வீல்சேர் டென்னிஸ்…



சேகரின் தன்னம்பிக்கைப் பயணம்!

டென்னிஸ் தெரியும். வீல் சேர் டென்னிஸ் தெரியுமா? யெஸ். அதேதான். மாற்றுத்திறனாளிகளுக்கான டென்னிஸேதான். கடந்த டிசம்பர் மாதம் பெங்களூருவில் தபேபுயா ஓப்பன் வீல்சேர் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. பெங்களூருவின் சில், ஜிலீர் குளிர்காற்றில் சேகர் வீராசாமி மற்றும் பாலசந்தர் இருவரின் டென்னிஸ் ராக்கெட்களும் அனல் பறக்க மோதிக் கொண்டன.

பார்வையாளர்களின் கண்களைக் கதகளியாடவிட்ட அற்புதமான போட்டி அது. பாலசந்தரின் தவறுகளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சேகர், ஃபோர்ஹேண்ட் சர்வீஸ்களால் பந்தைத் தெறிக்கவிட்ட போது அரங்கமே அதிர்ந்தது. அந்த ஆரவாரத்தில், தான் இதுவரை அனுபவித்த அத்தனை வலிகளையும் மறந்துபோனார் சேகர் வீராசாமி. தினக்கூலியான சேகரின் தந்தைக்கு பள்ளிக்குச் செல்லும் மகனுக்கு பசியாற்றி அனுப்பக்கூட வழியில்லாத வறுமை. வயிற்றை அமைதிப்படுத்த 10 வயதிலேயே வெள்ளி விளக்குகளுக்கு பாலீஷ் செய்யும் வேலையில் சேர்ந்தார் சேகர்.

அப்போது அவரின் நண்பர் டென்னிஸ் போட்டியில் பந்துகளைப் பொறுக்கித்தரும் வேலைக்குக் கூப்பிட்டார். எக்ஸ்ட்ரா காசு கிடைக்கும் என்று உடனே அழைப்பை ஏற்றார். கோர்ட்டில் டென்னிஸ் மட்டையில் பட்டு பறக்கும் பந்துகள் பரவசம் தர, உற்சாகமாக ஓடியாடி வேலை செய்தார். சேகரின் ஆர்வமும் துறுதுறுப்பும் விரைவிலேயே அவரை கோச்சின் உதவியாளராக்கின.

வாழ்வின் அடுத்தகட்டம் என்று ஆனந்தத்தில் திளைத்திருந்த நேரத்தில்தான் அந்தத் துன்பம் நிகழ்ந்தது. இளமை முழுதும் வறுமையையே பார்த்துக்கொண்டிருந்த ஓர் இளைஞனின் வாழ்வில் மேலும் ஒரு பேரிடி. சிட்டுக்குருவி போல் துள்ளித் திரிந்த சேகரின் வாழ்வையே முடமாக்கிய சம்பவம் அது. 2005ம் ஆண்டு நண்பரின் பைக்கில் ஜாலியாக ரைட் சென்றபோது எதிரில் வந்த வாகனம் மோதிய விபத்தில் இடதுகால் முற்றாகச் சிதைந்தது. காலை சீர்படுத்தவே முடியாது என்று மருத்துவர் சொல்லிவிட்டார்.

சேகர் வலியில் கதறக் கதற அவரின் இடதுகால் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. ‘‘அன்று நடந்த விபத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. அது விபத்து அல்ல, என் விதி. என் தன்னம்பிக்கை முழுதையும் அசைத்துப் பார்த்த சம்பவம்...’’ குரல் கம்ம பேசுகிறார் சேகர். ஆறுமாதங்கள் படுத்த படுக்கை. யார் ஆறுதல் சொன்னாலும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பு. கனவுகள் பொய்த்துப்போக அழுகையும் அரற்றலுமாகக் கிடந்தவரைத் தேற்றியது கூரியர் ஏஜென்சியில் வேலை செய்த இவரது மூத்த அண்ணன்தான்.

விபத்து காலை முடமாக்கினாலும் சேகரின் தன்னம்பிக்கையை முடமாக்கவில்லை. வயிறு இருக்கிறதே... வாழத்தானே வேண்டும். வேலைக்குச் சென்றே ஆகவேண்டும் என்ற சூழல். டென்னிஸ் அசோசியேஷன் (KSLTA) மீண்டும் இவரைப் பணிக்கு அழைத்தது. ஆனால், பணிக்காக அன்றாடம் ஆட்டோ பிடித்துச் செல்வது என்பது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. அப்படியும் இப்படியுமாக காலம் சென்றுகொண்டிருந்தது. அப்போதுதான் வீல்சேர் டென்னிஸ் பக்கம் சேகரின் ஆர்வம் திரும்பியது.

