வேலைக்காரன்
- குங்குமம் விமர்சனக்குழு
மக்களின் நலனுக்கு விரோதமாக விஷமாகும் உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களை வேரறுப்பவனே ‘வேலைக்காரன்’.லோக்கல் குப்பத்து இளைஞன் சிவகார்த்திகேயன். குப்பத்திலே இருந்து மக்களை ஆட்டி வைக்கும் கூலிப்படை தாதா பிரகாஷ்ராஜின் அநியாயங்களை கட்டுக்குள் நிறுத்த ஒரு ரேடியோ நிலையம் ஆரம்பிக்கிறார். அதனால் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு நல்ல பெயர் கிடைக்க, அது பிரகாஷ்ராஜுக்கு கண்ணை உறுத்துகிறது. விளைவு-ரேடியோ நிலையம் மூடப்பட, உணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வேலைக்குப் போகிறார்.
 அங்கு தயாராகும் பொருட்கள் மெல்ல மெல்ல விஷமாகும் தன்மைக்கு மாறுவதைப் பார்த்து முதலாளிகளை எதிர்க்கத் துணிகிறார். அவர்கள் அத்தனை பேரும் ஒன்று சேர... மோதல், சூழ்ச்சி, சூதுகளுக்கு மத்தியில் சிவகார்த்திகேயன் எப்படித் தப்பினார் என்பது அதிரடி கிளைமாக்ஸ்.‘தனி ஒருவ’னில் தனிப்பட்டு தெரிந்த மோகன்ராஜாவின் அடுத்த படம். உதார் பார்ட்டியாக, காமெடியில் களைகட்டும், சீனுக்கு சீன் சிரிக்க வைத்த சிவகார்த்திகேயன் இந்த முறை எடுத்திருப்பது சீரியஸ், சமூகப் பார்வை. மொத்தக் கதையையும் தோள் மீது சுமந்த அக்கறையிலும் சிவா கெத்து.
பிரகாஷ்ராஜ் கோபித்துக் கொள்ளாமல் அவருக்கு வாழ்த்து மடல் வாசிக்கும்போதும், சக நண்பர்கள் கூலிப்படைக்கு மாறுகிற விதத்தைக் கண்டு குமுறும்போதும், மனிதர் அசரடிக்கிற பெர்பாஃமென்ஸ். நயன்தாராவை ஆங்காங்கே பயன்படுத்தியிருக்கிறார்கள். சிவகார்த்திக்கு வம்பு கொடுக்கும் கேரக்டரில் வந்து சேருகிறார். சிவாவை காதலிக்கும் கொஞ்ச நேரம் போக முக்கால்வாசி நேரத்திற்கு மேல் நயனைத் தேட வேண்டியிருக்கிறது. பக்கத்தில் இருந்து உதடு பிரியாமல் புன்னகைத்துக் கொண்டே, வஞ்சகமாக காய் நகர்த்துவதில் தமிழுக்கு நல் அறிமுகம் ஃபஹத். கூடவே இருந்து கெடுப்பது சூப்பர் ஸ்டைல்.
கொஞ்சம் கொஞ்சமாக தொழிலாளர்களின் மனதை மாற்றி மெனக்கெடும் சிவா, படிப்படியாக ரௌடிக் கும்பலைச் சிதறடிப்பது, ஆவேசமும் உண்மையுமாக நிறுவனங்களின் புரட்டை, புள்ளி விபரங்களில் கடத்தியிருப்பது சமூக அக்கறையே! ஆனாலும் சினிமா மொழி காணாமல் போனதை பொறுத்தருள முடியவில்லையே! அக்கறையாய் பேசுவதை காட்சிப்படுத்தியிருந்தால் இன்னும் வெரைட்டி வேட்ைட ஆடியிருக்கலாம். வசனங்கள் சிறப்பு. அக்கறைகள் உன்னதம். பேச்சைக் குறைத்து உழைப்பை பெருக்கியிருக்கலாமே பிரதர்?
ரோகிணி, சினேகா, சார்லி, மன்சூர் என சீனியர்கள் எல்லாம் சின்னச் சின்ன கேரக்டர்களில் கவனம் ஈர்க்கிறார்கள். பின்னணி இசையில் மாஸ் காட்டிய அனிருத், ‘கருத்தவனெல்லாம் கலீஜா’வில ரகளைவிடுகிறார். கொலைகார குப்பத்தை உயர்ந்த கோணத்திலும், அதிரடி ஆக்ஷன் ஆங்கிளிலும் பளிச் ஸ்கோப் பிடிக்கிறது ராம்ஜியின் ஒளிப்பதிவு. கதையைத் தேர்ந்தெடுத்த விதமும் சீரியஸ் நாயகனாக உருவ மாற்றம் கொண்ட வகையிலும் ‘வேலைக்காரன்’ உண்மையானவனே!
|