திரிசூலம்



அறிந்த இடம் அறியாத விஷயம்

- பேராச்சி கண்ணன்

மூன்று பக்கமும் மலைகள். ஏற்ற இறக்கத்துடன் சிறியதும் பெரியதுமாக வீடுகள். சில்லென்ற காற்று உடலை வருடிச் செல்கிறது. உள்ளுக்குள் ஏதோ மலைப்பிரதேசத்தில் இருப்பது போன்ற பரவச உணர்வு. ஆனால், நிற்பது திரிசூலம் மலையடிவாரத்தில். சென்னை விமானநிலையத்தை பேருந்தில் கடக்கும்போதெல்லாம் இந்த மலைக்குன்றை பார்த்திருப்போம். ஆனால், இதைப் பற்றிய விவரங்களைத் தெரிந்திருக்க மாட்டோம். திரிசூலம் செல்ல சென்னை விமானநிலைய முனையத்திற்கு எதிரிலுள்ள ரயில்வே கேட்டைத் தாண்டினாலே போதுமானது. ஒரு கி.மீ. தொலைவிலேயே மலை அடிவாரம் வந்துவிடும்.

நாங்கள் வழி தவறி மூவரசம்பேட்டை மெயின் ரோட்டிற்குள் நுழைந்துவிட்டோம். சரி, எதையும் நேரடியாக தொடுவதில் சுகம் என்ன இருக்கப்போகிறது... என்ற சமாளிப்புடன் தொடங்கியது எங்களின் டூவீலர் பயணம். ‘‘திரிசூலம் மலைக்கு எப்படி போகணும்?’’ ஆட்டோகாரரிடம் விசாரித்தோம். ‘‘போய்ட்டே இரு. டெட் எண்ட் வரும். அதுல ரைட் எடு. மலைதான்!’’ இரண்டு மூன்று கிலோமீட்டர் கடந்ததும் வந்து சேர்ந்தது அவர் சொன்ன டெட் எண்ட். அந்த முடிவினில் ஆரம்பிக்கிறது ஒரு நீண்ட மலைக்குவாரி. வரிசையாக பெரிய பாறைகள். குறைந்தது இருநூறு மீட்டர் உயரமாவது இருக்கும்.

பார்க்க குவாரி போலவே இல்லை. ஓகேனக்கலில் தண்ணீர் வராத நாட்களில் வெறிச்சோடிக் கிடக்கும் பாறைகளைப் போல் அவை காட்சியளித்தன. அதனடியில் மழைநீர், ஏரி போல் பரவிக் கிடக்கிறது. அதற்குள் துணி துவைத்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள். சிறுவர்கள் டைவ் அடித்து நீந்தி விளையாடுகின்றனர். இது நம்ம சென்னைதானா? என்கிற கேள்வி ஒரு நொடியில் வந்துவிட்டுப் போகிறது. அதைப் பார்த்தவாறே குண்டும் குழியுமான மண் சாலையில் பயணித்தோம். நமக்கு எதிரிலும், பின்புறத்திலும் லாரிகள். அவை ஒவ்வொரு குழியிலும் ஏறியிறங்கி சகதிக்குள் நடனமாடி பயமுறுத்துகின்றன.

சாலையின் இருபுறமும் கல் க்ரஷர் நிறுவனங்கள். சல்லிக்கற்களை உடைத்து பொடியாக்கு கின்றனர். அங்கிருந்து வரும் சத்தம் காதைக் கிழிக்கிறது. கொஞ்ச தூரத்தில் வீடுகள் தெரிய ஆரம்பித்தன. எல்லாம் தனித்தனியானவை. ஒரு வீட்டின் அருகில் ராமலட்சுமி அக்காவைச் சந்தித்தோம். ‘‘அக்கா எவ்வளவு வருஷமா இங்க இருக்கீங்க?’’ ‘‘28 வருஷங்களாச்சு தம்பி...’’ என்றவர், நம்மிடம், ‘‘சினிமாவுல இருக்கீகளா... படம் எடுக்கப் போறீகளா?’’ என வினவினார். ‘‘ஏன் கேட்கறீங்க?’’ ‘‘இங்க வர்ற நிறைய பேர் சினிமாக்காரங்க. அதான் கேட்டேன்...’’
‘‘இந்த குவாரியில அவங்களுக்கு என்ன வேலை?’’