ஏற்கெனவே டென்னிஸில் ஆர்வம் என்பதால் வீல்சேர் டென்னிஸில் முழு மூச்சில் இறங்கினார். 2010ம் ஆண்டு வீல்சேர் டென்னிஸ் போட்டிக்குத் தேர்வானார் சேகர். ‘‘டென்னிஸ் விளையாட்டின் டெக்னிக்குகளைக் கற்றிருந்தேன் என்றாலும் வீல்சேரை எப்படி நகர்த்தி விளையாடுவது எனப் பழகுவதற்கு முதலில் தடுமாற்றமாக இருந்தது. எனக்கான ஒரே பிடிமானம் இதுதான்.

இந்தப் பிடியை விட்டால் இனி என் வாழ்வுக்கே பொருள் இல்லை என்று நினைத்தேன். மனதிலும் உடலிலும் இருந்த எல்லா வலிகளையும் பொறுத்துக்கொண்டு வீல் சேரை நகர்த்தியபடியே டென்னிஸ் மட்டையையும் லாவகமாய் சுழற்றக் கற்றுக்கொண்டேன். அடுத்த ஆண்டே தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு ரூ.50 ஆயிரம் வென்றேன். என் வாழ்நாள் முழுக்கத் தேவையான உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அந்தப் பரிசு தந்தது. என் பாதை எதுவெனத் தெளிவாகப் புரிந்துகொண்டேன்...’’ நெகிழ்கிறார் சேகர். தேசியப் போட்டிகளில் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார்.

தென் ஆப்பிரிக்காவில் நடந்த இண்டர்நேஷனல் போட்டியிலும் தாய்லாந்தின் பேங்காக்கில் நடைபெற்ற போட்டியிலும் கலந்துகொண்டு வெற்றி கண்டிருக்கிறார். முழுக் குடும்பத்தையும் போட்டோ எடுக்கவே புகைப்படக்காரர் வாசலில் நிற்கும் நெருக்கடியான சிறிய வீட்டில் சேகர் வீராசாமி, தன் அம்மா, மனைவி, இரு குழந்தைகளுடன் வசிக்கிறார். காலையில் ஐந்து மணிக்கு டென்னிஸ் பயிற்சிக்குச் செல்பவர், குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வாழ்வாதார வேலைக்குச் செல்கிறார். பாரீன் போட்டிகளில் (மலேசியா, பேங்காக்) கலந்துகொள்கிறார் என்றாலும் அனைத்தும் கடன்களாலேயே சாத்தியமாகிறது.

- ச.அன்பரசு

வீல்சேர் டென்னிஸ்!

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் விமானியான பிராட் பார்க்ஸ் மற்றும் அவரது நண்பரான மின்னேபிராக்கர் ஆகியோர் இணைந்து 1970ம் ஆண்டு வீல்சேர் டென்னிஸை கண்டுபிடித்தார்கள். இவர்கள் இருவரும் விபத்துகளால் கால்களை இழந்தவர்கள். 1982ல் இப்போட்டியை பிரான்ஸ் முதல் நாடாக ஏற்றது. டென்னிஸ் போட்டியின் ரூல்ஸ்கள் அப்படியே டிட்டோ. ஆனால் பந்து இருமுறை கோர்ட்டில் பிட்ச் ஆகலாம் என்ற சிற்சில கூடுதல் விதிகள் உண்டு.

1992ம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த பாராலிம்பிக்கில் முழுமையான விளையாட்டாக வீல்சேர் டென்னிஸ் தரம் உயர்ந்து உலகெங்கும் பிரபலமானது. உலக டென்னிஸ் ஃபெடரேஷன் கடந்தாண்டு நடத்திய போட்டியின் பரிசு 2 மில்லியன். இதில் Grand Slams, Masters, ITF Super Series, ITF 1,2,3 Series, ITF Futures Series ஆகியவை முக்கியமானவை. 2014ம் ஆண்டு ஆஸ்தா அமைப்பின் சுனில் ஜெயின் AITA ஆதரவுடன் வீல்சேர் டென்னிஸ் போட்டிகளை (IWTT) இந்தியாவில் நடத்தி வருகிறார்.