ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 58

சின்னச் சின்ன சமரசங்கள் செய்தாவது வாழ்வை நடத்தும் கட்டாயத்திலிருக்கும் நமக்கு, இறுதிவரை ஒருவர் சமரசமில்லாமல் வைராக்கியத்தோடு வாழ்ந்திருக்கிறார் என்பதைக் கேட்க ஆச்சர்யம் ஏற்படுகிறது. ‘அப்படியெல்லாம் ஒருவர் வாழ்வது சாத்தியமே இல்லை’யென விவாதிக்கும் அதேதருணத்தில், அறம் சார்ந்த நம்முடைய மதிப்பீடுகள் எந்த அளவுக்கு மாறிப்போயிருக்கின்றன என்பதையும் யூகிக்க முடிகிறது.

‘அறன்வழிப்பட்டதே வாழ்வென்னும்’ சிந்தனையிலிருந்து ஒரு சமூகம் விடுபடுவது அபாயகரமானது. ஆனால், தன் மொத்த வாழ்வையும் அறத்துடனும் அர்த்தத்துடனும் அமைத்துக்கொண்டவர் மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி. மூத்த பத்திரிகையாளர் என்னும் பதத்தில் அவர் அறியப்பட்டாலும் அதுமட்டுமே அவருடைய அடையாளம் இல்லை. நான் சொன்ன அறம் சார்ந்த வைராக்கியத்தின் அடையாளங்களில் அவரும் ஒருவர்.

திருவாரூர் இரா.தியாகராஜன் என்னும் இயற்பெயரைக் கொண்ட சின்னக்குத்தூசியின் கருத்துகளிலும் எழுத்துகளிலும் முரண்படுகிறவர்கள்கூட, அவருடைய வாழ்வியல் நெறிகளில் சந்தேகம் எழுப்பியதில்லை. ‘தவ வாழ்வு’ என்று சொல்லத்தக்க வாழ்வே அவருடையது. பத்திரிகைத்துறையில் காலூன்றும் கனவுகளோடு சென்னை வரும் எவரையும் ஆதரித்து அரவணைத்து அவர்களின் உயர்வுக்கு உதவக்கூடிய ஸ்தானத்தில் அவர் இருந்திருக்கிறார். திராவிட இயக்கக் கொள்கைகள் மீது அவர் கொண்டிருந்த பற்றுறுதி பாசாங்கோ பம்மாத்தோ அற்றவை.

பிராமண சமூகத்தைச்  சேர்ந்த ஒருவர், திராவிட இயக்கக் கொள்கைகளைத் தூக்கிப்பிடித்தார் என்று சொல்லி அவருடைய மாண்புகளைக் குறைப்பதில் எனக்கு விருப்பமில்லை. அவர் எந்த சமூகத்தில் பிறந்திருந்தாலும் இதே பற்றையும் இதே உறுதியையும் கொண்டிருப்பார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஐம்பதுகளில் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக இயங்கிய மணலூர் மணியம்மாளுடன் இணைந்து, ஊர் ஊராக சோவியத் ரஷ்யாவின் சிவப்புப் புத்தகங்களை மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் தலையில் சுமந்தபடி விற்கத் தொடங்கியதில் அவர் வாழ்வு துவங்கியிருக்கிறது. அதன்பின் திராவிட இயக்கக் கொள்கைகளிலும் அவற்றின் தேவைகளிலும் ஈர்க்கப்பட்டிருக்கிறார்.

