அகதிகளை கடத்தும் பார்டர் பிசினஸ்!



‘‘அடுத்த செவ்வாய்க்கிழமை உங்களுக்கு ஆறு பாக்ஸ் வந்து சேரும்...’’ கரகர குரலில் போனில் சொல்கிறார் கதீயா. அழகான பங்களாவில் வசிக்கும் கதீயாவின் பிசினஸ் மனிதர்களைக் கடத்துவது! பதினெட்டு ஆப்பிரிக்கர்களை கொலம்பியாவிலிருந்து அழைத்துச் சென்று நிகரகுவா எல்லையில் விட்டுவருவது இவரது டாஸ்க். ஆனால், உடனே கதீயா இதைச் செய்யமாட்டார். உதவி கேட்பவர்களை அப்படியே நம்பினால் தங்க முட்டையிடும் தொழில் அன்றோடு காலி. எனவே, தொலைபேசியில் ‘பாக்ஸ்’ கேட்பவர்களின் சரித்திரத்தை உள்ளூர் ஏஜண்டுகள் வழியே அலசி ஆராய்ந்து அதன் பிறகே ‘பாக்ஸ்’ அனுப்புகிறார்.

பார்டர் பிஸினஸ்!
பகலில் ட்ராவல்ஸ் வேலையை செய்யும் கதீயா, இரவில் செய்வது உலக நாடுகளின் அதிபர்கள் உடனடியாக தடுக்கக் கோரி அலறும் விஷயம். யெஸ். அகதிகளை இல்லீகலாக பிற நாடுகளுக்கு கடத்துவதுதான் அந்த சிம்பிள் தொழில். இந்த இருட்டுத் தொழிலில் இரண்டரை ஆண்டு அனுபவசாலியான கதீயா, இதுவரை 600 நபர்களை வெற்றிகரமாக பார்டர் தாண்ட வழிகாட்டியுள்ளார்.

இவரோடு மொத்தம் பதினான்கு பேர் கொண்ட டீம் இந்த வேலையில் ஈடுபடுகிறது. உள்ளூர் காவல்துறைக்கு மாமூல் தருவது முதல் எந்தப் பிரச்னையும் வராமல் பார்த்துக் கொள்வது வரை சகலத்தையும் திட்டமிட்டு அரங்கேற்றுகிறார்கள்.‘ஓநாய்’ என தங்களை அழைத்துக் கொள்ளும் இக்குழு எதற்காக இவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்த அகதிகள் கடத்தல் பிசினஸில் இறங்க வேண்டும்? பணம்தான்! இன்றைய தேதியில் அகதிகள் கடத்தல் தொழிலின் பிசினஸ் மதிப்பு ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்து 500 கோடி!

மேல்நாட்டுக் குடிமகன்! 
அமெரிக்காவுக்கு சென்றே தீருவேன் என அடம்பிடிக்கும் அகதிகளில் பெரும்பாலானவர்கள் யார் தெரியுமா? சந்தேகமே வேண்டாம்! சாட்சாத் இந்தியர்கள்தான். சரி, இவர்கள்எப்படி எல்லை தாண்டுகிறார்கள்? ரூட் எப்படி? வங்காளிகள், இந்தியர்கள், ஹைதியர்கள் உள்ளிட்டோரை பனாமா - கோஸ்டா ரிகா எல்லையில் பிக்கப் செய்யும் கதீயா அவர்களை அழைத்து வந்து நிகரகுவாவுக்கு படகுகளில் அனுப்பி வைப்பார். அங்கிருந்து ஹோண்டுராஸ் செல்ல பஸ்.

அதன்பிறகு மெக்சிகோவில் அகதியாக அரசுக்கு மனுப்போடுவதா அல்லது அமெரிக்கா செல்வதா என்பது அகதிகளின் சாய்ஸ். அகதிகளைப் பற்றிய தகவல்கள் கடத்தல் குழுவின் உறுப்பினரிடமிருந்து கதீயாவின் போனுக்கு வரும். பெயரைவிட பயணிகளின் முகத்தையே பார்வையால் ஸ்கேன் செய்து மனதில் பதித்துக் கொள்கிறார். இந்தப் பயணிகளுக்குப் பெயர், ‘பொலிட்டோஸ்’. அதாவது கோழிக் குஞ்சுகள் என்று அர்த்தம்.  

