ஜல்லிக்கட்டின் உள் அரசியலை இந்தப் படம் பேசுது!



‘மதுர வீரன்’ படத்தின் இரண்டு நிமிட டீஸரே அவ்வளவு வசீகரிக்கிறது. பி.ஜி.முத்தையா இயக்கியிருக்கும் இப்படத்துக்காக காத்திருக்கின்றன பல கண்கள். ‘‘‘கேப்டன்’ மகன் சண்முக பாண்டியன் இன்னும் பன்மடங்கு திறமையோட களம் இறங்கியிருக்கிற படம். கிராமத்தின் அழகான பதிவு. ஒரு ஸ்கிரிப்ட் பிடிபடும்போது, அதுவே நம்மளை உற்சாகமா இறக்கிவிட்டுரும் இ்லையா? அப்படி இறக்கிவிட்ட ஸ்கிரிப்ட் இது.

ஜல்லிக்கட்டின் உள் அரசியலையும் பேசுது படம். ஏதோ நாலைந்து மாவட்டத்தின் விளையாட்டுத்தான் ஜல்லிக்கட்டுனு கருதக்கூடாது. அதுக்கு மிகவும் கவனம் கொடுத்து, கொஞ்ச நாளைக்கு முன்னால் நடந்த போராட்டம் எல்லாருக்கும் ஞாபகத்தில் இருக்கும். ஆனால், அதற்கும் மேலானது அதன் பாரம்பரியம். ஆதி தமிழகத்தின் பெரும் ரசனை விளையாட்டு. அந்த ஜல்லிக்கட்டோடு ஒரு வாழ்க்கையை இணைச்சு சொல்லியிருக்கோம். தனக்கு சினிமா கொடுத்த இடத்தை நகாசு பண்ணி முன்னேறிக்கிட்டு இருக்கிற பாங்கு சண்முகபாண்டியனுக்கு அருமையா கை வருது...’’  துடிப்போடு பேசுகிறார் அறிமுக இயக்குநர் பி.ஜி.முத்தையா. முக்கியமான படங்களின் ஒளிப்பதிவாளராக இருந்து முதல் தடவையாக இயக்குநராக ப்ரமோஷன் ஆகியிருக்கிறார்.

‘மதுர வீரன்’ - ரத்னச் சுருக்க கதை சொல்லுங்களேன்...
ஹீரோ வெளிநாட்டிலிருந்து கிராமத்திற்குத் திரும்புகிறார். அவருக்கு எல்லாமே இங்கு புதிதாக இருக்கிறது. ஒவ்வொரு பழக்க வழக்கத்தையும் தெரிந்துகொள்ள விரும்புகிறார். நாலு பக்கம் படித்தால் வராத உணர்வை, நாலு பேர் மேடை போட்டுப் பேசினால் புரியாத விஷயத்தை, சினிமா மூலம் சொன்னால் மனதில் பதியும்.

என்னைப் பொறுத்தவரை சினிமா மக்களின் வாழ்க்கையை நினைச்சுப் பார்க்கிற ஒரு விஷயம். வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருந்திடக்கூடாது. எங்கேயோ ஓர் ஓரத்தில் உங்களின் இதயத்தில் ஒட்டணும். கொஞ்சம் கவலை மறந்து சிரிக்கணும். அட, கிராமத்தில் இவ்வளவு அருமையான வாழ்க்கை, உறவுகள், கஷ்ட நஷ்டம், பாசம், பகிர்வு எல்லாம் இருக்குனு தெரியணும். அப்படி ஒரு படம் செய்ய நினைச்சபோது மனதில் வந்தது ‘மதுர வீரன்’. இந்த ஹீரோ எதற்காக அயல்நாட்டிலிருந்து புறப்பட்டு வந்தார் என்கிற இன்னொரு கதையும் இதில் அடங்கியிருக்கு.

சண்முகபாண்டியன் எப்படி தேர்வானார்?
25 வயதுக்குள்ள இருக்கணும். நல்ல உயரத்தில், பார்க்க மாஸா வேணும். ஆஜானுபாகுன்னு சொன்னா சரின்னு சொல்லணும். நம்ம திராவிட கலர்... அதாங்க கறுப்புக் கலர் வேணும். விஜய் சேதுபதியை கொஞ்சம் சின்ன வயசுல பார்த்த மாதிரி இருக்கணும், மதுரை பேச்சு தெரிந்தால் உத்தமம். இப்படியெல்லாம் யோசித்தபோது எங்களுக்கு ஞாபகத்திற்கு வந்தது ஒன் அண்ட் ஒன்லி சண்முகபாண்டியன். அவர் படத்தில அப்பாவைப் பத்திப் பேசினா அது கேப்டனுக்கும் சில சமயம் பொருந்தி வருது. ரொம்ப ரியல் ஃபீல் வந்தது.

