மணல் கொள்ளையில் இருந்து தமிழகம் காப்பாற்றப்படுமா?‘தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும்...’உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் அதிரடி யான தீர்ப்பு அரசு மற்றும் மணல் வியாபாரிகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டியிருக்கிறது. இந்த தீர்ப்புக்கு எதிராக அரசும் மேல் முறையீடு செய்திருக்கிறது. இந்நிலையில் இதுதொடர்பான ஆர்வலர்களைச் சந்தித்தோம். ‘பூவுலகின் நண்பர்கள்’ இயக்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரும் வழக்கறிஞருமான வெற்றிச்செல்வன் இந்தத் தீர்ப்பு, தாக்கம் குறித்துப் பேச ஆரம்பித்தார்.

‘‘கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் நடக்கும் மணல் கொள்ளை சம்பந்தமாக பல்வேறு பொதுநல வழக்குகள் குவிந்து கிடக்கின்றன. இதன் எதிரொலியாக 2003ம் ஆண்டிலிருந்து அரசே மணல் குவாரிகளை நடத்த ஆரம்பித்தது. ஆனால், நடந்தது வேறு. ஆம்; மணலை அள்ளுவது தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் கொடுக்கப்பட்டது. இது சிறிது காலத்துக்குச் சிறப்பாக நடந்தது. ‘லிஃப்டிங் அண்ட் லோடிங்’ என்ற புதிய விதியை அரசு கொண்டு வந்ததும் சிக்கல் ஆரம்பமானது. அந்த விதிப்படி மணல் அள்ளுவதுடன் அதை லாரிகளில் கொண்டுசெல்வதும் தனியாரிடமே ஒப்படைக்கப்பட்டது.

அந்த தனியார்கள் என்பவர்கள் அரசுக்கு விசுவாசமான, செல்வாக்கு மிக்க சில தனிநபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு இவர்களின் கையில் மணல் வியாபாரம் மாட்டிக்கொண்டது. வெளிப்படையாகச் சொன்னால், அரசின் தயவுடன் சில தனிநபர்களால் மணல் கொள்ளை அரங்கேறியது. அவர்கள் செயற்கையான தட்டுப்பாடுகளை உருவாக்கி விலையை ஏற்றினார்கள். இந்தச் சூழலில் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை தொடர்பான வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. 2010ம் ஆண்டில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ‘தாமிரபரணியில் 5 ஆண்டுக்கு மணல் அள்ளக்கூடாது...’ என்ற முக்கியமான தீர்ப்பை வழங்கியது.

ஆனால், மற்ற இடங்களுக்கு இதுபோன்ற தீர்ப்பு இல்லாததால் இன்றுவரை மணல் கொள்ளை கொடிகட்டிப் பறக்கிறது...’’ என்கிற வெற்றிச்செல்வன் மதுரை நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பற்றியும் விளக்கினார். ‘‘ஆற்று மணல் கனிமவளச் சட்டத்துக்குள் வருகிறது. இது மணல் அள்ளுவதற்கான பல்வேறு விதிகளைச் சொல்கிறது. அதன்படி ‘அள்ளும் இடத்தின் நிலத்தடி நீரின் அளவு, அதன் தன்மை, எதிர்காலத்தில் அள்ளப்படும் மண்ணின் அளவுக்கு ஏற்ப எவ்வளவு மண் சேகரமாகும், நிலத்தின் தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அள்ளும் லாரிகளின் கணக்கு, அவை வெளியேறவேண்டிய செக்போஸ்ட்களின் கணக்கு, அதை முறைப்படுத்த திட்டங்கள்...’ போன்ற ஆய்வுகளைச் செய்த பின்புதான் மணல் அள்ளுவதற்கான அனுமதியைப் பெற வேண்டும்.

ஆனால், ‘தமிழக அரசு இந்த விதிகளைச் சரியாகப் பின்பற்றவில்லை...’ என தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனுடன் 2003ல் மத்திய அரசின் ‘பசுமை தீர்ப்பாயமு’ம் சில விதிகளை மணல் அள்ளுவதற்காக வைத்திருக்கிறது. இதில் முதன்மையானது ‘மணல் அள்ளுவதற்கான கோரிக்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் அனுமதியை கண்டிப்பாக வாங்க வேண்டும்...’ என்பது.

