுக்கும் இதுவே காரணம்...’’ என வருத்தப்படுகிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.