கள நிலவரத்தைக் கருத்திற்கொண்டும் இடைவிடாத வாசிப்பிலிருந்தும் அவர் பெற்றுக்கொண்ட அனைத்தையும் பத்திரிகை வாயிலாகப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ள எழுத்தைத் துணையாகக் கொண்டிருக்கிறார். ஒருவிதத்தில் அவருமே திராவிட இயக்கப் பாசறைப் போராளியாகத் தன்னை வரித்துக்கொள்ள காலம் கட்டாயப்படுத்தியிருக்கிறது. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் அன்று நிகழ்ந்து வந்த சாதிய வன்கொடுமைக்கு எதிராக முழக்கமிடத் துணிந்த அவர், முழுதாகத் தன் வாழ்வையே அவற்றுக்கு அர்ப்பணிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

பொதுவாழ்வில் ஈடுபாடுடைய தலைவர்களில் ஒருசிலர் திருமண வாழ்வைத் துறந்திருக்கிறார்கள். ஆனால், பத்திரிகைப் பணியில் பொதுவாழ்வை மேற்கொண்ட சின்னக்குத்தூசியும் திருமணத்தைத் தவிர்க்க எண்ணியது எதன் உந்துதலால் என்பதை அவர் எங்கேயும் தெரிவிக்கவில்லை. ஒருவருக்கு ஒரு கொள்கைமீது அளவுகடந்த பற்றில்லாமல் சொந்த வாழ்வைச் சுருக்கிக்கொள்ள மனம் வராது. மிகமிக வசதி குறைந்த திருவல்லிக்கேணி வல்லப அக்ரஹாரத்தில் அமைந்திருந்த மேஸ்திரி மேன்ஷனில்தான், அவருடைய கடைசிக் காலங்கள் கழிந்தன.

கொஞ்சகாலம் ‘பாரடைஸ் மேன்ஷனி’ல் இருந்திருக்கிறார். அவரை இழந்த அம்மேன்ஷன் இப்போது ‘பாரடைஸ் லாஸ்’ஸாக காட்சியளிக்கிறது. அவரையும் அவர் பத்திரிகைகளில் எழுதி வந்த அரசியல் விமர்சனக் கட்டுரைகளையும் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறேன். ஆதாரத்துடன் கட்டுரைகளை அணுகும் அவருடைய வாதப் பிரதிவாத முறை வேறு எவருக்கும் வாய்க்காதது. காலங்களையும் சம்பவங்களையும் மிகச் சரியாகக் குறிப்பிட்டு அவர் எழுதியவை, திராவிட இயக்கங்கள் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள்.

ஆயிரக்கணக்கில் அவர் எழுதிய கட்டுரைகளில் ஒருசிலவற்றை ‘நக்கீரன்’ தொகுத்து வெளியிட்டிருக்கிறது. ‘முத்துச்சரம்’, ‘பவளமாலை’, ‘புதையல்’, ‘கருவூலம்’, ‘பெட்டகம்’, ‘களஞ்சியம்’ முதலிய தலைப்புகளில் பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. ‘புதுமைப்பித்தன் பதிப்பகம்’ வெளியிட்ட ‘முத்தாரம்’ நூலிலும் பல முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

‘மாதவி’, ‘தென்றல்’, ‘முரசொலி’, ‘நவசக்தி’, ‘அலை ஓசை’, ‘எதிரொலி’, ‘நக்கீரன்’, ‘நாத்திகம்’, ‘ஜூனியர் விகடன்’ ஆகிய பத்திரிகைகளில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. பத்திரிகை எதுவாயினும் அவருடைய பணியென்பது திராவிட இயக்கச் சார்பையே கொண்டிருந்தது. ஓர் எழுத்தாளரோ அல்லது ஓர் அரசியல்வாதியோ, சம்பந்தப்பட்ட விஷயத்தில் தனக்குள்ள கருத்தைச் சார்பு நிலையிலிருந்து தெரிவிக்கலாம். ஆனால், ஒரு பத்திரிகையாளர் அப்படியான சார்புடன் செயல்பட வாய்ப்பில்லை. ஏனெனில், பத்திரிகையாளர் என்பவர் இரண்டு பக்கங்களையும் பார்க்கவேண்டிய கடப்பாடு உடையவர்.

