1+1=11
செய்தி
ஒன்றுடன் ஒன்றைக் கூட்டினால் 2 என்று சொல்லாமல் அதை 11 ஆக மாற்றுவோம்! - பிரதமர் மோடி
கணித மேதை ராமானுஜத்துக்குக் கூட சவாலான இந்தக் கணக்கை பிரித்து மேய்ந்தபோது, இது சாத்தியமே என்ற நாட்டாமையின் தீர்ப்பை தங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்!
ஆயிரத்தில் ஒருவன் கணக்கு
‘ஆயிரத்தில் ஒருவராக எங்க பாங்க் பர்சனல் லோனுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கீங்க... அதனால வெறும் வட்டியும் தவணைத் தொகை மட்டும்தான். வேற எந்த சார்ஜும் கிடையாது. இந்த 1+1 ஆஃபர் இன்றைக்கு மட்டும்தான். தவற விட்டுடாதீங்க...’ குலுங்கிக் குலுங்கி பேசும் பெண் குரலில் மயங்கி லோன் கிணற்றுக்குள் குதித்தால், அங்கே உங்களுக்கு ஒரு கட்டண விருந்தை விரித்து தண்ணி காட்டுவார்கள். பரிசீலனைக் கட்டணம், ஆவணக் கட்டணம் என 11 வகையான கட்டணங்களைக் கழித்துக்கொண்டுதான் லோனை கண்ணில் காட்டுவார்கள். செல்போனை எப்பொழுதும் ஸ்விட்ச் ஆஃப் மோடிலேயே வைத்திருப்பதுதான் இந்த மாதிரி லோன் வலை வீச்சு தோஷத்துக்கு பரிகாரம்.
 டவுட்டு: ஆமாம்... அது என்ன எல்லா பாங்க் லோன் வலை வீச்சுகளிலும், பெண்களே பேசுகின்றனர்!
உதிரி கணக்கு
சைலன்ஸர் பிளிற கர்ஜனையிட்டு ஓடிக்கொண்டிருந்த டூ வீலரில் திடீரென ‘லொடக்... புடக்’ என்ற முனகல் சத்தம் கேட்கும். முளையிலேயே கிள்ளி எறியும் எண்ணத்துடன், ‘என் கண்ணையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்’ ரேஞ்சில் வண்டியை மெக்கானிக்கிடம் காட்டுவீர்கள். எஞ்சினை ஓட விட்டு சூடாக்கி அந்த சப்தத்தில் நட்டு, போல்ட்டு போயிருக்கும்... பார்த்துடலாம் என 1 +1 ரேஞ்சில்தான் அவர் கூலாக ப்ரேக் அடிப்பார்.
‘என் செல்லம் (தங்களை ஓட்டும் மனைவியை அப்படி கூப்பிடறாங்களோ இல்லையோ... தாங்கள் ஓட்டும் வண்டியை பலபேர் அப்படித்தான் செல்லமாக அழைக்கிறார்கள்!) அதிகமா செலவு வைக்காதுன்னு எனக்கு தெரியும்!’ என்று வண்டியின் ஓனரும், ‘சிக்கினான் சேகரு’ என்று கடை ஓனரும் ஒரே சமயத்தில் எண்ண ஓட்டங்களைத் தட்டி ஓட விடும் ‘தட் மூவ்மெண்ட்’ அது. ஒரு நாள் செக் அப்... வெள்ளோட்டம் மறு நாள் என்று 1+1 டெலிவரி டைம் சொல்பவரிடம், மறுநாளிலிருந்து எத்தனை முறை கேட்டாலும், வார்த்தை மாறாமல், ‘நாளை நமதே!’ என்பார்.
 ஒரு நல்ல நாளில் (அது 11 நாளைக்குப் பிறகுதான் என்பதை சொல்லத் தேவையில்லை பாஸ்!) டெலிவரியோடு செம்ம ஷாக்கையும் வழங்குவார். 1+1 தான் இருக்கும் என வண்டியின் ஆபரேஷனுக்கு முன்பு வாக்குறுதி அளித்தவர், பிரேக், கிளட்ச் பிளேட்டுகள், புஷ்ஷுகள் என 11 வகையான உதிரிப் பாகங்களின் பட்டியலோடு, 3000 ரூபாய்க்கு மேலான பில்லையும் நீட்டுவார். ‘சனியன்... செலவு வைக்கும்னு நினைச்சேன்!’ என்ற ஒன்றரை கிலோ வெறுப்பு பேச்சையும், ஒன்றரை டன் எடையுடன் கூடிய உதையையும் வண்டிக்கு பரிசாக வழங்கும்போது, பைசா கோபுரமே சரிந்து விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த மாதிரி நாம் எதிர்பாராத (மெக்கானிக் எதிர்பார்த்த!) செலவு தோஷங்களைத் தவிர்க்க, நடராஜா பரிகாரம் உகந்தது. ஏனெனில் கால்களுக்கு பிரேக், கிளட்ச் செலவுகள் இல்லை!
டவுட்டு: கேரேஜில் சர்வீஸுக்கு வேறு எந்த வண்டியும் இல்லைனாலும் நம்ம டெலிவரியை ஏன் லேட்டாக்கறாங்க? சின்ன ரிப்பேர்னு முடிவு கட்டிடக் கூடாதுன்னா?!
