வெயிட்டிங் ஹாலில் ஒருநாள் கலாட்டா!



‘‘இந்தப் படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த பலரும், ‘இது ட்ரெயின் டிக்கெட்டுக்கு பதிவு பண்ணிட்டு, அது கிடைக்காமல் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கறவங்கள பத்தின கதையா’னு கேட்டாங்க. அவங்க சொன்னதுல பாதிதான் உண்மை. இது ரயில்வே ஸ்டேஷனில் ஒருநாள் நடக்கற நிகழ்ச்சிதான். ஆனா, காத்திருக்கிறது யார்? எதுக்காக காத்திருக்காங்கனு யூத்ஃபுல்லா செம ஜாலியா, கலகலன்னு சொல்லியிருக்கேன்...’’ சஸ்பென்ஸ் வைத்து சிரிக்கிறார் ‘காத்திருப்போர் பட்டியல்’ படத்தின் அறிமுக இயக்குநர் பாலையா டி.இராஜசேகர். தனுஷின் ‘மரியான்’ இயக்குநர் பரத்பாலாவிடம் பாடம் பயின்றவர் இவர்.

‘‘சொந்த ஊர் தூத்துக்குடி. மணிரத்னம் சார் படங்கள்தான் இன்ஸ்பிரேஷன். அம்மாவுக்கு சினிமான்னா அவ்ளோ பிடிக்கும். நான் இயக்குநரா வரணும்னு அவங்க கனவு கண்டாங்க. நான் சாஃப்ட்வேர் வேலையை உதறிட்டு உதவி இயக்குநரா வாய்ப்பு தேட ஆரம்பிச்சதே அவங்களாலதான். பேப்பர்கள்ல வரும் இயக்குநர்களின் பேட்டிகளை படிச்சிட்டு, ‘அந்த டைரக்டர் அவ்ளோ கஷ்டப்பட்டாதா இன்டர்வியூல சொல்லியிருக்கார். இந்த டைரக்டர் இப்படி கஷ்டப்பட்டிருக்கார். நீ ஒண்ணும் அம்புட்டு சிரமப்படல. தைரியமா இரு கண்ணு’னு நம்பிக்கை கொடுத்திட்டே இருப்பாங்க. இப்ப நான் இயக்குநராகிட்டேன்னு சொல்றதைவிட, அவங்க கனவை நிறைவேத்திட்டேன்னு சொல்றதுதான் சரியா இருக்கும்...’’ சுவாரஸியமாக பேசுகிறார் இராஜசேகர்.

எதுக்காக காத்திருக்காங்க... சஸ்பென்ஸை உடைங்க..?
கதை சிம்பிள் லைன்தான். இளைஞர்கள் விரும்பக்கூடிய ஒரு இன்ட்ரஸ்ட்டிங் நாட். ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்)யில் ஒரு பிரிவு போலீசார் உண்டு. அவங்க வேலையே தண்டவாளத்தில் சிறுநீர் கழித்தவர்கள், ட்ரெயின் வரும்போது தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள்னு சின்னச் சின்ன தப்புகள் பண்ணினவங்களை அழைச்சுட்டு வந்து கோர்ட்டுல ஆஜர் படுத்தி ஃபைன் கட்ட வைக்கறதுதான்.

இதெல்லாம் எஃப்.ஐ.ஆர் போட முடியாத வழக்குகள். ஸோ, இப்படி பிடிச்சிட்டு வர்றவங்க எல்லாரையும் ஒரு வெயிட்டிங் ஹால்ல அடைச்சு வச்சுடுவாங்க. அவங்களோட அன்றைய வேலை எல்லாம் பாதிக்கும். ஹீரோ உள்பட அப்படி ஒரு அறையில் மாட்டிக்கொண்ட பதினைந்து பேர்களின் ஒருநாள் அவஸ்தையை காமெடி, காதல் கலந்து சொல்லியிருக்கோம்.

முதல் படமே தனுஷை டார்கெட் பண்ணாமல் புதுமுகம் ஏன்?
தனுஷ் சாருக்கான கதையை இன்னும் ரெடி பண்ணல. இது ரொம்ப சாதாரண ஒரு ஹீரோவுக்கான கதை. நிறைய கதைகளோடு புரொட்யூசர் தேடினேன். அப்ப, ‘யுவன்யுவதி’ இணை தயாரிப்பாளர் ‘சென்னையில் ஒருநாள்’ சச்சினுக்காக கதை கேட்டாங்க. சொன்னேன். அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. இப்படித்தான் இந்தப் படம் தொடங்கினது. சச்சின் தவிர, நந்திதா ஸ்வேதா, அருள்தாஸ், அப்புக்குட்டி, சென்ட்ராயன், மனோபாலா, மயில்சாமி, ‘நான்கடவுள்’ ராஜேந்திரன், அருண் ராஜா காமராஜ், சித்ரா லட்சு மணன்னு கலகலனு ஆர்ட்டிஸ்ட்கள் எக்கச்சக்கம். இந்தப் படத்தில் டெக்னீஷியன்கள் எல்லாருமே ரொம்ப ஸ்டிராங். ‘ஸ்கெட்ச்’ கேமராமேன் சுகுமார், ஷான் ரோல்டன் மியூசிக், ரூபன் எடிட்டிங்னு நான் விரும்பினது மாதிரியே அமைஞ்சிருக்கு.

