making of தீரன் அதிகாரம் ஒன்று



விவரிக்கிறார் இயக்குநர் வினோத்

- மை.பாரதிராஜா

‘கார்த்தி back to form. நீண்ட நாட்கள்... வருடங்களுக்குப் பின் படத்தின் முதல் ஷாட்டில் இருந்து கடைசி ஃப்ரேம் வரை டைரக்டரின் க்ரிப் / கமாண்டிங் பவரை பார்க்க முடிந்தது. சணல் கயிற்றால் இறுக்கிக் கட்டியது போல் அடர்த்தியும் நேர்த்தியுமான பரபர ஸ்கிரிப்ட். யூனிட்டில் உள்ள அத்தனை பேரும் பேய்த்தனமாக உழைத்திருக்கிறார்கள்...’ என கோலிவுட்டில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’க்கு எக்கக்சக்க பூங்கொத்துகள் குவிகின்றன. எப்படி இந்த மேக்கிங் சாத்தியமாயிற்று என விவரிக்கிறார் படத்தின் இயக்குநரான எச்.வினோத். ‘‘உண்மைல நடந்த நிகழ்ச்சிதான் ‘தீரன்’. இதைப்பத்தி நிறைய தகவல்களும், ஆவணங்களும் எங்களுக்கு கிடைச்சிட்டே இருந்தது.

ஸ்கிரிப்ட்டா எழுதறப்ப எல்லா தகவல்களையும் ஆவணங்களையும் விஷுவலா, கமர்ஷியலா சொல்ல முயற்சி எடுத்தோம். இதுக்கு முன்னாடி நிறைய போலீஸ் படங்கள் வந்திருக்கு. அதையெல்லாம் மீறி ‘தீரன்’ தனிச்சு தெரியணும்னு மெனக்கெட்டோம். Detailingல கவனம் செலுத்தினோம்...’’ மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, தீவிரமாக பேசத் தொடங்கினார் வினோத். ‘‘வட இந்திய லொகேஷன்ஸ் பத்தி சொல்றதுக்கு முன்னாடி சென்னை லொகேஷன்ஸ் பத்தி சொல்லிடறேன். கதையோட காலகட்டம் 1995ல இருந்து 2005 வரை. தவிர கதையோட பேஸிக், highway dacoits. ஸோ, இங்குள்ள ஹைவேஸ் ரோடுகளைப் பார்த்தோம்.

எல்லாமே மாறியிருந்தது. அதனால கதை நடந்த  ஊர் மாதிரி, லொகேஷன்ஸை தேட ஆரம்பிச்சோம். என் அசிஸ்டென்ட்ஸ் செந்தில், விஷ்ணு, வாஞ்சிநாதன், அன்புனு எல்லாரும் ஆளுக்கு ஒரு பைக்ல சென்னைலேந்து 50 கிலோமீட்டருக்கு உட்பட்ட இடங்கள்ல தேட ஆரம்பிச்சாங்க. அவங்க கொண்டு வந்து குவிச்ச வீடுகள்ல சிலதுலதான் பர்மிஷன் கிடைச்சது. உடனே சென்னை போர்ஷனை ஷூட் பண்ணினோம். வட இந்திய லொகேஷன்ஸை முதல்ல நேர்ல பார்க்க நானும் ஒளிப்பதிவாளர் சத்யாவும் விரும்பினோம். இதுக்கு தயாரிப்பாளர்கள் பிரகாஷ்பாபு - எஸ்.ஆர்.பிரபு ரொம்பவே உதவினாங்க.

