விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 54

ஆம் என்பதற்கான அறிகுறிகள் ஓவியங்களிலேயே தெரிந்தன. கிருஷ்ணன் அதைத்தான் உற்றுப் பார்த்தான். ஓர் இடத்தில் அல்ல, இரு இடத்தில் அல்ல... எண்ணற்ற இடங்களில் ஆங்காங்கே ஓர் இளவரசரின் படுகொலை குறித்த சித்திரங்கள் அந்த சுரங்கத்தில் வரையப்பட்டிருந்தன. அந்த இளவரசர் யார் என்ற சந்தேகமே எழவில்லை. முதல் பார்வையிலேயே கண்டுபிடித்து விட்டான். ஆதித்த கரிகாலன்! ராஜராஜ சோழனின் அண்ணன்! அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எல்லோரையும் போல் கிருஷ்ணனும் படித்திருக்கிறான். எனவே ஆதித்த கரிகாலன் யார் என்ற தகவல் அனைத்து தமிழர்களையும் போல் அவனும் அறிந்திருந்தான்.

இளவரசராக பட்டம் சூட்டப்பட்ட ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்படுகிறார். என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால், படுகொலை செய்யப்பட்டது உண்மை. இந்தக் கொலையை நிகழ்த்தியவர்கள் யார்? ‘சோமன், இவன் தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதி ராஜன், இவன் தம்பி பரமேச்வரன் ஆன இருமுடிச் சோழ பிரும்மாதி ராஜன், இவர்கள் உடன் பிறந்த மலையனூரானும் (இவன் பெயர் மலையனூரான பார்ப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன் தாய் பெரிய நங்கைச் சாணியும்),

இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களும், ராமத்ததம் பேரப்பன் மாரும், இவர்களுக்கு பிள்ளை கொடுத்த மாமன் மாரிடும் இவர்கள் உடன் பிறந்த பெண்களை வேட்டரினவும், இவர்கள் மக்களை வேட்டரினவும் ஆக...’ என உடையாளூர்க் கல்வெட்டு பெயர்களை பட்டியலிட்டிருக்கிறது. கே.கே.பிள்ளை, சதாசிவப் பண்டாரத்தார், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் இந்த படுகொலையை ஒப்புக்கொண்டு தங்களது நூல்களை எழுதியுள்ளனர். ஆனால், கொன்றவர்களின் பின்புலம் குறித்து தெளிவாக பதிவு செய்யவில்லை. போலவே திருவாலங்காட்டு செப்பேடும் இந்த உண்மையை மறைத்துள்ளது.

காரணம், கொலையாளிகளான இவர்கள் அனைவருமே பார்ப்பன சமூகத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள். இதனால்தான் கொலையாளிகளைத் தண்டிக்கும் பணி ஆதித்த கரிகாலனின் அப்பாவான சுந்தர சோழன் காலத்திலோ அல்லது ஆதித்த கரிகாலனின் பெரியப்பா மகனான மதுராந்த சோழன் காலத்திலோ நடைபெறவில்லை. மாறாக இவர்கள் அனைவருக்கும் பிறகு - கிட்டத்தட்ட 20 / 25 ஆண்டுகளுக்குப் பின் - அரசராக முடிசூட்டப்பட்ட ராஜராஜ சோழன்தான் தன் அண்ணனை படுகொலை செய்தவர்களைத் தண்டித்தார். ஓர் இளவரசனின் மரணத்துக்கான நீதி விசாரணையும், தீர்ப்பும் 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தமிழகத்தில் அன்றே வழங்கப்பட்டிருக்கிறது!

தீர்ப்பு? மரண தண்டனையோ சிறைச்சேதமோ அல்ல. மாறாக, படுகொலை நிகழ்த்தியவர்களும், அவர்களது வாரிசுகளும்  குடும்பத்தினரும் - ஏன்-தூரத்து உறவினர்களும்... சுருக்கமாக கிளையோ நேரடியோ மொத்தமாக ரத்த சொந்தங்கள் - நாட்டை விட்டே வெளியேற வேண்டும். அதுவும் ஆணோ, பெண்ணோ, வயதானவர்களோ இளமையில் இருப்பவர்களோ... ஒற்றை  ஆடையுடன் செல்ல வேண்டும். கூட ஒரு துண்டு துணி கூட அணிந்திருக்கக் கூடாது. போலவே வேறு எந்த சொத்தையும் எடுத்துச் செல்லக் கூடாது.

