இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?பா.ராகவன் - 28

இந்தத் தொடரை கவனமாகப் படித்து வரும் வாசகர்கள் அவ்வப்போது எனக்கு எழுதிக் கேட்கும் சில வினாக்களைத் தொகுத்து வந்தேன். மொத்தமாக அவற்றுக்கு இங்கே பதில் சொல்லி விடலாம் அல்லவா? சென்றவாரம் செகந்திராபாத்தில் இருந்து ஒரு வாசக நண்பர் மின்னஞ்சல் ஒன்று அனுப்பியிருந்தார். ‘ஐயா எனக்கு நீரிழிவு இருக்கிறது. ரத்தக் கொதிப்பு பிரச்னை இருக்கிறது. தைராய்டு இருந்து அதற்கு ஆறாண்டுகள் மாத்திரை சாப்பிட்டு, நிறுத்தியிருக்கிறேன். ஒற்றைத் தலைவலி உண்டு. முதுகுத் தண்டுவடத்தில் ஓர் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ செய்திருக்கிறேன். என் எடை 83 கிலோ. பேலியோவில் இதை எழுபதாக்க முடியுமா? என் வயது 69’.

இந்தக் கடிதத்துக்கு நான் எழுதிய பதில்: ‘முடியும். ஆனால், உங்களுக்கு பேலியோ சரிப்பட்டு வருமா, செய்யலாமா என்று உங்கள் டாக்டரிடம் கேளுங்கள். நான் டாக்டரல்ல...’தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால் ஐம்பது வயதுக்கு உட்பட்டவர்கள் எடைக்குறைப்புக்கும், சர்க்கரை நோயில் இருந்து பூரண விடுதலை பெறவும் தைரியமாக பேலியோவை நம்பி வரலாம். இதற்கு யாரையும் கேட்க அவசியமே இல்லை. ஆனால், ஐம்பதுக்கு மேற்பட்ட வயதும் தேகம் முழுதும் வியாதி வெக்கைகளையும் சேர்த்து வைத்திருப்போர் தகுந்த மருத்துவ அறிவுரை இல்லாமல் இதனைச் செய்யக்கூடாது.

ஏனெனில் உயர் கொழுப்பு என்பது விளையாடிப் பார்க்கக்கூடிய விஷயமல்ல. குறிப்பாக சைவ உணவு உட்கொள்வோர், கொஞ்சம்போல் சர்க்கரை வியாதி சகவாசமும் இருந்துவிடும்பட்சத்தில் சிறு பிழைகளும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஒரே ஓர் எளிய உதாரணம் சொல்கிறேன். சென்றமாதம் கும்பகோணத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. மிகவும் நெருங்கிய உறவினர் என்பதால் மூன்று நாள்களுக்கு அங்கேயே தங்கும்படியானது. சரி, மூன்று நாள்தானே, பேலியோவுக்கு விடுமுறையளித்துவிட்டு ரெகுலர் உணவை உட்கொள்ளலாம்; அதன்பின் இருபத்தி நான்கு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து ரத்த சர்க்கரையைக் குறைத்து மீண்டும் பேலியோவுக்கு மாறி, அதன்மூலம் சற்றுக் கூடுதல் எடை இழப்பைப் பெறலாம் என்று எண்ணினேன்.

மூன்று நாள்; பன்னிரண்டு வேளை கல்யாண கார்ப் உணவு. முடிவு செய்து களத்தில் இறங்கியதால் நான் எதையுமே விட்டுவைக்கவில்லை. இனிப்புகள், எண்ணெய்யில் பொரித்த பட்சண பலகாரங்கள் தொடங்கி அனைத்தையும் ஒரு கை பார்த்தேன். கிளம்பும்போது ரயிலில் சாப்பிட ஒரு புளியோதரை பார்சலையும் எடுத்துச் செல்லத் தவறவில்லை. மொத்தம் பதிமூன்று வேளை. ஒரு குத்துமதிப்புக் கணக்கில் எப்படியும் ஒன்பதாயிரம் கலோரிகளுக்கு கார்ப் சாப்பிட்டிருப்பேன் என்று நினைக்கிறேன்.

