புடவையில் மாரத்தான்!



கின்னஸ் ரெக்கார்ட் செய்த இரும்பு மங்கை

‘இந்த புடவையைக் கட்டிக்கவே எரிச்சலா இருக்குது. கட்டவும் தெரியமாட்டேங்குது; கட்டினாலும் ஃப்ரீயா நடக்க முடியலை. உட்கார முடியலை. சுடிதார்தான் நமக்கு வசதிப்பா...’ என இந்தக் காலத்து இளசுகள் சலித்துக்கொள்வதைக் கேட்டிருக்கலாம். ஏதேனும் ஒரு விஷேசத்துக்குக் கொஞ்ச நேரம் கட்டிக்கொண்டு இருப்பதற்கே இவ்வளவு அலப்பறை. புடவை கட்டாத, பொட்டு வைக்காத, பூ முடிக்காத தலைமுறை ஒன்று சத்தமில்லாமல் வளர்ந்துவிட்டது. இந்நிலையில்தான் இங்கு ஒரு பெண்மணி புடவை கட்டி மாரத்தானே ஓடி சாதித்திருக்கிறார்! ஜெயந்தி சம்பத்குமார். வயது 44. இவர்தான் அந்த சாதனைக்குச் சொந்தக்காரர்.

சொந்த ஊர் அக்கட தேசமான ஆந்தராவின் ஹைதராபாத். பி.டெக், MS, கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்துவிட்டு இப்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பிரின்சிபல் எஞ்சினியரிங் மேனேஜராக வேலை செய்கிறார். “ஆகஸ்ட் 20, 2017 அன்று நடந்த ஏர்டெல் ஹைதராபாத் மாரத்தான் போட்டியை என்னால் மறக்கவே முடியாது. எனக்குப் பிடித்த உடையான புடவை கட்டிக்கொண்டு மாரத்தானில் கலந்துகொண்டேன். கைத்தறி புடவைகள் என்றால் அவ்வளவு பிரியம் எனக்கு. இந்த நாளுக்காக என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே ஒன்பது கஜம் கைத்தறிப் புடவை ஒன்றை ஆர்டர் கொடுத்திருந்தேன்.

இகாத் கைத்தறிப் புடவை. புடவை கட்டிக்கொண்டுதான் ஓட வேண்டும். குறைந்த நேரத்தில் ஓட வேண்டும். இந்த இரண்டும்தான் என் குறிக்கோள்...’’ உற்சாகமாகத் தொடங்குகிறார் ஜெயந்தி. ‘‘டிசம்பர் 2016ல் என் கணவர் விளையாட்டாக‘நீ புடவையே கட்ட மாட்டேங்கிற. ஆனா, பாரு கப்போர்டு முழுக்க என் ட்ரெஸ்ஸை விட உன் புடவைகள்தான் அதிகமா இருக்கு...’ என்று கிண்டல் செய்தார். எனக்கு சேலைகள் அவ்வளவு பிடிக்கும். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஆர்டர் கொடுத்து அந்தந்த ஸ்டைலில் கைத்தறிப் புடவைகள் வாங்க வேண்டும் என்று விரும்புவேன். அதன் காரணமோ என்னவோ எங்கே போனாலும் புடவை வாங்குவேன்.

கணவர் கிண்டல் செய்தபோதுதான் நாம் புடவையே கட்டுவதில்லையே என்று யோசித்தேன். அந்த நொடியே இனி வேலைக்கு தினமும் புடவைதான் என்று முடிவு செய்தேன். அமெரிக்காவில் இருந்து அலுவலக அதிகாரிகள் வரும்போது மட்டும் என் உடைகளில் மாற்றம் இருக்கும். அப்போதும் கலர்ஃபுல்லாகப் புடவைகள் கட்ட ஆரம்பித்தேன். அப்போதுதான் தெரிந்தது. என் புடவைகள் அவர்கள் எல்லோரையும் கவர்கிறது என்று...’’ புன்னகைக்கும் ஜெயந்தி, ஜனவரி 2017 புத்தாண்டு முதல் புதிய இலக்குகளோடு வாழ்வைத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார்.

‘‘நிறைய உடற்பயிற்சிகள், ஓட்டம், சைக்கிளிங். இப்படி ஆரோக்கியமான ஒரு வாழ்க்கைமுறையைப் பின்பற்ற ஆரம்பித்தோம். மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டேன். 5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ. என கொஞ்சம் கொஞ்சமாக ஓடும் தூரத்தை அதிகரித்துக்கொண்டேன். ஏற்கெனவே மூன்று மாதங்களாக அலுவலகத்துக்குப் புடவையில்தான் சென்று வந்தேன். எனவே, மாரத்தானை ஏன் புடவையில் ஓடக்கூடாது என்று தோன்றியது. அப்போது ஏர்டெல் மாரத்தான் போட்டியில் ஓடலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். அதில் ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாக ஓட வேண்டும். அந்தப் போட்டியில் புடவை கட்டிக்கொண்டு ஓடுவது என்று முடிவெடுத்தேன்.