‘‘என்ன இப்படி கேட்டுட்டீங்க! மலையில இருந்து கார் விழுற காட்சியெல்லாம் இங்கதான எடுக்காக. அங்க பாருங்க. அந்த முனையில இருந்துதான் காரை தள்ளிவிடுவாக. போன மாசம் கூட ஏதோ ஒரு படத்துக்காக கார் முன்னாடி ஒரு ஆம்பள, பொம்பள பொம்மையையும், பின்னாடி ஒரு கொழந்தை பொம்மையையும் வச்சு தள்ளிவிட்டு எடுத்தாகல்ல...’’ ‘‘என்ன படம்?’’ ‘‘தெரியலை. கேட்டாலும், அதை மட்டும் அவுக சொல்லவே மாட்டாக. ஆனா, வந்தாங்கன்னா எங்க கடைலதான் டீ குடிப்பாக...’’ வெள்ளந்தியாகப் பேசும் அக்காவிற்கு சொந்த ஊர் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி. திருமணத்திற்குப் பிறகு இங்கே செட்டிலாகி இருக்கிறார்.

இங்கே குவாரி வேலை சரியாக நடைபெறாததால் டீ வியாபாரம் சூடாக இல்லை என்றார் வருத்தமாக. அங்கிருந்து மலைப்பக்கமாகச் சென்றோம். திரிசூலம் ஊராட்சி அலுவலகத்தை ஒட்டியபடியே மலைக்குப் போகும் சிமென்ட் சாலை வருகிறது. கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக இருக்கும் அந்தச் சாலையில் நின்று நிதானமாகவே பயணித்தோம். மரங்கள் சூழ்ந்த வழியில் சில இடங்களில் சென்னையின் மொத்த அழகையும் ரசிக்க முடிகிறது. குறிப்பாக சென்னை விமானநிலையம். விமானங்கள் ஏறுவதும், இறங்குவதும் கொள்ளை அழகு.
இரண்டு மூன்று கி.மீ தொலைவிலேயே வந்துவிடுகிறது மலை உச்சி.

ஆனால், உச்சிக்கு முன்னாலே, ‘இதற்கு மேல் போகக்கூடாது’ என்கிற பல்லாவரம் காவல்துறையின் அறிவிப்புப் பலகை தடுத்துவிடுகிறது. அங்கே நின்றிருந்த இரண்டு மூன்று கார்கள் மற்றும் வேன்களைப் பார்த்து நாமும் மேலேறினோம். சட்டென தடுத்தது ஒரு கை. ‘‘சார்... இதுக்கு மேல போகக் கூடாதுனு போலீஸ் போர்டு பார்க்கலையா...’’ என்றார் ஒருவர். ‘‘நிறைய பேர் அங்க நிக்கிறாங்களே?’’ ‘‘பெர்மிஷன் வாங்கி, ‘வாணி ராணி’ சீரியல் ஷூட்டிங் எடுத்துட்டு இருக்காங்க..!’’ அப்போது இரண்டு டூவீலரில் குழந்தைகளோடு இரண்டு குடும்பங்கள் வந்து சேர, ‘போங்க, போங்க’ என வேகமாக விரட்டத் தொடங்கினார் அந்த நபர்.

நகரும் முன் அங்கிருந்த ஒருவரிடம், ‘‘மேல என்ன இருக்கு?’’ எனக் கேட்டோம். ‘‘கவர்மென்ட் டவர்’’ என்றவர், ‘‘கீழ முருகன் கோயில் இருக்கு. அங்க போங்க...’’ என்றார். மெல்ல இறங்கினோம். ஒரு கி.மீ. தொலைவிலே இடது பக்கமாக மண் பாதை பிரிந்தது. கொஞ்ச தூரத்தில் பல்லாவரம் பெரியமலை பாலமுருகன் கோயிலும், அருகே தாட்சாயணி அம்மன் கோயிலும் வந்தது. கீழிருந்து மேலே வர படிக்கட்டுகளும் போடப்பட்டிருந்தன. அங்கிருந்து வேளச்சேரி, பள்ளிக்கரணை, ஜமீன் பல்லாவரம் என மலையின் பக்கவாட்டு ஏரியாக்கள் அழகாய் விரிகின்றன. நிறைய நீர்நிலைகளும் கண்ணுக்குத் தென்படுகின்றன. சென்னைக்குள் இத்தனை ஏரிகளா? வியப்புடன் கேட்டார் நம் போட்டோகிராபர்.