விளைவு, வீட்டுக்கு வந்து எடை பார்த்தபோது சரசரவென்று மூணே முக்கால் கிலோ ஏறியிருந்தேன். எனக்குத் தெரியும். இது நான் எதிர்பார்த்ததுதான். ஆனால், ஏறிய எடையை இறக்கவும் தெரியும் என்பதால் பெரிதாகக் கவலை கொள்ளவில்லை. அன்றிரவு தொடங்கி சரியாக முப்பத்தி ஆறு மணி நேரம் வாரியர் போனேன் (வெறும் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டிருப்பது). அதன்பின் குறைந்த அளவு கார்ப் உள்ள காய்கறியுடன் (புடலங்காய், கீரை) பனீர், வெண்ணெய் சாப்பிட்டு மறுநாள் உணவை நிறைவு செய்தேன்.

இப்படியே இரண்டு நாள் படு தீவிர பேலியோ உணவை மட்டும் உட்கொண்டதன் விளைவாக, ஏறிய மூணே முக்கால் கிலோவும் நான்காம் நாள் காலை இறங்கிவிட்டது. சிக்கல் எங்கே வரும் என்றால், நான் செய்த இதே காரியத்தை ஒரு சர்க்கரை நோயாளி செய்திருந்தார் என்றால் கோவிந்தா. இந்த சீட்டிங்குக்குப் பின் அவர் பெரும்பாடு பட்டிருக்க வேண்டும். இதை ஒரு ரத்த அழுத்த நோயாளி செய்திருந்தால் இன்னுமே விபரீதமாகியிருக்கக்கூடும்.

உயர் கொழுப்பும் உயர் மாவுச்சத்தும் பரம எதிரிகள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இரண்டும் சேராது; சேரக்கூடாது. நீங்கள் வழக்கமான உணவை உட்கொண்டு நீண்ட நாள் உயிர் வாழலாம். நோய்கள் வந்தால் மருந்து மாத்திரை இருக்கவே இருக்கிறது. அல்லது பேலியோவுக்கு வந்து மருந்து மாத்திரைகளில் இருந்து விடுதலை கண்டு, எடையைக் குறைத்து ஆரோக்கியமாகவும் வாழலாம். இரண்டும் நமக்கு முன் உள்ள இருவேறு வாய்ப்புகள். இரண்டையும் கலக்கக்கூடாது என்பதுதான் விஷயம். கலந்தால் சிக்கல் வரும். ஆசுபத்திரிக்குப் போய் படுக்க வேண்டி வரும். அதைப் புரிந்துகொண்டுவிட வேண்டும்.

அப்படியே சிக்கலாகிப் போனால்கூட தாங்கக்கூடிய வயதும் வலுவும் இருக்குமானால் சமயத்தில் தப்பித்துவிடலாம். அதனால்தான் ஐம்பது வயதுக்குட்பட்டவர்கள் தைரியமாக பேலியோவுக்கு வரலாம் என்று சொன்னேன். வயதில் மூத்தவர்கள், நோய் உபாதைகளுக்கு உட்பட்டவர்கள் மருத்துவர் உதவியின்றி இதைச் செய்வது பெரும்பிழையாகும் (வயது குறைந்தோரே கூட பேலியோ தொடங்கியதும் சர்க்கரை, ரத்த அழுத்த மாத்திரைகளை நிறுத்திவிடுகிறார்கள். இது தவறு. மருத்துவ ஆலோசனையின்றி நாமே மாத்திரைகளை நிறுத்துவது பெரும் கேடு விளைவிக்கும்). புரிந்துவிட்டதல்லவா? இனி எனக்கு வந்த வினாக்களை இங்கே தொகுக்கிறேன். இவை, இதுவரை வாசித்து வந்ததன் சாரத்தை சுருக்கமாக உணரவைக்கும் என்று நம்புகிறேன்.

* பேலியோவில் உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை ஏன் வருகிறது?
உணவில் உப்பு குறைவாக இருப்பின் மலச்சிக்கல் ஏற்படும். வெண்ணெய் அதிகம் சேர்ப்பதன்மூலம் இதைத் தவிர்க்கலாம். இன்னொன்றும் செய்யலாம். தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் (உப்புப் போட்டு) அருந்தலாம்.