இது தொடர்பாக இணையத்தில் தேடியபோது மூன்று கட்டுரைகள் கிடைத்தன. மும்பையில் 61 வயது பெண்மணி புடவை கட்டிக்கிட்டு மூன்று கி.மீ. ஓட்டத்தில் ஜெயிச்சிருந்தார்கள். அடுத்து, மும்பை பின்கத்தானில் அம்ருதா ஜோஷி என்பவர் புடவை கட்டிக்கிட்டு ஐந்து கி.மீ. ஓடியிருந்தார். மூன்றாவதாக ட்ரையத்லான் வீரர் சோமனின் அம்மா. மாரத்தானில் அவரும் புடவை கட்டிக்கொண்டு ஓடியிருக்கிறார். ஆனால், இவர்கள் யாருமே உலக சாதனைக்காக ஓடியிருக்கவில்லை. கின்னஸ் ரெக்கார்ட் கூட 21 கி.மீ. பிசினெஸ் உடையில் ஓடியதாகத்தான் இருந்தது.

எனவே புது உலக சாதனை படைக்கத் திட்டமிட்டேன். ‘குறைந்த நேரத்தில் புடவையில் முழு மாரத்தான்’ (fastest marathon dressed in a sari). நான்கு மணி நேரம் 57 நிமிடங்கள் 44 விநாடிகளில் (4:57:44) இந்த சாதனையைச் செய்தேன். இதுதான் இப்போது கின்னஸ் ரெக்கார்டு. புடவையில் ஓட வேண்டும். ஆனால், தடுக்கி விழக் கூடாது. இதற்கு வசதியான மெட்டீரியல், புடவை கட்டும் முறை எது என்று ஆராய்ந்தேன். நிறைய ஸ்டைல்களில் புடவை கட்டி பயிற்சி ஓட்டங்களில் ஓடிப் பார்த்தேன். கடைசியில் என் பாட்டி கட்டின முறைதான் கைகொடுத்தது. அவர் உடுத்திய பழைய ஆந்திரா ஸ்டைல் புடவை சரியாக இருந்தது.

ஆனால், அந்த முறையில் எனக்கு சரியாகத் கட்டத் தெரியாது. வீடியோ பார்த்துக் கற்றுக் கொண்டேன். இந்தமுறையில் புடவை கட்டினால் அது இடுப்புக்குக் கீழே பேண்ட் போல் மாற்றிவிடும். ஓடவும் வசதியாக இருக்கும். மடிசார் ஸ்டைல் கட்டலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், அது காற்றடித்தால் பறக்கும் என்பதால் தவிர்த்துவிட்டேன்...’’ என்று சொல்லும் ஜெயந்தி, ஷூவுக்கு பதில் சாண்டல் பயன்படுத்தியிருக்கிறார். ‘‘ஒன்பது கி.மீ., வேகத்தில் ஓட வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போதுதான் அரை மாரத்தான் ஓடுபவர்களால் எனக்கு இடையூறு ஏற்படாது. என் கோச் விக்னென், என்னை கவனித்தபடியே என் பின்னால் சைக்கிளில் வருவார்.

எனக்கான தண்ணீர், குளுக்கோஸ் மாதிரியான தேவைகளை அவர்தான் பார்த்துக்கொண்டார். என் சைக்கிள் நண்பர் தர்மா மொத்த ஓட்டத்தையும் வீடியோவாக எடுத்தார். அனுபவ் கர்மாகர் நான்கு மணி நேரத்தில் முழுமையான மாரத்தான் ஓடியவர். அவர் எனக்கு இன்னும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார். 14, 18 கி.மீ.களில் கொஞ்சம் வேகம் குறைந்தது. அப்போது அரை மாரத்தான் ஓடும் நண்பர்கள் அனுபா சேகர், விஜய் வவிலாலா, மயங்க் உள்ளிட்டோர் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள்.

வாழைப்பழம், வலிஸ்பிரே என்று தேவையான நேரத்தில் தேவையான உதவிகள் செய்தபடி என் கோச் அவ்வளவு உதவிகரமாக இருந்தார். ஓடினேன்... ஓடினேன்... ஓடிக்கொண்டேயிருந்தேன். கால் துவள; மனம் இறைஞ்ச; கண் சோர தளராமல் ஓடிக்கொண்டேயிருந்தேன். ஒருவழியாக ஓடிக் கடந்தேன். அப்படி ஒரு நாள் அது.  முக்கியமான விஷயம் எந்த உடற்பயிற்சி செய்தாலும் அதற்கான சரிவிகித ஆரோக்கிய உணவு, நியூட்ரிஷியன் ஆலோசனைகள் எனக் கேட்டு சரியான பயிற்சியாளர் துணையோடு செய்ய வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக என் உலக சாதனை நலிந்த கைத்தறித் தொழிலாளர்கள் மீதான கவனத்தை உலக அளவில் ஏற்படுத்தியிருக்கிறது என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு உதவியாக இருந்த என் கணவர், குடும்பம், நண்பர்கள், பயிற்சியாளர் அனைவருக்கும் நன்றி...’’ நெகிழ்கிறார் ஜெயந்தி சம்பத்குமார். வுமன் எம்பவர்மெண்ட், கைத்தறித் தொழிலாளர்கள் முன்னேற்றம் ஆகியவற்றை மையநோக்காக முன்வைத்து தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார் இந்த  மாரத்தான் ராணி. இப்போது எங்கு எந்த மாரத்தான் நடந்தாலும் ஜெயந்தி சம்பத்குமாருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது.

- ஷாலினி நியூட்டன்