சுடுகாட்டில் வாழும் பெண்கள்
டோம் இனத்தவரின் அவலம்!
பள்ளியின் இன்டர்வெல் நேரம். வகுப்பில் கிரேயானால் தரையில் ஏதோ படம் வரைந்துகொண்டிருக்கும் குஷி சௌதாரிக்கு வயது 13. அடுத்த ஆண்டு இறுதியில் திருமணத்தோடு குஷியின் படிப்புக்கு சுபம் விழுந்துவிடும்.‘‘எட்டாவதுக்கு மேல் நான் படிக்க முடியாது. இப்போதே என் அப்பா எனக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டு இருக்கிறார். நான் பையனாகப் பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...’’ மெல்லிய குரலில் துயரம் வழிய பேசுகிறார் குஷி. இது தனிப்பட்ட குஷியின் துயரம் மட்டுமல்ல. டோம் இனக்குழுவைச் சேர்ந்த சிறுமிகள் அனைவரது நிலையும் இதுதான். பிணங்களை எரிக்கும் தொழில் செய்துவரும் விளிம்புநிலைச் சமூகம் இது.
 சுடுகாட்டு வாழ்வு! வாரணாசியில் வாழும் டோம் இனக்குழு சமூகரீதியில் தாழ்த்தப்பட்டவர்களாக மதிக்கப்படுகிறார்கள். இவர்களின் பொருளாதார நிலையோ அதலபாதாளத்தில் இருக்கிறது. மணிகர்னிகா காட், அரிச்சந்திரா காட்... இந்த இரு திறந்தவெளி சுடுகாடுகள்தான் டோம் இனக்குழு சிறுவர்களுக்கான பயிற்சி முகாம். முதலில் சடலத்தின் மீது விறகுகளை விழாமல் அடுக்கி, உடல் சரியாக வேக நெருப்பைக் கிளறிவிடும் பணி தரப்படுகிறது. எட்டு மணி நேரத்துக்கு நெருப்பரு கில் நின்று இந்தப் பணி செய்யும் பெரும்பாலான ஆண்களுக்கு, ஆல்கஹாலும், கட்டரேட்டில் வாங்கும் கஞ்சாவும் மட்டுமே துணை.
டோம் இனத்தின் பெரிய மனிதர்களான மாலிக்குகள் தம் கட்டுப்பாட்டில் உள்ள சுடுகாட்டில் தம் சக இனத்தவரை பிணம் சுட அமர்த்தி வேலை செய்கின்றனர். குஷி போன்ற டோம் இனச் சிறுமிகள் துப்பட்டாவை அணிந்துகொண்டு ஆண் துணையோடுதான் வீட்டைவிட்டு வெளியே வர முடியும். தன் வயதுள்ள தோழிகளோடு ஓடிப்பிடித்து விளையாடவெல்லாம் நோ பர்மிஷன். காலை எழுந்தவுடன் சமையல் வேலைகளை முடித்துவிட்டு பள்ளி; பள்ளி முடிந்தவுடன் திரும்பவும் வீட்டு வேலைகள் என இப்பெண்களின் வாழ்க்கை, கடிகார முட்கள் போல முதுகொடியும் அழுத்தத்திலேயே நகருகிறது.
 ஒடுக்கும் ஆதிக்க வெறி! மீரட் சுடுகாட்டில் வசிக்கும் விதவைப் பெண் சிம்பிள் செளதாரியின் வாழ்க்கையே இந்தச் சமூக ஆண்களின் மேலாதிக்கம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதற்கு சாட்சி. ‘‘பெண்கள் வயதுக்கு வந்தபிறகு வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது. ஆண்களின் பாலியல் அத்துமீறலைத் தடுக்க இது ஒன்றே வழி என்பது எங்களது நம்பிக்கை...’’ என்கிற சிம்பிள் சௌதாரிக்கு வயது 27. சிறுவயதில் திருமணமாகி ஐந்து குழந்தைகள் பிறந்த நிலையில் கணவர் திடீரென இறந்துவிட நிலைமை சிக்கலானது. கணவரின் இறுதிச்சடங்கின்போதே சௌதாரியின் மாமியார் இவரைத் துரத்திவிட்டுவிட, இப்போது பெற்றோரின் வீட்டில் தங்கியிருக்கிறார்.
 ‘‘என்னை என் கணவர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. பெண்களை வேலைக்குச் செல்ல அனுமதிக்காத சமூக சூழலில் என் குழந்தைகளை எப்படி வளர்ப்பது எனத் தெரியவில்லை...’’ அச்சத்தை வெளிப்படுத்துகிறார் சௌதாரி. பெண்களின் புனிதம் கெட்டுவிடும் என்பதால் அவர்கள் வேலைக்குச் செல்ல அனுமதியில்லை. கணவர் தவிர பிற ஆணிடம் பேசுபவர்கள் பாலியல் தொழிலாளி என்ற அவப்பெயருக்கு ஆளாவார்கள்.
