யார் இந்த செளமியமூர்த்தி தொண்டைமான்?



- என்.யுவதி

‘தொண்டைமான் பெயரை நீக்குவதா? இலங்கை அரசுக்கு தலைவர்கள் கண்டனம்...’ கடந்த வாரம் முதல் ஊடகங்களில் இச்செய்தி அடிபடுகிறது. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ, விஜயகாந்த், திருநாவுக்கரசர், சீமான் உட்பட தமிழகத்தைச் சார்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் ஆர்வலர்கள் ஆகியோரும் இந்தப் பிரச்னைக்காகக் குரல் கொடுத்துவருகிறார்கள். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். இந்தியா மட்டும் அல்லாது ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளில் இருந்தும் குரல்கள் எழுகின்றன.

இலங்கையில் மலையகத் தமிழர் வாழும் பகுதிகளில் போராட்டங்கள், ஊர்வலங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. என்னதான் நடக்கிறது இலங்கையில்..? செளமியமூர்த்தி தொண்டைமான் இலங்கையின் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவர். இன்றைய பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டைமானின் தந்தை. மலையகத் தமிழர்களின் நலனுக்காகத் தன் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டவர். இந்தியாவில் புதுக்கோட்டைப் பகுதியை ஆண்டுவந்த தொண்டைமான் அரச குடும்பத்தின் வழியில் வந்தவர் செளமியமூர்த்தி தொண்டைமான்.

ஆனால், இவரது தந்தையார் கருப்பையாவே மிகவும் வறுமையான சூழலில்தான் பிறந்தார். தங்கள் குடும்பத்தின் பூர்வீக பழம்பெரும் செல்வங்கள், அந்தஸ்து அனைத்தும் இழந்த அவர் பிழைப்பதற்காக இலங்கையின் மலையகப் பிரதேசத்துக்குச் சென்றார். அங்கு தன் கடின உழைப்பால் எஸ்டேட்டுகளை விலைக்கு வாங்கி பெரும் செல்வம் ஈட்டினார். கருப்பையா தொண்டைமானுக்கு ஐந்தாவது மகனாக 1913ல் பிறந்தவர் செளமியமூர்த்தி தொண்டைமான். கம்பளை புனித அந்தரேயர் கல்லூரியில் செளமியமூர்த்தி படித்துக்கொண்டிருந்தபோது அங்கு காந்தியடிகள் வருகை தந்தார்.

எஸ்டேட் உரிமையாளர்கள் தங்கள் தோட்டங்களில் வேலை செய்யும் பணியாளர்களின் நல்வாழ்வுக்குப் பொறுப்பேற்று நீதியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற காந்தியின் அறிவுரை இளம் செளமியமூர்த்தியின் மனதில் ஆழமாகப் பதிந்தது. அது முதல் சமூக வாழ்வு மீதான ஆர்வம் செளமியமூர்த்திக்கு அதிகரித்தது. 1930களின் ஆரம்பப் பகுதியில் இலங்கையின் ஹட்டன் நகரில் ‘காந்தி சேவா சங்கம்’ இயங்கிவந்தது. காந்திய வழியில் ஈடுபாடு கொண்ட செல்வந்தரான செளமியமூர்த்தி அதன் கூட்டங்களில் பங்கேற்கத் தொடங்கினார்.

இலங்கை இந்திய காங்கிரஸ் என்ற கட்சியின் கம்பளை கிளைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செளமியமூர்த்தி தொண்டைமான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்சங்கவாதியாக செயல்பட்டவர். தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசிடமும் அதிகார மையங்களிடமும் எடுத்துக்கூறி அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெற்றுத்தந்தார். மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை, வாக்குரிமை, சொத்துரிமை ஆகியவற்றைப் பெற்றுத் தந்ததில் செளமிய மூர்த்தி தொண்டைமானுக்குப் பெரும் பங்கு உள்ளது.

இதற்காகத் தொடர்ச்சியாக அவர் மேற்கொண்ட போராட்டங்களும் முயற்சிகளும் ஒப்பீடு அற்றவை. இவரது சேவையை கெளரவிக்கும் முகமாக இலங்கையின் நாடாளுமன்ற வளாகத்தில் இவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இலங்கைநாடாளுமன்ற வளாகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ள ஒரே தலைவர் செளமியமூர்த்தி தொண்டைமான்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத் திருத்தக்குழுவின் தேர்வுக் குழு உறுப்பினராக இருந்தவர். இலங்கை அரசில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அமைச்சராக இருந்தவர். தொண்டைமான் மலையகத் தமிழர்களின் மேம்பாட்டுக்காகச் செய்த பணிகள் அனைத்துமே மிகவும் முக்கியமானவை.

குறிப்பாக, மலையகத் தமிழர்களின் குழந்தைகளின் கல்விக்காக பல முன்னெடுப்புகளைச் செய்தார். இலங்கையின் பிற பகுதிகளில் மலையகத் தமிழர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த சூழலில் செளமிய மூர்த்தி தொண்டைமான் தன் சொந்தப் பணத்தைப் போட்டு அருமுயற்சி எடுத்து சில வெளிநாடுகளில் இருந்தும் நிதி பெற்று தொழிற்பயிற்சி மையத்தைத் தொடங்கினார். இந்தத் தொழிற்பயிற்சி மையத்துக்கு சமீபத்தில் இந்திய அரசுகூட ரூ.20 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

இப்படி, தன் தனிப்பட்ட முயற்சியால் செளமியமூர்த்தி தொடங்கிய தொழிற்பயிற்சி மையத்தின் பெயரில் இருந்து செளமியமூர்த்தியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல், ரம்பொட நகரில் உள்ள கலாசார மையம், நார்வுட் நகர விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் இருந்த செளமிய மூர்த்தி தொண்டைமானின் பெயரையும் நீக்கியுள்ளது சிங்கள அரசாங்கம். இந்தப் பிரச்னை இப்போது தமிழர்கள் வாழும் மலையகப் பகுதிகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சிங்கள பயங்கரவாதத்தால் மோசமாக பாதிக்கப்பட்டு அடிப்படை வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்கள் மனதில் இந்தப் பெயர் மாற்ற செய்தி காயத்தை ஏற்படுத்தி உள்ளது.

மலையகப் பகுதிகள் எங்கும் ஊர்வலங்கள் சென்றும், போராட்டங்கள் நடத்தியும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துவருகிறார்கள். இலங்கை எனும் நிலம் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் பொதுவானது. தமிழர்கள் காலங்காலமாக வசித்துவரும் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை வலுக்கட்டாயமாக ஏற்படுத்துவதோடு அங்கிருக்கும் கல்வி சாலைகள் உள்ளிட்ட பிற பண்பாட்டு அமைப்புகளின் பெயர்களில் இருந்தும் தமிழ்த் தலைவர்களின் பெயர்கள் நீக்கப்படுவது இலங்கை அரசின் சிங்கள இனவெறி ஆதரவுப் போக்கையே காட்டுகிறது என்ற விமர்சனம் பரவலாக எழுத்துள்ளது.