1916 முதல் சுய தொழில் காக்கும் இந்திய அமைப்பு!



அது வெள்ளையர்கள் நம்மை ஆண்டுகொண்டிருந்த காலம். ‘ம்ம் என்றால் வரி ஏனென்றால் தண்டால்’ என வரிக்கு மேல் வரியாக சுமத்தி இந்திய தொழில்களின் முதுகெலும்பை உடைத்துக்கொண்டிருந்த காலம். இங்கிலாந்தில் இருந்து வந்து குவிந்த பொருட்கள் இந்திய சந்தையை ஆக்ரமித்திருக்க, இந்த தேசத்தின் பல்லாயிரம் ஆண்டுகால தொழில்களான நெசவும் பிற தொழில்களும் தம் இறுதி மூச்சை இறுகிப்பிடித்தபடி திணறிக் கொண்டிருந்தன. சுதேசிப் பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்தவும், சுதேசி பொருட்கள் உற்பத்தியாளர்களின் வாழ்வைக் காக்கவும் ஓர் அமைப்பு தேவையாக இருந்தது.

இந்த உயரிய நோக்கத்துக் காக உருவாக்கப்பட்டதுதான் ‘பெங்கால் ஹோம் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன்’. ஓவியர் ககனேந்திரநாத் தாகூரை முதல் கவுரவ செயலாளராகக் கொண்டு 1916ம் ஆண்டு அன்றைய கல்கத்தாவில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, விரைவில் நூற்றாண்டு காணப் போகிறது. உறுதி குலையாமல் தன் பாதையில் விடாப்பிடியாகப் பயணித்து எண்ணற்ற மக்களின் வாழ்வில் ஒளியேற்றிக் கொண்டிருக்கிறது. 

* இங்கிலாந்தின் வரி தந்திரம்!
இங்கிலாந்தின் லங்காஷையரிலிருந்து இந்தியாவில் குவிந்த அந்நிய துணிகளின் அளவு அன்றைய தேவையில் 70 சதவிகிதம். இந்தியாவின் சுயசார்பான தொழில்களைப் புல் பூண்டின்றி நசுக்க ஆங்கிலேயர்கள் வரிகளையே ஆயுதமாக்கினர். இந்தியப் பொருட்களுக்கு 70-80% வரியும்; தங்களுடைய துணிகளை இறக்குமதி செய்ய 2.5% வரியும் விதித்தனர்.

உள்நாட்டு உற்பத்தியை மொத்தமாக முடக்கி திட்டமிட்டு பஞ்சத்தையும் ஏற்படுத்தினர். முதல் உலகப் போரின் (1914 - 1918) கால கட்டத்தில் இந்தியாவிலிருந்த கனிமங்களான மைக்கா, டங்க்ஸ்டன், வெடியுப்பு மற்றும் மரம், துணி ஆகியவை இங்கிலாந்துக்கு ஏராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டன. அச்சமயத்தில் இந்தியாவில் செயல்பட்டவைகளில் நூற்பு மில்களே  அதிகம்.

* கலைஞர்களுக்கு ஆக்சிஜன்!
போருக்குப் பின், இந்தியாவில் 25 சதவிகிதம் தறிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. மொராக்கோ யாத்ரீகர் இபன் பதூதா, வங்காளத்தில் நெய்த மஸ்லின் துணிகளின் பெருமையைத் தன் குறிப்பில் எழுதியுள்ளார். இந்த அளவு தரமான துணி என்றால் ஆங்கிலேயர்கள் அந்த பிஸினஸை சும்மா விடுவார்களா என்ன? பிரிட்டிஷ் அரசு, இந்தியக் கலைஞர்களின் பொருட்களை சந்தையில் விற்க முடியாதபடி வரியை ஏற்றி, தேங்கிய சரக்குகளை மலிவு விலைக்கு வாங்கிக் கொள்ளை லாபம் சம்பாதித்தன.

அதே நேரத்தில் முதலாளிகள் லாபம் பெறக் காரணமான ஏழை நெசவாளர்கள் வறுமை, பட்டினியால் மெல்ல இறந்துகொண்டிருந்தனர். இவர்களைக் காக்க கொல்கத்தாவைச் சேர்ந்த ககனேந்திரநாத் தாகூர், இவரது சகோதரரான அபா நிந்த்ராநாத் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்த பிஜாய் சந்திர மாஹ்தப் ஆகியோர் கொண்ட குழு முடிவு செய்தது. ‘பெங்கால் அசோசியேஷ’னை உருவாக்கியது.

