ஊஞ்சல் தேனீர்



யுகபாரதி - 57

‘திருமணமாகாத எழுத்து’ என்றொரு கட்டுரையை தஞ்சை ப்ரகாஷ் எழுதியிருக்கிறார். திருமணக்கூட்டில் அடைபடாத எழுத்தாளர்களை பற்றிய சித்திரிப்பு அது. அக்கட்டுரையில் திருமணம் செய்துகொள்ளாத தருமு சிவராம், நகுலன், வல்லிக்கண்ணன் ஆகியோரை அளந்திருப்பார். கவிதையியலிலும் தத்துவ இயலிலும் தனித்து விளங்கிய தருமு சிவராமை உடன்வைத்து கவனித்துக்கொண்டவர் தஞ்சை ப்ரகாஷ். ஆனாலும், அவருடைய குணம் இறுகி இருந்ததற்கான காரணம் ‘‘திருமணம் செய்து கொள்ளாததே...’’ என்றிருக்கிறார்.

காற்றின் தீராத பக்கங்களில் கவிதை எழுதிய தருமு சிவராமின் இதயத்தை எழுதும் துணிச்சல் அவருக்கு இருந்தது. ‘‘சிவராமின் இன்டலக்சுவலிச முகத்தை பெண்கள் விரும்பவில்லை. அவர் காதலித்த பெண்கள் அவரைப் புறக்கணித்தார்கள்...’’ அதனால் அவர் எப்போதும் சோர்ந்து இருந்ததாகவும் அங்கீகரிக்கப்படாத இதயம் விகாரத்திற்குள் விழுந்துவிடுவதை அவர் விஷயத்தில் பார்த்ததாகவும் குறித்திருக்கிறார். சிவராமைப் பின்பற்றும் பலருக்கும் இது அதிர்ச்சியளிக்கக்கூடிய கூற்று. ஒரு படைப்பாளனின் தனிப்பட்ட விஷயங்களையெல்லாம் பொதுத்தளத்தில் எழுதலாமா? எனவும் கேட்கலாம்.

விமர்சனத்துக்கும் விவாதத்துக்கும் உரிய அக்கருத்தை மன தத்துவ ரீதியில் அணுகி தஞ்சை ப்ரகாஷ் எழுதியிருப்பது எனக்குப் பிழையாகப்படவில்லை. அவர் உடன் பழகிய நண்பர்கள் சொல்லத் தயங்கியதை ப்ரகாஷ் ஒருவரே சொல்லியிருக்கிறார். அதே கட்டுரையில் நகுலனைப் பற்றியும் தன்னுடைய பதிவுகளைச் செய்திருக்கிறார். கடைசிவரை சுசீலா புராணம் பாடிய நகுலன், அந்த சுசீலா யாரென்றே சொல்லாமல் காதலித்ததைக் கருணையுடன் காட்டியிருக்கிறார். ‘‘காதலித்த பெண், யாரென்று சொல்லத் தயங்கிய நகுலன் ஒருகட்டத்தில் சசீலாவை காவிய நாயகியாக மாற்றிவிட்டார்...’’ என எழுதியிருக்கிறார்.

எனக்குத் தெரிய எழுத்தில், திருமணமான, திருமணமாகாத என்ற பாகுபாடுகளைப் பற்றி யாருமே எழுதியதில்லை. மனத்தின் வெளிப்பாடுகளே படைப்புகள் என்றால் அம்மனத்தின் தவிப்புகளையும் கொந்தளிப்புகளையும் பகுத்துப் பார்க்க தஞ்சை ப்ரகாஷுக்கு முடிந்திருக்கிறது. “காமம்தான் சக்தி, பசிதான் நம்முடைய மூலம். பசிதான் மனிதனை எழுப்பும் கனல். பசியில்லையென்றால் மனிதனில்லை. காமம் இல்லையென்றால் அவன் தொடக்கமே இல்லை...” என்று ‘மீனின் சிறகுகள்’ நாவலில் அவர் எழுதியிருப்பதை இக்கட்டுரையுடன் இணைத்துப் பார்க்கலாம். பெண்கள் குறித்து அவர் முன்வைத்த கருத்துகள் பலவேளைகளில் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கின்றன.

“எல்லாப் பெண்களுமே பெண்கள்தான் என சொல்ல வருகிறவன் ரசனை கெட்டவன். அப்புறமேன் எல்லாப் பெண்களும் ஒன்றாக உலகில் வளைய வரவில்லை. பெண்கள் அனைவருமே ஒன்றுதான் என்னும் அபிப்ராயம் பொய்தான். ஏமாற்றுதான்...” என அவர் சொல்வதை ‘கரமுண்டார் வூடு’ நாவலிலும் ‘கள்ளம்’ நாவலிலும் காணலாம். தன்னுடைய அத்தைகளும் பாட்டிகளும் பகிர்ந்துகொண்டதையே நாவலாக எழுதியதாக அந்நாவல்களின் முன்னுரையில் எழுதியிருக்கிறார். திருநெல்வேலி ராஜவல்லி புரத்திலுள்ள எழுத்தாளர் வல்லிக்கண்ணன் வீட்டில் தஞ்சை ப்ரகாஷ் ஓரிரு இரவுகள் தங்கியிருக்கிறார். 1960 வாக்கில் என நினைவு.