அதை ரசித்துவிட்டு ஊராட்சி அலுவலகத்தின் முன்னுள்ள டீக் கடைக்கு வந்து சேர்ந்தோம். சூடான உளுந்துவடையும், ஒரு டீயும் குடித்துக் கொண்டே கடைக்காரரிடம், ‘‘உங்களுக்கு எந்த ஊர்ண்ணே...’’ எனக் கேட்டோம். ‘‘சங்கரன்கோவில் பக்கம்...’’ என்றார் மெல்லிய குரலில். அங்கிருந்த ஒருவர் ‘‘தம்பி, இதுக்கு இன்னொரு பெயர் இருக்கு. தெரியும்ல..?’’ என்றார் பாட்ஷா பட ஸ்டைலில்! ‘‘இந்த ஏரியாவ குட்டித் திருநெல்வேலினு சொல்வாங்க. இங்க இருக்கிற பெரும்பாலான மக்கள் சங்கரன்கோவில், புளியங்குடி பக்கத்தைச் சேர்ந்தவங்க. வீடுகளே பத்தாயிரத்துக்கும் மேல இருக்கும். அப்ப, எத்தனை குடும்பங்கள்னு பார்த்துக்கோங்க. ஆரம்பத்துல கல்குவாரி வேலைக்கு வந்தோம்.

இப்ப ஏர்போர்ட்ல கான்ட்ராக்ட் உட்பட பல வேலைக்கும் போயிட்டு இருக்கோம்...’’ என்றார் மீசையை முறுக்கியபடி ஒருவர். ‘‘மேல அல்லா கோயிலுக்கு போனீங்களா?’’ என்றார் இன்னொருவர். ‘‘அல்லா கோயிலா? பார்க்கலையே...’’ ‘‘சரியா போச்சு. இந்த மலைக்குப் பேரே அல்லா கோயில் மலைதான். டவர் பக்கத்துல கோயில் இருக்கு. ரம்ஜான் நேரத்துல ஜெகஜோதியா இருக்கும். அப்ப வந்து பாருங்க. அங்க ஏர்போர்ட்காரன் டவர் வச்சிருக்கான். அங்கிருந்த பார்த்தா மொத்த சென்னையும் தெரியும். காலைல சூரிய வெளிச்சத்துல கடலும் பாக்கலாம். இப்ப யாரையும் விடறதில்ல.

ஏன்னா, அங்கிருந்து விமானநிலையத்த தீவிரவாதிகள் யாரும் தாக்கிறக் கூடாதுலா... அதான் பாதுகாப்பு போட்டிருக்கான்...’’தலையாட்டிவிட்டு நகர்கையில், நம்மோடு தோள் சேர்த்தார் நெல்லை ராஜா. முப்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு கல்யாணத்திற்காக இங்கே வந்தவராம். ‘‘வேலை எதுவும் இல்லாததால இங்கயே தங்கிட்டேன். எனக்கும் சொந்த ஊர் புளியங்குடி பக்கம்தான்...’’ என்றார் உற்சாகமாக. ‘‘அப்புறம், லாரி டிரைவரா வேலை பார்த்து கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்தேன். குழந்தை குட்டினு ஆச்சு. அப்ப இந்தப் பகுதியில லேண்ட் வேல்யூ எல்லாம் இல்ல. இப்பதான் தாறுமாறா போகுது.

போன மாசம் என் பொண்ணு கல்யாணத்துக்காக 200 சதுரஅடி இடத்தை பதினாறரை லட்சத்துக்கு வித்தேன்...’’ என்றவரிடம், விடைபெற்று ஊரின் பெயர் காரணத்திற்கு கர்த்தாவாக விளங்கும் திரிசூலநாதர் - திரிபுரசுந்தரி அம்மன் கோயிலுக்குள் அடியெடுத்து வைத்தோம். சிறிய கோயில்தான். ஆனால், ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இதை, குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டியதாகச் சொல்கிறார்கள். அந்தப் பழமையை தரிசித்துவிட்டு திரிசூலத்தின் இன்னொரு மலைப்பக்கமாக வந்து சேர்ந்தோம்.

அங்கே, CSIR எனப்படும் மத்திய அரசின் ‘அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்’, தனது டவர் டெஸ்ட்டிங் ஆராய்ச்சி மையத்தை அமைத்திருக்கிறது. வெவ்வேறு டிசைனில் உருவாக்கப்படும் டிரான்ஸ்மிஷன் லைன் டவர்களை பரிசோதிப்பது இதன் வேலை. மூன்று மலைகளையும் கடந்த திருப்தியோடு அங்கிருந்து ரயில்வே கேட்டைத் தாண்டி தாம்பரம் சாலைக்கு வந்து சேர்ந்தோம். ரயில், விமானம், பேருந்து என மூன்று போக்குவரத்து சத்தத்திற்கு பின்னால் அமைதியாய் வீற்றிருக்கிறது திரிசூலம்!         