 ‘‘டோம் இனக்குழுவில் பெண்களுக்கு மறுமணம் கணவர் இறந்த சில நாட்களில் நடைபெறும். கண்ணாடி வளையல் அணிவித்து நடைபெறும் இந்த நிகழ்வில் மணமகனைப் பெண்ணின் தந்தை அல்லது சகோதரர்களே தேர்வு செய்வார்கள்...’’ என்கிறார் இந்த இனக்குழு குறித்த ஆராய்ச்சியாளரும் ‘The Symbolic Representation of Death’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் எழுத்தாளருமான மீனா கௌசிக். இதில் துயரம் என்னவெனில், பெண்ணுக்குக் குழந்தைகள் இருந்தால், மறுமண ஆப்ஷன் கிடையாது. சிம்பிள் சௌதாரி போல தம்பியின் உழைப்பில் குழந்தைகளுக்குப் பொங்கிப்போட்டு வாழ வேண்டியதுதான்.
‘‘என்னையும் குழந்தைகளையும் பராமரிக்கும் தம்பிக்கும் குடும்பம் இருக்கிறது என்பதால் பல இடங்களிலும் வேலைக்கு முயற்சித்தேன். கழிவறையைச் சுத்தம் செய்யும் வேலையைக் கூட என் சாதி காரணமாக தர மறுக்கிறார்கள்...’’ விரக்தியான குரலில் பேசுகிறார் சிம்பிள் சௌதாரியா. டோம் இனக்குழுவினர் ‘சௌதாரியா’ என்ற பெயரில் தீண்டத்தகாத, தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்படுகிறார்கள். பெயரை வைத்து தெரிந்துகொள்வது ஒரு வழி என்றால், பேச்சு, நடை, உணவு என சாதியைக் கண்டுபிடிக்க ஓராயிரம் வழிகள் உள்ளனவே..?
 வாழ்வைக் குலைக்கும் சாதி! 17 வயதான சந்திரமுகி, கர்ப்பமானாள். அவர் வயிற்றில் கரு இருக்கும்போதே அவரது கணவர் அடுத்த திருமணத்துக்காக சந்திரமுகியைத் தாக்கி, கருவைக் கலைத்து அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டார். ‘‘தன் குழந்தைகளையும் தன்னையும் காப்பாற்றிக்கொள்ள பெண் வேலைக்குச் செல்ல முடியாது. வேலை செய்யும் பெண்கள் தங்கள் உடலை விற்றுத்தான் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று எங்கள் சாதியில் நினைக்கிறார்கள்.
 வேலை மட்டுமல்ல, சாதாரணமாகத் தெருவில் நட்ந்து கடைக்குச் செல்லும்போது கூட தலையில் முக்காடிட வேண்டும். இல்லையெனில் பாலியல் தொழிலாளி பட்டம் கிடைக்கும்...’’ கசப்புடன் சொல்கிறார் சந்திரமுகி. டோம் இனப் பெண்கள் தம் புகுந்த வீட்டினரோடு மட்டுமே திருமண விழாக்களில் பங்கேற்கலாம். மற்றபடி திருமணம், இறப்பு என எந்த நிகழ்வுகளிலும் பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. விவாகரத்து பெற்றாலும் சந்திரமுகி தன் நெற்றியில் குங்குமம் வைப்பதையும், கையில் வளையல்கள் அணிவதையும் நிறுத்திவிடவில்லை.
 ‘‘சில பேப்பர்களில் கையெழுத்துப் போட்டுவிட்டால் திருமண உறவு முடிந்துபோய்விடுமா என்ன? கடவுளின் முன்னிலையில் நடந்த திருமணம் எங்களுடையது. எங்கள் இனத்தில் விவாகரத்தை நம்புவதில்லை. என் கணவர் இறந்துவிட்டால் அமைதியான விதவை வாழ்வை வாழ ஆசைப்படுகிறேன்...’’ என்கிறார் சந்திரமுகி. இந்தியப் பிரதமர் மோடியின் நாடாளுமன்றத் தொகுதிதான் வாரணாசி. ஒரு பிரதமரின் தொகுதியில் வாழும் பெண்களின் வாழ்வே குருட்டு இருளில் தத்தளிக்கும்போது, இந்தியா ஒளிர்கிறது என்றும் புதிய இந்தியா பிறந்துவிட்டது என்றும் எப்படிச்சொல்ல முடியும்?
- ச.அன்பரசு
|