லாபம் சுபம்!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இங்கிலாந்தின் தெரசா மே ஆகியோர் அகதிகளுக்கு எதிராக நாட்டைச் சுற்றி சுவர் கட்டுவது எல்லாம் இதைத் தடுத்து நிறுத்தத்தான். என்றாலும் கடத்தல் தொழில் உலகெங்கும் கறாரான கமிஷன்களால் எவ்வித தடங்கலும் இன்றி நடந்து வருகிறது. உள்நாட்டுப் போர்களால் மக்கள் அகதிகளாகி அமெரிக்கா வருகிறார்கள் என்ற நம்பிக்கை உலகெங்கும் இருக்கிறது. ஆனால், பத்துக்கு ஒன்பது பேர் (93%) இல்லீகலாக வாழ்வதற்காக பார்டர் தாண்டி அமெரிக்க மண்ணை மிதிக்கிறார்கள் என்கிறது அகதிகளுக்கான தேசிய அமைப்பு (IOM).

‘‘சட்டவிரோத குடியேற்றம் உலகெங்கும் காலம்தோறும் நடந்து வருகிறது. வளமழிந்த பரப்பைச் சேர்ந்த மக்கள் வளமான நிலப்பரப்புக்கு இடம்பெயர்வது வரலாறு முழுக்க நடந்து வரும் காட்சிதான்...’’ என்பது உலக பன்னாட்டு குற்றத்தடுப்பு அமைப்பின் துணைத்தலைவர் ட்யூஸ்டே ரெய்டனோவின் வாதம். கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி இனவெறுப்பைத் தூண்டிவிட்டு அரசியல் குளிர் காயும் அதிபர் ட்ரம்ப் மனமறிந்து மறைக்கும் நிஜமொன்று உண்டு.

அது, அகதி மக்கள் தாங்கள் பெறும் அரசு உதவிகளைவிட வரியாக அளிக்கும் வருமானம் அதிகம் என்பது. ஆம். அகதிகள் தங்கள் உழைப்பிலிருந்து தம் குடும்பம் வாழும் ஏழை நாடுகளுக்கு அனுப்பிய தொகை கடந்தாண்டில் மட்டும் 444 பில்லியன் டாலர்கள் என்கிறது உலகவங்கி அறிக்கை. கடந்த பதினைந்து ஆண்டுகளோடு ஒப்பிடும்போது ஐந்து மடங்கு உயர்ந்துள்ள ‘இந்த’ வருமான வளர்ச்சி, அந்நிய அல்லது தனியார் முதலீடாகக் கூட எந்த நாட்டுக்கும் கிடைக்கவில்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது. 

குற்றங்களின் வழித்தடம்!
வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான முல்கித் குமார், கதீயாவின் புதிய விருந்தாளி. தன் சகோதரிகளிடம் திரட்டிய பணத்தை வைத்து தில்லி வந்து அங்கிருந்து அமெரிக்காவுக்குச் செல்லவிருக்கிறார். அதற்கு வழி, ஈகுவடார் தலைநகரான கொய்டோவுக்கு அறுபதாயிரம் ரூபாய்க்கு டிக்கெட் எடுப்பதுதான். முன்பு தென்னமெரிக்க அரசு, தன் நாட்டின் வழியாக அகதிகளை அமெரிக்கா செல்ல அனுமதித்திருந்தாலும் இப்போது விதிகளைக் கடுமையாக்கி உள்ளது. அதேசமயம் கொலம்பிய அரசு, தன் நாட்டின் வழியே செல்லும் பயணத்தை முறைப்படுத்தியுள்ளது. இதனால்தான் கொலம்பியாவை அகதிகள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அரசின் பர்மிட் பாஸை ஐந்து நாட்களுக்கு பயன்படுத்தலாம். டர்போ பகுதியிலிருந்து பயணித்து உரபா வளைகுடா பகுதிக்கு படகு பிடித்தால் மாஃபியாக்களின் பிடியிலுள்ள கேபர்கானா நகரை அடையலாம். கொலம்பியா - பனாமா எல்லையான டேரியன் கேப் என்ற 96 கி.மீ.  நீள பருவக்காட்டை கடந்து சென்றால் மட்டுமே அமெரிக்காவை எட்டிப் பார்க்கலாம். கடத்தல், கொள்ளை, கற்பழிப்பு, கொலை என அத்தனை க்ரைம்களும் வகைதொகையின்றி நடக்கும் ஸ்பாட் இது. பாராமிலிட்டரியின் வன்முறைகள், போதைப்பொருள் கடத்தல் என இரண்டு விஷயங்களும் நடக்கும் இந்த காடு மட்டுமே மத்திய மற்றும் தென்னமெரிக்காவை கடப்பதற்கான ஒரே குறுக்குவழி. சதுப்பு நிலம், ஜிலீர் ஆறுகள், பிரமிப்பூட்டும் மலைகள், பதுங்கும் ஜாகுவார், சீறும் பாம்பு என அத்தனை ஆபத்துகளையும் தாண்டி உயிரைப் பணயம் வைத்து அமெரிக்க கனவோடு பயணிக்கிறார்கள் அகதிகள்.

