காட்ஃபாதர்



போதை உலகின் பேரரசன் - 33

- யுவகிருஷ்ணா

அமெரிக்காவில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதங்கள் உச்சத்தில் இருந்த காலம் அது. கிரிமினல் குற்றங்களில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள், பணபலம் மூலமாக அதிகாரத்தை எட்டிவிடக் கூடாது என்கிற அக்கறையில் சட்டத்தில் நிறைய திருத்தங்களை செய்து கொண்டிருந்தார்கள். இதன் தாக்கம், உலகம் முழுக்கவே எதிரொலித்துக் கொண்டிருந்தது. அரசியலிலிருந்து கிரிமினல்களை முற்றிலும் ஒதுக்கி வைப்பதற்கான நடைமுறைகளைப் பற்றி எல்லா நாடுகளுமே யோசித்து வந்தன. கொலம்பியாவும்தான். இதெல்லாம் முழுக்க நடைமுறைக்கு வந்துவிடுவதற்குள், தான் நாட்டின் அதிபராகி விட வேண்டும் என்கிற அவசரம் பாப்லோ எஸ்கோபாருக்கு இருந்தது.

தன்னைப் போன்ற ஒரு காட்ஃபாதர், ஒரு நாட்டின் அதிபர் ஆவதின் மூலமாக இதுபோன்ற ‘தூய சட்டங்கள்’ ஏற்படுத்தப்படாதவாறு தடுக்க முடியும் என்று அவர் நம்பினார். ஒரு கிரிமினல், அதிகாரம் கிடைப்பதின் மூலமாக மட்டுமே திருந்துவான்; அவ்வாறு திருந்துபவன், தன்னுடைய பழைய பாவங்களுக்கு பிராயச்சித்தமாக மக்களுக்கு நல்லது மட்டுமே செய்வான் என்கிற வித்தியாசமான சித்தாந்தத்தை வெளிப்படையாகவே பேசினார் எஸ்கோபார். அதுவுமின்றி, நிழல் தொழில் செய்து ஓரளவுக்கு செட்டில் ஆனபிறகு, சட்டபூர்வமாக வாழ்க்கையை வாழ விரும்பும் தாதாக்களுக்கு அரசியல் மட்டுமே பாதுகாப்பான புகலிடமாக இருக்க முடியுமென்று அவர் உறுதியாக நினைத்தார்.

எனவேதான், தன்னுடைய சகோதரன் ராபர்ட்டோ மற்றும் சகா குஸ்டாவோ ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி அரசியலில் குதிக்க முடிவெடுத்தார். “நான் நிச்சயம் கொலம்பியாவின் அதிபராகப் பொறுப்பேற்பேன். யாருமே எதிர்பாரா வகையில் அது சட்டென்று நடக்கும். அதிபராகப் பதவியேற்ற பிறகு ஏழைகளின் நலனில் அக்கறை செலுத்துவேன். ஏழ்மையை விரட்ட இரவும், பகலுமாக பாடுபடுவேன். ஒரே வர்க்கம்தான் கொலம்பியாவை ஆளவேண்டுமென்று பட்டா போட்டு கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ன?” தான் கலந்துகொள்ளும் கூட்டங்களில் எல்லாம் இப்படித்தான் பேச ஆரம்பித்தார் பாப்லோ.

ஆரம்பத்தில் இந்தப் பேச்சை எல்லாம் இகழ்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்த சக கார்டெல் தாதாக்கள், ஒரு கட்டத்தில் பாப்லோவின் அரசியல் பிரவேசத்தை சீரியஸாகவே பார்க்க ஆரம்பித்தார்கள். கிரிமினல்களின் பிரதிநிதியாக ஒருவர் அதிபராக உயர்வது தங்களுக்கும் பெருமைதானே என்று ‘இன’ரீதியாக சிந்திக்க ஆரம்பித்தார்கள். பாப்லோ அடிக்கடி சொல்வார். “அமெரிக்க சிறையில் உயிரோடு இருப்பதைவிட, கொலம்பிய மண்ணுக்கு உரமாக ஆறடிக்குள் உறங்குவதே பெருமை!” பாப்லோவின் அரசியல் பிரவேசத்தை அமெரிக்கா, கவலையோடு கவனிக்கத் தொடங்கியது.

