COFFEE TABLE



- குங்குமம் டீம்

ஓவன் இல்லாமல் கேக்
மைக்ரோ ஓவன் இல்லாமலேயே கேக் தயாரிக்க முடியும் என நிரூபிக்கிறார் வட இந்தியாவில் வசிக்கும் முதியவர் ஒருவர். ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்திற்காக சைவம், அசைவம் என விதவிதமாக தன் கைப்பக்குவத்தில் சமைத்துப் பரிமாறுவதை ஃபேஸ்புக்கில் ‘Grandpa Kitchen’ என்ற பெயரில் வீடியோவாக பதிவிட்டு அசத்துகிறார். அதில் வெளியாகியிருந்த ‘மைக்ரோ ஓவன் பயன்படுத்தாமல் வெறும் விறகு அடுப்பிலே கேக் தயாரிக்கும்’ வீடியோவை ஃபேஸ்புக்கின் ‘Shades Of Black TV’ பக்கத்தில் பகிர... 27 லட்சம் பார்வையாளர்கள், 3 லட்சம் பகிர்வுகள் என வைரலாகிவிட்டது அந்த வீடியோ. ‘திறந்தவெளியில் சமைக்கும் போது கூடுதல் கவனம் தேவை’ என டிப்ஸ் கமென்ட்டுகளும் நிறையவே வருகின்றன.

ஆராவின் ஆனந்தம்
‘பைசா’ படத்தின் ஹீரோயின் ஆரா, இப்போது நடித்து வரும் ‘குரு உச்சத்துல இருக்காரு’ படப்பிடிப்பிற்காக கேரளா சென்று வந்த அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார். ‘‘கேரளாவில் ஓர் அடர்ந்த காட்டுப்பகுதியில் இருக்கற அருவியில் ஷூட். நாங்க போன நேரம் அருவியில தண்ணீர் இல்ல. உடனே நிறைய லாரிகள்ல இருந்து தண்ணீர் கொண்டு வந்து அருவியில் நீர் வர வச்சிருந்தாங்க. அருவியில் தண்ணீர் சத்தம் கேட்டதும் யானைகள் கூட்டம் வந்திடுச்சு. யூனிட்ல இருந்த எல்லாருமே பயந்திட்டோம். ஆனா, யாரையுமே யானைகள் தொந்தரவு பண்ணாமல் தண்ணியைக் குடிச்சிட்டு அமைதியா கிளம்பிடுச்சு...’’ என உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கிறார் ஆரா.

மனிதநேயம்
சீனாவின் ஜின்ஹுவா நகரின் பரபரப்பான சாலை. வாகனங்கள் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கும் காலை வேளை. 80 வயதான பாட்டி ஒருவர் சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருக்கிறார். அவர் இருக்கும் இடத்தில் சிக்னல் இல்லை என்பதால் சாலையைக் கடப்பதற்கு சிரமமாக இருக்கிறது. அரை மணிநேரம் ஆகியும் அவரால் ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியவில்லை. வாகனங்கள் வருவதும் போவதும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

அப்போது பாட்டியின் அருகே மஞ்சள் வண்ணத்தில் ஒரு கார் வருகிறது. மற்ற வாகனங்கள் எதுவும் செல்ல முடியாதபடி சாலையின் குறுக்காக அந்த கார் நிற்கிறது. அந்த சாலையே சில நிமிடங்களுக்கு டிராபிக் ஜாமில் மூழ்குகிறது. வாகனங்கள் எதுவுமே நகராமல் நிற்பதைப் பார்க்கும் பாட்டி மெதுவாக அந்த சாலையைக் கடந்து இன்னொரு பக்கத்துக்குச் செல்கிறார். பாட்டி சாலையைக் கடந்தவுடன் மஞ்சள் கார் புறப்படுகிறது. சி.சி.டி.வி கேமராவில் பதிவான இந்தக்காட்சியை யூடியூப்பில் யாரோ ஒருவர் தட்டிவிட, மஞ்சள் காரை ஓட்டிவந்தவரின் மனித நேயத்தை லட்சக்கணக்கானோர் பாராட்டி நெகிழ்ந்துள்ளனர்.

ஏர் ப்யூரிஃபயர் 
தில்லியில் கடுமையான காற்று மாசுபாடு நிலவி வருகிறது. மக்களால் வீட்டைவிட்டு வெளியே வர முடியவில்லை. வீட்டுக்குள்ளும் தூய்மையான காற்று கிடைப்பதில்லை. இந்தச் சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சர்வதேச நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு காற்றை சுத்திகரிக்கும் ‘ஏர் ப்யூரிஃபயரை’ அறிமுகப்படுத்தி வருகின்றன. இதில் புதுவரவாக ஷியோமியின் அட்வான்ஸ்டு தொழில்நுட்பத்துடன் கூடிய ஏர் ப்யூரிஃபயர் வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. இந்த ப்யூரிஃபயர் 650 சதுர அடி சுற்றளவுக்குள் இருக்கும் காற்றை தூய்மைப்படுத்தித் தருகிறது. விலை ரூ.8,999. 

அதிகரித்திருக்கும் மாரடைப்பு
இந்தியாவில் தொற்று நோய்களைவிட, மற்ற நோய்களால்தான் அதிகளவில் மரணங்கள் ஏற்படுகின்றன என்று மத்திய அரசின் மருத்துவ ஆய்வு கவுன்சிலும், சில தன்னார்வ அமைப்புகளும் இணைந்து செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 1990 வரைக்கும் பேறுகால நோய்கள், கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், சத்துக்குறைபாட்டு நோய்கள் மற்றும் பல்வேறு தொற்றுநோய்களால்தான் இந்தியர்கள் அதிகளவில் மரணமடைந்தனர்.

ஆனால், அதன் பிறகு மேற்சொன்ன நோய்கள் 61 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக குறைந்திருக்கிறது. அதே நேரத்தில் மாரடைப்பு, புற்றுநோய், மூச்சுக்குழாய் பிரச்னை, நரம்பு மண்டலப் பிரச்னை போன்ற நோய்கள் 30 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக கேரளா, கோவா மற்றும் தமிழ்நாட்டில்தான் இந்த நோய்கள் அதிகம். பின்தங்கிய மாநிலங்களான பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானில் குறைவு என்பதுதான் நிபுணர்களை யோசிக்க வைத்திருக்கிறது.