இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள்



அக்கா தங்கை உறவு, அம்மா குழந்தை போன்றது. அக்கா என்பவள் அம்மாவிற்கு சமமானவள். ‘‘அம்மாவிடம் பரிந்து பேசவும், எல்லா விஷயங்களிலும் உறுதுணையாக இருப்பவள் என் அக்கா ஸ்ரீஉஷாதான்...’’ என்கிறார் சிரீஷா. ஒரே மாதிரியான உடை, அணிகலன், பேச்சு, ஹேர்ஸ்டைல். பார்க்க டிவின்ஸ் போல் இருக்கும் இந்த சகோதரிகள் இந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் சகோதரிகள்.

மாண்டலினை பலர் வாசிக்கிறார்கள். ஆனால், அக்கா தங்கை என இருவரும் ஒரே நேரத்தில் மேடையில் வாசிப்பது இவர்கள் மட்டுமே. ‘‘மாண்டலின் சகோதரிகள்னு எல்லாரும் அழைக்கிறப்ப பெருமையா இருக்கு...’’ முகமெல்லாம் மலர பேசத் தொடங்குகிறார் ஸ்ரீஉஷா. ‘‘நாங்க இரட்டையர்கள்னுதான் நினைக்கறாங்க. உண்மைல சிரீஷாவுக்கும் எனக்கும் ஒன்றரை வருஷ வித்தியாசம். அப்பா தொலைபேசித் துறைல வேலை பார்க்கறார். அம்மா இல்லத்தரசி. அப்பாதான் எங்க இசை குரு. அவரைப் பார்த்துதான் எங்களுக்கும் இசை மேல ஆர்வம் வந்தது.

அப்பா கிட்டார் வாசிப்பார். கர்நாட சங்கீதமும் பாடுவார். இரண்டையும் முறைப்படி கத்துக்கிட்டார். வீட்ல அவர் வாசிப்பதை நானும் சிரீஷாவும் கண்கொட்டாம பார்ப்போம். காது குளிர கேட்போம். அப்ப எனக்கு அஞ்சு வயசு. சிரீஷாவுக்கு நாலு. அப்பா வேலைக்குப் போனதும் அவர் கிட்டாரை எடுத்து வாசிப்பேன். ராகம், ஸ்வரம் எல்லாம் தெரியாது. இழையை இழுத்தா சத்தம் வரும். அவ்வளவுதான். என்னைப் பார்த்து சிரீஷாவும் வாசிக்க ஆரம்பிச்சா.

ஒருநாள் அப்பா இதை பார்த்துட்டார். திட்டுவார்னு நினைச்சோம். ஆனா, அவர் சிரிச்சார். எங்களுக்கு இசையை கத்துக் கொடுக்க முடிவு செஞ்சார். இப்படித்தான் நாங்க மாண்டலின் கத்துக்க ஆரம்பிச்சோம்...’’ என ஸ்ரீஉஷா முடிக்க, தொடர்ந்தார் சிரீஷா.‘‘நாங்க கிட்டார் உயரம் கூட இருக்க மாட்டோம். அதைப் பிடிச்சு அந்த வயசுல வாசிக்கறது கஷ்டம். எங்க வயசுக்கு ஏத்ததா, பிடிச்சு வாசிக்க வசதியா இருந்தது மாண்டலின்தான். அதனாலதான் அப்பா அதை தேர்வு செஞ்சார். தொடக்கத்துல அப்பாதான் குருவா இருந்தார்.

அடிப்படைகளை அவர் சொல்லிக் கொடுத்ததும் வித்வான் ருத்ரராஜு சுப்புராஜுகிட்ட பயிற்சி எடுத்துக்க ஆரம்பிச்சோம். இவரேதான், மாண்டலின் ஸ்ரீநிவாஸுக்கும் குரு. இவர்கிட்ட பயிற்சி முடிச்சதும் கடந்த 15 வருஷங்களா வித்வான் செங்காலிபுரம் ராமமூர்த்தி அய்யர்கிட்ட கத்துக்கறோம். இவர் சங்கீத கலாநிதி முடிகொண்டான் வெங்கடராம அய்யரின் சீடர்...’’ பெருமையாகச் சொல்கிறார் சிரீஷா.

இந்த சகோதரிகள் பல சபாக்களிலும் கோயில்களிலும் கச்சேரி செய்திருக்கிறார்கள். ‘‘முதல்ல திருவையாறு தியாகராஜ ஆராதனைலதான் வாசிச்சோம். எப்படி ஒண்ணா கத்துக்க ஆரம்பிச்சோமோ அப்படி ஒண்ணாவே வாசிக்கறோம். பயிற்சி கூட தனித்தனியா எடுத்துக்க மாட்டோம். எங்களோட எல்லா நிகழ்ச்சிகளையும் யூ டியூப்ல பதிவு செஞ்சிருக்கோம். இதைப் பார்த்துட்டு ஐரோப்பிய நாடுகள்ல கூப்பிட்டாங்க.

பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, இத்தாலி, பிரேசில், நார்வே, ஜெர்மனி, சிங்கப்பூர், மஸ்கட்னு பல நாடுகள்ல கச்சேரி நடத்தியிருக்கோம்...’’ என்று சொல்லும் ஸ்ரீஉஷா, கர்நாடக சங்கீதத்தை மட்டுமே தாங்கள் வாசிப்பதாக அழுத்தம்திருத்தமாகக் குறிப்பிடுகிறார். ‘‘வெஸ்டர்ன் வாசிக்கறதில்லை. வாசிக்கத் தெரியாதுனு இல்லை. வெளிநாடுகள்ல கூட நம்ம சங்கீதத்தைத்தான் விரும்பறாங்க. நாங்க வாசிக்கறதுக்கு முன்னாடி அதுகுறித்த குறிப்பை விளக்குவோம். இதனால நாங்க வாசிக்கும்போது இசை தெரியாதவங்க கூட மெய்மறந்து ரசிக்க ஆரம்பிப்பாங்க...’’ இந்த மாண்டலின் சகோதரிகள் ஆல்பம் தயாரித்து வருவதுடன் ஃபியூஷனில் கலக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.