ஒருவேளை இவர் அதிகாரத்தை கைப்பற்றி விட்டால், சட்டவிரோதம் என்று சொல்லக்கூடிய போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட நிழல் தொழில்களுக்கு சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்கிவிடுவாரோ என்கிற அச்சம்தான் அதற்குக் காரணம். பாப்லோ கும்பலின் அரசியல் நோக்கம் நிறைவேறிவிடக் கூடாது என்பதற்காக எதையும் செய்ய அமெரிக்கா தயாரானது. அப்போதெல்லாம் தென்அமெரிக்காவில் அமெரிக்க எதிர்ப்பு பேசுவது ஒரு ஃபேஷன். அமெரிக்காவை எதிர்ப்பவர்களெல்லாம் எதேச்சாதிகாரத்துக்கு எதிராகப் போராடும் போராளிகளாக பார்க்கப் பட்டார்கள். மக்களின் இந்த மனநிலையை நன்கு உணர்ந்திருந்தார் பாப்லோ.

அவருடைய போதைத் தொழிலுக்கு சாவு மணி அடிக்கும் அமெரிக்காவை சுயநலத்தோடுதான் எதிர்த்தார் என்றாலும், அதை பொதுநல செயல்பாடாக மக்கள் முன்பாக முன்வைத்தார். அரசியலில் அடிக்கடி, ‘குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்க்கிறது’ என்கிற உவமானத்தை சொல்வார்கள். பாப்லோவும் அதைத்தான் முயற்சித்தார். நேரடியாக நாட்டைக் கைப்பற்றும் பதவிகளுக்கு போட்டியிடுவதற்கு முன்பாக, கொலம்பிய பாராளுமன்றத்தில் (அங்கே பாராளுமன்றத்தை காங்கிரஸ் என்பார்கள், அதற்கும் நம் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பு மில்லை) ஓர் உறுப்பினராக ஜனநாயகரீதியில், தான் தேர்ந்தெடுக்கப்பட வெண்டும் என்று முடிவெடுத்தார்.

அதுவுமின்றி ஒரு கொலம்பிய பாராளுமன்ற உறுப்பினர் மீது சட்டரீதியாக எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்கிற பாதுகாப்பும் அவருக்கு கிடைக்கும். கொலம்பிய காங்கிரசுக்கு, தொகுதிக்கு இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருவர் முதன்மை உறுப்பினர். அவருக்கு உடல்நலம் குன்றிவிட்டது அல்லது பல்வேறு காரணங்களால் செயல்பட முடியாமல் போய்விட்டது என்றால் மாற்று உறுப்பினர், அவர் சார்பாக பணிகளைச் செய்வார். தான், வளர்ந்த என்விகாதோ பகுதியின் சார்பாக காங்கிரசுக்கு மாற்று உறுப்பினராக போட்டியிட விரும்பினார் பாப்லோ.

முதன்மை உறுப்பினராக தன்னுடைய ஆட்களிலேயே ஒருவரை பினாமியாக ஜெயிக்க வைக்கவும் திட்டமிட்டிருந்தார். தானே முதன்மை உறுப்பினராக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டால், அது சலசலப்பை ஏற்படுத்தலாம் என்று நினைத்தார். அதாவது நம்மூரில் உள்ளாட்சித் தேர்தல்களில் மனைவியை ஜெயிக்க வைத்து கணவனே ஆள்வது மாதிரி ஒரு செட்டப்பைத்தான் பாப்லோ மனதுக்குள் வைத்திருந்தார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்த கட்சி புதிய சுதந்திரக் கட்சி. கொலம்பியாவை தொடர்ச்சியாக ஆண்டு வந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்த இந்தக்கட்சிக்கு ஏழை மக்கள் மத்தியில் அனுதாபம் இருந்தது. ஏழைக்கட்சியான இதை தன்னுடைய பணபலத்தின் மூலமாக விரைவில் கைப்பற்றி விடலாம் என்று பாப்லோ இக்கட்சியை தேர்வு செய்தார்.

பாப்லோவிடமிருந்து கணிசமாக தேர்தல் நிதியைப் பெற்றுக்கொண்ட புதிய சுதந்திரக் கட்சி, அவருக்கும் அவர் கை நீட்டுபவர்களுக்கும் தேர்தலில் சீட்டு தருவதாக ஆரம்பத்தில் உறுதியளித்தது. ஆனால், திடீரென அந்த முடிவில் இருந்து பின்வாங்கியது. அரசியலில் கிரிமினல்களுக்கு இடமில்லை என்றெல்லாம் அக்கட்சி ஆதரித்த அதிபர் வேட்பாளர் லூயிஸ் கார்லோஸ் அறமெல்லாம் பேச ஆரம்பித்தார். வேறு சந்தர்ப்பமாக இருந்தால் பாப்லோ, இவரையெல்லாம் போட்டுத் தள்ளிவிட்டு தலைமைப் பதவியைக் கைப்பற்றியிருப்பார்.

