கவிதை வனம்



அவள்

அவள் மழையெனப் பெய்பவள்
உயிர்வரை நனைக்கிறாள்.
நட்சத்திரங்களின் ஸ்நேகிதி
தூரத்திலேயே நிற்கிறாள்.
இருட்டில் அலைபவள்
இதயத்துள் ஒளிர்கிறாள்.
மந்திரம் கற்றவள்
மௌனத்துள் வாழ்கிறாள்.
சலங்கைகள் அணிந்தவள்
நினைவுகளில் சப்தமிடுகிறாள்.
கண்ணீரில் வசிப்பவள்
நிழலை உடுத்திக்கொள்கிறாள்.
மனதில் விதைக்கிறேன் அவளை
இப்படியொரு
கவிதையாக முளைக்கிறாள்.

- வித்யாசாகர்



ரசிப்பு


அந்த அடர்
வனாந்திரத்தினிடையே
தொலைந்த நீ
பறவையாய் மாறி
சிறு பாடலொன்றை
பாடியபடி
என்னை
அழைத்துக்கொண்டிருக்கிறாய்
நானோ வனாந்திரத்துப்
பரப்புகளுக்கப்பால்
உன் பாடலை
இரசித்துக்கொண்டிருக்கிறேன்.
- கோவிந்த் பகவான்