காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 39

கொலம்பியாவில் இருந்து பனாமாவுக்கு பாப்லோ குடும்பத்தார் தப்பிச் சென்ற ஹெலிகாப்டர் நடுவானத்தில் முரண்டு பிடித்தது. கார் பிரேக் பிடிக்கவில்லையென்றால் பரவாயில்லை. ஏதாவது மரத்தில் மோதி உயிர் தப்பலாம். ஹெலிகாப்டரில் பிரச்னை என்றால் யார்தான் என்ன செய்ய முடியும்? உள்ளே இருந்தவர்கள் பரலோகத்தில் இருக்கும் பிதாவை வேண்டத் தொடங்கினார்கள். “எங்களை இவ்வளவு சீக்கிரமாக பரலோகத்துக்கு அழைத்துக் கொள்ளாதே. இன்னும் கொஞ்சநாள் இங்கேயே இருக்கிறோம். ஆமென்...”குறிப்பாக கர்ப்பவதியாக இருந்த பாப்லோவின் மனைவி மிகுந்த அச்சத்துக்கு உள்ளானாள். பயம் என்றால் என்னவென்றே அறியாத பாப்லோவுக்கு இப்படியொரு பயந்தாங்கொள்ளி மனைவி.

பைலட், கில்லாடி. என்னென்னவோ மாயம் செய்தான். அவனை தொல்லை செய்யாமல் ராபர்ட்டோவும், குஸ்டாவோவும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவழியாக பேயாய் சத்தமிட்டுக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் இறக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக சாந்தமடையத் தொடங்கின. “சார்! ஹெலிகாப்டர் தற்காலிகமாகத்தான்சரியாகியிருக்கிறது. வழியில் மீண்டும்இதே பிரச்னை வரலாம். உடனடியாக நாம் தரையிறங்குவதுதான் நல்லது...” “நீயும் உன் குடும்பமும் நீடூழி வாழ்க. உடனே தரையிறக்கு...”அவர்கள் தரையிறங்கிய இடத்தின் பெயர் சாக்கோ.

கொலம்பியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் காடுகளுக்கு மத்தியில் இருந்த ஊர். மிகவும் பின்தங்கிய பகுதி என்பதால் அரசாங்கத்தின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்டு இருந்த பகுதி. ஆனால் - கார்டெல்களுக்கு இங்கேயும் நெட்வொர்க் உண்டு. ஹெலிகாப்டரில் தரையிறங்கியவர்கள் பாப்லோ எஸ்கோபார் குடும்பத்தார் மற்றும் குஸ்டாவோ என்பதால் ராஜமரியாதை கிடைத்தது.

உடனடியாக பனாமாவில் இருந்த பாப்லோவுக்கும் தகவல்  போனது. தன்னுடைய குடும்பத்தார் இன்னமும் சொன்ன நேரத்துக்கு வந்து சேரவில்லையே என்கிற பதைபதைப்பில் இருந்தவர், நிம்மதிப் பெருமூச்சு விட்டார். உடனடியாக வேறொரு ஹெலிகாப்டரை மீட்பதற்காக அனுப்பி வைத்தார். அன்று மட்டும் நடுவானில் தன் குடும்பத்தை பாப்லோ இழந்திருந்தால், நிச்சயமாக கொலம்பியா மீது போரே தொடுத்திருப்பார்.

பாப்லோவும் அவரது குடும்பத்தினரும் மட்டுமல்ல, மற்ற கார்டெல் உரிமையாளர்களும்கூட கூண்டோடு இடம்பெயர்ந்து வேறு வேறு நாடுகளில் தஞ்சமடைந்திருந்தார்கள். அதுநாள் வரை தாய்நாட்டில் அவர்கள் வாழ்ந்து வந்த கவலையற்ற சொகுசு வாழ்க்கை ஒருவழி யாக முடிவுக்கு வந்திருந்தது. அமெரிக்காவும் தன்னுடைய பங்குக்கு சிஐஏ உளவாளிகளை வைத்து போதை கார்டெல்களை வேட்டையாட வெறியோடு அலைந்து கொண்டிருந்தது. உலகம் முழுக்கவே ஆங்காங்கே திடீர் திடீரென கொலம்பியர்கள் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

