காட்ஃபாதர்



பாப்லோ எஸ்கோபாருக்கும், கொலம்பிய அரசுக்குமான முரண் என்பது, அமெரிக்கா யாரைக் கேட்டாலும் பிடித்துக் கொடுத்துவிடும் வெளியேற்ற சட்டம்தான். அந்த சட்டத்தின் அடிப்படையில்தான் நூற்றுக்கணக்கான கொலம்பியர்களை அமெரிக்கா அலேக்காக தூக்கிச் சென்றது. கொலம்பிய அரசு மீது பாப்லோ தொடுத்த போர் என்பதே, இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்பதுதான். போதை கார்டெல்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பு சமூக ஆர்வலர்களும் இந்த அடாவடி சட்டத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் அமெரிக்க அரசு, போதை கடத்தல்காரர்களை மட்டுமின்றி.. தம்முடைய அரசியலை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும் எதிராக அந்த சட்டத்தை முறைகேடாக பயன்படுத்திக் கொண்டிருந்தது.

குறிப்பாக கம்யூனிஸ்டுகள் பலரும் அநியாயமாக பலியாகினர். அரசுக்கு எதிரான கம்யூனிஸ்டுகளை கொலம்பியாவே, போதை கடத்தல்காரர்கள் என்று முத்திரை குத்தி அமெரிக்காவுக்கு நாடு கடத்தியது. அங்கே பொய்வழக்கில் இந்த அப்பாவிகள் கணக்கு வழக்கின்றி சிறைகளில் வாடினர். எண்பதுகளின் மத்தியில் கொலம்பிய அரசு மீது தொடுக்கப்பட்ட பல்வேறு முனை போராட்டங்களின் அடிப்படையால் தற்காலிகமாக அந்த சட்டத்தை அரசு திரும்பப்பெற வேண்டியதானது. அப்போதைய அதிபர் பதவியிழந்து, தற்காலிகமாக வந்த அதிபர் இந்த வெளியேற்ற சட்டத்தை கொலம்பியர்கள் மீது பிரயோகிப்பதில்லை என்கிற கொள்கை முடிவுக்கு வந்திருந்தார்.

அமெரிக்காவுக்கும், கொலம்பியாவுக்கும் இடையே போடப்பட்ட அந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்று வழக்கு ஒன்றில் கோர்ட்டும் தீர்ப்பு கொடுத்தது. இந்த வெற்றியை பாப்லோ எஸ்கோபாரும், அவரது சகாக்களும் மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியவில்லை.ஏனெனில் இந்த வெற்றி பாப்லோவுக்கானது என்கிற உண்மை ஆளும் தரப்பையும், அமெரிக்காவையும் கடுமையாக வெறுப்பேற்றியது. முன்பைக் காட்டிலும் மூர்க்கமாக பாப்லோ மீது பாய்ந்தார்கள். இந்த அமளி துமளிகளுக்கு மத்தியில் போதை ஏற்றுமதி பிசினஸை வெற்றிகரமாகவே நடத்திக் கொண்டிருந்தார் பாப்லோ. நேரிடையாக அமெரிக்காவுக்கு கொலம்பியாவில் இருந்து சரக்கு கொண்டு செல்ல முடியவில்லை எனும்போது ஐரோப்பாவுக்கு அனுப்பி,

அங்கிருக்கும் போதை மாஃபியாக்கள் வாயிலாக வெவ்வேறு முறையில் தொடர்ச்சியாக சப்ளை செய்து கொண்டேதான் இருந்தார். உண்மையைச் சொல்லப் போனால், தனக்கு வந்த ஆர்டர்களைவிட கூடுதலாகவே சரக்குகளை அமெரிக்க கோடவுனில் ஸ்டாக் வைத்தார். இருப்பினும் பாப்லோவின் ஸ்டாக்கிஸ்டுகளாக இருந்த அமெரிக்கர்கள் பலருமேகூட சிஐஏ அனுப்பிய அண்டர்கவர் ஆபீஸர்களாக இருப்பார்கள் என்பதை அவர் எதிர்பார்க்கவே இல்லை. அவர்கள் அவ்வப்போது போட்டுக் கொடுக்க, அமெரிக்காவில் தங்கியிருந்த மெதிலின் கார்டெல் ஆட்கள் கொத்து கொத்தாக அள்ளப்பட்டு, ‘முறையாக’ கவனிக்கப்பட்டார்கள்.