இதன்படி மணல் அள்ளவேண்டும் என்றால் ‘அள்ளும் இடத்தின் பரப்பளவு, ஆழம், முறை, கருவிகள், இயந்திரங்கள்...’ போன்ற விபரங்களைச் சொல்லி அனுமதி வாங்க வேண்டும். ‘இதையும் தமிழக அரசு பின்பற்றவில்லை’ எனச் சொல்கிறது தீர்ப்பு. ‘இந்த விதிகளைச் சரியாகப் பின்பற்றாமல் தொடர்ந்து மணலை அள்ளுவதால் இயற்கை மற்றும் மனிதர்களின் நலன் பாதிக்கப்படும். அதனால் 6 மாதத்துக்குள் அரசு எல்லா மணல் குவாரிகளையும் மூடிவிடவேண்டும்’ என்ற அதிரடியான தீர்ப்பை நீதிமன்றம் பிறப்பித்திருகிறது...’’ என்றவரிடம் ‘இறக்குமதி மணலுக்கு அரசு தடை விதிக்கக்கூடாது, எம்.சாண்டை அரசு ஊக்குவிக்கவேண்டும் போன்றவற்றால் தமிழகத்தின் மணல் தேவையைப் பூர்த்தி செய்யமுடியுமா?’ என்று வினவினோம்.

‘‘மணல் இறக்குமதியைப் பொறுத்தளவில் சட்டத்தில் தடை இல்லை. ஆனால், மாநில சட்டத்தில் அதுபற்றிய குறிப்பு இல்லாததால் தலையீடு நடக்கிறது. இறக்குமதி மணலைப் பொறுத்தளவில் அது இங்குள்ள மணலைவிட ஓரளவுக்கு விலைகுறைந்ததாக இருந்தாலும் போகப்போக அதுவும் விலையேற்றம் அடையும். அதுபோல ‘எம்.சாண்ட்’ மணலை செயற்கை மணல் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், அதுவும் பாறைகளையும், மலைகளையும் வெடி வைத்துத் தகர்த்து உருவாக்கப்படுகிற மணல்தான். அதனாலும் சுற்றுச்சூழலுக்குக் கேடுதான்.

நமக்கு அருகாமையில் உள்ள பொருட்களை வைத்து கட்டப்படும் கட்டுமான முறைகளால்தான் ஆற்றுமணலுக்கும், இயற்கை வளத்துக்கும் சேதம் வராது. நமது மணல் தேவைகளும் ஓரளவுக்குப் பூர்த்தியாகும். அருகில் உள்ள பொருட்கள் எனும்போது நமது பண்டைய காலத்து கட்டுமான முறையைச் சொல்லலாம். ஆனால், அதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு செய்யவேண்டியதில்லை. அறிவியல் ஆய்வுகள் மூலம் பழமையைப் புதுப்பித்துக்கொண்டு செய்யலாம். இது வருங்காலத்தில் பெரும் நன்மையை அளிக்கும்...’’ என்று வெற்றிச்செல்வன் சொல்லி முடிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான கனகராஜ் மணல் கொள்ளையில் நடக்கின்ற அரசியலைப் பற்றி அடுக்கினார்.

‘‘மணலை இறக்குமதி செய்தவர்கள் தொடுத்த வழக்கிலிருந்து இந்த தீர்ப்பு கிடைத்திருக்கிறது. ‘தமிழகத்தில் ஆற்று மணல் கொள்ளையால் சுற்றுச்சூழல் கெட்டுவிட்டது’ என்ற நல்ல நோக்கத்தில் அவர்கள் வழக்கு தொடுத்திருக்க மாட்டார்கள். மணல் கொள்ளையில் ஈடுபடும் பல கோஷ்டி மோதல்தான் வழக்கு வரைக்கும் போயிருக்கிறது.