அங்குள்ள லொகேஷன் மேனேஜர்களான ப்ரதீப், மங்கல்சிங்கிட்ட பேச வச்சாங்க. நெட்ல ஒரு கோட்டையைப் பார்த்திருந்தேன். அங்க போய் மேல ஏறி ஜெய்ப்பூரோட மொத்த வியூவையும் பார்த்தேன். பத்து வருடங்கள்ல எல்லாமே நவீனமா மாறியிருந்தது. அதேமாதிரி கன்வா நகரம். இது நிஜ சம்பவம் நடந்த ஊர். ஸோ, ஆவணங்கள்ல சொல்லப்பட்ட அதே கன்வால ஷூட் செய்ய விரும்பினேன். ஆனா, அந்த நகரமும் கார்கள், கண்ணாடி மாளிகைகள், செல்போன்கள்னு லேட்டஸ்ட்டா மாறியிருந்தது. நாங்க அசரலை. லொகேஷன் வேட்டையைத் தொடர்ந்தோம். ஜெய்ப்பூர்ல இருந்து பஸ்ல டிராவல் செய்து உதய்ப்பூர்ல இறங்கினோம்.

நாங்க நினைச்ச லொகேஷன்ஸும், ஆரவல்லி மலைத்தொடரும்  கிடைச்சது. ஆனா, முழுப்படத்திற்கும் அந்த இடங்கள் மட்டும் போதாதே! அதனால பஸ்லயே 22 மணி நேரம் பயணம் செஞ்சு பொக்ரான் வழியா ஜெய்சால்மர் போனோம். அங்க நினைச்ச இடங்களை நோட்ஸ் எடுத்துக்கிட்டு ஜோத்பூர் வந்தோம். மார்க்கெட் பகுதிகள் கிடைச்சது. அப்புறம் ரயில்ல அகமதாபாத் வந்தோம். அங்கிருந்து பாகிஸ்தான் பார்டரான பூஜிக் போனோம். நாங்க டிக் செஞ்ச சில இடங்கள் மிலிட்டரி கட்டுப்பாட்டுல இருந்தது. சில லொகேஷன்ஸ்ல இருந்த ரோடுல ஷூட் பண்ண பர்மிஷன் கிடைக்காதுனு சொல்லிட்டாங்க. வேற சில இடங்கள் ரிசர்வ்டு ஏரியா.

ஆக, மீதமுள்ள இடங்கள்லதான் ஷூட் பண்ண முடியும்னு தெளிவாச்சு. இதுக்குப் பிறகுதான் ஷெட்யூல் போட்டோம். ஆர்ட் டைரக்டர் கதிர், கேமராமேன் சத்யா, ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்னு எல்லாருமா உட்கார்ந்து பேசி எந்தெந்த போர்ஷன்ஸுக்கு எவ்வளவு நாட்கள் தேவைப்படும்னு முடிவு செஞ்சோம். எல்லாம் பக்காவா ரெடியானதும் ஷூட்டிங் கிளம்பினோம்...’’ என்ற வினோத், படப்பிடிப்பு சமயத்தில் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். ‘இதுக்கு முன்னாடி ஒரு படம்தான் செய்திருக்கேன். அதனால வட இந்தியாவுல லொகேஷன்ஸ் பார்த்ததுமே ஈசியா ஷூட் பண்ணிடலாம்னு நினைச்சேன்.

ஆனா, தயாரிப்பாளர்கள் அனுபவம் உள்ளவங்க. வட இந்திய ஷூட்ல உள்ள சிரமங்களையும், நடைமுறைச் சிக்கல்களையும் தெரிஞ்சு வச்சிருந்தாங்க. இந்த வழிகாட்டுதல் எங்களுக்கு ரொம்ப யூஸ் ஆச்சு; முக்கியமா எனக்கு. பொதுவா அவுட்டோர் ஷூட்னா யூனிட்ல இருக்கிறவங்களுக்கு ஹோம் சிக் வந்துடும். தவிர ராஜஸ்தான்ல ஷூட். சாப்பாடு எப்படியிருக்குமோனு யூனிட்ல பேச்சு வந்தது. அதுக்கெல்லாம் ஏற்பாடு செய்திருக்கோம்னு தயாரிப்பாளர்கள் உறுதி அளிச்சாங்க. முக்கியமான விஷயம், கிட்டத்தட்ட ஒருநாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டி இருக்கும்னு எல்லார்கிட்டயும் முன்னாடியே சொல்லிட்டோம்.

