அறம்



இவர்தான் அறம் படத்தில் சொல்லப்படும் மணிகன்டன்

- பேராச்சி கண்ணன்

அறம்’ படத்தில் வரும் அந்தக் காட்சியை யாராலும் மறக்க முடியாது. ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்துவிடுகிறது. அடுத்த சில நிமிடங்களில் இந்தச் செய்தி நெருப்பைப் போல நாலாப்பக்கமும் பரவுகிறது. ‘எஞ்சினியர் மணிகண்டனை கூப்பிடுங்க...’ என்பார்கள் கலெக்டர் நயன்தாரா உள்ளிட்ட மொத்த அதிகாரிகளும். ‘யார் இந்த மணிகண்டன்?’ என படம் பார்க்கும் பார்வையாளர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. படத்திலும் அந்த மணிகண்டனைக் காட்டியிருக்க மாட்டார்கள். மதுரை டிவிஎஸ் சமுதாயக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் மணிகண்டன்.

கடந்த 2014ம் ஆண்டு சங்கரன்கோவில் அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்டெடுத்து தமிழக மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றவர். அப்போது ‘குங்குமத்’தில் அவரைப் பற்றி எழுதியிருந்தோம். இந்நிலையில், ‘அறம்’ படத்தில் அவரது பெயர் அடிபட, மீண்டும் மணிகண்டனைத் தொடர்பு கொண்டோம். ‘‘சார்... ‘அறம்’ படத்துலதான் இருக்கேன். படம் பார்த்திட்டு உங்ககிட்ட பேசுறேன்...’’ என்றவர் அதேபோல் படம் முடிந்ததும் தொடர்பு கொண்டார். ‘‘டைரக்டர் கோபி நயினாருடன் ஆறு வருஷங்களா பழக்கம். ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் குழந்தையைப் பற்றி கேள்விப்பட்டார்னா உடனே போன் பண்ணி பேசுவார்.

அவருக்குப் பல தகவல்கள் கொடுத்திருக்கேன். நான் கை, கால் வச்சு ரோபோதான் பண்ணினேன். ஆனால் அவர் இந்தப் படம் மூலமா அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார்...’’ என நெகிழும் மணிகண்டன் தன் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த அந்த சம்பவத்தையும் பகிர்ந்துகொண்டார். ‘‘சொந்த ஊர் கோவில்பட்டி பக்கத்துல நாலாட்டின்புதூர். திருநெல்வேலி அரசு ஐடிஐல படிச்சிட்டு எஞ்சினியரிங் காலேஜ்ல வேலை பார்த்திட்டு இருந்தேன். லீவுநாள்ல மோட்டார் பம்ப் ரிப்பேர் பண்ற வேலைக்குப் போயிடுவேன்.

அப்படித்தான் 2003ல என் மூணு வயசு பையனோடு கோவில்பட்டில ஒரு மோட்டார் பம்பை சரி பார்க்க போனேன். அங்க ஆழ்துளைக் கிணத்துல தண்ணீர் வரலைனு கோணிப்பையைப் போட்டு மூடி வச்சிருந்தாங்க. என் மகன் விளையாடிட்டு இருக்கிறப்ப கால் தவறி அதுல விழப்பார்த்தான். ஓடிப்போய் காப்பாத்திட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு டிவில ஒரு நியூஸ் பார்த்தேன், ‘சேலம் பக்கம் ஆத்தூர்ல ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணத்துல விழுந்து 18 மணி நேரம் போராடியும் காப்பாத்த முடியலை...’னு. ஒரு செய்தியா இதை என்னால கடந்து போக முடியல. ரொம்பவே பாதிச்சது.

இனி எந்தக் குழந்தையும் ஆழ்துளைக் கிணத்துல விழுந்து சாகக்கூடாதுனு அந்த நொடில முடிவெடுத்தேன்...’’ என்கிற மணிகண்டன், அடுத்த இரண்டே மாதத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்டெடுக்கும் கருவியை உருவாக்கியிருக்கிறார்.‘‘இந்தக் கருவியைப் பற்றி தீயணைப்புத் துறைக்கும், மாவட்டக் கலெக்டருக்கும் கடிதம் எழுதினேன். கருவியைப் பரிசோதித்த தீயணைப்புத் துறை, ‘கேமரா இல்லாம குழந்தையை உள்ளிருந்து எடுக்குறது கஷ்டம். விபரீதமா ஆகிறக்கூடாது. இதை இன்னும் டெவலப் பண்ணுங்க’னு ஊக்கப்படுத்தினாங்க.