கொழிக்கும் காசு!
கொலம்பியா டூ கோஸ்டாரிகா வரை ரூ.1,23,310; கோஸ்டாரிகாவிலிருந்து மெக்சிகோவுக்கு ரூ.1,49,270 என அகதி ஒருவருக்கு பில் போடுகிறார் கதீயா. நிகரகுவாவுக்கு ரூ.51,820, ஹோண்டுராசுக்கு ரூ.45,400 என வசூலிக்கும் பணத்தில் உணவு, தங்குமிடம், டிரைவர் சம்பளம் அனைத்தும் உள்ளடங்கும். ஓர் அகதியின் மூலம் ஏஜண்டுக்கு கிடைக்கும் லாபம் மட்டும் 7 ஆயிரத்து 788 ரூபாய். ஏஜண்டுகளின் சொந்தக்காரர் போலப் பேசும் போலீசுக்கு தரும் லஞ்சப்பணம் ரூ.2 ஆயிரத்து 600. இந்தத் தொகை அடிக்கடி மாறும். அகதிகளின் வண்டி நம்பர் பிளேட், ஆட்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தும் போட்டோவாக  செக்போஸ்ட் ஆபீசர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

பிறகென்ன... செக்போஸ்டுகளில் கெத்தாக ஏஜண்டுகள் இறங்கி அவர்களிடம் இருக்கும் போட்டோக்களில் தென்படும் முகமும் வண்டியில், தாம் ஏற்றி வந்திருக்கும் அகதிகளின் முகங்களும் ஒன்றே என அடையாளம் காட்டி கமிஷன் வெட்டுவார்கள் அப்புறம்... பாதுகாப்பு கேரண்டி. ‘‘இதன் பிறகும் நிம்மதியாக இருக்க முடியாது. அகதிகள் கொள்ளையடிக்கப்படலாம் அல்லது கடத்தப்படலாம். பெண்கள் என்றால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகலாம். இப்படி நடந்தால் அதற்கு நானே பொறுப்பு என்பதால் எல்லைகளைக் கடந்தபின் போன்கால் வரும் வரை பதற்றமாகவே இருக்கும்...’’ என்கிறார் கதீயா.

விதிவிலக்கான சில சம்பவங்கள் தவிர்த்து கற்பழிப்பு, கொள்ளை போன்ற க்ரைம்களில் ஈடுபட்டு தங்கள் பெயரை சிதைத்துக் கொள்ள எந்த ஏஜண்டுகளும் விரும்புவதில்லை. ‘‘கடத்தல் தொழிலில் தோல்விகளையோ, அசம்பாவிதங்களையோ ஏஜண்டுகள் மட்டுமல்ல, அகதிகளும் விரும்புவதில்லை. விபத்துகளால் ஏஜண்டுகளுக்கு பணம் தட்டிப்போகிறது என்றால் அகதிகளுக்கு வாழ்க்கையே பறிபோகிறது...’’ என்று சொல்லும் உலக பன்னாட்டு குற்றத்தடுப்பு அமைப்பின் துணைத்தலைவரான ட்யூஸ்டே ரெய்டனோ, பீட்டர் டின்டியுடன் இணைந்து அகதிகளின் வாழ்க்கை அனுபவங்களை ‘Migrant, Refuge, Smuggler, Saviour’ என்ற நூலாக எழுதியுள்ளார். அரசு, ராணுவம், கொள்ளை என அத்தனையும் தாங்கிக் கொண்டு அகதிகள் எதற்காக எல்லை தாண்டி பயணிக்கிறார்கள்? நாளையாவது வானம் நமக்காக விடியாதா என்ற ஆசைதான்.                 

- ச.அன்பரசு