யூனிட்ல எல்லாரும் இதுக்கு சம்மதிச்சாங்க. நல்ல படம் பண்ணப் போறோம்னு எல்லாருக்குமே தெரிஞ்சிருந்தது. நாங்க செலக்ட் பண்ணிய இடங்களுக்கு எல்லாம் நேரடியா விமான வசதி கிடையாது. ஃப்ளைட்ல போய் இறங்கினதும் ஜீப் டிராவல். எந்த இடத்துலயும் யாருக்கும் எந்த சங்கடமும் ஏற்படாதபடி தயாரிப்பாளர்கள் ப்ளான் பண்ணி கேர் எடுத்துக்கிட்டாங்க. இந்த இடத்துல கார்த்தி சாரைப் பத்தி சொல்லணும். எங்க ஸ்கிரிப்ட் மேல, ஹோம் ஒர்க் மேல, ரிசர்ச் மேல முழு நம்பிக்கை வைச்சார். ஃபைனல் ஸ்கிரிப்ட் அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. கதைக்கு என்ன தேவையோ, நாங்க எதை எதிர்பார்த்தோமோ அதை எல்லாம் தன் பாடிலேங்வேஜால, நடிப்பால கொடுத்தார்.

எங்க அட்வகேட் நண்பர்கள் மூலமா ஒரிஜினல் கேஸோட தீர்ப்பு நகல், குற்றவாளிகளோட நகல் படங்களை வாங்கியிருந்தோம். அதே சாயல்ல வட இந்திய ஆட்களைத் தேட ஆரம்பிச்சோம். இங்கேயே ரெண்டு மூணு பேர் கிடைச்சாங்க. அதில் ஒருத்தர்தான் அபிமன்யு சிங். படத்தோட மெயின் வில்லன். இதற்கடுத்த கேரக்டர்ஸுக்கு கிஷோர் கடம், ரோஹித் பதக், சுரேந்தர், ஜமீல்காந்த், பிரயாஸ்மன்னு இந்தி ஆர்ட்டிஸ்ட்கள் கிடைச்சாங்க. நாங்க ஷூட் போன நேரம், க்ளைமேட் மோசமாச்சு. 55 டிகிரிக்கு வந்திடுச்சு. இதனால நடிகர்களோட தோல் எல்லாம் கறுக்க ஆரம்பிச்சது. தவிர வயிற்றுப் பிரச்னைனால பெரும்பாலானவங்க அவதிப்பட்டாங்க.

வெயில் தாங்காம சிலருக்கு மூக்குலேந்து ரத்தம் வந்தது. ஆனாலும் வேலைல எல்லாரும் கரெக்ட்டா இருந்தாங்க. ஸ்கிரிப்ட்டுல கரண்ட் கம்பத்துல கட்டி வைச்சு அடிக்கிறாங்கனு எழுதியிருந்தேன். அங்க கம்பமே இல்ல. ரெண்டு, மூன்று நாட்கள் தேடி அலைஞ்சு அதை ஷூட் செஞ்சோம். மழையே இல்லாத ஊர். அதனால நார்மலான ஊராவே அது இல்ல. வீடுகளைக் கூட செட் போட்டு எடுக்க வேண்டிய சூழல்...’’ என்ற வினோத், பஸ் ஃபைட் குறித்து விவரித்தார். ‘‘இந்த போர்ஷனை ரெகுலரான இரண்டு பெரிய கேமரா உட்பட அஞ்சு கேமரா வைச்சு ஷூட் பண்ணினோம். ரெண்டு பஸ் ஒரே ஸ்பீடுல போறதே பெரிய ரிஸ்க்.

