படம் வந்ததே பலருக்குத் தெரியாது... அப்படியிருந்தும் 2017ம் ஆண்டின் சிறந்த படங்கள்ல ஒண்ணுனு பாராட்டு கிடைச்சிருக்கு...



நெகிழ்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா

நேர்த்தியான யதார்த்தம் மிளிரும், ஆத்மார்த்தமான திருப்தி தரும் படம் என்ற சிறப்பு சென்றாண்டு வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’வுக்கு கிடைத்திருக்கிறது. சென்னையில் கூட விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ரிலீஸ் ஆகியிருந்தாலும், மவுத் டாக் இன்றுவரை பரவலாக இருக்கிறது. ‘‘எல்லா பாராட்டுகளையும் என் படத்தில் நடித்த நடிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தப் படத்தோட படப்பிடிப்பை கடும் வெயில்லதான் ஷூட் பண்ணினோம். கிட்டத்தட்ட நாற்பது கேரக்டர்கள். நடித்தவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள்.

நானாவது நிழல் இருக்கற இடமா பார்த்து மானிட்டரை கவனித்துக் கொண்டிருப்பேன். ஆனா, அவங்க செருப்பில்லாம வெறும் கால்ல நடந்தும்... லாரியில் ஏறி இறங்கியும் தங்கள் உழைப்பை செலுத்தினாங்க. அந்த எளிய மனிதர்கள், தங்களோட கேரக்டருக்கு செலுத்தின நியாயம்தான் 2017ம் ஆண்டின் சிறந்த படங்கள்ல ஒன்றா பேச வைக்குது. அதனால்தான் சொல்றேன்... கிடைக்கிற பாராட்டுகள், ஒருவேளை விருதுகள் கிடைச்சா அதுவும்... எல்லாத்தையும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’வுல நடிச்சவங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்...’’ நெகிழ்ச்சியுடன் பேச ஆரம்பிக்கிறார் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் சங்கையா.

‘‘ராஜபாளையம் பக்கத்துல இருக்கற டி.கரிசல்குளம்தான் எங்க ஊரு. அங்கே சுத்துவட்டாரத்துல இருக்கற ஸ்கூல், காலேஜ்ல படிச்சேன். பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சிருக்கேன். மத்தபடி கம்ப்யூட்டருக்கும் எனக்குமான உறவு ரொம்ப தூரம். சென்னைல எங்க மாமா ராம்குமார் தனியார் வங்கி வேலைல இருந்தார். அவரைப் பார்க்க வந்தேன். இங்கயே வங்கி வேலையில என்னைச் சேர்த்துவிட்டார். ஒரே இடத்துல உட்கார்ந்து பாக்கற வேலை போரடிக்கவே ஊருக்கு திரும்பிப் போயிட்டேன்.

அப்ப எங்க ஊர்ல சசி சாரோட ‘பூ’ ஷூட்டிங் நடந்தது. அதோட அசோசியேட் கேமராமேன் மணிகண்டன் சாரும் எங்க ஊர்க்காரர் அண்ணன் செல்வகுமாரும் நண்பர்கள். அவர் மூலமா மணிகண்டன் சார்கிட்ட அசிஸ்டென்ட் ஆனேன். ‘காக்கா முட்டை’ வரைக்கும் சில வருஷங்கள் மணிகண்டன் சார்கிட்ட ஒர்க் பண்ணினேன். அப்புறம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ கதை ரெடி பண்ணினேன்.

கிட்டத்தட்ட ரெண்டு வருஷங்கள் ஸ்கிரிப்ட் ஒர்க் போச்சு. படத்துக்கு வசனம் எழுதின வே.குருநாதன் (படத்தில் ஜட்ஜ் ஆக நடித்தவர்) கூட சேர்ந்து ஸ்கிரிப்ட்டை இன்னும் செதுக்கினன். எங்க கிராமத்துல, அவர் கிராமத்துல உள்ள பெயர்களை எல்லாம் கேரக்டர்களுக்கு வைச்சேன். ஈராஸ் நிறுவனத்துல இந்தக் கதையை சொன்னதும், அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு. உடனே படத்தை ஆரம்பிச்சாங்க. இந்தப் படத்துல நாற்பது கேரக்டர்கள். ஒவ்வொரு கேரக்டருக்குமே கிட்டத்தட்ட இருபது பேருக்கு மேல ஆடிஷன் வச்சு, செலக்ட் பண்ணினேன்.

படத்துல ஹீரோவுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கல. எல்லா கேரக்டர்களும் சமமா ஸ்கோர் பண்ணியிருப்பாங்க. படம் ரெடியானதும் நியூயார்க் ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்கு அனுப்பினாங்க. அங்க திரையிடுவதற்கு முன்னாடி இங்க ரிலீஸ் செய்யக்கூடாதுனு கண்டிஷன். அதனாலயே இங்க ஓராண்டுக்குப் பிறகு வெளியிட்டோம். அந்த திரைப்பட விழால எல்லாருக்குமே படம் பிடிச்சிருந்தது. சந்தோஷமும் நம்பிக்கையுமா இருந்தது. ஆனா, படம் ரிலீஸ் டைம்ல சரியான பப்ளிசிட்டி எங்களுக்கு கிடைக்கலை.

அதனாலயே எங்க அத்தனை பேர் உழைப்பும் கவனிக்கப்படாம போயிடுச்சு. கிளாமரும், டபுள் மீனிங்குமா பண்ணியிருந்தா கூட இந்த இருட்டடிப்பை தாங்கியிருக்க முடியும். ஆனா, ஒரு தரமான நேர்த்தியான படம் செய்ததால இந்த கஷ்டத்தை,  புறக்கணிப்பை தாங்கிக்க முடியல. ஆனாலும் படம் பார்த்தவங்க முழுமனசா பாராட்டறாங்க. இதோ நீங்களும் நினைவு வைச்சிருந்து பேட்டி எடுக்கறீங்க. உற்சாகத்தோட அடுத்த ஸ்கிரிப்ட் வேலைல இறங்கிட்டேன்...’’ என்கிறார் சுரேஷ் சங்கையா.            

- மை.பாரதிராஜா