இப்போதைக்கு மணல் அள்ளும் உரிமை அரசிடம்தான் உள்ளது. அள்ளுவதற்கு ஒரு கணக்கு, அதை தனியார்களுக்கு விற்பனை செய்தது மாதிரியான ஒரு கணக்கு என இரண்டு கணக்குகளை அரசு ஜோடிக்கிறது. கணக்குகளுக்கு இடையில் உள்ள ஓட்டையில்தான் மணல் கொள்ளையே அரங்கேறுகிறது. உண்மையில் மணலை அள்ளி விற்பனை செய்வது எல்லாம் ஆட்சிக்கு வேண்டிய சில தனிநபர்கள்தான். இதன்படி பார்த்தால் இரண்டாம் விற்பனையைக் கடைக்காரர்கள்தான் செய்கிறார்கள்.

இறக்குமதி மணலைப் பொறுத்தளவில் ‘அள்ளுவது’ என்ற பேச்சுக்கே இடமில்லை. அதேபோல முதல் விற்பனையை அரசு செய்யவேண்டும் என்ற பம்மாத்து அதிகாரமும் இல்லை. இதனால்தான் இறக்கு மதியாளருக்கு எதிரான ஒரு கோஷ்டி, அரசை பதம் பார்க்க இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

இந்த வழக்கின் முக்கிய நோக்கமே இறக்குமதி மணலைப் போல உள்ளூரிலும் மணல் எடுப்பதற்கு முன்பிருந்த மாதிரியே தனியார்களை கொண்டு வருவதாகும். உண்மையில் மணல் இறக்குமதியையும் அரசே செய்தால்தான் மணல் கொள்ளையைத் தடுக்க முடியும். தமிழகத்தின் இயற்கை வளங்கள் மணல் கொள்ளையால் சீரழிந்து கிடப்பதாகச் சொல்லும் நீதிபதி, ‘இறக்குமதி மணலுக்கு அரசு தடைவிதிக்கக்கூடாது’ என்று சொல்வது நியாயமானதுதான். ஆனால், அந்த இறக்குமதி மணல் தரமானவையா, அது முறைப்படி வருகிறதா, அதற்கு உரிய வரிகள் கட்டப்படுகிறதா என்பதையெல்லாம் நீதிமன்றம் கேள்வி கேட்கவில்லையே.

மாறாக அதை அரசு நிச்சயமாகச் செய்யவேண்டும் என்றுதானே சொல்கிறது. எம்.சாண்டைப் பொறுத்தளவில் அரசே, தான் கட்டும் கட்டுமானங்களில் அந்த மணலைப் பயன்படுத்தி ஒரு முன்மாதிரியாகத் திகழலாம். கிரானைட் ஊழல் வழக்கில் சகாயம் கமிஷனை அரசு நியமிக்கவில்லை. நீதிமன்றம்தான் நியமித்தது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அந்த அறிக்கையை நீதிமன்றத்தால் வெளியிடமுடியவில்லை. நீதிமன்றங்களும் சில முக்கியமான வழக்குகளில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கவேண்டும். மணல் விஷயத்தில் இது நிறைவேறும் என்று நம்புகிறேன்.

இதுமாதிரியான விஷயங்களில் அரசும், ஆட்சியாளர்களும் அவ்வளவு ஈடுபாடு காட்டமாட்டார்கள். ஆனால், மணல் விஷயத்தைப் பொறுத்தளவில் 6 மாதத்துக்கு பதிலாக கொஞ்சம் கால நீட்டிப்பை அரசு கேட்கலாம்...’’ என்று கனகராஜ் முடிக்க, எம்.சாண்ட் பற்றி சென்னை ஐ.ஐ.டி.யின் சிவில் எஞ்சினியரிங் துறையின் பேராசிரியர் மனு சந்தானத்திடம் கேட்டோம். ‘‘‘எம்.சாண்ட்’ என்று சொல்வதே பிழையானது. உண்மையில் கேரளாவில் உள்ள ‘எம்.சாண்ட்’ என்ற ஒரு கம்பெனி இந்த ஜல்லி மணலை தயாரித்து விற்பனை செய்கிறது. அந்தக் கம்பெனியின் பெயரே அந்த மணலுக்கும் ஒட்டிக்கொண்டது. நிஜத்தில் அது ‘க்ரஷ்ட் ஸ்டோன் சாண்ட்’.

