மர்மங்களும் புதிரும் நிறைந்த இரவுக்கும் கண்கள் உண்டு!
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ சீக்ரெட்ஸ்
‘‘ஒரு க்ரைம் த்ரில்லர்தான் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. ஒரே நாளில் நடக்கிற கதை. முன்னும் பின்னும் கதையோட்டம் பரவிக்கிடக்கும். எந்தப் படமாக இருந்தாலும் அதில் நமது கருத்துகளை நேர்மையாகப் பதிவு செய்ய வேண்டும். அந்தக் கடமை எனக்கு இருக்கிறது. பெரிதாக எந்த ஆடம்பரமும் இல்லாமல், அருமையான, எளிமையான படமாக இருக்கவே நிறைய வாய்ப்பிருக்கு. ஒரு சராசரி இளைஞனின் வாழ்வில் எதிர்ப்படுகிற விஷயங்கள். இதுமாதிரி இளைஞனை நீங்கள் எங்கேயும் பார்க்கலாம்.
 இங்கே கதைக்காகவோ, களத்திற்காகவோ அலைய வேண்டிய அவசியம் இல்லை. ஒருத்தனை கூர்ந்து ஆழமாகப் பார்த்தீங்கன்னா ஒரு கதை. அப்படியே அவனோட வீடு வரைக்கும் போனா களம். அருள்நிதி கால்டாக்ஸி டிரைவர். அவருக்கு ஒரு பிரச்னை. அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார்? மீள முடிந்ததா? என்பதுதான் சுவாரஸ்யமான அடுக்கு...’’ ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ பற்றி ஒரே மூச்சில் பேசுகிறார் அறிமுக இயக்குநர் மு.மாறன். பத்திரிகையாளராக இருந்து இயக்குநராய் இப்போது நல் அறிமுகம்.
இரவிலேயே நடக்கிற கதையா..? பாதிக்கும் மேல் இரவிலே நடக்கும். த்ரில்லரில் பல வகை இருக்கிறது. ஒரே நேர்கோட்டில் செல்கிற படங்களும் உண்டு. இது முன்னும் பின்னும் திருப்பங்களோடு செல்லும். திரைக்கதையின் புதுத்தன்மைதான் இந்தப்படத்தின் அதிக கவன ஈர்ப்பு. எப்பவும் பகலில் நடப்பது எல்லோருக்கும் தெரியவரும். இரவு என்பது மர்மங்களும் புதிரும் நிறைந்தது. ஆனால், அந்த இரவுக்கும் கண்கள் உண்டு. இரவில் நடப்பதால் யாருக்கும் எதுவும் தெரியாது என்று இருப்பது நம்பிக்கையானதல்ல.
 நம்மை யாரோ கண்காணித்துக் கொண்டிருப்பது கண்கூடு. முகநூல், டுவிட்டரில் அகப்படும்போது தவிப்பதும், மிரள்வதும், அதைவிட்டு வெளியே வருவதுமாக இருக்கிற இடங்களும் இதில் இருக்கிறது. சினிமான்னா நிச்சயம் ஒரு விஷயம் சொல்லணும்; கேள்வி கேட்கணும்... நடப்பைத் தெரிய வைக்கணும். அப்படியான சில இடங்களும் இருக்கு. இங்கே இருக்கிற ஏழ்மையும், அறியாமையும், சூழ்நிலையும் கிடைக்க வேண்டிய நீதியைக் கூட தர மறுக்குது. எல்லாவற்றையும் மீறி வாழ்க்கையைப் பற்றிய ஒரு நம்பிக்கை இருக்கிறதே... அதோட பிரதிபலிப்பும் இந்தப் படத்தில் இருக்கு.
அருள்நிதி மிகவும் அருமையான நடிகராக உருவெடுத்து வருகிற நேரம் இது... அதுதான் அருள்நிதி. அவ்வளவு பெருந்தன்மையான மனசு. கதைக்குத் தேவையானால் இமேஜ், இடம், தான்தான் முழுக்க வரணும்னு எதையும் நினைக்கமாட்டார். ‘கடைசியில் கூட்டிக்கழிச்சு கணக்குப் போட்டால், நான் நடிச்ச நல்ல படங்களின் வரிசை இருக்கணும்’ என்று நினைக்கிற அழகு. இதில் முக்கிய திருப்பங்கள் அவரால்தான் வருது. ‘மௌன குரு’ பார்த்தீங்கல்ல... அது மாதிரி ‘இரவுக்கு ஆயிரம் கண்களை’ பார்க்கலாம். எனக்கு அவர்கிட்டே என்ன பிடிக்கும்னா, ஷூட்டிங் வந்திட்டால் ஸ்டார், நடிகர் என்பதையெல்லாம் மறந்துடுவார்.