அந்த சந்தர்ப்பத்தில் வல்லிக்கண்ணன், தான் எழுதிய இரண்டு நாவல்களின் கையெழுத்துப் பிரதியை ப்ரகாஷிடம் வாசிக்கக் கொடுத்திருக்கிறார்.ஒன்று ‘கல்யாணியின் கணவன்’, மற்றொன்று ‘சம்பங்கிபுரத்து பொம்பிளைகள்’. இரண்டுமே இலக்கியத் தரமுடைய நாவல்கள். அதிலும், ‘சம்பங்கிபுரத்து பொம்பிளைகள்’ நாவல் முழுக்க முழுக்க போர்னோகிராபியை அடிப்படையாகக் கொண்டது.‘முதலிரவு’ என்னும் தலைப்பில் வெளிவந்த தொ.மு.சி.ரகுநாதனின் நாவலை அன்றைய ராஜாஜி அரசாங்கம் தடைசெய்ததைப் போல ‘சம்பங்கிபுரத்து பொம்பிளைகளு’ம் வெளிவந்தால் தடை செய்யப்படும் என வல்லிக்கண்ணன் கருதியிருக்கிறார்.

திருமணமாகாத, தான், பாலியல் குறித்து எழுதியதை மற்றவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ எனத் தயங்கியுமிருக்கிறார். திருமணமாகியிருந்தால் அவர் அந்நாவலை தயக்கமில்லாமல் வெளியிட்டிருப்பார் என்பது அவர் கருத்து. அக்கட்டுரையில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. ‘இருட்டு’ என்னும் பெயரில், தான் மட்டுமே எழுதி, தான் மட்டுமே ரசித்துப் படிக்க வல்லிக்கண்ணன் அமாவாசைக்கு அமாவாசை தயாரித்த கையெழுத்துப் பத்திரிகையைப் பற்றிய செய்தியே அது. இதையெல்லாம் ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை உணர வாய்ப்பில்லை.

சம்பந்தப்பட்ட இரண்டுபேருமே இப்போது இல்லை. காலக் கரையான்கள் அரித்துவிட்ட வல்லிக்கண்ணனின் கையெழுத்துப் பிரதிகள் இப்போது யாரிடம் இருக்கிறதோ தெரியவில்லை. எழுத்தை அணுகும்விதம் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது. ஒருவிதத்தில் அம்மாற்றமே இலக்கியத்தின் இருப்பைத் தீர்மானிக்கிறது. தஞ்சை ப்ரகாஷின் வழியே நான் கண்டடைந்த இலக்கிய உலகிற்கும் இன்றைக்கு என் முன்னாலிருக்கும் இலக்கிய உலகிற்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது. அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்தே அவருடைய எழுத்துகள் நூலாக்கம் பெறுகின்றன.

தன் எழுத்துக்குக் கிடைத்திருக்கவேண்டிய நியாயமான அங்கீகாரங்களை அவர் அறியவே இல்லை. இப்போது அவர் வாசிக்கப்படும் அளவுக்கு முன்னெப்போதும் வாசிக்கப்படவில்லை என்பதை நினைக்க, வருத்தமே மிஞ்சுகிறது. இதற்கிடையில் அவர் எழுத்துகளைப் பற்றியும் அவரைப்பற்றியும் தவறான விமர்சனங்களைச் சில எழுத்துமோகிகள் வைக்கிறார்கள். அதற்கெல்லாம் பதில்சொல்ல அவர் இல்லை. நம்முடைய நினைவுகளில் இருந்து ஒருவர் அகலாமல் இருக்கிறார் என்றால், அவரை நாம் மறக்காமல் இருக்கிறோம் என்பதல்ல பொருள். மறுக்கவோ மறக்கவோ முடியாத பல நற்காரியங்களை அவர் நமக்குச் செய்திருக்கிறார் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும் என தொடக்கத்தில் சொல்லிருக்கிறேன்.

அவரைப் பற்றிய நினைவுகளையும் அவருடன் கழித்த பொழுதுகளையும் எழுதிக்கொண்டே இருக்கலாம். அவரிடமிருந்து கற்றதில் பாதியைக்கூட நானின்னும் பயன்படுத்தவில்லை. அவருமே அப்படித்தான். தனக்குக் கிடைத்ததைப் பிறருக்குத் தருவதுதான் அவரது வாடிக்கை. தஞ்சை ப்ரகாஷ் அவருடைய கவிதையில் ஒன்றை அடிக்கடி சொல்லிக்காட்டுவார். ‘சாவுகள் வாழ்கின்றன’ எனும் கவிதை அது. ‘சாவுகள் வாழ்கின்றன/ வாழ்க்கைகள் நசிக்கின்றன / நீயும் நானும் ஏமாளிக் கும்பல்’ என்று முடியும் அக்கவிதையில், ‘க.நா.சுவும் புதுமைப்பித்தனும் கு.ப.ராவும் செத்துக்கொண்டே இருந்ததைப் பார்த்துக்கொண்டே இருந்தோம்...’ என எழுதியிருப்பார்.

இறந்து இத்தனை ஆண்டுகளாகியும் தஞ்சை ப்ரகாஷ் என்னுள் வாழ்ந்துகொண்டே இருக்கிறார். இலக்கியத்தில் தோல்விக்கோ மரணத்திற்கோ வழியே இல்லை. நினைவுகளும் அனுபவங்களுமே அதன் நோக்கம். அனுபவங்களைப் பகிர்ந்துகொள்பவர்கள் நினைக்கப்படுகிறார்கள். தான், கற்றதையெல்லாம் பிறருக்கு வாரி வழங்கிவிட்டு வெறுமையாகிவிடுவதே நல்ல சகிருதையனுக்கான இலக்கணம் என்பார்கள். கற்றதைப் பிறருக்கு வழங்கியதால் தஞ்சை ப்ரகாஷ் வெறுமையாகாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்