காலத்தின் முடியாத பயணங்களை சுமந்து திரியும் கலைஞன்



- நா.கதிர்வேலன்

யூமா வாசுகிக்கு இவ்வாண்டின் மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. இதில் எவருக்கும் இரண்டாவது அபிப்பிராயம் கிடையாது. ஏனெனில் யூமா, தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனிக் குரல். கனவின் தீராத பாதைகளில், காலத்தின் முடியாத பயணங்களைச் சுமந்து திரியும் உன்னதக் கலைஞன். கவிதைகளில் தியான அனுபவமும் மொழி தன் கால்களுக்கு தரை தேடி விருட்சத்தின் தரை பிளந்து சென்ற வேர்களின் கச்சிதமும் அவருக்கானது. அவரைச் சந்தித்த நிகழ்வின் சிறுகுறிப்பு இதோ...‘‘சொல்லப் போனால் ‘கசாக்கின் இதிகாச’த்தின் 24வது பதிப்புதான் படித்தேன்.

அந்தப் புத்தகத்தைப் பற்றி மலையாள இலக்கியத்தில் நிறைய பேச்சிருந்தது. சமீபத்திய ஒரு நேர்காணலில் ‘கசாக்கின் இதிகாச’த்திற்கு அப்பாற்பட்டு மலையாள இலக்கியம் போகவில்லை என்று சொல்லி படித்தேன். இத்தனைக்கும் அது எழுதப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலிருக்கும். இன்றைக்கும் அதன் கவித்துவ வசீகரமும், நளினமும், நவீனமும் அப்படியே உணரப்படுகிறது. ‘காலச்சுவடு பதிப்பக’த்தால் அதன் உரிமை பெறப்பட்டு அதை மொழிபெயர்க்கும் பணி என்னிடம் வந்தது. மொழிபெயர்க்கும்போது மொழியின் நயம் கெடாமல் பார்த்துக் கொள்வதில் அத்தனை உபாயங்களையும் கைக்கொண்டேன்.

மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவகுமார் ‘இசாக்கின் இதிகாசம்’ படித்திருக்கிறார். அவருக்கு அது பிடித்திருந்தது. அவருக்கு தமிழ் பேராயத்தில் ‘ஷோபியாவின் உலகம்’ நாவலை மொழிபெயர்த்ததற்காக விருது கிடைத்திருந்த நேரம் என்னை அவர் அழைத்து, ‘இந்த விருதை உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். இந்த 10,000 ரூபாயை நீங்கள் அன்போடு பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கொடுத்தார். நான் பெற்ற முதல் அபிப்பிராயம், பரிசு அவரிடம் இருந்தே வந்தது. என்னிடம் திட்டங்களும், கனவுகளும் கிடையாது.

ஓவியங்கள் வரைந்து கொண்டு ‘குங்குமம்’ உட்பட பல இதழ்களில் அதைக் கொடுத்து, பெறும் பணத்தைக் கொண்டுதான் முன்னாளில் எனது ஜீவிதம் கழிந்தது. பிறகுதான் இலக்கியத்தின் பக்கம் சாய்ந்தேன். அடுத்த நாள் எப்படி மாறிப் போகும் என்று எனக்குத் தெரியாது. திட்டமும், முனைப்பும் வேறு மாதிரி இருந்திருந்தால், ஏதாவது அரசு அலுவலகங்களில் தஞ்சம் புகுந்திருப்பேன். இப்பொழுது மொழிபெயர்ப்பில் அதிகம் ஈடுபடுவதால், நாவல், கவிதைகளை மறுபடியும் எழுதப்போவதில்லை என்பது கிடையாது.

கவிதைக்கான தூண்டுதல் மனதை அழுத்திக் கொண்டு இருந்தால், கதவு திறந்து அவைகளை வெளியே கொண்டு வந்துவிடுவேன். கவிதை தோன்றுவதற்கு முந்திய கணங்களில் தீவிர பிரக்ஞை நிலை தொற்றிக் கொள்கையில் எங்கே கவிதை புதையுண்டிருக்கிறது என உணர்ந்ததும் ஆயத்தமாகிவிடலாம். அதில் எப்போதும் எனக்கு சிரமம் கிடையாது. அதே மாதிரி ஓவியங்கள் வரைய துடிப்பு தோன்றுமானால், உடனே கித்தானில் புகுந்துவிடுவேன். கசிகிற அகம் என்னிடம் எப்பவும் உண்டு...’’ என்கிறார் யூமா வாசுகி.