‘‘கர்நாடக சங்கீதத்தை கத்துக்கிட்டா போதும். எல்லா இசையையும் வாசிக்கலாம். இப்ப இங்கிலாந்து பாடகரான அப்பாச்சி இந்தியன் கூட இணைஞ்சு ஓர் ஆல்பம் செய்யறோம். போன நவம்பர்ல ‘இண்டிஎர்த் எக்ஸ்சேஞ்ச்’ இசை நிகழ்ச்சி சென்னைல நடந்தது. பல நாடுகள்லேந்து கலைஞர்கள் வந்திருந்தாங்க. அதுல பெல்ஜியம் கலைஞர்கள் எங்க கூட சேர்ந்து ஃபியூஷன் வாசிச்சாங்க. அதாவது அவங்க வெஸ்டர்ன் வாசிப்பாங்க. நாங்க அவங்க நோட்ஸுல கர்நாடக சங்கீதம் வாசிப்போம்.

அந்த மூணுநாள் இசை நிகழ்ச்சி எங்களுக்கு பல புரிதலை கொடுத்திருக்கு...’’ என்கிறார் சிரீஷா. ‘‘இசை, உடைல மட்டுமில்ல... நாங்க படிச்ச பட்டப்படிப்பும் ஒண்ணுதான். 10வது வரைதான் ஸ்கூல் போனோம். அப்புறம் ப்ரைவேட்டா படிச்சோம். ஸோ, பள்ளி வட்டாரத்துல நண்பர்கள்னு எங்களுக்கு பெருசா கிடையாது. ஆனா, இசை வட்டாரத்துல நிறைய நண்பர்கள் இருக்காங்க. எல்லாத்தையும் விட நாங்க இரண்டு பேரும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். ஒரே வித்தியாசம், அக்கா நல்லா ஓவியம் வரைவாங்க. எனக்கு பெயின்டிங் வராது. பதிலா உடை அலங்காரம், எம்பிராய்டரி எல்லாம் செய்வேன்.

இரண்டு பேரும் சண்டை போட்டுகிட்டதில்லை. கல்யாணம் வரை ஒரே மாதிரியா டிரெஸ் அணிஞ்சோம். நைட் டிரெஸ் கூட அப்படித்தான். அக்காக்கு திருமணமாகி ஒன்றரை வருஷமாகுது. எனக்கு ஆறு மாசமாகுது. எங்க கணவர்களும் இசைப் பிரியர்கள்தான். அவங்களுக்கு வாத்தியம் வாசிக்கத் தெரியாது. ஆனா, சிறந்த ரசிகர்கள். திருமணத்துக்குப் பிறகும் நாங்க ஒண்ணா இசையமைக்க அவங்க ஆதரவுதான் காரணம். 10 வயசுல முதல் கச்சேரி செஞ்சோம். இதுவரை 3 ஆயிரம் கச்சேரிகள் வரை செய்திருக்கோம்...’’ என்று சிரீஷா முடிக்க, தங்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் மாண்டலின் குறித்து விவரித்தார் ஸ்ரீஉஷா.

‘‘மாண்டலின், வெஸ்டர்ன் இசைக்கருவி. அதுல 8 இழைகள் இருக்கும். கர்நாடக சங்கீதத்தை அதுல வாசிக்க முடியாது. அதனால எங்க குரு வித்வான் ருத்ரராஜு சுப்புராஜு அவர்களும் மாண்டலின் ஸ்ரீநிவாசும் இணைஞ்சு கர்நாடக சங்கீதத்துக்கான மாண்டலினை உருவாக்கினாங்க. இதுல அஞ்சு இழைங்கதான் இருக்கும். இதுல வெஸ்டர்னும் வாசிக்கலாம். பொதுவா வெஸ்டர்ன் இசைல கமக்காஸ் வாசிக்க முடியாது. அவங்க அதை வாசிக்கவும் மாட்டாங்க. அவங்களுக்கு சரிகமதான் நோட். இதைச் சார்ந்துதான் அவங்க இசை இருக்கும்.

ஆனா, நம்ம கர்நாடக சங்கீதத்தைப் பொறுத்தவரை கமக்காஸ் நிறைய பயன்படுத்துவோம். இதை அஞ்சு இழைகளாலான மாண்டலினில்தான் வாசிக்க முடியும். இசைங்கறது பெரிய கடல். ஒவ்வொரு கச்சேரி செய்யறப்பவும் எங்க இசையை நாங்க அப்கிரேட் செய்துக்கறோம். இப்ப கச்சேரிகள்லதான் முழு கவனம் செலுத்தறோம். சினிமா அல்லது ஜிங்கிள்ல வாசிக்க வாய்ப்பு கிடைச்சா மறுக்க மாட்டோம்...’’ என்கிறார் ஸ்ரீஉஷா. இந்த மாண்டலின் சகோதரிகளின் கனவு, இசைஞானி இளையராஜாவிடமும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடமும் பணிபுரிய வேண்டுமென்பது!

- ப்ரியா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்