ட்ரெயின், ரயில்வே ஸ்டேஷன் படப்பிடிப்பு எல்லாம் டென்ஷனான விஷயமாச்சே?
தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் நடக்கற கதை. அங்க ஷூட் பண்றது சிரமம். ஸோ, லால்குடி இளையராஜா கைவண்ணத்தில் ஏவி.எம்.ல செட் போட்டோம். நிஜ ரயில்வே ஸ்டேஷனுக்காக காஞ்சிபுரத்துல உள்ள ரயில்வே ஸ்டேஷன்ல மெயின் போர்ஷனை ஷூட் பண்ணினோம். மொத்த படத்தையும் 35 நாட்கள்ல முடிச்சிட்டோம்.


நந்திதா ரொம்ப மாடர்னா அசத்தறாங்களே..?

அவங்களுக்கே சர்ப்ரைஸா இருந்தது. இதுவரை வந்த படங்கள்ல நந்திதானாலே புடவை, தாவணினு ரொம்ப ஹோம்லியாதான் நடிச்சிருப்பாங்க. ஆனா, இதுல செம மாடர்ன் பொண்ணு. டெலி மார்க்கெட்டிங்ல ஒர்க் பண்றவங்களா நடிச்சிருக்காங்க. ஷூட் தொடங்குறதுக்கு முன்னாடியே ஸ்கிரிப்ட் முழுவதையும் தங்கிலீஷில் டைப் பண்ணி கொடுத்துட்டோம். அவங்க ஷூட் வரும்போது டயலாக் ரெடி பண்ணிட்டு வருவாங்க. அதே மாதிரி ஹீரோ சச்சினும் நடிப்பில அசத்தியிருக்கார்.

என்ன சொல்றார் உங்க குரு பரத்பாலா..?
அவர்கிட்ட சேருறதுக்கு முன்னாடி தெலுங்குல இயக்குநர் சூரியகிரண் சார் படங்கள்ல உதவியாளரா ஒர்க் பண்ணியிருக்கேன். சினிமாவில் கிளாப் போர்டு அடிக்கறதில் இருந்து சீன் பிரிக்கறது வரை கத்துக் கொடுத்தவர் அவர்தான். அப்புறம் தெலுங்கில் நூறு படங்களுக்கு மேல் இயக்கிய தாசரி நாராயணராவ் சார்கிட்ட ஸ்கிரிப்ட் அசிஸ்டென்ட்டா வேலை பார்த்திருக்கேன். அந்த அனுபவத்தோடு பரத்பாலா சார்கிட்ட இணை இயக்குநரா சேர்ந்தேன்.
தென் மாவட்ட கடலோரப் பகுதி படப்பிடிப்புகளில் அதிகம் ஒர்க் பண்ணினேன்.

சினிமாவின் லேட்டஸ்ட் விஷயங்களை எனக்கு புரிய வச்சவர் அவர்தான். ‘மரியான்’ல வெளிநாட்டு கேமராமேன் மார்க் கொனின்க்ஸ் ஒர்க்கிங் ஸ்டைல்னு நிறைய கத்துக்க முடிஞ்சது. பரத்பாலாவைப் பொறுத்தவரை ஒரு ஷாட் ஷூட் பண்றதுக்கு முன்னாடி மானிட்டர்ல அந்த ஃப்ரேம் செட் பண்றதுக்குதான் அதிக டைம் எடுத்துக்குவார். ஷாட் செட் ஆன பிறகே, ஸ்பாட்டுக்குள் நடிகர்களை கூப்பிடுவார்.

வெறும் பத்தே நிமிடங்களில் ஷாட் எடுத்துட்டு, ஆர்ட்டிஸ்ட்களை வெளிய அனுப்பிடுவார். அதே மாதிரி செட்ல உள்ள நடிகர்களை பெயர் சொல்லி அழைக்கவே மாட்டார். அவங்களோட கேரக்டர் பெயரை சொல்லித்தான் நாமும் கூப்பிடணும். அப்படிப்பட்டவர் என் படத்தோட டிரெயிலர் பார்த்துட்டு, பாராட்டினார். படமும் அவருக்கு பிடிக்கும்னு நம்பறேன்.

- மை.பாரதிராஜா