இது குழந்தைகளுக்கான லைப்ரரி!“புத்தகங்களுக்காக நாம் செலவழிக்கும் தொகை வெறும் செலவு அல்ல; அது மூலதனம். ஆனால், இன்றைய டெக் யுகத்தில் புத்தகம் வாசிப்பது என்ற பழக்கமே அரிதாகிவருகிறது. எலெக்ட்ரானிக் ஒளிர்திரைகளில் கண்ணையும் கருத்தையும் தொலைத்து நிற்கும் தலைமுறையாகிவிட்டோம். பெரியவர்களே இப்படித்தான் என்றால் குழந்தைகளைப் பற்றிக் கேட்க வேண்டியதே இல்லை. பள்ளிவிட்டு வந்ததும் டிவியிலும் வீடியோ கேமிலும் இன்டர்நெட்டிலும்தான் விழுகிறார்கள் பெரும்பாலான குழந்தைகள். விடுமுறை நாள் என்றால் முழு நேரமும் எலெக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ்தான் கதி. பாலர் வகுப்பு செல்லும் குழந்தைகள்கூட கண்ணாடி அணிவதைப் பார்த்தால் பாவமாய் இருக்கிறது.

இந்த எலெக்ட்ரானிக் ராட்சஷனிடம் இருந்து நம் எதிர்கால சந்ததிகளைக் காப்பாற்றும் சிறு முயற்சிதான் எங்கள் நூலகம்...’’ பீடிகையோடு ஆரம்பித்தார் ‘Read n Rejoice’ நிர்வாகி மற்றும் உரிமையாளரான சசிகலா. “எனக்கும் என் கணவருக்கும் புத்தகங்கள் என்றால் உயிர். இன்ஜினியரிங் படித்துவிட்டு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன். பிறகு, வேலையை விட்டுவிட்டு குடும்பத்துடன் லண்டன் சென்று விட்டேன்.

அப்போது என் குழந்தைக்கு ஆறு வயசு. அங்கு என் மகனுக்கு உடனடியாக ஸ்கூல் அட்மிஷன் கிடைக்கவில்லை. அதனால் அவனை அங்கு இருக்கும் நூலகத்துக்கு அழைத்துச் செல்லத் தொடங்கினேன். அது பெரிய நூலகம். அங்கு பெரியவர்களுக்கான புத்தகங்களுடன் குழந்தைகளுக்கான நூல்களும் நிறைய இருந்தன. எனக்கு புத்தகங்களோடு புதிய புதிய நண்பர்களின் நட்பும் போனஸாகக் கிடைத்தது. இதற்கிடையில் எனக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. பிறகு, கொஞ்ச நாளில் மீண்டும் தாய் மண்ணுக்கே திரும்பிவிட்டோம்.

வீட்டில் சும்மா இருக்க பிடிக்கவில்லை. வேலை தேட முடிவு செய்தேன். ஆனால், பணி செய்து மூன்று வருடங்களாகி விட்டதால் உடனடியாக எந்த வேலையும் கிடைக்கவில்லை. சொந்தமாக ஏதும் தொழில் தொடங்கலாமா என்று யோசித்தேன். பளிச்சென மனதில் வந்தது லைப்ரரி தொடங்கும் ஐடியாதான். அது குழந்தைகளுக்கான லைப்ரரியாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.

என் கணவர் பச்சைக்கொடி காண்பித்தார். உடனே செயலில் இறங்கினோம்...’’ என்று சொல்லும் சசிகலாவின் நூலகத்தில் இப்போது 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ‘‘இங்கே வரும் குழந்தைகளுக்குத் தேவையான ஆலோசனைகள் கொடுக்கிறோம். அவர்களுக்கான புத்தகங்களும் நிறைய இருக்கின்றன. போலவே பெரியவர்களுக்குத் தேவையான புத்தகங்களும் இங்குள்ளன.

பெரியவர்கள் படிப்பதைப் பார்த்தால் குழந்தைகளுக்கும் படிக்கும் ஆர்வம் பிறக்கும். எங்கள் நூலகத்திலேயே வார இறுதியில் கதை நேரம், கதை சொல்லுதல், அறிவியல் கண்காட்சி, புத்தக விளையாட்டுகள் போன்ற கலை நிகழ்ச்சிகளையும் நடத்துகிறோம். பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் வகுப்புகள் நடத்துகிறோம். மனநல ஆலோசனைகள் வழங்குகிறோம்.

இப்படி மனதை வளமாக்கும் எல்லா நல்ல விஷயங்களும் இங்குண்டு. வந்து போக தூரம் என்று நினைப்பவர்கள் ஆன்லைன் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரியும் செய்து விடுகிறோம். புத்தக விலையில் 10% கட்டினால் அதை வாடகைக்கு எடுத்துப் படிக்கலாம். ரூ.500 முதல் உறுப்பினர் தொகை ஆரம்பம். இந்தத் தொகையை அதிகம் என்று நினைத்த சிலர் உள்ளே வந்த பிறகு அவர்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்ட இனிய அனுபவங்களைக் கண்டு இந்தத் தொகை குறைவு என்கிறார்கள்! வாசகர்களின் இது போன்ற சர்ட்டிபிகேட்ஸ்தான் எங்களின் பூஸ்ட்...’’ அழகாகப் புன்னகைக்கிறார் சசிகலா.                      
         

- ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்