பிறகு, மூணு வருஷங்கள் தீவிரமா ஆய்வு பண்ணி 2006ல புது ரோபோவை டிசைன் பண்ணினேன். இதுல, அதி நவீன கேமரா, மினி டிவி, அழுத்தம் பார்க்கிற கருவி எல்லாமே இருக்கும். இதுக்கு சென்னை ஐஐடி சிறந்த கண்டுபிடிப்புனு சான்றிதழ் தந்தாங்க. தீயணைப்புத் துறை இது மாதிரி சம்பவம் நடக்கிறப்ப வந்து குழந்தையை மீட்டுக் காட்டச் சொன்னாங்க. அப்பதான் கருவி பயனுள்ளதா... இல்லையானு சொல்ல முடியும்னு சொல்லிட்டாங்க. இந்தக் கருவி 9 அடி உயரம் கொண்டதா தயார் பண்ணியிருந்தோம். ஒரு டெம்போவுலதான் கொண்டு போக முடியும். அந்நேரம் திருச்சில ஒரு சம்பவம்.

நாங்க போறதுக்குள்ள பக்கவாட்டுல தோண்டினதால ஈரமண்ணு அதிகமாகி குழந்தை இறந்து போச்சு...’’ என வருந்துகிறார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் ஆசிரியர் பணிக்காக மதுரை வந்திருக்கிறார். அங்கே திருநாவுக்கரசு, வல்லரசு, ராஜ்குமார் ஆகியோரின் அறிமுகம் கிடைக்க கண்டுபிடிப்பை மேலும் வலுப்படுத்தி உள்ளார். ‘‘நாங்க நான்கு பேரும் சேர்ந்து, ‘மதுரை போர்வெல் உயிர்மீட்புக் குழு’ அமைப்பை நிறுவி மக்களுக்கு இலவசமா சேவை செய்ய ஆரம்பிச்சோம். இந்தக் கருவியையும் 2 அடியா சுருக்கினோம். தேவைக்கேற்ற மாதிரி பத்து வகை கைகள்னு பல விஷயங்கள் செஞ்சோம்.

இதை வச்சுதான் அன்னைக்கு சங்கரன்கோவில்ல விழுந்த குழந்தையைக் காப்பாற்றினோம். அப்புறம்தான் எங்க மேல எல்லோருக்கும் நம்பிக்கை வந்துச்சு...’’ என்கிறவர், வேலூர், விழுப்புரம், மதுரை நகர தீயணைப்புத் துறைக்கு இந்தக் கருவியைத் தயாரித்துக் கொடுத்து, பயிற்சியும் அளித்திருக்கிறார். இப்போது, இந்தியா முழுவதிலும் இருந்து இந்தக் கருவியை வாங்க வருகிறார்களாம். ‘‘இப்ப, ஆந்திரா பக்கம் இந்தச் சம்பவங்கள் அதிகரிச்சிட்டு வருது. அதனால, அங்குள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழு இந்த ரோபோவை வாங்கினாங்க. லக்னோவுல இருந்தும் வாங்கிட்டுப் போயிருக்காங்க. இதன் விலை 60 ஆயிரம் ரூபாய்...’’ என்கிற மணிகண்டனிடம், ‘‘அன்று போர்வெல்லுக்குள் விழப் பார்த்த மகன் என்ன செய்கிறான்?’’ என்றோம்.

‘‘எனக்கு ரெண்டு பசங்க. மூத்தவன் தினேஷ்பாபுதான் 2003ல விழப் பார்த்தவன். இப்ப பி.ஈ. படிக்கிறான். சோலார் சைக்கிள் கண்டுபிடிச்சு நிறைய விருது பெற்று சயின்டிஸ்ட்டா வளர்ந்திட்டு இருக்கான். இரண்டாவது பையன் ஜெய செல்வா ஐந்தாவது படிக்கிறான். என் மனைவி சங்கரேஸ்வரி எனக்கும் மகன்களுக்கும் உதவியா இருக்காங்க. நான், இப்ப சோலார் பைக், சோலார் சைக்கிள்னு நிறைய கண்டுபிடிப்புகள் பண்ணி முடிச்சிருக்கேன். இன்னும், நிறைய பண்ணணும் சார்...’’ என்கிறார் உற்சாகம் பொங்க. 

படங்கள்: ஜெயப்பிரகாஷ்