அவரோட முதல் படம் சரியாகப் போகலை. அதன் காரண காரியங்களுக்குள் போக வேண்டாம். அவருக்கு எல்லாமே புரியுது. அவர்கிட்ட என்ன ப்ளஸ், என்ன மைனஸ்னு அறிந்து எல்லாத்தையும் சரி செய்தோம். காமெடி அவருக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆக்‌ஷனில் அப்பா பிள்ளையாக்கும்னு அனல் பறந்தார். தமிழ் சினிமா நடிகர்களில் மகா உயரமானவர் சண்முகபாண்டியன்தான். 6.3. சத்யராஜ் சார்கூட அவருக்கும் உயரம் குறைவுதான். ரொமான்ஸ் பண்ணும்போது வெட்கம் தெரிந்தது. போகப்போக எல்லாம் சரியாக வந்திடும். ஆனால், அந்த கம்பீரமும், வெள்ளைச் சிரிப்பும், சீறிப் பாய்வதும், வெள்ளை வேட்டி சட்டையில் வர்றதும் ரொம்ப யதார்த்தம். ஏங்க... அவருக்கெல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க ‘பைட்’ வரணும்!

சமுத்திரக்கனிக்கு பெரிய இடமிருக்கு...
‘மதுர வீரன்’கூட அவர்தான். சமுத்திரக்கனி அண்ணனுக்கு இந்த உலகம் முழுக்க இருக்கும் நல்ல விஷயங்கள் மட்டும்தான் கண்ல படும். மனசுல தங்கம். ‘இது முடியாது, இது சரியில்லை...’னு ஒரு வார்த்தை கூட சொல்லமாட்டார். அந்த பாஸிட்டிவ் எனர்ஜியை ஷூட்டிங் முழுக்கவும் பார்த்தேன். அவர்தான் சண்முகபாண்டியனுக்கு அப்பா. சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி, சண்முகபாண்டியன் இப்படி யாருக்கும் நான் நடிப்பு சொல்லிக் கொடுக்கலை. டைரக்டர் பாலா நுணுக்கி நுணுக்கிச் சொல்லிக் கொடுப்பாரே அப்படிச் சொல்லிக் கொடுக்கலை.

இதுதான் காட்சி. இந்த உணர்வு வேணும். இப்படியான உணர்ச்சி அவசியம்னு விளக்கிடுவேன். அப்படியே அவ்வளவு யதார்த்தமாக வந்து விழுந்தது. சண்முகபாண்டியன் உயரத்திற்கு ஹீரோயின் பிடிப்பதுதான் கஷ்டம். நிறைய பேரைப் பார்த்து கடைசில கேரளாவில்தான் அந்தக் கிளி இருந்தது. அந்தப் பொண்ணுக்கு ஒரிஜனல் பெயரே ‘மீனாட்சி’தான். அந்தப் பெயரையே வைச்சிட்டோம். நளினம், அழகு, நிறைந்த பெண்மைன்னு அழகா வந்து நின்னு நடிச்சிருக்காங்க. சமுத்திரக்கனிதான் படத்தோட தூண். அதில் சண்முகபாண்டியன் எழுந்து நிற்கிறார்.

பாடல்கள் நல்லா ஹிட்டாயிருக்கு...
சந்தோஷ் தயாநிதிதான் மியூசிக். முதல் தடவையாக கிராமத்து எழிலில் செய்திருக்கார். ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்கூலிலிருந்து வந்தவர். மொத்தமும் நல்ல பாடல்களால் நிறைஞ்சிருக்கு. யுகபாரதி மாதிரி உணர்ந்து எழுதுகிற கவிஞனின் பாடல் வரிகளும், நல்ல மனநிலையில் இருக்கிற இசையமைப்பாளனும் ஒரே நேர்கோட்டில் இணைஞ்சாதான் அந்தப் பாடல் எல்லோருக்கும் பிடிக்கும். அப்படிப் பார்த்தால் அந்த ஆசீர்வாதம் எங்களுக்கு இருந்தது.

பெரும்பாலும் நாட்டுப்புறப் பாடகர்களே பாடியிருக்காங்க. அதனால் நிஜமும், யதார்த்தமும் நிலைக்கும் என்பதே காரணம். மறைந்த கோட்டைச்சாமி, ஜெயமூர்த்தி காத்திரமான குரலில் பின்னியிருக்காங்க. கேப்டனுக்கு பாடல்களும், டிரைலரும் காண்பிச்சோம். ‘ரொம்ப நல்லா வந்திருக்கு’ங்கிறது அவர் கண்ணில் தெரிஞ்சது. ஒளிப்பதிவு நானேதான். என் மனசில் இருக்கிறதை நானே முதல் ரசிகனா கொண்டுவர முடிந்தது. மக்களும் இதை வழி மொழிந்தால் எனக்கு மகிழ்ச்சி.

- நா.கதிர்வேலன்