ஷூட்டிங் ஸ்பாட்
‘‘நண்பர்களோடு சேர்ந்து திரிசூலம் மலைகள் மற்றும் ஊருக்குள்ள ஷூட்டிங் குத்தகையை எடுத்திருக்கேன். அந்தக் காலத்துல எம்ஜிஆர், சிவாஜி நடித்த பல படங்களின் ஷூட்டிங் இங்க நடந்திருக்கு. எனக்கு தெரிஞ்ச சில படங்கள் மட்டும் உதாரணத்திற்குச் சொல்றேன். கமல் சார் நடிச்ச ‘காதலா காதலா’ படத்தின் கிளைமேக்ஸ் இந்தக் குவாரியிலதான் எடுத்தாங்க. அப்புறம், ரஜினி சார் நடிச்ச ‘ஊர்க்காவலன்’ படத்துல பாண்டியனை கொல்ற சீன், ‘பாண்டியன்’ படத்துல துப்பாக்கி சுடுற சீன்னு நிறைய எடுத்திருக்காங்க. இப்ப, சிவகார்த்திகேயன் நடிச்ச ‘வேலைக்காரன்’ படத்துக்கு நாங்கதான் குத்தகை விட்டோம். தவிர, டீ.வி சீரியல் ஷூட்டிங்கும் நிறைய போயிட்டு இருக்கு. பட்ஜெட்டைப் பொறுத்து பணம் வாங்குறோம்...’’ என்றார் குத்தகைக்காரரான ஜெயராமன்.

டேட்டா
‘‘திரிசூலம் மூன்று மலைகளால் சூழப்பட்ட சிறப்பு ஊராட்சி. இதில் இரண்டு மலைகள் பெரியதாகத் தெரியும். ஒரு மலை கல்குவாரிகளாக மாறிவிட்டது. இந்தக் குவாரி 42 ஏக்கர் கொண்டது. இந்தக் குவாரிகளில் கல் உடைக்கும் வேலைக்காக வந்தவர்கள் தென்மாவட்ட மக்கள். அப்படியே இங்கு குடியமர்ந்துவிட்டனர். அப்போது 115 கல் க்ரஷர் நிறுவனங்கள் இருந்தன. 3 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். பிறகு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தூசி வெளியேறக் கூடாதென தண்ணீர் தெளித்து இயக்க அறிவுறுத்தியது. பிறகு, கல் க்ரஷர் நவீனமயமாகி பலருக்கு வேலையில்லாமல் போனது.

இப்போது 80 க்ரஷர்கள் இருந்தாலும் ஆக்ட்டிவ்வாக இருப்பது 45 க்ரஷர்கள் மட்டுமே! இந்தக் குவாரியும் சில பிரச்னைகளால் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மூடப்பட்டுவிட்டது. அதனால்தான் தண்ணீர் தேங்கி அழகாய்க் காட்சியளிக்கிறது. 2015ன் கணக்கெடுப்பின்படி சுமார் 19 ஆயிரம் பேர் இங்கே வசிக்கிறார்கள். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் திருநெல்வேலி பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கல்குவாரி வேலை நின்று போனதால் பெண்கள் பலரும் விமானநிலையத்தில் துப்புரவுப் பணிக்கும், ஆண்கள் டாக்ஸி டிரைவர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் சென்று வருகின்றனர்.

திரிசூலம் ஊராட்சி வழியே போகும் மலை பல்லாவரம் நகராட்சிக்குட்பட்டது. அதன்மேலே மீனம்பாக்கம் வானிலை துறை டவர் வைத்துள்ளது. அங்குள்ள மசூதியில் ஆண்டுதோறும் நான்கு முறை திருவிழாக்கள் நடைபெறும். பிறகு, முருகன் கோயில் வந்தது. அடுத்ததாக, கிறிஸ்துவர்கள் சிலுவையும் வைத்து வணங்கி வருகின்றனர். ஒரு காலத்தில் மீனம்பாக்கம்தான் சென்னையின் விமானநிலைய அடையாளமாக விளங்கியது. இப்போது புதிய முனையங்கள் மூலம் திரிசூலம் அந்தப் பெயரை எடுத்திருக்கிறது...’’ என்றார் திரிசூலத்தில் வசிக்கும் சிபிஎம்மின் கட்டுமான சங்கத் தென்மாவட்ட செயலாளர் பாண்டியன்.

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்