* எடைக் குறைப்பு நடவடிக்கை திடீரென்று ஒருவருக்கு ஏன் நின்றுவிடுகிறது? மீண்டும் தொடங்க என்ன செய்யலாம்?
மனித உடலின் அடிப்படை இயல்புகளுள் ஒன்று, உள்ளே என்ன அனுப்பினாலும் அதை அடுத்த வேளைக்குச் சேர்த்து வைப்பது. சாதாரண உணவில் இருந்து பேலியோ உணவு முறைக்கு மாறும்போது உடல் எதிர்கொள்ளும் எதிர்பாராத அதிர்ச்சியின் விளைவாக ஆரம்பத்தில் வேகமாக எடைக்குறைப்பு நிகழும். அதன்பின் உடலுக்குக் கொழுப்புணவு பழகிவிடும். இனி நமக்கு கார்ப் இல்லை; இதுதான் என்பது தெரிந்தபிறகு, ‘நாளை இதுவும் இல்லாவிட்டால் கஷ்டப்படுவானே’ என்ற அக்கறையில் உடலானது கொழுப்பையும் சேகரித்து வைக்க ஆரம்பிக்கும். அதனால்தான் எடைக்குறைப்பு தடைபட்டுப் போகிறது.

* இதைச் சரி செய்வது எப்படி? மீண்டும் எடைக்குறைப்பு நிகழ என்ன வழி?
விரதங்களே உதவும். 16:8 விண்டோ, 23:1 விண்டோ போன்றவை வெகுவாகக் கைகொடுக்கும். கூடவே குறைந்தது ஒரு மணி நேர நடை அல்லது உடற்பயிற்சி அவசியம். பேலியோவில் அனுமதிக்கப்பட்டதே என்றாலும் நேரங்கெட்ட நேரத்தில் ஸ்நாக்ஸ் கொறிக்காதிருப்பது மிகவும் முக்கியம். ஒரு க்ரீன் டீ அல்லது ப்ளாக் காப்பிகூட (மிகக் குறைந்த, மிஞ்சினால் 2 கிராம் கார்ப்) விரதத்தைக் கெடுக்கிற காரணிதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

* எடைக் குறைப்பு முயற்சியின்போது ஒரு கட்டத்தில் நாம் உண்ணும் கொழுப்பின் அளவையும் குறைக்க வேண்டும் என்கிறார்களே?
ஏற்கெனவே சொன்னதுபோல், நமது உடல் நாம் உண்ணும் கொழுப்புணவில் ஒரு பகுதியை தன்னியல்பாகச் சேமிக்கத் தொடங்கிவிடுகிறது. நாமும் அளவின்றிக் கொழுப்பை உண்டுகொண்டே இருந்தால் எடை ஏறாமல் வேண்டுமானால் இருக்குமே தவிர, மேலும் இறங்காது. எனவே நம் பங்குக்குக் கொஞ்சம் கொழுப்பைக் கொடுத்து, மிச்சத்தை உடல் சேமித்திருக்கும் சொத்திலிருந்து எடுத்துக்கொள்ள வழி செய்ய வேண்டும். சேமிப்பு கரைந்தால்தான் உடல் இளைக்கும்.

* கொழுப்புணவையும் குறைத்தால் பசிக்காதா?
பசி வருகிற அளவுக்கு யார் குறைக்கச் சொன்னது? உதாரணமாக ஓர் உணவோடு நீங்கள் ஐம்பது கிராம் வெண்ணெய் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் அதை 20 கிராம் ஆக்குங்கள். பதிலுக்கு அதிக கார்ப் இல்லாத புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், கீரை வகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள். பசியும் அடங்கும், கொழுப்பும் அளவோடு உள்ளே போகும், கார்ப் கணக்கும் உதைக்காது.

(தொடரும்)

* பன்னிரண்டு வேளை கல்யாண கார்ப் உணவு. விளைவு, வீட்டுக்கு வந்து எடை பார்த்தபோது சரசரவென்று மூணே முக்கால் கிலோ ஏறியிருந்தேன்.

* வயது குறைந்தோரே கூட பேலியோ தொடங்கியதும் சர்க்கரை, ரத்த அழுத்த மாத்திரைகளை நிறுத்திவிடுகிறார்கள். இது தவறு.