 அப்புறம் கேரக்டருக்குள்ள போயிட்டு, தெளிவிலிருந்து தெளிவிற்குத்தான் நகர்ந்து போய்க்கிட்டே இருப்பார். அப்படி ஒரு தன்மை கொண்டு வர்றதுதான் பெரிய வேலை.‘நம்மில் ஒருத்தர்’னு ஒரு ஃபீலிங் கொடுத்தாலே ஒரு ஹீரோவுக்கு அது ரொம்ப பெரிய விஷயம். அந்த இடத்தை அருள்நிதி அருமையாக கடந்து வந்திருக்கார். அவரே படத்தயாரிப்பின் பிற விஷயங்களில் உதவி செய்வதும், எந்த இடைஞ்சலும் தராமல் சுமுகமாக அரவணைத்துச் செல்வது அவரோட அனுபவமும் பக்குவமும்தான்.
ஹீரோயின் மகிமா நம்பியார் எப்படி? அவங்களுக்கு ரொம்பவும் முக்கியமான கேரக்டர். ஒரு நர்ஸாக வந்து, வாழ்ந்து கண் முன்னாடி நிறுத்தியிருக்காங்க. ரெண்டு பேரும் கெமிஸ்ட்ரியில் ஹிஸ்டரி படைச்சிருக்காங்க. காதலும், காதல் நிமித்தமும்னு சொல்வாங்க. அதற்கும் சரியான உதாரணம். ரொம்பவும் இயல்பாக தன் பொறுப்பு உணர்ந்து நடிக்கிற பொண்ணு. வாழ்க்கையின் அருகில் இருந்தாலே ஒரு சினிமா அதற்கான கௌரவத்தை அடைஞ்சிடும்னு நினைப்பேன். அப்படி நினைக்க வைக்குது இந்தப் படமும்.
 இந்த மாதிரி படங்களில் பின்னணி இசைக்கு பெரும் வேலையிருக்குமே! முன்னமே நேர்த்தியான பணிகள் செய்திருந்தாலும் ‘விக்ரம் வேதா’விற்குப் பிறகு சாம் சி.எஸ்.சின் கொடி பறக்கிறது. சினிமாவின் மிக முக்கியமான கணங்களில் எல்லாம் விளையாடியிருக்கார். பாடல்களில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் தன் உழைப்பை எக்கச்சக்கமா கொட்டினார். இதுவரை நீங்க பார்க்கவே பார்க்காத கதைன்னு சொல்லமாட்டேன். ஆனா, திரைக்கதைன்னு ஒண்ணு பரபரனு இருக்கணும் இல்யைா, இது அப்படி இருக்கும். அடுத்தது என்னனு ஆர்வமா கண் இமைக்காம எதிர்பார்க்கிற மாதிரி இருக்கும்.
 இந்தப் படத்தில் நிறைய காட்சிகள் எந்த சூழ்நிலையிலும் கதை மாறும் என்கிற தன்மையில் இருக்கும். பரபரப்பு நிமிடங்களுக்கு பஞ்சம் இல்லை. இப்பவெல்லாம் ஆனந்த்ராஜ் நடிக்கிற படங்களில் அவரிடம் நிறைய வித்தியாசத்தை பார்க்கிறீர்களா? இதிலும் இருக்கு. படத்தில் மழையும் ஒரு கேரக்டராக வரும். இரவு, பயம், மழை, அமைதி எல்லாத்துக்கும் ஒரு தொடர்பு இருந்துகிட்டே இருக்கு. இதிலும் அப்படியான இடங்கள் இருக்கு. அரவிந்த் சிங்தான் கேமரா. இரவும், மழையும், த்ரில்லும் அவர் கைவரிசையில் பின்னி எடுக்கும். தயாரிப்பாளர் டில்லிபாபு செலவைப் பற்றி கவலைப்படாமல், படத்திற்கான அக்கறையில் மட்டுமே இருந்தார்.
 அவருடைய அன்புக்கும், கொடுத்த இடத்திற்கும் நன்றிங்கிற ஒற்றைச் சொல் போதாது. நான் சின்ன வயதிலிருந்தே துப்பறியும் நாவல்களின் ரசிகன். பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, சுபா, ராஜேஷ்குமார் நாவல்களில் வரும் துப்பறியும் கதாபாத்திரங்களின் பெயர்களான விவேக், பரத், கணேஷ் வசந்த், ரூபல்லா என இப்படித்தான் கேரக்டர்களுக்கு பெயர் வைச்சிருக்கேன். முழுப் படத்தையும் கையில் வைச்சுச்கிட்டுத்தான் நம்பிக்கையோடு பேசுறேன். நானே ரசிக மனப்பான்மையால் பார்த்து ரசிச்சுதான் சொல்றேன். ‘தமிழக மக்கள் பார்க்கிறதுக்கு விறுவிறுன்னு ரசனையா, திருப்பங்களோட இன்னிக்கு ட்ரெண்டுல ஒரு படம் எடுத்திருக்கீங்க’னு சொல்ற நாள்தான் எனக்கு சந்தோஷம்.
- நா.கதிர்வேலன்
|