பலூன் கேர்ள்!



பலூன் வியாபாரத்தில் எவ்வளவு கிடைக்கும்? ஒரு நாளில் அதிகம் போனால் ரூ.200 அல்லது ரூ.500. திருவிழாக்கள் எனில் இத்தொகை அதிகரிக்கும். அவ்வளவுதான். ஆனால் பலூனைக் கொண்டு கோடிகளில் சம்பாதிக்கிறார் மிசெளரியைச் சேர்ந்த மோல்லி முன்யன் (Molly Munyan)! “அப்ப எனக்கு வயசு 15. பள்ளி விடுமுறை. ஏதாவது செய்யலாம்னு பலூன்ல டிசைன் செய்ய ஆரம்பிச்சேன். செம போர். என்ன செய்யனு தெரியாம இரண்டு நாள் சும்மா இருந்தேன்.

அப்புறம் நான் பலூன்ல செஞ்ச டிசைன்ஸ பார்க்கிறப்ப எனக்கே ஃப்ரெஷ்ஷா இருந்தது. ஆனா, ‘வெட்டி வேலை பார்க்காதே’னு அப்பா, அம்மா திட்டினாங்க. ஆனாலும் லீவுதானேனு விட்டுட்டாங்க...’’ இமைகள் படபடக்க சிரிக்கும் மோல்லி முன்யன், இதை வைத்து நண்பர்களைக் கவர முடிவு செய்ததுதான் திருப்புமுனை. ‘‘பொறுமையா பலூன் டிசைன்ல டிஸ்டிங்ஷன் வாங்கினேன். மெல்ல மெல்ல எங்க ஏரியா நிகழ்ச்சிகள், பார்ட்டிகளுக்கு எல்லாம் பலூன்கள் சகிதமா ஆஜராக ஆரம்பிச்சேன். குழந்தைகளுக்கு அவங்க உடுத்தியிருக்கிற டிரெஸ்ஸுக்கு மேட்ச் சிங்கா தொப்பி, பெல்ட், கிரீடம்... எல்லாம் பலூன்ல செஞ்சு கொடுத்தேன். குஷியானாங்க.

இதைப் பார்த்துட்டு பெரியவங்களும் கேட்க ஆரம்பிச்சாங்க. என் கூட செல்ஃபி எடுக்கத் தொடங்கினாங்க. அப்புறம்... வேறென்ன... நான் ‘பலூன் கேர்ள்’ ஆகிட்டேன்!’’ கலகலவென புன்னகைக்கிறார் மோல்லி முன்யன். “2016 கான்வாஸ் நகர புனித பேட்டி டே. அங்க என் சகோதரியோட பச்சை நிற பலூன் டிரெஸ்ல போஸ் கொடுத்தேன். மக்கள் கூடிட்டாங்க. செம ரெஸ்பான்ஸ். அப்பதான் ‘பலூன் இந்த உலகத்துக்குப் புதுசு இல்ல. ஆனா, அதுல நாம என்ன புதிதா செய்திருக்கோம்கிறதுதான் முக்கியம்’னு தோணுச்சு.

ஆரம்பத்துல என் ஃப்ரெண்ட்ஸ் கிண்டல் செய்தாங்க. ‘இதெல்லாம் ஒரு பிசினஸா’னு திட்டினாங்க. எதையும் காதுல போட்டுக்கலை. என் மனசுக்குப் பட்டதை செஞ்சேன்; செய்யறேன். வித்தியாசமான உடைகளை பலூன்ல உருவாக்கி பொது இடங்கள்ல கலந்துக்கறேன். எனக்கு நானேதான் மாடல். நிறைய பேர் என் மொபைல் எண்ணை வாங்கிட்டுப் போனாங்க.

அடுத்த கட்டமா பலூன் உடைகளுக்கான ஃபேஷன் ஷோ நடத்தினேன். மக்கள் ஆதரவு தெரிவிச்சாங்க. இப்ப நினைவுலயே வைச்சுக்க முடியாத அளவுக்கு எனக்கு கஸ்டமர்ஸ். என் பலூன் டிரெஸ்ஸோட ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? ஊதினா நீங்க போட்டுக்கலாம். காத்தை வெளில எடுத்துட்டா பொம்மையா ஷோகேஸ்ல வைக்கலாம்.

இதை எங்க வேணா ஈசியா கொண்டு போகலாம். இப்ப சில பிரபலங்கள் விருது விழாக்கள்ல இதை அணிய ஆரம்பிச்சிருக்காங்க. எல்லாருக்கும் சப்ளை செய்யறேன். கம்பெனி லோகோஸ், பலூன் கிப்ஃட்... இப்படி என் பிசினஸ் இப்ப வேற லெவலா ஆகியிருக்கு.பலரும் சொல்லித் தரச் சொல்லி கேட்கறதால ஒர்க் ஷாப்பும் நடத்தறேன். ‘பலூன் கேர்ள்’னு அழைக்கப்படறதுல பெருமைப்படறேன்...’’ என்று சொல்லும் மோல்லி முன்யன், பலூன்களால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என்பதை ஒப்புக் கொள்கிறார். எனவேதான் தன் வாடிக்கையாளர்களிடம், பலூன் சேதாரமானால் அதை தூக்கிப் போடாமல் தன்னிடமே கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறார். இதை மறுசுழற்சி அடிப்படையில் மீண்டும் பயன்படுத்துகிறார். புத்திசாலி!

- ஷாலினி நியூட்டன்