எனினும் ஒருவர்கூட பாப்லோவைப் போட்டுக் கொடுக்க முன்வரவில்லை என்பதுதான் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. கொலம்பியாவைப் பொறுத்தவரை பாப்லோவின் உளவுப்படை சிறப்பாகப் பணியாற்றியது. ஆயினும், அவர்களால்கூட பாப்லோவைத்தான் தொடர்ச்சியாக முன்கூட்டியே எச்சரித்து காப்பாற்ற முடிந்ததே தவிர, இரண்டாம் கட்ட தலைகளுக்கு போதுமான தகவல்களைச் சேகரித்து காப்பாற்ற முடியவில்லை. காவல்துறையிலும் பாப்லோவால் உள்நுழைக்கப்பட்டவர்கள் ஏராளமாக இருந்தார்கள் என்பதை ஏற்கனவே நாமறிவோம்.

இவர்கள் தவிர்த்து உயரதிகாரிகளாக இருந்தவர்கள் இருவேறு மனப்பான்மையோடு இருந்தார்கள். கார்டெல்களிடம் காசு வாங்கிய களவாணிக் கூட்டத்துக்கு, ஒருவேளை அவர்கள் பிடிபட்டு விட்டால் தங்கள் குட்டு அம்பலமாகி விடுமே என்கிற அச்சம் இருந்தது. இவர்கள்தான் போதை ஆட்களைக் கண்டதுமே கண்ட துண்டமாக வெட்டிவிடுவது என்று கொலைவெறியோடு வேட்டை நடத்தியவர்கள். இன்னொரு தரப்பு போலீஸோ கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர்கள். இவர்களைப் பொறுத்தவரை சட்டத்தை நிலை நாட்ட வேண்டும். குற்றவாளிகள் தங்களிடம் மாட்டினால் அவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்தி,

என்ன தண்டனையோ அதைத்தான் பெற்றுத்தர வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. கார்டெல்கள் இவர்களை நல்ல போலீஸ், கெட்ட போலீஸ் என்று பிரித்துப் பேசினார்கள். நல்ல போலீஸை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என்று பாப்லோ ஆணையிட்டிருந்தார். அதே நேரம் கெட்ட போலீஸைப் பொறுத்தவரை, அவர்கள் நம்மைத் தேடி வந்து பிடிப்பதற்கு முன்பாகவே நாம் அவர்களைப் போடவேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருந்தார். இதன் அடிப்படையில் கொலம்பியாவின் பல்வேறு நகரங்களிலும் ஊழல் போலீஸார், சாலைகளில் பிணமாகத் தொடங்கினார்கள்.

அவர்கள் அராஜக போலீஸ் என்பதால் மக்களும் இந்தக் கொலைகளை சந்தோஷமாகக் கொண்டாடவே தொடங்கினார்கள். பொதுவாக பாப்லோவை பிடிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் பலரும் நல்ல போலீஸாக இருந்தார்கள். அவர்கள் பல்வேறு இடங்களையும் சோதனை செய்யும்போது கையில் முறையான ஆவணங்களை வைத்திருந்தார்கள். எந்தவித சேதாரத்தையும் யாருக்கும் உண்டாக்காமல் அவர்கள் வேலையை அவர்கள் செய்தார்கள். எனவேதான் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காதீர்கள், அதேநேரம் முக்கியமான ஆவணங்களோ சரக்குகளோ அவர்களது கையில் சிக்காமல் பாதுகாப்பாக ஒளித்து வையுங்கள் என்று பாப்லோ ஆலோசனை கொடுத்திருந்தார்.