கொல்லப்பட்டவர்களின் ரிஷிமூலத்தை ஆராய்ந்தால், அவர்கள் ஏதேனும் ஒரு கார்டெல்லோடு சம்பந்தப்பட்டவர்களாகவே இருந்திருப்பார்கள். பல கார்டெல்கள் தொழிலை முற்றிலுமாக மறந்துவிட்டு, புதியதாகக் குடியேறிய இடங்களில் ஆட்டோவோ, காரோ ஓட்டி மாணிக்கமாக பிழைத்துக் கொண்டிருந்தார்கள். தங்களுடைய பழைய பாட்ஷா முகத்தைக் காட்டாமலேயே கடைசிவரை வாழ்ந்து உயிர் துறந்தவர்கள் ஏராளம். உலகம் முழுக்கவே ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக ஆனவர் பாப்லோதான்.

போதை சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னன் என்று அவரைச் சுட்டிய ஊடகங்கள், தீர்க்க முடியாத பல சிக்கலான கிரிமினல் கேஸ்களையும் அவர் கணக்கிலேயே எழுதத் தொடங்கின. பிற்காலத்தில் சதாம் உசேன், ஒசாமா பின்லேடன் ஆகியவர்களை எப்படி உலகத்துக்கே வில்லனாக அமெரிக்கா கட்டமைத்ததோ, அதுபோலவே பாப்லோ எஸ்கோபாரையும் மனிதகுலத்தின் எதிரியாகத் தன்னுடைய பிரசார இயந்திரங்கள் மூலமாக தகவல்கள் பரப்பிக் கொண்டிருந்தது.

பாப்லோவும் அவரது குடும்பத்தாரும் பனாமாவில் தஞ்சமடைந்திருந்தது பரமரகசியமாக இருந்தது. உண்மையில், இவர்களை ஐரோப்பாவில் தேடிக் கொண்டிருந்தனர் அமெரிக்க உளவுத்துறையினர். ரிஸ்க் எடுத்து பக்கத்து நாட்டிலேயே தஞ்சமடைந்திருப்பார் என்று யார்தான் யூகித்திருக்க முடியும்? பாப்லோவுக்கு பனாமாவில் அடைக்கலம் கொடுத்திருந்தவர் அந்நாட்டை ஆண்டுகொண்டிருந்த சர்வாதிகாரி மேனுவல் நோரிகா. பணம் என்றால் பல்லை இளிப்பார். இவர் எஸ்கோபாருக்கு நண்பர்தான் என்றாலும் பெரியளவில் பணம் பெற்றுக்கொண்டே இவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்.

“முடிந்தால் பனாமாவில் இருந்தே பழைய மாதிரி போதைத் தொழில் செய். ஆனால், லாபம் சரிவிகிதமாக நம் இருவருக்கும் பிரியவேண்டும்...” என்று கேட்டிருந்தார். அதைக்கேட்டு பாப்லோ புன்னகைத்தார். ஏனெனில், பாப்லோதான் கொலம்பியாவில் இல்லையே தவிர, தொழில் வழக்கம் போல நடந்துகொண்டுதான் இருந்தது. பினாமிகளை வைத்து நடத்திக் கொண்டிருந்தார். மற்ற போக்குவரத்துகளை எல்லாம் போனிலேயே பேசி முடித்துக் கொண்டிருந்தார். என்ன, முன்பு போல அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மட்டும்தான் இல்லை.