கொஞ்சம் பிசகினாலும் நடுவுல தொங்கிட்டிருக்கற அந்த கேரக்டர் (ரோஹித் பதக்) நசுங்கிடுவார். ஒரு பஸ் மேல ஹீரோ. தவிர ரெண்டு பஸ்லயும் 50க்கும் மேற்பட்ட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்ஸ். சேஃப்டி எக்யூப்மெண்ட், ஃபைட்டர்கள்னு இருந்தாங்க. எல்லாத்தையும் மீறி வெயில், புழுக்கம். திலீப் மாஸ்டரோட திட்டமிடல், ஃபைட்டர்ஸோட ஒத்துழைப்பு... இதெல்லாம் இல்லைனா அந்த சீக்குவென்ஸை ஷூட் செய்திருக்க முடியாது. கேமரா அசிஸ்டென்ட்ஸ் அத்தனை பேரும் பரபரப்பா வேலை பார்த்தாங்க. அந்த ரோடுகள்ல டிராஃபிக்கை நிறுத்தி ஹோல்டு பண்ணியிருந்தோம். இடைப்பட்ட நேரத்துல கேமரா ஷிஃப்டிங், லென்ஸ் மாத்தறதுனு எல்லாத்தையும் செஞ்சாங்க.

பகல்ல என்னவெல்லாம் சிரமப்பட்டோமோ அதே அளவுக்கு நைட் ஷூட்லயும் அனுபவிச்சோம். நாங்க படப்பிடிப்பு நடத்தின இடத்துல மின்வசதி கிடையாது. லைட்டிங் பிரச்னையை சமாளிச்சது பெரிய சவால். இரவுல குதிரை மேல வில்லன் ஆட்கள் வர்ற போர்ஷனை எடுத்தப்ப நிறைய விஷப் பாம்பு களைப் பார்த்தோம். அதனால முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு அந்த இடத்துல படப்பிடிப்பு நடத்தினோம். ஒண்ணு தெரியுமா? வில்லன் அபிமன்யு சிங்குக்கு உண்மைலயே குதிரை ஓட்டத் தெரியாது!

டூப்புக்கு சாத்தியமில்லைனு புரிஞ்சதும் திலீப் மாஸ்டர் கொடுத்த தைரியத்துல அவர் ஹார்ஸ் ரைடிங் கத்துக்கிட்டார். ஸ்பெஷலா பாராட்டப்பட வேண்டியவங்க ஆர்ட் டைரக்டரின் அசிஸ்டென்ட்ஸ். நாங்க தூங்கறப்பவும் அவங்க ஒர்க் பண்ணிட்டு இருப்பாங்க. விழிக்கிறப்பவும் வேலை நடந்துட்டு இருக்கும். இப்படி மொத்த யூனிட்டும் பேய்த்தனமா உழைச்சதாலதான் இந்தப் படம் சாத்தியமாச்சு. ஒளிப்பதிவாளர்ல இருந்து சாப்பாடு பரிமாறின உதவியாளர் வரை சகலரும் இதை தங்களோட படமா நினைச்சாங்க.

இந்த யூனிட்டிதான் எனக்கு கிடைச்ச பெரிய பலம். எங்களை முழுசா நம்பின கார்த்தி சாரும் தயாரிப்பாளர்களும் இல்லைனா ‘தீரன்’ சாத்தியமாகி இருக்காது. இந்தப் படத்தோட ரியல் ஹீரோவான ஜாங்கிட் சார் படத்தைப் பார்த்து, ‘நாங்க பண்ணினதை அப்படியே கண்ணு முன்னாடி ரியலா கொண்டு வந்துட்டீங்க வினோத்... Great job’னு இறுக்கமா கைகொடுத்து பாராட்டினார்!’’ சொல்லும்போதே வினோத்தின் முகத்தில் அவ்வளவு பூரிப்பு. உழைப்பின் பலனை அனுபவிப்பவர்கள் மட்டுமே உணரும் பூரிப்பு அது!