தீரன் அதிகாரம் ஒன்று



- குங்குமம் விமர்சனக்குழு

நேருக்கு நேராக நின்று கொள்ளைக்காரர்களின் குகைக்குள்ளேயே போய் வேட்டையாடுபவனே ‘தீரன் அதிகாரம் ஒன்று’. அப்பாவி மக்களின் ஆசைக்கு தூபமிட்டு, பணத்தை கொள்ளையடித்து, வயிற்றில் அடிக்கும் மனிதர்களையும், மோசடிகளையும் ‘சதுரங்க வேட்டை’யில் வெளிச்சமிட்டு காட்டி எச்சரிக்கை செய்த அதே இயக்குநர் வினோத்தின் படைப்புதான் இது. கொடுமையாக, கருணையற்ற முறைகளில் கொலை செய்யப்பட்டு கொள்ளைகள் நடைபெற, கண்டுபிடிக்க புறப்படுகிறார் கார்த்தி. ஆகச்சிறந்த திறமையானவர்கள் கொண்ட கூட்டணியுடன் புறப்படுபவர் கொள்ளைக்காரர்களின் தடம் அறியாமல் தேங்குகிறார். ஒரு கட்டத்தில் ஒரேயொரு கைரேகை கிடைக்க, தூரத்து ஒளி தெரிகிறது.

நூல் பிடித்து முன்னேற, ஒரு கட்டத்தில் கார்த்தியின் குடும்பமே இதில் நிலைகுலைகிறது. இதைக் கடந்து எதிரிகளை கார்த்தி அழிப்பதே கதை. பலமுறை நாம் சுவைத்துப் பார்த்த போலீஸ் கதை, முற்றிலும் புதிய விதத்தில், நடந்த சம்பவங்களின் ஆதார கருதியோடு இணைந்து, உழைத்திருப்பதற்கும், மனதைப் பிடிக்கும் நம்பிக்கை இயக்குநர்களின் வரிசையில் இடம் பிடித்திருப்பதற்கும் இயக்குநர் வினோத்திற்கு வாழ்த்துகள். ஆக்‌ஷன், சென்டிமென்ட், காதல், உளவு, வியூகம், வீரம் என ஷிஃப்ட் போட்டு சிக்சர் அடித்திருக்கிறது கதை. இளம் போலீஸ் அதிகாரியாக கார்த்தி பெர்ஃபெக்ட் ஃபிட். ஆவேசமும், உள்ளடக்கிய கோபமும் வெளியேற துடித்துக் கொண்டே இருக்கிற கட்டமைப்பில் கார்த்தி சூப்பர்!

எப்பொழுதும் தொற்றி வந்த ‘பருத்திவீர’னின் சாயலை முழுக்க துறந்திருப்பது அழகு. அந்த உயரத்தில் ரகுல்... அபாரம்! முதல் சந்திப்பிலிருந்து, அப்பாவை சொல்லியே பயமுறுத்துவதில்(!) ஆரம்பித்து கொஞ்சுவது, கார்த்தி அணைக்கும்போது திடுக்கென சிலிர்ப்பது என முன்பகுதியில் அவர் கொடியும் பறக்கிறது. பிற்பகுதியில் கொடிகட்டும் அதிரடி பாய்ச்சலுக்கு முன்பகுதி சரியான ஆறுதல்.

அடுத்தடுத்து இயக்குநர் எடுத்து வைக்கும் உண்மைச் சம்பவங்களின் ஆதாரங்கள், கொள்ளையர்களின் திட்டங்கள், யுக்திகள், கார்த்திக்கு உதவிக்கரம் நீட்டும் சீனியர் ஆபீஸர் வர்கீஸ் மாத்யூ, பார்வையில் கடுமையாக மிரட்டும் அபிமன்யு, அந்த கொள்ளையர் கூட்டணி என எல்லா கதாபாத்திரங்களுமே சிறப்பு!

அரியானாவில் புகுந்த பிறகு மணலும், புழுதி பறக்கும் காற்றுமாக அதிரவைக்கும் சண்டைக்காட்சிகளில் திலீப் சுப்பராயனின் அபார உழைப்பு... அதற்கு வணங்கி உழைத்திருக்கும் கார்த்தி... ஆஸம் ஆஸம்! பன்ச் அடித்து விடாமல் முழுக்க உண்மையைப் பேசியிருக்கும் விதமும், அசல் போலீஸ்காரர்களின் சூழலையும், மனநிலையையும், போகிற போக்கில் அழகாக கடத்துகிறது திரைக்கதை. யாருக்கும் சளைக்காமல் காமிராவை வைத்து விளையாடியிருக்கிறார் சத்தியன் சூரியன்.

இரண்டு வண்டிகளுக்கு மத்தியில் அதீத பயங்கர விளிம்பில் போடும் சண்டைகள், அதைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம்... கிரேட்! சிவநாதனேஸ்வரனின் எடிட்டிங்கில் அடுக்கிய பாங்கு... ஆஹா! ஜிப்ரான் கொடி பறக்கிறது. படத்தின் ஆன்மாவை சுமந்து திரியும் பின்னணியும், மனம் உரைக்கும் பாடல்களுமாக பயணிக்கிறார். போலீஸ் படங்களுள் இது நிச்சயம் புதுவரவு!