பாப்லோவுக்கு அடுத்த நிலையில் இருந்த தலைவர்களையும், பாப்லோவின் உறவினர்களையும் விசாரிக்கச் சென்ற போலீஸ் பெரும்பாலும் கெட்ட போலீ ஸாக இருந்து தொலைத்தனர். மடியில் கனத்தோடு போலீஸ் துறையில் இருந்தவர்கள், அந்த கனத்தை அறிந்தவர்கள் இல்லாமல் போய்விட வேண்டும் என்கிற வெறியோடு நடந்து கொண்டார்கள். இவர்கள் செல்லும் இடமெல்லாம் அநியாயம் கொடிகட்டிப் பறக்கும். திருடுவார்கள். அடிப்பார்கள். உதைப்பார்கள். உடைப்பார்கள். கார்டெல்காரர்கள் மட்டுமின்றி சாதாரண பொதுஜனங்களையும் பிடித்துப் பொய் கேஸ் போடுவார்கள். சம்பந்தமே இல்லாதவர்களிடமிருந்தெல்லாம் பாப்லோவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எழுதி வாங்குவார்கள்.

போதைத்தொழில் மட்டுமின்றி, கால்பந்து, சமூகசேவைகள், அரசியல் என்று பல்வேறு தளங்களில் பரிணமித்தவர் பாப்லோ. விஐபி என்கிற அடிப்படையில் அவரோடு நிறைய பொதுஜனம் புகைப்படம் பிடித்துக் கொண்டதுண்டு. அம்மாதிரி படம் பிடித்தவர்களைக்கூட பிடித்து கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தனர். பாப்லோவின் உறவினரான ஹெர்னாண்டோவுக்கு நடந்த கொடுமை படுமோசமானது. விடுமுறையை அனுபவிக்க பண்ணை வீடு ஒன்றுக்கு தன்னுடைய குடும்பத்தோடு சென்றிருந்தார் அவர்.

கெட்ட போலீஸுக்கு எப்படியோ இந்தத் தகவல் தெரிந்திருந்தது. அவர்கள் பண்ணை வீட்டுக்குள் படையாக நுழைந்தார்கள்.“எஸ்கோபார் எங்கேடா?” என்கிற கேள்வியோடு நுழைந்தவர்கள் கண்ணுக்கு பட்ட பொருளையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். ஹெர்னாண்டோ மீது இடி மாதிரி அடி விழுந்து கொண்டே இருந்தது. ஹெர்னாண்டோ, பாப்லோவிடமிருந்து நிஜமாகவே விலகியிருந்தார். அவருக்கு பாப்லோ எங்கிருக்கிறார் என்பதெல்லாம் நிச்சயமாகவே தெரியாது. கெட்ட போலீஸுக்கும் இது தெரியுமென்றாலும்,

தன்னால் தன்னுடைய உறவினர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற செய்தி பாப்லோவுக்கு போய்ச் சேரவேண்டும் என்று நினைத்தார்கள். ஹெர்னாண்டோவை அவரது மனைவி, குழந்தைகளின் கணகளுக்கு முன்பாகவே தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்தார்கள். அவரது விரல் நகங்கள், கட்டிங் பிளேயரால் பிடுங்கப்பட்டன. அவரது கண்களில் சோப்பு நீரை ஊற்றி சித்திரவதை செய்தார்கள். அவரது மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு, அவர் வதைபட்டு அழுவதைக் கண்டு கொக்கரித்தார்கள். ஒருநாள் முழுக்க இதுபோல சித்திரவதை செய்யப்பட்ட அப்பாவியான ஹெர்னாண்டோ அநியாயமாக குடும்பத்தினர் கண் முன்பாகவே உயிரை விட்டார்.

(மிரட்டுவோம்)

யுவகிருஷ்ணா - 49
ஓவியம் : அரஸ்