நடுநிலை என்னும் சொல்லுக்கு நியாயமும் நீதியும் செய்யக்கூடிய இடத்தில் அவர் இருக்கிறார். அதுமட்டுமல்ல, அவர் அந்நிலையிலிருந்து தவறுவது முறையோ மரபோ அல்ல. இருந்தாலும், சின்னக்குத்தூசி திராவிட இயக்கக் கருத்து நிலையிலிருந்தே தம்முடைய அரசியல் விமர்சனங்களை அளித்துவந்தார். “யாரும் நடுநிலையாக இருக்க முடியாது, இருக்கவும் கூடாது...” என்பதே அவர் வாதமாயிருந்தது. இனத்தையும் மொழியையும் பிரதானப்படுத்தும் பல பத்திரிகையாளர்களுக்கு அவரே ஆதர்சமாக விளங்கியிருக்கிறார்.

நடுநிலை என்று சொல்லிக்கொண்டு, அவரவர் தங்கள் அபிப்ராயங்களை கருத்துகளாக அளித்துவந்த காலத்தில் ‘‘என் கருத்துகள் சார்புடையனவே...’’ எனச் சொல்லும் தைரியம் அவருக்கிருந்தது. அரசியல் நிலைப்பாடுகளை ஒட்டி எடுக்கப்படும் முடிவுகள் நடுநிலை சார்ந்ததாக இருக்க முடியுமா? என்னும் கேள்விக்கு, “அரசியல் விமர்சனங்களில் நடுநிலை என்று ஒன்று இருப்பதாக நான் நம்பவில்லை. நான் இன்ன கட்சிக்காரன் என்று பட்டப்பகலாக வாசகர்களுக்குத் தெரியும் வகையில் இருப்பதால் எனது எழுத்துகளைப் படிக்கும் வாசகர்கள் எவரும் ஏமாற வாய்ப்பே இல்லை...” என்றிருக்கிறார்.

தவிர, “பொதுப்படையாக எல்லாரும் அயோக்கியன் என்று எழுதுவதுதான் நடுநிலை என்றால் அதன் உண்மைத்தன்மை ஆராயப்பட வேண்டியது...” எனவும் சொல்லியிருக்கிறார். “நான் திராவிட இயக்கத்தின் அனுதாபி, கலைஞரை ஆதரிப்பவன் என்ற உணர்வோடுதான் என்னுடைய கட்டுரைகள் படிக்கப்படுகின்றன. அப்படியிருக்கையில், பிறருடைய நம்பிக்கைகளைப் பெறுவதற்காக நடுநிலை என்னும் முகமூடியை அணிந்துகொள்ள வேண்டியதில்லை...” எனவும் அறிவித்திருக்கிறார்.

தீர்க்கமும் தெளிவும் மிக்க சின்னக்குத்தூசியின் பங்களிப்பைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் திராவிட இயக்கங்களின் வெற்றி இல்லை. இன்றும் திராவிட இயக்கம் என்னும் பதாகையில் இயங்கிவரும் அ.தி.மு.க.வையும் தே.மு.தி.க.வையும் ஆதரித்து சின்னக்குத்தூசி ஒரு கட்டுரைகூட எழுதியதில்லை. அதைவிட, அவ்வியக்கங்களை அவர் திராவிட இயக்கங்களின் பட்டியலிலிருந்து தவிர்த்தே வந்திருக்கிறார். மதவாதத்திற்கு எதிராகவும் சமூகநீதிக்கு ஆதரவாகவும் செயல்படுபவையே திராவிட இயக்கங்கள் என்னும் தெளிவை அவர் எங்கேயும் விட்டுக்கொடுத்ததில்லை.