இப்படித்தான் இளவரசனின் படுகொலைக்கு காரணமாக இருந்தவர்களின் ரத்த சொந்தங்கள் அனைவரும் - கைக்குழந்தை முதல் வயதானவர்கள் வரை - சோழ நாட்டை விட்டு கால்நடையாக வெளியேறினார்கள்; வெளியேற்றப்பட்டார்கள். அப்போது மக்கள் அவர்கள் மேல் கல்லெறிந்த சம்பவங்களும் எச்சில் துப்பிய நிகழ்வும் அரங்கேறியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் சிகரம் காந்தளூர் போர். ஒரு பெரிய நிலப்பரப்பின் அரசராக முடிசூட்டப்பட்ட ஒருவர் சாதாரண கடிகை மீது போர் தொடுப்பாரா? அதுவும், தான் மன்னராக முடிசூட்டப்பட்ட பின் நடக்கும் முதல் யுத்தமாக இதை தேர்ந்தெடுப்பாரா... அப்போருக்கு தானே தலைமை தாங்குவாரா..?

இத்தனைக்கும் எல்லைப்புறங்களில் அப்போது எதிரிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. பாண்டியர்களும் சேரர்களும் தாக்குதலுக்கான தருணம் பார்த்து காத்திருந்தார்கள். இந்த சூழலில்தான் அரசராக பதவியேற்ற கையோடு படைக்கு தலைமை தாங்கி காந்தளூரில் இருந்த கடிகையை ராஜராஜ சோழன் அழித்தார். மட்டுமல்ல. இந்த வெற்றியை கல்வெட்டில் பொறிக்கும்படியும் ஆணையிட்டார்! ஏனெனில், ஆதித்த கரிகாலனை படுகொலை செய்தவர்களுக்கும் அக்கடிகைக்கும் தொடர்பிருந்தது. இது நடந்த வரலாறு. ரத்த சரித்திரம்.
இதற்கும் இங்குள்ள சித்திரத்துக்கும் என்ன தொடர்பு?

சுற்றி வருபவர்களுக்கு சந்தேகம் எழாதபடி நடந்தபடியே தன் நினைவின் அடுக்குகளில் இருந்து அசை போட்டான். ஏனெனில் ஆதித்த கரிகாலனை படுகொலை செய்தவர்கள் பார்ப்பனர்கள் என்ற விவரத்தை பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் தங்கள் நூலில் குறிப்பிடவில்லை. பாண்டிய மன்னரான வீரபாண்டியனின் தலையை ஆதித்த கரிகாலன் கொய்ததுதான் அவர் படுகொலை செய்யப்படக் காரணம் என்கிறார் சதாசிவ பண்டாரத்தார். இதில் கொஞ்சம் மசாலா சேர்த்து அமரர் கல்கி, காதலில் தோற்றதால் ஏற்பட்ட மனநிலையும் காரணம் என்று ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் எழுதியிருக்கிறார்.

இதுதவிர வேறு சில தியரிகளும் இருக்கின்றன. ராஜராஜனே, தான் பட்டத்திற்கு வருவதற்காக, தந்திரமாக கரிகாலனைக் கொன்றான் என்றும், அதன் காரணமாகவே சாட்சியங்களை அழிக்கும் நோக்கில் நாட்டைவிட்டு சம்பந்தப்பட்டவர்களை வெளியேற்றினான் என்றும், அவர்கள் தனக்கு செய்த உதவியின் காரணமாகவே அவர்கள் இளவரசனைக் கொன்றும் அவர்களை தூக்கிலிடவில்லை என்றும் சிலர் குறிப்பிடுவதை அந்த நேரத்தில் கிருஷ்ணன் நினைத்துப் பார்த்தான்.

போலவே வேறு ஒரு contextல் படுகொலை நிகழ்த்திய ரவிதாசன் உள்ளிட்டவர்களுக்கும் வீர பாண்டியனுக்கும் தொடர்பு இருந்தது. நெருக்கமான நண்பர்களாக வாழ்ந்தார்கள். இவர்கள் அனைவருமே காந்தளூர் கடிகையில் ஒன்றாகப் பயின்றார்கள். இதனாலேயே தங்கள் நண்பனைக் கொன்றதற்கு பழி தீர்க்கும் விதமாக ஆதித்த கரிகாலனைப் படுகொலை செய்தார்கள்... என்று எழுதப்பட்ட பதிவையும் கிருஷ்ணன் நினைவுகூர்ந்தான். சட்டென்று அவன் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. ஒருவேளை விஜயனின் வில்லுக்கும் ஆதித்த கரிகாலன் படுகொலைக்கும் சம்பந்தம் இருக்கிறதா..?

(தொடரும்)

ஓவியம் : ஸ்யாம்