கட்டடங்களுக்குப் பயன்படும் ஜல்லியைப் பார்த்திருப்போம். ஜல்லி 5 மி.மீட்டரிலிருந்து 20 மி.மீட்டர் வரை கட்டுமானத் தேவைக்கேற்ப உடைக்கப்படுகிறது. அதேமாதிரி பாறையை ஆற்று மணல் அளவுக்கு உடைத்துக் கிடைப்பதுதான் ‘எம்.சாண்ட்’. ஆற்று மணலுக்கு சமமான தரத்துடன் அது இருக்கவேண்டுமென்றால் அதை உடைப்பதற்கு பிரத்யேகமான இயந்திரங்கள் தேவைப்படும். அந்த இயந்திரத்தை ‘வி.எஸ்.ஐ.’ என்பார்கள். சாதாரண இயந்திரங்களாலும் ஒருகாலத்தில் உடைத்தார்கள். அது ஆற்றுமணலுக்கு சமமாக இருக்காததுடன் கட்டுமானத்துக்கும் கேடு விளைவித்தது.

‘வி.எஸ்.ஐ.’ மூலம் உடைக்கப்பட்ட மணலானது ஆற்றுமணலுக்கு நெருக்கமாக இருக்கும். மணலை உடைத்தபின் கொஞ்சம் தண்ணீர்விட்டு கழுவவேண்டும். காரணம், அந்த மணலில் தூசுகள் இருக்கும். தூசுடன் கட்டுமானம் செய்தால் அது தண்ணீரை உறிஞ்சிவிடும். மழையில் ஈரமாகக்கூடிய அபாயம் உண்டாகும். ‘வி.எஸ்.ஐ’ மணலைவிட சாதாரண இயந்திரங்கள் மூலம் உடைக்கப்படும் மணலில் தூசு அதிகமாக இருக்கும். அது கழுவினாலும் போகாது. அதனால் கட்டுமானத்துக்கு பெரும் அபாயம்...’’ என்று மனு சந்தானம் விளக்கியதும், ‘எம்.சாண்டை அடித்தளம், கான்கிரீட் போட மட்டுமே பயன்படுத்தமுடியும் என்ற ஒரு கருத்து நிலவுகிறதே...’ என்றோம்.

‘‘‘ஐ.எஸ் 383’ என்ற ஒரு சோதனை உண்டு. இதில் ‘வி.எஸ்.ஐ.’ மணலை வைத்து சோதித்தால் நிச்சயம் அது ஆற்றுமணலுக்கான பதிலீடாக இருப்பதைக் கண்டுகொள்ளலாம். இந்த சோதனையில் அளவு வாரியாக ஜலிப்பது, அடர்த்தி, தண்ணீரை உறிஞ்சுகிறதா என்றெல்லாம் பரிசோதிக்க முடியும். இந்தப் பரிசோதனையை சில தனியார்களும் செய்து கொடுக்கிறார்கள். இந்த சோதனையில் வெற்றிபெற்ற எம்.சாண்டை அடித்தளம், கான்கிரீட் மட்டுமில்லாமல் பூச்சு வேலைகளுக்கும் பயன்படுத்தலாம்.

பொதுமக்கள் இந்த மணலை எப்படி சோதிக்கலாம் என்றால் ‘வி.எஸ்.ஐ.’ மணலை ஒரு கைப்பிடியாகப் பிடித்தால் தூசுகள் கொஞ்சமாகத்தான் கையிலிருந்து வெளியேறும். சாதாரண இயந்திரத்தில் உடைக்கப்பட்ட எம்.சாண்டில் மணலே கையில் நிற்காது. மேலும் சந்தேகம் வந்தால் உரிய பரிசோதனைக்கூடங்களில் கொடுத்து மணலை சோதித்துக்கொள்வதே நலம்...’’ என்கிறார் மனு சந்தானம்.  

- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்.