சமயத்தில் திராவிட இயக்கங்களே எதார்த்த சூழலுக்கேற்ப தங்கள் முடிவுகளை மாற்றிக்கொண்டு தேர்தலில் எதிரணியுடன் கூட்டணி யமைத்தபோதும்கூட, அவர், தான் கொண்டிருந்த திராவிடக் கருத்தியலை மாற்றிக்கொள்ள முனைந்ததில்லை. திராவிட இயக்கங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. சொல்லப்போனால், எது ஒன்றையும் விமர்சிக்கக் கற்றுக்கொடுத்ததே அவ்வியக்கங்கள்தான் எனும்போது, அவற்றை விமர்சிப்பதில் எந்தத் தவறும் இல்லை. இருந்தாலும், திராவிட இயக்கத்தின் தேவையை உத்தேசித்தே அவருடைய கட்டுரைகள் எழுதப்பட்டன. அரசியல் களத்தில் மாற்றை முன்வைத்த இயக்கங்களுக்கு, திராவிட இயக்கப் பார்வையிலிருந்து பதிலளித்த அவருடைய பணி குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக திராவிட இயக்கங்கள் எதையுமே செய்யவில்லை என்னும் கூக்குரல் இப்போது எழுந்திருக்கிறது. ‘கழகங்கள் இல்லாத தமிழகமே தங்கள் கனவு’ என பாரதிய ஜனதா கட்சியும் ஒருசில தமிழ்த் தேசிய அமைப்புகளும் முழங்கி வருகின்றன. திராவிட இயக்கங்கள் தாங்கள் செய்த சாதனைகளைக்கூட பொது சமூகத்திற்குச் சொல்லாததன் விளைவே இப்படியான விமர்சனங்கள் எழக் காரணம். இந்த இடத்தில்தான் சின்னக்குத்தூசியின் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

உண்மையில், திராவிட இயக்கங்களைப் புறக்கணிக்கக்கூடிய சக்தியை, அவற்றை எதிர்க்கும் எந்த இயக்கமும் பெறவில்லை. தங்களுடைய அரசியல் செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ள அதையும் இதையும் முழக்கமாக வைக்கிறார்களே தவிர, அவர்களால் திராவிட இயக்கத்தின் வேரை அசைக்க முடியும் என்று நம்புவதற்கில்லை. தங்கள் பலத்தை உணராத கட்சிகள் திராவிட இயக்கங்களுக்கு எதிராக அணிதிரள்வதன் பின்னாலுள்ள அரசியல் நமக்கு விளங்காமலில்லை. முன் எப்போதையும்விட மதச் சார்புள்ள அமைப்புகள் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில் அவற்றின் ஆட்டத்தை நிறுத்தவும் கால்களை உடைக்கவும் திராவிட இயக்கத்துடன் இடதுசாரிகள் கைகோர்த்திருப்பது நல்ல அறிகுறி.

எது? எங்கே? எப்போது நடந்தது? என்பதை யார் வேண்டுமானாலும் சொல்லிவிடலாம். ஆனால், நடந்த அச்சம்பவம் ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? என்பதைச் சொல்வதற்கு சின்னக்குத்தூசி போன்றோர் தேவைப்படுகிறார்கள். ஐம்பதாண்டுகாலப்பத்திரிகை வாழ்வில், அவர் எத்தனையோ சம்பவங்களுக்குப் பின்னாலிருந்த அரசியலைத் தெரிந்து வைத்திருந்தார். திராவிட இயக்க கருத்தியலுக்கு எதிர்நிலையில் இருப்பவர்களும் அவர்மீது வைத்திருந்த அன்பும் மரியாதையும் அளப்பரியன.

‘இருபதாம் நூற்றாண்டு நிகழ்வுகளின் மனிதக் கணினி’என்று அவர் புகழப்பட்டிருக்கிறார். ‘நடமாடும் தகவல் களஞ்சியம்’ என்றும், ‘அரசியல் தட்பவெப்பத்தைக் கணிக்கும் அளவுமானி’ என்றும் அவரைப் பலரும் வியந்திருக்கிறார்கள். தன்னை உணர்ந்திருந்த சின்னக்குத்தூசிக்கு, தான் என்னவாக பார்க்கப்படுகிறோம் என்பதை அறிந்துகொள்ளும் ஆவலோ அக்கறையோ துளியும் இருந்ததில்லை. கடனே என்று சமூகப்பணியைக் கருதாமல், கடமையாகத் தன் காரியங்களைச் செய்துவந்த அவருடைய அறிமுகத்தில் எத்தனையோ இளம் குருத்துகள் துளிர்த்திருக்கின்றன.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்