‘‘சேலையில் வாத்து உள்ளிட்ட பேட்டர்ன் டிசைன்களை முதன் முதலில் பிரிண்ட் செய்து வங்காள கவர்னரின் மனைவி கார்மிசாயலை வியக்கவைத்தார் தாகூர். விரைவிலேயே இவரின் டிசைன் அனைவரது மனங்களையும் கொள்ளையடித்துவிட்டது...’’ என்கிறார் பர்த்வான் அரசகுடும்பத்தைச் சேர்ந்த, சங்கத்தின் உறுப்பினரான நந்தினி மாஹ்தப்.

* மெருகேறும் வாழ்வு!
அன்றிலிருந்து இன்றுவரை பெங்கால் இண்டஸ்ட்ரீஸ் அமைப்பின் முக்கியப் பணி, அந்நியப்பொருட்களைத் தவிர்த்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமே. கிராமத்தில் உள்ள கலைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களின் படைப்புகளை விற்க உதவியது இவ்வமைப்பு. தாகூர் சகோதரர்கள் கலைஞர்களின் படைப்புகளில் அதீத சிரத்தை, நேர்த்தியைப் புகுத்தி எலைட் வாடிக்கையாளர்களின் கவனத்தையும் மேக்னட்டாக ஈர்த்து விற்பனையைப் பெருக்கினர். இப்போது, ராஷ்பெகாரி அவென்யூவில் செயல்பட்டுவரும் பெங்கால் அசோசியேஷன், Banglanatak.com என்ற அமைப்புடன் இணைந்து தொன்மையான நாடகக்கலை வடிவங்களை மீட்டெடுக்க முயற்சிக்கிறது.

அதோடு, ‘படசித்ரா’ என்ற பிராண்டில் டீஷர்ட்டுகள், ட்ரவுசர்கள், மஃப்ளர்கள், குஷன் கவர்களைத் தயாரிக்கின்றனர். ரோஷனாரா என்ற ரேயான் - பருத்தி இழையில் போர்ச்சுகீசிய வேலைப்பாடுகள் கொண்ட புடவைகள் சூப்பர் ஸ்பெஷல். ‘‘எங்களுடைய கலைஞர்களுக்கு போர்ச்சுகீசிய கட்வொர்க் வேலைப்பாடுகளை கற்றுத் தருகிறோம்...’’ என்கிறார் நந்தினி. நெசவுத் தொழிலுக்கு மட்டுமல்ல பாத்திரங்கள், கொள்கலன்கள் போன்ற கைவினைப் பொருட்கள் உற்பத்திக்கும் ஆதரவாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. தொடரட்டும் இந்த அறப்பணி!                  

- ச.அன்பரசு

ககனேந்திரநாத் தாகூர்!
மேற்கு வங்காளத்தின் இளவரசரான துவர்க்கநாத் தாகூரின் கொள்ளுப்பேரன் ககன் (1867 - 1938). அரச வம்சத்து வாரிசான ககனேந்திரநாத் தாகூர் மிகச்சிறந்த ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட். அபனிந்திரநாத் மற்றும் ககன் வங்காள கலைப் பள்ளியில் படித்த முக்கியப் படைப்பாளிகள். வாட்டர் கலர் ஓவியரான ஹரி நாராயண் பந்தோபாத்யாயவிடம் ஓவிய அடிப்படைகளைக் கற்றவர், பின்னாளில் தனது சகோதரருடன் இணைந்து Indian Society of Oriental Art அமைப்பைத் தொடங்கினார். ‘Rupam’ (1906 - 1910) கலை இதழைத் தொடங்கி நடத்தினார்.

நாடகம், குழந்தைகள் இலக்கியம் ஆகியவற்றில் படைப்புகளைத் தந்த ககன், ரவீந்திரநாத் தாகூரின் ‘ஜீவன்ஸ்மிருதி’ (1912) நூலைத் தனது பாணியில் ஓவியங்களாக வரைந்தது முக்கிய முயற்சி. க்யூபிச முறைகளில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்ட இவர் இன்றும் நினைவுகூரப்படும் ஆளுமை!

பாரம்பரிய வேர்!
BHIA கடை முதலில் ஹாக் மார்க்கெட்டில் அமைக்கப்பட்டது. சந்தைக்கு வரும் மக்கள் கடைக்கு வருவார்கள் எனக்கருதிய ககன்தாகூர் ஐடியா இது. சுதந்திரத்திற்குப் பிறகு சௌரிங்கி சாலைக்கு கடை இடம் பெயர்ந்தது. பிறகு, 10 ஆண்டு காலம் காமக் சாலையில் பெரிய கட்டடத்தில் செயல்பட்ட இக்கடை இப்போது, ராஷ்பெகாரி அவென்யூவில் மாடர்ன் அழகில் அமைக்கப்பட்டுள்ளது.