வெயிட்டிங் கணக்கு
அப்பளம் சுடும் அளவில் வெப்ப ஜுரத்துடன் ஆஸ்பத்திரியில் டாக்டரை பார்க்கச் செல்வோம். ‘1+1 பத்து நிமிஷத்தில் பார்த்துடலாம். வெயிட் பண்ணுங்க...’ என்று புன்னகைக்கும் நர்ஸ் டோக்கனைக் கொடுத்துவிட்டு மறைந்து விடுவார். பின்னர் ஒரு சிறுவன் ‘பெரிய மனுஷ தோரணையில்’ உள்ளே போகிறவர்களைக் கட்டுப்படுத்துவான். அக்கக்காகக் கிழிந்துபோன சென்ற வருட வாரந்திரப் பத்திரிகைகளை நீங்கள் நோட்டம் விட்டுக்கொண்டிருக்கும்போதே, நுனி நாக்கில் ஆங்கிலம், கழுத்தில் டை மற்றும் கையில் லெதர் சூட்கேஸுடன் தோன்றும் வேற்றுக் கிரகவாசிகள் பலர் எந்த வெயிட்டிங்கும் இல்லாமல் டாக்டரைப் பார்த்துவிட்டு வெளியேறிக் கொண்டிருப்பார்கள்.
 வெளிறிய முகத்துடன் ஃப்ளோர் மேனேஜரை (அந்தச் சிறுவன்தான்!) அணுகினால், ‘அவங்களெல்லாம் சேல்ஸ் ரெப்புங்க. நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...’ என்று அறிவுரை வழங்கி, கூலிங் கிளாஸை வெவ்வேறு கோணங்களில் மாட்டிக்கொண்டு அடிக்கடி செல்ஃபி எடுத்துக்கொண்டிருப்பான். ‘என்னத்தைச் சொல்ல?’ என்று எண்ணிக் கொண்டிருந்தால், 11வது நபராக... ம்... அதற்கும் மேலேதான் உங்களுக்கு வாய்ப்பு கிட்டும். வெயிட்டிங்கே இல்லாமல் டாக்டரைப் பார்க்க, சேல்ஸ் ரெப் போல மாறு வேடமிட்டுச் செல்வதுதான் இந்த வெயிட்டிங் தோஷத்திற்கு நல்ல பரிகாரம்.
டவுட்டு: ஆமாம்... அது என்ன எல்லா கிளினிக்குகளிலும் சொல்லி வச்சா மாதிரி, ஒரு வருடத்திற்கு முந்தைய வாரப் பத்திரிகைகளையே வச்சிருக்காங்க!
புடவை கணக்கு
‘மனிதப் பொங்கலுக்கு ஒண்ணு... மாட்டுப் பொங்கலுக்கு ஒண்ணு...’ என்ற புரிதலுடன் மனைவியோடு கடைக்குச் சென்று காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படும் கணவன்மார்களுக்கு இந்தக் கணக்கு மேலோட்டமாகவே புரியும். ஆனால், அந்த கொள்முதல், ஒன்று வாங்கினால் மூன்று இனாம் என்ற ஆஃபரை உள்ளடக்கியது என்பது உள்ளடக்கப்பட்டு விடும். அந்த நீ...ண்...ட இடைவெளியில் மனைவியின் முகம் மறந்து விடாமல் இருக்க அவரைப் பிரிவதற்கு முன்பாக ஒரு செஃல்பி எடுத்துக்கொள்வது நல்லது.
பசி மயக்கத்தில், நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருக்க, ‘என்ன ஜொள்ளு விட்டுக்கிட்டு ஜாலியா உட்கார்ந்திருக்கீங்க..?’ என்ற எப்போதோ கேட்ட அதிகாரக் குரல் (அதிகாரம்னாலே, திருவள்ளுவருக்குப் பிறகு திருமதிதான் நினைவுக்கு வரவேண்டும்!) அரைகுறையாகக் காதில் விழும் தருணம்தான் பில் கொடுக்க வேண்டிய நேரம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இதன்பிறகு, திரை (புடவை!) மறைவில் நடக்கும் சம்பவங்கள்தான் செம்ம திரில்லிங். புடவை தேர்வுக்குப் பிந்தைய அக்கம் பக்கத்து கருத்து கணிப்பில் அதற்குத் தேவையான அங்கீகாரம் கிடைக்காததால் கலரை மாற்ற கடைக்கு ரகசிய படையெடுப்பு சம்பவங்கள் அரங்கேறும். ‘உங்க முகத்தைப் பார்த்தாலே லக்ஷ்மி கடாட்சம் தாண்டவம் ஆடுது (!) அக்கா...’; ‘மூணு சீட்டு போட்டீங்கன்னா, கையிலே மூணு புடவை இனாம். சீட்டு விழுந்தால், இன்னும் மூணு!’ (அதுவரை கடை விழாமல் இருக்கணும்!’) என்ற சேல்ஸ்மேனின் பாசப் புகழ்ச்சியில் மயங்காதவர் உண்டோ? அந்த வகையில் சேரும் புடவைகளையும் சேர்த்து மறு எண்ணிக்கை செய்தால், 1+1 = 11 என்ன... அதற்கும் மேலே என்ற ஞானம் பிறக்கும். கணவன் தன் ஏடிஎம் பின் நம்பரை அடிக்கடி மாற்றுவதுதான், இந்த எண்ணிக்கை தோஷத்திற்கு நல்ல பரிகாரம்.
டவுட்டு: இடுப்பில் கட்டும் மூன்று புடவைகளின் விலையையும் ஒரு புடவையில் வைத்து தலையில் கட்டுகிறார்கள் என்பது கண்ணை மறைக்கும் ‘ஆப்’பு என்பதை அறிந்தவர் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை போல் தோணுதே மக்கா!
- எஸ்.ராமன்
|