ஆனால் - தேர்தல் அரசியலில் குதித்துவிட்டால் எல்லாப் பிரச்னைகளையுமே நிதானமாகத்தான் கையாள வேண்டும் என்பதற்காக இந்த அவமானங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டார். அவசர அவசரமாக, சுதந்திரக் கட்சி என்கிற ஒரு உப்புமா கட்சியைப் பிடித்து தனக்கும் தன்னுடைய ஆட்களுக்கும் போட்டியிட சீட்டு வாங்கினார். பாப்லோவின் அரசியல் பிரவேசம், கொலம்பிய தேர்தலையே வண்ணமயமாக மாற்றியது. நீண்ட பேரணிகளை, மிகவும் ஏழைகள் வாழ்ந்த பகுதிகளில் நடத்தினார். பேரணியில் திறந்த ஜீப்பில் கையை ஆட்டியபடியே வலம் வருவார். மிகச்சாதாரணமாக உடையணிந்திருப்பார்.

ஜீப்பை சுற்றி, பாப்லோவின் பாதுகாவலர்கள் துண்டு நோட்டீஸ் வழங்குவதைப்போல, ரூபாய் நோட்டுகளை மக்களுக்கு வழங்கியவாறே, ‘உங்க ஓட்டு பாப்லோவுக்கு’ என்று முழக்கமிட்டுக் கொண்டே வருவார்கள். அதிர்ஷ்டம் இருந்தால், ஒரு வாக்காளரே முட்டி மோதி நான்கைந்து நோட்டுகள்கூட வாங்க முடியும். ‘துட்டுக்கு ஓட்டு’ என்கிற இப்போதைய இந்திய இடைத்தேர்தல் ஃபார்முலாவை உலகத்துக்கே வெற்றிகரமாக வெளிப்படையாக நடத்திக் காட்டிய பெருமை, பாப்லோவையே சாரும். ஒவ்வொரு பேரணி முடியும்போதும் ஒரு பிரும்மாண்ட கூட்டம் நடக்கும்.

கூட்டத்தில் பாப்லோவின் பேச்சு மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கும். “நான் மக்களின் மனிதன். செயல்பாடுகளின் நாயகன். வார்த்தை தவறாதவன்” என்று ஆரம்பிப்பார். இதையேதான் தேர்தல் கோஷமாக அவரது ஆதரவாளர்கள் மாற்றினார்கள். வானத்தை வளைத்து பாப்லோ வில்லாக்குவார் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வழங்க ஆரம்பித்தார்கள். பாப்லோவின் கூட்டங்களுக்கு மக்கள் அலைஅலையாக வந்தார்கள். வந்தவர்கள் எல்லாம் பாக்கெட் நிரம்ப கரன்ஸிகளோடு வீடுகளுக்குத் திரும்பினார்கள்.

பாப்லோவின் தேர்தல் கூட்டங்களில் பாட ‘பாப்லோ கீதம்’ ஒன்றை இயற்றினார் அவரது அம்மா ஹெர்மில்டா. அந்தப் பாடலின் குத்துமதிப்பான மொழிபெயர்ப்பு இதுதான். தமிழில் வாசிக்கும்போது கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும், ஸ்பானிய மொழியில் ரொம்பவும் இனிமையாக இருக்குமாம். பாப்லோ வீட்டுக் குழந்தைகள், இந்தப் பாடலை மைக்கில் பாடும்போது, கூட்டம் மொத்தமும் மெய்சிலிர்க்குமாம்.

‘ஒரு மனிதன் பிறந்திருக்கிறான் அவன் மாற்றங்களின் நாயகன் நல்ல குடிமக்களாகிய நாம்தான் அவனை ஆதரிக்க வேண்டும் அவனொரு புதிய தலைவன் அவனுக்கு வாக்களிக்க மக்கள் போட்டி போட்டு ஓடுகிறார்கள் ஒவ்வொரு ஓட்டமும் ஒவ்வொரு வாக்கு பாப்லோவுக்கு வாக்களிப்போம் நம் தலையெழுத்தை நாமே தீர்மானிப்போம்!’

(மிரட்டுவோம்)

ஓவியம்: அரஸ்