அமெரிக்காவுக்கு அதுதான் காண்டு. ஸ்பாட்டில் ஆள் இல்லாமலேயே ஒருவனால் எப்படி எந்தவிதமான பிரச்னையுமின்றி தொழில் செய்ய முடிகிறது என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டார்கள். இத்தனைக்கும் அவர்கள் கேள்விப்பட்டிருந்த அத்தனை போதைத் தொழிற்சாலைகளையும், கொலம்பியா ராணுவத்தினரை வைத்து முற்றிலுமாக அழித்து விட்டிருந்தார்கள். உண்மையில் பாப்லோ இதையெல்லாம் முன்பே எதிர்பார்த்திருந்தார். தன்னுடைய போதை கட்டமைப்புகளை அழித்துவிட்டுத்தான் தன்னை நெருங்குவார்கள் என்பது அவருக்குத் தெரியும்.

எனவேதான் அவரிடம் பிளான் B இருந்தது. ஒரு தொழிற்சாலை அழிக்கப்பட்டால், ஓராயிரம் மினி தொழிற்சாலைகள் உடனடியாக இயங்கக்கூடிய ஏற்பாடுகளைச் செய்திருந்தார். கொலம்பியாவின் சேரி மக்களை ஏற்கனவே வளைத்துப் போட்டிருந்தார் இல்லையா? ஒவ்வொரு குடிசையும் ஸ்மால் ஸ்கேல் போதைத் தொழிற்சாலையாக இயங்கத் தொடங்கியது. கார்ப்பரேட் பாணியில் நடந்து கொண்டிருந்த வேலைகள், குடிசைத் தொழில் கணக்காக நடந்தாலும் தயாரிப்புப் பொருளின் அளவு மட்டும் குறையவே இல்லை.

இம்மாதிரி குடிசைகளை அவ்வப்போது அடையாளம் கண்டு போலீஸ் நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருந்தது. எனினும் புற்றீசல் மாதிரி நாடு முழுக்கப் பரவியிருந்த தொழிற்சாலைகளை ஒட்டுமொத்தமாக முடக்குவதற்குரிய ஆற்றலோ, ஐடியாவோ கொலம்பிய அரசுக்கு இல்லை. தவிர, அரசாங்கம் போதைத் தொழிலை முடக்குவதற்கு முயற்சித்தாலும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கவில்லை. எங்கெல்லாம் ரெய்டு நடக்க வாய்ப்பிருக்கிறது என்கிற தகவலை முன்கூட்டியே பாப்லோவுக்குத் தெரிவித்து தங்களுக்கு வேண்டியவற்றைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.

பனாமாவில் பாப்லோவின் மெதிலின் கார்டெல் முக்கியஸ்தர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த குடியிருப்பின் வசதிகளை ஒப்பிட்டால் ஐந்து நட்சத்திர ஓட்டல்களே தோற்று விடும். அங்கே மிகப்பெரிய கோல்ஃப் கிரவுண்டு இருந்தது. உல்லாசமாக நீந்துவதற்கு கால்பந்து மைதானம் அளவுக்கு நீச்சல்குளம். மூக்கு முட்ட சாப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள். கேட்ட உணவெல்லாம் கிடைத்தது. குஸ்டாவோவுக்கு டென்னிஸ் ஆடுவதில் பிரியம்.

எப்போதும் டென்னிஸ் கோர்ட்டில்தான் இருந்தார். பாப்லோவின் அண்ணன் ராபர்ட்டோ சைக்கிள் வியாபாரி இல்லையா? எந்நேரமும் சைக்ளிங்தான். பெண்கள் ஷாப்பிங் செல்ல ஆசைப்பட்டால் அவர்களை ஏற்றிச்செல்ல 24 மணி நேரமும் நவீன சொகுசுக்கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. அதுநாள் வரை பாப்லோ தன் குடும்பத்தோடு இவ்வளவு நேரம் செலவழித்து மகிழ்ச்சியாக இருந்ததே கிடையாது. இந்த மகிழ்ச்சியும் நெடுங்காலத்துக்கு நீடிக்கவில்லை. அதற்கும் அமெரிக்கா ஆப்பு வைத்தது.

(மிரட்டுவோம்)

ஓவியம்: அரஸ்